காமிரேட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம். முதலில் என்னுடைய உடல் நலம் குறித்தான அனைத்து விசாரிப்புகளுக்கும் நன்றி. இப்போதுதான் நாளொன்றுக்கு ஒரு பதிவு இடம் அளவிற்கு தேறி விட்டேனே? அனைவரின் அன்பிற்கும் நன்றி. இதற்காக நான் என்ன செய்து விடப்போகிறேன், வேறு சில (மொக்கையான) பதிவுகளை இடுவதைத் தவிர?
பதிவிற்கு செல்லும்முன் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிடித்த எழுத்தாளர் வாண்டுமாமாவின் இந்த பதிவினை பிறந்த நாள் பரிசாக சமர்பிக்கிறேன். தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.
சென்ற தலைமுறையின் தலை சிறந்த கதை சொல்லியைப் பற்றி இந்த தலைமுறையினருக்கு தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லையென்றாலும், வரலாற்றின் பக்கங்களில் இவரது பங்கீடு குறித்து தெரிவிக்கப்படவில்லை எனில் அவமானம் தமிழின் தலை சிறந்த கதை சொல்லிக்கு அல்ல, தமிழுக்கும், வரலாற்றிக்கும் தான்
கல்கி வார இதழில் வந்த சந்திரனே சாட்சி கதைக்கான விளம்பரம் |
அதனால்தான் அப்போது முதல் இன்று வரை முடிந்தவரை வாண்டுமாமா அவர்களின் புத்தகங்களைப்பற்றியும், தகவல்களையும் இந்த தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். நம்மைப்போலவே பல நண்பர்களும் அவரைப்பற்றி எழுதி வருகிறார்கள். Children of all ages என்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு எழுத்தாளர் வாண்டுமாமா. அவரை சிறுவர் இலக்கியத்தின் சுஜாதா என்று நான் அடிக்கடி சொல்வேன். இப்படி சொல்வதால் சுஜாதா அவர்களுக்குத்தான் பெருமை என்பது உண்மையும் கூட.
ரீ பூட்டிங்: சமீபத்தில் உலக அளவில் இந்த ரீ பூட்டிங் என்கிற விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. தி அமேசிங் ஸ்பைடர்மேன், வரப்போகும் சூப்பர்மேன் போன்றவை அனைத்துமே ரீபூட்டப்பட்ட / படப்போகிற படங்களே. இந்த ரீபூட் பற்றி காமிரேட் லக்கிலூக் என்கிற யுவகிருஷ்ணா என்ன சொல்கிறார் என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து படியுங்கள்:
‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.
தமிழில், காமிக்ஸ் வடிவத்தில் அப்படி ஒரு ரீ பூட் நடந்துள்ளது. அதுவும் முற்றிலும் மாறுபட்ட வடிவில்.அதனைப்பற்றியதே இந்த பதிவு. தமிழில் சிறுவர் இலக்கியம் சம்பந்தப்பட்ட எழுவாகினும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ள Trail-Blazer வாண்டுமாமா அவர்களே இந்த ரீ பூட் விஷயத்திலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதோடில்லாமல் வித்தியாசமான ஒரு விஷயமாக பட்டதால் இந்த பதிவில் பின்னணி விவரங்களுடன் அரங்கேறுகிறது. இந்த ரீ பூட் நடந்ததால் திரு வாண்டுமாமா அவர்களின் பத்திரிக்கை வேலைக்கே ஆபத்து வந்ததும், பின்னர் அது பூமாரங் ஆக மாறி அவர் பணிபுரிந்த இதழின் எடிட்டரின் வேலைக்கு வெட்டு வைத்ததும் கிளைக்கதைகள்.
Circa 1962. கல்கி வார இதழில் தொடர்ந்து Sword & Sorcery என்கிற வகையில் வரும் மந்திரஜால,சரித்திரக் கால கதைகளையே சித்திரக்கதை வடிவில் வழங்கி வந்த திரு வாண்டுமாமா அவர்கள் ஒரு சமூக நாவலை சித்திரக்கதை வடிவில் வழங்க எண்ணினார். அவரது பல முயற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டிய கல்கி நிர்வாகமும் இசைந்திட, ஓவியர் வினுவின் கூட்டணியுடன் ஒரு ஃக்ரிஸ்ட்மஸ் ஸ்பெஷல் கல்கி இதழில் ஆரம்பித்ததுதான் இந்த சந்திரனே சாட்சி சித்திரக்கதைத்தொடர்.
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Kalki Serial Intro Page (ஸ்கான் உபயம் - காமிரேட் ஷிவ் அவர்கள்) |
Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 01 | Kalki Tamil Weekly Dated 23-12-1962 Chandhirane Saatchi Page 02 |
சித்திரக் கதை வடிவில் வெளிவந்த இந்த கதையானது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை சொல்லவும் வேண்டுமோ? அப்படி வரவேற்ப்பை பெற்ற இந்த கதை சுமார் இருவது வருடங்கள் கழித்து வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் புயல் வீச காரணமாகவும் இருந்தது. கல்கி இதழில் தனது திறமையால் பிரகாசித்த வாண்டுமாமா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோகுலம் என்கிற சிறுவர் பத்திரிக்கையும் ஆரம்பித்தனர். அது ஆறு ஆண்டுகள் சிறப்பாக வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில், 1977ம் ஆண்டு ஜூன் மாதம் பல பிரச்சினைகளால் கல்கி நிறுவனமே பத்திரிக்கைத் தொழிலை நிறுத்தினர். அப்போது அங்கிருந்து வெளியேறிய வாண்டுமாமா பின்னர் குங்குமம் இதழில் பணியாற்றிவிட்டு மறுபடியும் கல்கி துவங்கியதும் கோகுலத்தின் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1978ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதியிட்ட இதழுடன் கோகுலம் இதழில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார்.
பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு அப்போதுதான் தினமணிக் கதிர் என்கிற அற்புதமான பத்திரிக்கை வந்துக்கொண்டு இருந்தது. அதில் வாண்டுமாமா அவர்கள் துணை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே அந்த எழுத்தாளருக்கும் இவருக்கும் ஒரு சிறிய வரலாறு உண்டு. இருந்தாலும் சகஜமாக பணிபுரிந்துக்கொண்டு இருந்தார் வாண்டுமாமா. அப்போது மலேசியாவில் வெளிவந்துக்கொண்டு இருந்த தமிழ் நேசன் என்கிற பத்திரிக்கையில் இருந்து வாண்டுமாமா அவர்களிடம் ஒரு தொடர்கதையை கேட்க, அவர் மறுத்து விட்டார். ஏனென்றால் அப்போது அவர் பணிபுரிந்து கொண்டிருந்த (எக்ஸ்ப்ரெஸ் க்ரூப்) நிறுவனத்தில் ஊழியர்கள் மற்ற பத்திரிக்கைகளில் எழுதக்கூடாது என்பது ஒரு விதியாக இருந்தது.
ஆனாலும் தமிழ் நேசன் நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்த, தன்னுடைய சித்திரத் தொடர்கதையாகிய சந்திரனே சாட்சியை எழுத்துக் கதை வடிவில் தொடர்கதையாக வெளியிட ஒப்புக் கொண்டார் வாண்டுமாமா. டெக்னிகலாக பார்த்தால் இரண்டு விஷயங்களில் வாண்டுமாமா விதிகளை மீறாமல் நடந்துக்கொண்டு இருக்கிறார். ஒன்று:இந்தியாவில் வந்துக்கொண்டிருந்த எந்த பத்திரிக்கையிலும் அவர் எழுதவில்லை இரண்டு: இது அவர் ஏற்கனவே இருவது வருடங்களுக்கு முன்பாக எழுதியது. அதை ரீ பூட் செய்து வெளியிட்டு இருக்கிறார், அவ்வளவுதான்.
Vandumama Chandirane Saatchi July 1988 Cover | Vandumama Chandirane Saatchi July 1988 Credits | Vandumama Chandirane Saatchi July 1988 Title Page |
ஆனால் அவர் மீது மிகுந்த கடுப்பில் இருந்த அந்த பத்திரிக்கை ஆசிரியர் தொடர்ந்து இதுபோல பல பிரச்சினைகளை கிளப்பினார். அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நலம் விரும்பியான ஒருவருக்கு வாண்டுமாமா வகித்த துணை ஆசிரியர் பதவியை கைமாற்றவே இத்துனையும். ஆனால் முற்பகல் செய்யின் குறளுக்கேற்ப அந்த பத்திரிக்கை ஆசிரியரையே வேளையில் இருந்து நீக்கியது நிர்வாகம். இப்படியாக வாண்டுமாமா அவர்களின் வாழ்வில் ஒரு புயலை வீசிவிட்டே இந்த சாட்சி சென்றது என்றால் அது மிகையல்ல.
இந்த தொடர்கதை தொகுக்கப்பட்டு முழுநீள நாவலாக வானதி பதிப்பக வெளியீட்டில் வந்தபோது (இத்துனை விஷயங்கள் நடந்து இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல்) மிகுந்த சிரத்தையுடன் அழகாக வாண்டுமாமா எழுதியுள்ள இந்த முன்னுரையை படியுங்கள்.
Vandumama Chandirane Saatchi July 1988 வாண்டுமாமா முன்னுரை | Vandumama Chandirane Saatchi Story 1st Page |
கதை சுருக்கம்: பிரபல வக்கீல் சேகரை தேடிக்கொண்டு ஒரு முதியவர் வருகிறார். ஒரு வேலையை அவரிடம் கொடுக்க முன்வரும் அவர் மயங்கி விழுந்து கோமாவிற்கு சென்றுவிடுகிறார். சிறு சிறு கட்டங்களாக, ஒன்றுமே தெளிவில்லாமல், சம்பந்தமில்லாமல் சில குறிப்புகள் மட்டுமே இருக்க, அவற்றை ஒன்று சேர்த்து ஒரு Zig-Zag புதிரை அமைதியாக,அலட்டல் இல்லாமல் ஷெர்லக் ஹோல்ம்ஸ்,சங்கர்லால் பாணியில் துப்பறிந்து இடியப்ப சிக்கல்களை தீர்ப்பதே இந்த கதை.
இந்த புத்தகமானது இன்றும் வானதி பதிப்பகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
வானதி பதிப்பகம்/திருவரசு பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை - 600017
Ph: +9144-24342810
தியாகராய நகரில் பாண்டி பஜாரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி (ICICI வங்கி ATM எதிரில்) உள்ள பூக்கடை சந்தில் சென்றால் (Left) அங்கு தியாகராயர் நகரின் தபால் ஆபிஸ் இருக்கும். அதன் எதிரில் இருக்கும் தெருதான் தீனதயாளு தெரு. இரண்டாவது மாளிகை நம்ம வானதி பதிப்பகம்.
நாளைக்கும், அதன் பிறகும் தொடர்ச்சியாக பதிவிட ஆசை. முயற்சிக்கிறேன்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
பின் குறிப்பு - வாண்டுமாமா அவர்களைப்பற்றிய ஏனைய பதிவுகளுக்கான லிங்குகள்:
வாண்டுமாமாவின் கனவா? நிஜமா? தமிழின் முதன்மையான சித்திரக்கதை-தமிழ் காமிக்ஸ் உலகம் சிறப்பு பதிவு
வாண்டுமாமாவின் தேச தேசக் கதைகள் - உலக நாடுகளின் சிறந்த கதை தொகுப்பு
ஒற்று உளவு சதி வாண்டுமாமா 190* Not அவுட் வாண்டுமாமாவின் அற்புதமான உளவாளிகளின் குறிப்பேடு
சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 2
சென்னை புத்தக கண்காட்சியில் வாண்டுமாமா அவர்களின் புத்தகங்கள் பற்றிய கிங் விஸ்வாவின் பதிவு 1
வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு + அவர்களின் லேட்டஸ்ட் படம் கொண்ட கிங் விஸ்வாவின் பதிவு
வாண்டுமாமா சித்திரக்கதைகள் 1 - ரத்தினபுரி ரகசியம் - காமிக்ஸ் பூக்கள் சிறப்பு விமர்சனம்
வாண்டுமாமா அவர்களை பற்றிய அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அற்புதமான ஒரு அறிமுகம்