Pages

Monday, June 05, 2017

5 அறியப்படாத ஆளுமைகள் 1: ஷிகேரு மிசூக்கி (1922 – 2015)

OTOND 0

மாங்கா என்றழைக்கப்படும் ஜப்பானிய சித்திரக்கதைகளின் ஜாம்பவான் என்று கருதப்படுபவர் ஒசாமு தெசூக்கா. இவர் மறைந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவரைப்பற்றிய கட்டுரை ஒன்றை எழுத, இவரது கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அமெரிக்க பதிப்பகமான விஸ் மீடியாவின் எடிட்டர் ஒருவரிடம் சென்ற ஆண்டு உரையாடினேன். அப்போது நான் அவரிடம் ஒசாமு தெசூக்காவிற்கு அடுத்தபடியாக, மாங்கா படைப்பாளிகளில் யார் தலை சிறந்தவர்? என்று வினவினேன். அதற்கு அவர், தற்போது உயிரோடிருக்கும் மாங்கா படைப்பாளிகளிலேயே தலைசிறந்தவர் ஷிகேரு மிசூக்கிதான் என்று சொன்னார். அவருடைய படைப்புகளை தேடுகையில்தான் இதுவரையில் இவரது படைப்புகளில் இரண்டே இரண்டுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. ஆனால், ஜப்பான் நாட்டின் மனசாட்சியின் குரல் என்று அழைக்கப்பட்ட ஷிகேரு மிசூக்கி வெறும் ஒரு காமிக்ஸ் படைப்பாளி மட்டும்தானா என்ன? இந்த கேள்விக்கான பதிலாகவே இந்த கட்டுரை படைக்கப்பட்டுள்ளது.

SM 2இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டுகள் வீசப்பட்டு, தரைமட்டமான ஜப்பான் மீது உலகநாடுகள் அனைத்திற்குமே ஒரு கருணை சார்ந்த பார்வை உண்டு. ஆனால், இரண்டாம் உலகப்போருக்கு முன்பு, ஜப்பானியர்கள் போரில் செய்த அட்டூழியங்களையும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய ராணுவ தளபதிகள் செய்த அராஜகங்களையும் இவர் காமிக்ஸ் (மாங்கா) வடிவில் படைத்தார். தன்னுடைய கறைபடிந்த பழைய வரலாற்றை மறைக்க நினைத்த ஜப்பானிய சமூகத்திற்கும், வரலாறே தெரியாத புதிய தலைமுறைக்கும் இவரது படைப்புகள் சாட்டையடி போல இருந்தது என்றால், அது மிகையல்ல. ஆனால், அதற்காக இவர் அரசாங்கத்தால் தண்டிக்கப்படவில்லை. மாறாக, இவரது ஊரில் இருக்கும் மிகப்பெரிய சாலைக்கு இவரது பெயரை சூட்டி கௌரவித்தனர். அந்த சாலை முழுவதுமே இவரது கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. யொனாகோ நகரத்திலிருந்து மிசூக்கியின் ஊரான சகாய்மினாட்டோவிற்கு செல்லும் இரயிலின் பெயரே இவரது ஒரு கதாபாத்திரத்தின் பெயர்தான். அதுமட்டுமல்ல, அந்த இரயில் வண்டி முழுவதுமே இவரது கதாபாத்திரங்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் பல ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவரை ஒரு கலாச்சார தூதராக, ஜப்பானின் பிரதிநிதியாக, மக்களின் மனசாட்சியாகவே பார்த்த ஜப்பானிய மக்கள், இவருக்கு வெண்கலத்தாலான ஒரு சிலையை வடித்து மரியாதை செலுத்தினர்.

 

ஆனால், இவர் போர் சார்ந்த மாங்கா சித்திரக்கதைகளுக்காக மட்டுமே பிரபலமடையவில்லை. ஜப்பானிய நாட்டுப்புற கதை மரபில் “யோகாய்” என்றொரு வகை உண்டு. நமது தேவதைக்கதைகள், மந்திர மாயாஜாலக் கதைகள் போலவேதான் இவையும். ஆனால், இந்த யோகாய் மரபு கதைகளில் அனைத்துமே அமானுஷ்யமான பேய், பிசாசுக்கள்தான் இருக்கும். இவ்வகையான கதைகளில் பார்வைக்குப் புலப்படாத சில சக்திகள் நமது அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் உயிரினங்கள் மீது ஆட்கொண்டு, அவற்றின் வாயிலாக செயல்படும். இவ்வகையான சக்திகள் வெறுமனே தீயவை ஆக மட்டுமில்லாமல், நன்மை பயப்பவையாகவும், குறும்புக்கார வகையாகவும் படைக்கப்பட்டு இருக்கும்.

SM 3

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன். நமது ஊரில் மழை பெய்து கொண்டிருக்கும்போது வெயிலும் அடித்தால், அப்போது கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் நடப்பதாகச் சொல்வார்கள் அல்லவா? ஆனால், யோகாய் பாணியில், அது நரிகளுக்கிடையிலான திருமணத்தை உணர்த்துவதாக சொல்லப்பட்டு இருக்கும். இதுபோன்ற பல நாட்டுப்புற கதைகளை ஆவணப்படுத்த, அவற்றை சித்திரக்கதை பாணியில் வெளியிட ஆரம்பித்தார். இவற்றின் சிறப்பம்சம் என்ன என்றால், இவை ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மட்டுமே சார்ந்து எழுதப்படவில்லை என்பதுதான். ஜப்பானிய நாட்டுப்புற கதைகளை மையப்படுத்தி பல கதைகளை மாங்கா வடிவில் வெளியிட்ட இவர், அதன்பின்னர் பல உலகநாடுகளுக்கு பயணம் செய்து, ஆராய்ச்சிகள் செய்து, ஆவணப்படுத்தி, அதை முஜாரா என்ற தலைப்பில் 12 தொகுப்புகளாக வெளியிட்டார். இப்படியாக, நாட்டுப்புற கதைகளை மாங்கா சித்திரக்கதைகளாக்கிய மிசூக்கி, இவ்வகையான பாணி (Genre) படைப்புகளுக்கு என்று ஒரு புது வழியை உருவாக்கினார்.

1922ஆம் ஆண்டு ஒசாகாவில் பிறந்த மிசூக்கி, சகாய்மினாட்டோவில்தான் வளர்ந்தார். மூரா ஷிகேரு என்ற தனது பெயரை இவரால் சிறுவயதில் சரியாக உச்சரிக்க முடியாததால், தன்னைத்தானே ஜீஜி என்றழைக்கத் துவங்கினார். அதுவே அவரது பட்டப்பெயராகவும் நிலைத்துவிட்டது. சிறு வயதில் மிகவும் சோம்பேறியாக இருப்பதைக்கண்ட இவரது தந்தை, இவரை அவரது போக்கிலேயே விட்டுவிட்டார். ஆனால், அப்போதே இவரிடம் இருக்கும் மூன்று வித்தியாசமான குணங்களை அடையாளம் கண்டு கொண்டார்.

  • எதையுமே ஜீரணம் செய்யக்கூடிய ஒரு வயிறு,
  • யாருக்குமே அஞ்சாத ஒரு தீவிர போர்க்குணம் மற்றும்
  • ஓவியம் வரைவதில் இவருக்கு இருந்த அசாதாரண திறமை.

பள்ளிக்கு சென்ற முதல் நாள், இருந்ததிலேயே மிகவும் வலிமையானவனாக காணப்பட்ட மாணவனை வம்புக்கு இழுத்து, அவனை நையப் புடைத்து விட்டார், மிசூக்கி. மேலும், மரத்தால் செய்யப்பட்ட ஒரு பந்திற்கு தங்க வர்ணம் பூசப்பட்டு இருக்க, பார்க்க அழகாக இருக்கிறது என்று அதை சாப்பிட்டவரும் இவரே.

2

ஜெர்மானிய ஓவியர் ஆல்பெர்க்ட் யூரரின் ரசிகரான மிசூக்கியின் ஓவிய பாணியானது உலக அளவில் இருக்கும் விமர்சகர்களை சிக்கலில் வைத்த ஒன்றாகும். ஏனென்றால், இவரது பாணி ஓவியங்கள் மிகவும் தனித்தன்மையுடன், ஒப்பிட்டுப் பார்க்க வேறு யாருமே இல்லாத ஒரு நவீன பாணியில் வரையபட்டவை. கதாபாத்திரங்களை ஜப்பானிய மாங்கா மரபுப்படியும், பின்புலத்தில் இருக்கும் காட்சிகளை அழகியல் மரபுப்படியும் வரைந்து ஒரு புதுவிதமான ஓவியப்பாணியை உருவாக்கியவர், மிசூக்கி.

மிசூக்கியின் வாழ்க்கையில் மிக முக்கியமான பங்களிப்பு செய்தவர் அவரது குடும்பத்திற்காக பணிபுரிந்த ஃப்யூஸா க்கேயாமா என்ற பாட்டிதான். மிசூக்கியின் சிறுவயதில் இவர்தான் இரவினில் பலவிதமாக நாட்டுப்புற கதைகளை சொல்லி, பல அரிய விஷயங்களை இவருக்கு தெரியவைத்தவர். பின்னாளில், தனது கதைகளில் இவரையே மையப்படுத்தி “நோன் நோன்பா” என்ற மாங்கா கதைத்தொடரை எழுதினார் மிசூக்கி.

1

இப்படியாக பொழுதைப்போக்கிக்கொண்டிருந்த மிசூக்கியை, வேலைக்கு ஆகாதவர் என்று அவரது குடும்பம் முடிவெடுத்து இருந்த நிலையில்தான் அவர் ராணுவத்திற்கு அழைக்கப்பட்டார். தனது 20ஆவது வயதில் ராணுவத்தில் சேர்ந்த இவர், இவரது ராணுவ அனுபவங்களை இரண்டு மாங்கா காமிக்ஸ் தொடராக எழுதியுள்ளார். இவை இரண்டுமே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அமெரிக்காவின் தலைசிறந்த விருதான ஐஸ்னர் விருதைப் பெற்றுத் தந்தன. அந்த இரண்டு மாங்கா சித்திரக் கதைகளுள் ஒன்றுதான் Onwards Towards Our Noble Death (மெச்சத் தகுந்த மரணத்தை நோக்கிய எங்கள் பயணம்) OTOND. 1973ஆம் ஆண்டு ஜப்பானில் வெளியான இந்த மாங்கா, சமீபத்தில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

OTOND 0மெச்சத் தகுந்த மரணத்தை நோக்கிய எங்களது பயணம்: 20 வயதே ஆன மரூயாமா என்ற போர்வீரனின் பார்வையில் சொல்லப்பட்ட இந்த மாங்கா, ஏறக்குறைய மிசூக்கியின் போர்க்கால வாழ்க்கை வரலாறுதான். ஒருசில இடங்களில் மட்டும், கதையின் ஓட்டத்திற்காக சில சம்பவங்களை மிகைப்படுத்தி எழுதி இருந்தாலும், ஜப்பானிய போர் வீரர்களின் துயரத்தை, சோதனைகளை மிகவும் அழகாக சித்தரித்த தலைசிறந்த புத்தகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அமெரிக்கா, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் தலைசிறந்த விருதுகளை பெற்ற இந்த மாங்கா, 2007ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சித் தொடராகவும் வெளியானது.

நியூ பிரிட்டன் என்றழைக்கப்பட்ட பாப்புவா நியூ கினியாவின் ரபௌல் என்ற தீவில்தான் கதை நடைபெறுகிறது. 27 வயதேயான லெஃப்டெனன்ட் கர்னல் டடோகோரோ என்ற ஆதிக்க வெறி பிடித்த, ஒன்றுமே தெரியாத தலைமை அதிகாரியின் கீழ் இயங்கும் ஒரு படை, ரபௌல் தீவில் நுழையும்போதுதான் கதையும் துவங்குகிறது.

அந்த தீவைக் கைப்பற்ற நுழையும் ஜப்பானிய வீரர்களுக்கு, எதிர்ப்பு எதுவுமே இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. புறவுருவம் சார்ந்த பாணியில் (சிலுவெட் Silhouette) பாணியில் வரையப்பட்டு இருக்கும் இந்த ஆரம்பப் பக்கங்களே நாம் படித்துகொண்டிருப்பது ஒரு மேதையின் படைப்பு என்பதை அழகாகத் தெரிவிக்கிறது.

OTOND 2

அழகியலின் உச்சமாக இருக்கும் அந்த தீவைப் பார்த்த வீரர்கள், கிட்டத்தட்ட சொர்க்கம் போலவே இருக்கிறது என்று சொல்கிறார்கள். உடனே கதாசிரியரின் கருத்தும் வெளிப்படுகிறது (உண்மையில் நீங்கள் சொர்க்கத்திற்கு தொலைவில் எல்லாம் இல்லை, மிகவும் நெருக்கத்திலேயே இருக்கிறீர்கள்). இரண்டாம் உலகப்போருக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு ஜப்பானிய ராணுவ வீரனுக்கும், அந்த அழைப்பு ஏறக்குறைய மரணத்தின் அழைப்பே என்று கூறப்பட்டதை மிகவும் அழகாக ஒரே ஒரு ஓவியத்தில் விளக்கியதோடில்லாமல், அந்த வீரர்கள் அனைவரின் மரணமும் மிகவும் நெருக்கத்தில்தான் உள்ளது என்பதையும் உணர்த்திவிட்டார் மிசூக்கி.

இதன்பிறகு நடைபெறும் பல சம்பவங்கள் Dark Humour வகையைச் சார்ந்தவை. படிப்பவர்களுக்கு சில நேரங்களில் அவை நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், அவைதான் அங்கே நிதர்சன உண்மையின் கோர முகம். உதாரணமாக அந்த ரபௌல் தீவில் முதல் ஜப்பானிய வீரனின் மரணம் அமெரிக்க வீரனின் துப்பாக்கியாலோ, அல்லது போரினாலோ அல்ல. மாறாக, மலேரியா மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவனது உடல்நிலையின் தாங்கும் சக்தியின் அவலத்தை விளக்குவதாகும். ஆமாம், மரத்தை வெட்டி, அவற்றை தூக்கிக் கொண்டு வரும் ஒரு வீரன் ஊட்டச்சத்து இல்லாத உணவை உண்டு வந்ததால், சோர்வுற்று, அவன் தூக்கி வந்த மரத்தினாலேயே நசுக்கப்பட்டு இறந்து விடுகிறான். மற்றொரு வீரன் ஆற்றைக் கடக்கையில் முதலையால் தாக்கப்பட்டு இறக்க, மூன்றாவது வீரன் பசியினால் நொந்து இருக்கும்போது, ஒரு பெரிய மீனைப்பிடித்து, அதை சாப்பிடும் ஆர்வத்தில், மீன் தொண்டையில் சிக்கி இறக்கிறான்.

OTOND 4

இதுமட்டுமல்ல, அனுபவமற்ற தளபதி, அவனது தண்டனைகள் மற்றும் தண்டிக்கும் முறைகள், சிறிதுகூட ஓய்வெடுக்க அனுமதிக்காத ராணுவ வழிமுறைகள் என்று பலவற்றையும் கதையின் போக்கில் படம்பிடித்து காட்டுகிறார், மிசூக்கி. இந்த மாங்காவின் சிறப்பம்சம் என்னவென்றால், தனித்தன்மையுடன் கூடிய ஓவிய முறையும், கதை சொல்லப்பட்ட விதமும்தான். குறிப்பிட்ட சில வீரர்களைத்தவிர, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற விமர்சனத்தையும், கதையின் ஓட்டம் தொடர்ச்சியாக இல்லாமல், அடிக்கடி அடுத்த நிலைக்கு தாவுகிறது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், ராணுவ மற்றும் போர் சார்ந்த அரசியலின் கோரமுகத்தை நமக்கு காட்டும் மிக முக்கியமான ஆவணம் இது என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது.

ஒரு கட்டத்தில், அமெரிக்க வீரர்களின் பாசறையை ஜப்பானியர்கள் கைப்பற்ற, அங்கே அவர்கள் சாக்லெட், பிஸ்கெட் மற்றும் வகை வகையான உணவுப் பொருட்களை வைத்திருப்பதைக் கண்டு பொறாமையில் “அந்த அமெரிக்க வீரர்கள் ஒரு ராஜாவைப் போல வாழ்ந்திருக்கிறார்கள்” என்று சொல்வது மிகை என்றால், அடுத்து நடப்பதுதான் உச்சம். ஒவ்வொரு வீரனும் போதிய உணவில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற தீனி கிடைத்தால் விட்டு விடுவார்களா என்ன? அவற்றை உண்ண போட்டி போடும்போது, வழக்கம் போல தலைமை அதிகாரி வந்து அவற்றை கைப்பற்றி, வீரர்களின் கண் முன்னே சாப்பிடுகிறார். தலைமைக்கும், செயல்வீரர்களுக்கும் இடையே நிலவும் உறவின் நகைமுரணாக படைக்கப் பட்டிருக்கும் இக்காட்சி, இந்த மாங்காவின் உச்சத்தில் ஒன்று. தலைமை அதிகாரி உண்டு, களைப்பான பிறகு மற்ற வீரர்களுக்கும் உணவு கிடைக்க, அதில் ஒருவர் சொல்லும் வசனம், அவர்களின் நிலையை மிக அழகாக படம்போட்டு காட்டியது: ”ஒருவழியாக இதை சாப்பிட்டுவிட்டேன் அல்லவா, இனிமேல் நான் நிம்மதியாக இறப்பேன்” என்று ஒரு ராணுவ வீரன் சொல்வது என்ன ஒரு அவல நிலையை குறிக்கும் காட்சி?

3

அதைப்போலவே பல காட்சிகள் இந்த மாங்காவில் உண்டு. மேலும் ராணுவ யுத்தங்கள் அனைத்தும் சினிமாவில் நாம் பார்ப்பது போல இல்லை என்பதையும் மிக அழகாக உணர்த்தியது இந்த சித்திரக்கதை. ஏனென்றால், எதிரியை கண்ணால் பார்க்கவே இயலாதவகையில்தான் யுத்தம் நடக்கிறது. அப்படி இறுதியாக எதிரிகளை பார்க்க நேரிட்டால், அதுவே அவர்கள் இறுதியாக காணும் காட்சியாகவும் அமைந்து விடுகிறது.

ஜப்பானிய ராணுவத்தின் ஆகப்பெரிய அவலத்தை இந்த மாங்காவின் இறுதிப் பகுதி வெளிப்படுத்துகிறது. யுத்தத்தின் ஒரு கட்டத்தில் எதிரிகளின் கை ஓங்கிய நிலையில், அந்தத் தீவை விட்டு வெளியேறலாம் என்று ஆலோசனை வழங்கப்பட, கௌரவமே பெரிது என்று பேசும் அனுபவமற்ற கர்னல், தற்கொலைத் தாக்குதலுக்கு உத்தரவிடுகிறார். 500 பேரைக் கொண்டதாக அத்தீவில் வந்திறங்கிய படை, அவர்களது கடைசி இரவை கொண்டாட்டத்தின் உச்சமாக கழிக்கின்றனர். துப்பாக்கிக் குண்டுகள் இவர்களது பெயரைத்தாங்கி காத்திருக்க, மரணத்தை நோக்கிய இவர்களது பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆனால், அந்த தற்கொலைத் தாக்குதலில் அனைவருமே இறந்து விடவில்லை. 80 வீரர்கள் தப்பிப் பிழைத்து, தங்களது ராணுவ நிலையத்தை அணுக, கீர்த்தியே பெரிது, கௌரவமே முக்கியம் என்று கருதப்படும் ஒரு அனுபவமற்ற ராணுவ அதிகாரி, இவர்கள் அனைவருமே அந்த தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டதாக ராணுவ தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி விட்டது தெரிய வருகிறது. உண்மையை தலைமை நிலையத்திற்கு தெரிவிக்கலாம் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து, மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டவர்களை மறுபடியும் போருக்கு அனுப்பி அவர்களது மரணத்தை நிச்சயம் செய்கிறார்.

OTOND 5

மரூயாமா என்ற வீரனது பார்வையில் சொல்லப்பட்ட இந்த மாங்கா கதையின் முடிவு, ஒரு குரூரமான ராணுவ நிலைப்பாட்டை விளக்கும் கவிதைத்தனமான காட்சி ஆகும். மரூயாமாதான் அந்தப் பிரிவில் கடைசியாக உயிரிழக்கும் வீரன்.

இந்த மாங்கா கதையில் சொல்லப்பட்டு இருப்பதில் 90 விழுக்காடு உண்மையே என்று சொல்லும் கதாசிரியர், அடுத்து சில விஷயங்களை எழுதி இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும். ஆனால், ரபௌல் என்ற தீவில் மட்டுமே நடப்பதாக கதை எழுதப்பட்டு இருப்பதால், அத்துடனேயே முடித்துக்கொள்கிறார் மிசூக்கி.

ஏன் இந்த தீவில் (மட்டுமே) நடப்பதாக கதை சித்தரிக்கப்பட்டு இருக்கிறது? என்ற கேள்வி எழாமல் இல்லை. தீவு என்பது நான்குபுறமும் சூழப்பட்டு, தப்ப வழியே இல்லாத ஒரு இடத்தை குறிப்பதைப்போல, இந்தக் கதையில் இருக்கும் வீரர்களும் தப்பிக்க வழியே இல்லாத ஒரு சூழலில் இருப்பதை உணர்த்தும் ஒரு உருவகமாகவே இதைப் பார்க்கவேண்டும். ஓவியங்கள் முதற்கொண்டு, கதைக்களன் வரையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறியீடுகளை வைத்து, சொல்ல வந்த கருத்தையும், போரின் அவலத்தையும் சுட்டிக்காட்டிய இந்த மாங்கா, போருக்கு எதிரான புத்தகங்களில் தலையாய ஒன்றாக மதிப்பிடப்படுவதில் தவறே இல்லை.

OTOND 3

கதையும், உண்மையும்: இந்த கதையின் முடிவில் உண்மையிலேயே உயிர் பிழைக்கும் வீரர்தான் ஷிகேரு மிசூக்கி. அதன் பின்னர் பாப்புவா நியூ கினியாவின் பழங்குடியினரால் காப்பாற்றப்பட்ட இவர், கடுமையான மலேரியா காய்ச்சலில் இருக்கும்போது வீசப்பட்ட ஒரு குண்டின் விளைவாக தனது ஒரு கையை இழக்கிறார் என்பதுதான் இந்தக் கதையின் கோரமான முடிவு (அவரது கையை துண்டித்து எடுக்க போதிய மருத்துவர்கள் இல்லாமல், ஒரு பல் மருத்துவர் அதை செய்து முடிக்கிறார் என்பதும் ஒரு நகைமுரணே).

SM 1இதன்பிறகு, அந்த பழங்குடியினரின் அன்பினால் கட்டுண்டு, அந்த ரபௌல் தீவிலேயே தங்க முடிவெடுக்கிறார் மிசூக்கி. ஆனால், வெட்டியெடுக்கப்பட்ட அவரது கையை மருத்துவம் செய்யவும், அவரது காய்ச்சலுக்கும் அங்கே போதிய மருத்துவ வசதி இல்லாததால், அவர் ஜப்பானுக்கு கட்டாயமாக அனுப்பிவைக்கப்படுகிறார். பத்து வருடங்கள் பல வேலைகளை செய்த இவர், தனது 33ஆவது வயதில் முதன்முறையாக ஓவியங்களின் வழியே கதை சொல்லும் பாணிக்கு வருகிறார்.

தனது கதை சொல்லும் பாணியிலும் இவர் பல புதுமைகளை செய்துள்ளார். ஏற்கனவே சொன்னதுபோல, அமானுஷ்ய சக்திகளை மையமாக கொண்ட மாங்கா கதைகளை படைத்த இவர், நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விமர்சிக்கவும் தவறவில்லை. ஹிட்லரை மையாக வைத்து ஒரு மாங்கா, வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்காவின் நேர்மையற்ற செயல்களைப் பற்றிய விமர்சனம் கொண்ட ஒரு மாங்கா, மர்லின் மன்ரோவை அதீத சக்திகளைக் கொண்ட ஒரு மந்திரவாதியாக கொண்ட ஒரு மாங்கா என்று பல வித்தியாசமான படைப்புகளை கொடுத்திருந்தாலும், இவரது தலையாய படைப்புகள் அனைத்துமே யோகாய் வகையைச் சார்ந்ததே.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கிட்டோரோ என்ற கதைவரிசையை சொல்ல வேண்டும். கிட்டோரோ என்ற சிறுவனின் பெற்றோர்கள், ஒரு மாந்திரீக வம்சாவழியினரை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவருமே இறந்துவிட, கிட்டோரோ மட்டும் தனித்து விடப்படுகிறான். அவனது தந்தையின் ஒரு கண் மட்டும் அவனுக்கு பாதுகாவலனாக வருகிறது. கண் என்றால், வெறும் கண் மட்டும் இல்லை. அந்த கண்ணிற்கு என்று கை கால் எல்லாம் உண்டு. இப்படியாக அதீத கற்பனையுடன் படைக்கப்பட்ட இந்த மாங்கா தொடர், ஜப்பானிய மக்களால் மிகவும் விரும்பப் பட்ட தொடர்களில் ஒன்று.

Kumudam TheeraNathi Jan 2015 Credits 1கடந்த நவம்பர் 30ஆம் தேதி தனது 93ஆவது வயதில் மரணமடைந்தார் மிசூக்கி. அவரது மகள்கள் இருவராலுமே அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும் முடியவில்லை. மரணத்தை பலமுறை நேரில் சந்தித்து மீண்டவர் என்பதால், அவரை ஒரு சிரஞ்சீவி என்றே பலரும் நினைத்திருந்தார்கள். தனது கடைசி காலம் வரையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாமேதைக்கு நமது மனமார்ந்த அஞ்சலி.

குறிப்பு: தமிழின் நம்பர் 1 இலக்கிய மாத இதழான குமுதம் தீராநதியில் அடியேன் எழுதி வரும் தொடரான அறியப்படாத ஆளுமைகள் என்ற தொடரின் ஒரு அத்தியாயம் தான் ஷிகேரு மிசூக்கியைப் பற்றியது. நன்று, குமுதம் தீராநதி.

Related Posts with Thumbnails