Pages

Monday, February 21, 2011

55 வாண்டுமாமா 01: புலி வளர்த்த பிள்ளை

1997ம் ஆண்டு. இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அப்போது தன்னுடைய வழக்கமான பாணியில் ரன்களை குவிக்க தடுமாறிக்கொண்டு இருந்தார். ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக விளையாடும் அவர், ஒரு ஆண்டு முழுவதுமே சோபிக்க தவறியது பற்றி இந்தியா முழுவதுமே கவலையுடன் விவாதித்து கொண்டு இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூறினார்கள். சச்சின் முன் போல அதிரடியாக ஆடவேண்டும், சச்சின் முன் வந்து ஆட வேண்டும், சச்சின் ஒரு நாள் போட்டிகளில் மத்திய தரத்தில் களமிறங்க வேண்டும் என்று பலரும் பல ஆலோசனைகளை கூறிக்கொண்டு இருந்த நேரமது.

அந்த நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டு விமர்சகரும், வர்ணனையாளருமாகிய ஹர்ஷா போக்ளே ஒரு விஷயத்தை தி ஸ்போர்ட்ஸ்டார் (The Sportstar) பத்திரிக்கையில் எழுதி இருந்தார். அந்த விஷயம் பலரையும் கவர்ந்தது (என்னையும் தான்). அது என்னவெனில் "சச்சினுக்கு இப்போதைய தேவை ஒரு பஞ்சிங் பேக் (Punching Bag) மட்டுமே. வேறெதுவும் இல்லை" என்பதுதான் அந்த கருத்து. குத்துசண்டை வீரர்கள் தங்களுடைய பயிற்சியின் போது உபயோகப்படுத்தும் மணல் மூட்டையைத்தான் பஞ்சிங் பேக் என்று கூறுவார்கள். அந்த பஞ்சிங் பேக்கின் உபயோகம் என்னவெனில் அது வீரர்களின் மனதை ஒருமுகப்படுத்தி கவனத்தை நிலைப்படுத்தும். பிரச்சினைகளில் இருக்கும் சினிமா ஹீரோக்கள் கூட இதுபோல மணல் மூட்டையை  குத்தி தங்களின் கோபதாபங்களுக்கு வடிகால் தேடுவதுண்டு (அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு செய்வது போல). அப்படி சச்சினுக்கு அமைந்த பஞ்சிங் பேக் அவருடைய மகள் சாரா. தன்னுடைய மகளுடன் விளையாடுவதில் பல மணி நேரங்களை கழித்த பின்னர் சச்சின் 1998ம் ஆண்டு எப்படி விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும் (குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கும், ஷேன் வார்னேவுக்கும்). இந்த விஷயத்திற்கு பின்னரே சச்சினுக்கும் ஹர்ஷா போக்ளேவுக்கும் நட்பு சிறக்க ஆரம்பித்தது.

மேலே கூறிய சம்பவம் சச்சினுக்கு மட்டுமில்லை. இந்த அவசர கணினி யுகத்தில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்ற கணக்கில்லாமல் பல மணி நேரங்கள் (சில சமயம் நாட்கள்) தொடர்ந்து பணி புரியும் நம்முடைய இளைய சமுதாயத்திற்கும் தான் ஒரு பஞ்சிங் பேக் தேவை. ஆனால் அவர்கள் தேர்ந்தேடுத்ததோ பார்ட்டி, பப் மற்றும் டிஸ்கொதே போன்றவைகளையே. இதனாலேயே மன முறிவு மற்றும் மண முறிவும், பர்ன் அவுட் போன்றவைகளும் ஏற்படுகின்றன. எனக்கும் இது போன்ற ஒரு பஞ்சிங் பேக் தேவைப்பட்டது சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (Jan 2007).

ஒரு நாளைக்கு சுமார் பதினாறு மணி நேரங்கள் என்று தொடர்ந்து வேலை செய்துக்கொண்டும், தொடர்ந்து இந்தியா முழவதும் பிரயாணம் செய்து கொண்டும் இருந்தது என்னுடைய உடல் அளவிலும் மன அளவிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது. அடிக்கடி கோபம் வர ஆரம்பித்ததை நெருங்கிய நண்பர்களும், அலுவலக சகாக்களும் உணர ஆரம்பித்தனர். எனக்கும் இந்த மாற்றம் தெரியாமல் இல்லை. ஆகையால் திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு மூன்று நாட்கள் லீவ் சொல்லிவிட்டு அனைத்து பணிகளையும் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு என்னுடைய பஞ்சிங் பேக்கை தேடிப்பிடித்தேன். காமிக்ஸ். அட, ஆமாங்க. காமிகஸ்தான். (யாராவது இந்த படம் போட்டு கதை சொல்லுவாங்களே அந்த காமிக்சா என்று கேட்டால் அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான் - அப்போ திருக்குறள் என்றால் ஒன்றரை அடியில் எழுதி இருக்குமே, அதுவா? என்பதுதான்).

அதன் பிறகு என்ன நடந்தது என்பது என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். சுமார் பதினோரு ஆண்டுகள் (ரெகுலராக) காமிக்ஸ் படிக்காமல் இருந்த நான், அதன் பின்னர் மறுபடியும் படிக்க ஆரம்பித்து, பின்னர் ஒரு டாகுமெண்டரி எடுக்க ஆரம்பித்து, இப்போது தமிழ் காமிக்ஸ் வரலாறு என்ற ஆராய்ச்சி புத்தகத்தையும்எழுதுமளவுக்கு அந்த ஆர்வம் வளர்ந்து விட்டது.

இப்போதைய இளைய தலைமுறைக்கு படிக்கும் பழக்கமும், குறிப்பாக தாய் மொழியில் படிக்கும் வழக்கமும் சுத்தமாக வழக்கொழிந்த நிலையில் அவர்களின் வாழ்க்கை முறை அதல பாதாளத்திற்கு போய்க்கொண்டு இருப்பதை காண முடிகிறது. இன்றைய இளைய தலைமுறைக்கு தேவை ஒரு பஞ்சிங் பேக் - அதாவது அவர்களின் வேலை நிமித்தமான அழுத்தங்களில் இருந்து ஒரு வடிகால். அதற்க்கு படிக்கும் பழக்கம் ஒரு சிறப்பான முடிவாகும். என்னை கேட்டால் அந்த பஞ்சிங் பேக் காமிக்சாக இருக்கட்டும் என்பதே.

Writer_Sujathaகடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழில் எழுதிய சிறப்பான ஆல்- ரவுண்ட் கமர்ஷியல் எழுத்தாளர் யாரென்றால் அமரர் சுஜாதா அவர்களையே பலரும் கூறுவார்கள். அதாவது அனைத்து விஷயங்களை பற்றியும் யாருக்கும் சளைக்காமல் தெளிவாக எழுதக்கூடிய திறன் பெற்றவர். அதனால் தான் அவரை வாத்தியார் என்று இன்றைய தலைமுறையினர் அழைக்கிறார்கள். அந்த வாத்தியாருக்கு நிகராக திறன் பெற்ற ஒருவர் இருந்தார். அதுவும் தமிழகத்திலேயே. ஆனால் அவர் தன்னுடைய தளத்தை (Domain) சிறுவர்களுக்கு என்று அர்பணிப்பு செய்துக்கொண்ட காரணத்தினாலேயே சுஜாதா அளவுக்கு அவர் புகழும் (பொருளும்கூட), பெயரையும் பெறவில்லை.

நெடுநாள் வாசகர்களுக்கு நான் யாரை சொல்கிறேன் என்பது புரிந்து இருக்கும். வாண்டுமாமா என்று கடந்த ஐம்பது ஆண்டுகளாக அறியப்பட்ட திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களையே நான் சிறுவர்களுக்கான சுஜாதா என்று குறிப்பிடுகிறேன் (என்னுடைய நண்பர்கள் பலர் சுஜாதாவை வளர்ந்தவர்களுக்கான வாண்டுமாமா என்றும் கூறுவதுண்டு). அப்படி பட்ட வாண்டுமாமா அவர்களின் கதைகளில் முதன்மையானது என்று பலராலும் கருதப்படுவது "புலி வளர்த்த பிள்ளை" என்ற இந்த கதையே ஆகும். இந்த கதையின் விமர்சனத்தை ஆராயும் முன் நாம் என்னுடைய காமிக்ஸ் வாசிப்பு அனுபவங்களை கூற வேண்டி இருக்கிறது. காமிக்ஸ் கதைகளை நான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக வாசித்துக்கொண்டு இருந்தாலும், நான் படிக்க ஆரம்பித்தது முதலில் பூந்தளிர் இதழைத்தான்.

பூந்தளிரை ஒரு முழுமையான காமிக்ஸ் பத்திரிக்கை என்று கூற இயலாது. ஆனால் தமிழில் வந்த சிறுவர் இதழ்களில் அதுவே முதன்மையானது என்பதிற்கு இருவேறு கருத்திருக்க இயலாது. அப்படிப்பட்ட அந்த பூந்தளிர் இதழில்தான் இந்த புலி வளர்த்த பிள்ளை கதை தொடராக வந்தது. இந்த பத்தியை டைப் அடிக்கும்போது கூட இந்த கதையின் விளம்பரங்கள் வந்த அந்த பால்ய நினைவுகள் இப்போதும் என்னுடைய மனக்கண் முன்னே நிழலாடுகிறது. படிப்பவர்களை சுண்டி இழுக்கும் வசீகரம் கொண்டது வாண்டுமாமா அவர்களின் எழுத்து நடை. சூரியனுக்கு கீழே உள்ள எதைப்பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி படிக்கும்படியாக செய்தவர் அவர். விஞ்ஞானம் என்றாலே காத தூரம் ஓடிக்கொண்டு இருந்த எங்களை கூட விஞ்ஞான சம்பவங்களை ரசித்து படிக்க வைத்தவர் அவர். சிறிது கால இடைவெளியிலேயே வாண்டுமாமா என்ற பைட் பைப்பர் இசையில் மயங்கி அவரை கண் மண் தெரியாமல் செல்லும் எலியைப் போல பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். பின்னர் தான் தெரிந்தது, நான் மட்டும் எலி இல்லை என்பது.

என்னைப்போன்று பல்லாயிரக்கணக்கான எலிகள் அந்த பைட் பைப்பரை பின் தொடர்ந்து வந்தது எனக்கு புரிய ஆரம்பித்தது. என்னுடைய சிறுவர் இலக்கிய வானில் சுடர் விட்டு பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம் வாண்டுமாமா. ஆனால் அந்த நட்சதிரதிற்க்கு நான் யாரோ? (நன்றி வண்ண நிலவன் - நன்றி மாமல்லன்). என்னுடைய இளவயது இரவுகளை சுடர் விட்டு ரசிக்க வைத்த அந்த நட்சதிரதிற்க்கு என்னுடைய சிறிய காணிக்கையே இந்த பதிவு.

Poonthalir Issue No 84 Vol 4 Issue 12 Dated 15031988 Ad for Puli Valartha Pillai Poonthalir Issue No 85 Vol 4 Issue 13 Dated 01041988 Cover of Puli Valartha Pillai issue Poonthalir Issue No 85 Vol 4 Issue 13 Dated 01041988 Cover of Puli Valartha Pillai Intro
Poonthalir Issue No 84 Vol 4 Issue 12 Dated 15031988 Ad for Puli Valartha Pillai Poonthalir Issue No 85 Vol 4 Issue 13 Dated 01041988 Cover of Puli Valartha Pillai issue Poonthalir Issue No 85 Vol 4 Issue 13 Dated 01041988 Cover of Puli Valartha Pillai Intro

என்னடா இது, கதையே ஆரம்பிக்கவில்லை- அதற்குள் மகத்தான படைப்பு என்று அட்டையில் உள்ளதே என்று யோசிக்க வேண்டாம். அப்படி அச்சிட்டதில் தவறே இல்லை என்பதை இந்த கதையை படித்தவுடன் புரிந்து கொள்வீர்கள்.

கம்ப ராமாயணத்தில் மிதிலை மாநகரமே சீதையின் சுயம்வரத்துக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில், சீதையின் தாதிகள் சீதையை அலங்கரிப்பார்கள். அந்த காட்சியை விவரிக்கையில் கம்பர் "அழகுக்கு அழகு சேர்ப்பது போல" என்ற சொற்றொடரை உபயோகிப்பார். அதனைப்போல சிறப்பான இந்த கதை தொடருக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது போல இருப்பது தமிழின் காமிக்ஸ் கதைகளுக்கான தலையாய ஓவியர் திரு செல்லம் அவர்களின் அட்டகாசமான ஓவியங்கள். பூந்தளிரில் முதல் முறையாக கதையின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு ஓவியம் என்ற பாணியை இந்த கதையில் அறிமுகப்படுத்தி இருப்பார்கள். அந்த காலத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு கதை + சித்திரங்கள் இவை.

கதையின் போக்கை இவ்வாறாக விவரிக்கலாம்: பதஞ்சலி ஒரு புகழ் பெற்ற தொல் பொருள் ஆய்வாளர். ஒரு ஆராய்ச்சிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவரை ஒரு பாழடைந்த கோவிலுக்கு அழைத்து வந்தது. அங்கு அவர் ராஜலட்சனங்களுடன் கூடிய சிறுவன் ஒருவனை சந்திக்கிறார். அப்போது கட்டவிழ்த்து விடப்படும் சக்திகளின் மூலம் அந்த சிறுவன் ஒரு ராஜ வம்சத்தவன் என்பதையும், அந்த சிறுவனுக்கும் பதஞ்சலிக்கும் ஒரு பூர்வஜென்ம தொடர்பு இருப்பதையையும், அவர் அறிகிறார்.  அந்த சிறுவனின் வரலாற்றை அறிந்து கொள்ள அவர்கள் இருவரும் எடுக்கும் முயற்சிகளும், அதற்க்கு ஏற்படும் தடைகளுமே கதையின் முதல் பகுதியை நடத்தி செல்கின்றன. உங்களின் வசதிக்காக கதையின் முதல் பாகம் இங்கே வெளியிடப்பட்டு உள்ளது.

Poonthalir Issue No 85 Vol 4 Issue 13 Dated 01041988 Cover of Puli Valartha Pillai Page 1 & Page 1 – 1st Episode

Poonthalir Issue No 85 Vol 4 Issue 13 Dated 01041988 Cover of Puli Valartha Pillai Page 1
Poonthalir Issue No 85 Vol 4 Issue 13 Dated 01041988 Cover of Puli Valartha Pillai Page 2

கதையின் போக்கில், நான்கு தலைமுறைகளாக நெடுந்தூக்கத்தில் இருந்த கரும்பூனை, பயங்கரமான சிலைகளுடன் கூடிய பூத மேடு, பவுர்ணமி அன்று மட்டும் உயிர் வந்து நகரும் நாகவல்லிக்கொடி என்ற தாவரம் (செடி கொடி வகையை சேர்ந்தது, ஆனால் உயிருள்ளது) , நிலவின் ஒளியையே மறைக்கக்கூடிய அளவில் பெரிதான மனிதக்குரலில் பேசும் ஆந்தை, பல ஆண்டுகளாக கல்லாகிப்போன பாம்புகள் + தேள்களின் திடீர் தாக்குதல், தாமிரப்பட்டயத்தில் இருந்த எழுத்துக்களை படிக்க விடாமல் மறைய வைத்த மாய சக்தி, எகிப்திய மம்மிக்களை போல நமது ஊரிலும் இறந்தவர்களை புதைக்கும் முது மக்கள் தாழி, ஒரு தாழியில் இருந்த வந்த மனித உரு கொண்ட புழுதி, சிறுவன் சத்யாவை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் மந்திர சக்தி, அங்கே இருக்கும் ஒரு விசித்திர அரண்மனையின் மன்னன், சத்யாவுக்கு வைக்கப்படும் போட்டிகள், நீரின் "மேலே" நடக்கும் சத்யா, இருவரும் அங்கிருந்து தப்புவது, கூட்டமாக வரும் மரணத்தின் அறிகுறி என்று சொல்லப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, சுவாமி ருத்ரானந்தரின் போலி சீடன், அவரால் காக்கையாக மாற்றப்படும் பதஞ்சலி, சிறுவன் சத்யாவின் பூர்வீகக்கதையை கூறும் ருத்ரானந்தர் என்று முதல் பகுதி விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகருகிறது.

என்னடா இது, கதை நம்ப முடியாதபடி இருக்கிறதே? என்று தோன்றுகிறதா என்ன? கடந்த பத்தாண்டுகளில் நான் படித்த த லார்ட் ஆப் த ரிங்ஸ், ஹாரி பாட்டர் வரிசை நாவல்களில் வருவதைவிட இதில் நடக்கும் சம்பவங்கள் நம்பக்கூடியதே. இதற்காக நான் அந்த கதைகளையும் இந்த நாவலையும் ஒப்பீடு செய்யவில்லை. இரண்டுமே வேறு வகையை சார்ந்தவை (நான் ரசித்து படித்தவை). இது போன்ற கதைகளை ஹாலிவுட்டில் sword and sorcery என்று வகைப்படுத்துவார்கள்.

முதல் பாகத்தின் இறுதி பகுதியாகிய பதினேழாம் அத்தியாயத்தில் (பதினாறு என்று தவறாக அச்சிடப்பட்டு இருக்கும், கண்டு கொள்ளாதீர்கள்) புலி வம்சத்தினரின் முன்னோடிகளின் கதையும், அவர்களுக்கு இழைக்கப்பட்டு துரோகமும் கூறப்பட்டு இருக்கும். இந்த அத்தியாயத்தின் முடிவில் தான் இந்த கதையின் தலைப்பாகிய அந்த புலி வளர்த்த பிள்ளையை பற்றிய குறிப்பே வருகிறது. அதாவது கதை ஆரம்பித்து எட்டு / ஒன்பது மாதங்களுக்கு பிறகே கதையின் முக்கிய கதாபத்திரத்தின் எண்ட்ரி.

Poonthalir Issue No 101 Vol 5 Issue 5 Issue Dated 1st Dec 1988 Puli Valartha Pillai 1st Part Last Episode – Mistakenly Printed as Episode 16, Instead of 17

Poonthalir Issue No 101 Vol 5 Issue 5 Issue Dated 1st Dec 1988 Puli Valartha Pillai 1st Part Last Episode Page 1
Poonthalir Issue No 101 Vol 5 Issue 5 Issue Dated 1st Dec 1988 Puli Valartha Pillai 1st Part Last Episode Page 2

அந்த காலத்தில் கதையை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்குதான் அந்த எதிர்பார்ப்பின் தாக்கம் என்னவென்று தெரியும். பூந்தளிர் மாதமிருமுறை வந்த இதழ் என்பதால் கிட்டதட்ட எட்டரை மாதங்கள் கழித்தே கதைநாயகன் புலி வளர்த்த பிள்ளையை பற்றிய பகுதிகள் வர ஆரம்பித்தன. இந்த பிளாஷ் பேக் பகுதியை இரண்டாம் பாகமாக வெளியிட்டனர் பூந்தளிர் நிர்வாகத்தினர் (அதாவது எடிட்டராகிய நம்ம வாண்டுமாமா அவர்கள்). இந்த இரண்டாவது பாகம் வரவிருந்த அந்த பூந்தளிர் இதழ் ஒரு விடுமுறை காலத்திலேயே தான் வந்தது (அரையாண்டு பரிட்சைகள் முடிந்த விடுமுறையா அல்லது வேறெதுவுமா என்று நினைவில்லை). அப்போது இரண்டாம் பாகத்தின் முதல் பகுதியை பார்த்த எனக்கு (என்னுடைய சக எலிகள் அனைவருக்குமே தான்) மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக இந்த தொடருக்கு ஓவியம் வரையும் திரு செல்லம் அவர்களின் ஓவியங்கள் இல்லாமல் வேறொரு ஓவியரின் படங்கள் வந்திருந்தது. மிகவும் நுணுக்கமாக வரையப்பட்ட அந்த ஓவியங்கள் மிகுந்த கலை நயத்துடன் இருந்தாலும்கூட எங்களுக்கு செல்லம் அவர்களின் ஓவியங்கள் இல்லாதது பெரும் குறையாகவே பட்டது (என்னதான் ஷாருக் கான் மிகவும் ஸ்டைலாக நடித்து இருந்தாலும்கூட பழைய அமிதாப் நடித்த டானுக்கே எங்கள் வோட்டு). இதுநாள் வரை இந்த இரண்டாம் பாகத்தின் ஓவியங்கள் வரைந்தவர் யாரென்பது எங்களுக்கு தெரியவில்லை (பெரிய அளவில் முயற்சிகள் எதுவுமே எடுக்கவில்லை என்பதே உண்மை). இந்த இரண்டாம் பாகத்தில் வரும் ஓவியங்களை வேறெங்காவது வாசகர்கள் பார்த்திருந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

பல வருடங்கள் என்னை Haunt செய்த ஓவியங்கள் இவை. குறிப்பாக இந்த ஸ்கானில் கவிழ்ந்து படுத்திருக்கும்  அந்த இளைஞனின் கண்களை சிறிது பாருங்கள். தனிமை என்ற உணவினை தொடர்ந்து மூன்று வேளையும் உண்டு வந்த ஒரு மனிதனின் கண்கள் அவை. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தின அந்த சித்திரங்கள். பழி வாங்கும் உணர்வும், தான் வாழ அடுத்தவர்களை போட்டு தாக்கும் மனப்பாங்கு கொண்ட சக நண்பர்களும் நிறைந்த இந்த உலகினில் நான்கூட பல வேளைகளில் காட்டினில் தனித்து விடப்பட்ட அந்த இளவரசனை போல என்னை உருவகப்படுத்திக் கொள்வதுண்டு. உண்மையிலேயே இந்த நகரம் என்றழைக்கப்படும் கான்கிரீட் காட்டினில் என்னைப்போல இருப்பவர்கள் அனைவருமே புலி வளர்த்த பிள்ளைகள்தானோ?

Poonthalir Issue No 102 Vol 5 Issue 6 Issue Dated 16th Dec 1988 Puli Valartha Pillai 2nd Part 01 – International Artwork–Though Incredibly good, We miss Chellam
Poonthalir Issue No 102 Vol 5 Issue 6 Issue Dated 16th Dec 1988 Puli Valartha Pillai 2nd Part 01
Poonthalir Issue No 102 Vol 5 Issue 6 Issue Dated 16th Dec 1988 Puli Valartha Pillai 2nd Part 03

இரண்டாம் பாகம் முழுவதுமே தனித்து விடப்பட்ட அந்த இளவரசனது கதைதான். இளவரசனும் அவனது வளர்ப்பு தாயாகிய அந்த கம்பீரமான புலியும் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்கிறார்கள் என்பதே கதையின் போக்கு. குறிப்பாக இளவரசனது தாய் மாமனும், அவனது படைவீரர்களும் எவ்வாறு புலி வம்சத்து இளவரசனை தேடினார்கள், ஊருராய் தேடியலைந்த ஒற்றர்கள், ஒரு புத்திசாலி ஒற்றனும் அவனது நண்பனும் எவ்வாறு ஊர் மக்களை ஏமாற்றி புலியை பிடிக்க செய்த முயற்சி, ஒற்றன் பலியாவது, புலியும் இளவரசனும் தங்களையறியாமல் சொந்த ஊராகிய ராஜஸ்தானுக்கு செல்வது, பல வருடங்களாக தானாக பூட்டிக்கிடந்த ஈசன் கோவில் இளவரசன் வருகையால் திறப்பது, கோவிலை திறப்பவனே தங்களின் மன்னன் என்ற மக்கள் நம்பும் ப்ராபசி, இளவரசனது தாய் மாமன் படையெடுத்து வருவது, ஊர் மக்கள் புரட்சி செய்வது, புலி இளவரசனை காப்பாற்றுவது, இளவரசன் முடி சூட்டப்படுவது, பழிக்கு பழி வாங்கி தாய் மாமனை கொல்லாமல்இருக்க இளவரசன் முடிவெடுத்து அந்த ஊரிலேயே தங்கி விடுவது, அவனது வம்சம் தழைத்தோங்குவது என்று இரண்டாம் பாகம் சுவையுடனும், சுவாரஸ்யத்துடனும் செல்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தை படிக்கையில் அடடா, நம்முடன் இப்படி ஒரு புலி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை மனதை வாடகை கொடுக்காத சென்னைவாசி போல ஆக்கிரமித்து இருந்தது. என்னுடைய மழைக்கால மாலைவேளை சிந்தனைகள் எல்லாமே என்னுடைய புலியுடன் நான் செய்யும் சாகசங்களை பற்றியே இருந்த காலமது (இந்த கதையில் வரும் புலிக்கு பெயர் எதுவுமே இருக்காது - நான் மிகுந்த புத்திசாலிதனத்துடன் என்னுடைய புலிக்கு டைகர் என்றெல்லாம் பெயரிட்டு இருந்தேன்). என்னுடைய தந்தையை நச்சரித்து ஒரு முறை சென்னையிலுள்ள வண்டலூர் விலங்குகள் சரணாலயத்திற்கு பயணப்பட்டோம். இரண்டு மணி நேரம் கொண்ட அந்த பேருந்து பயணத்தின் மூச்செல்லாம் நான் புலியை நேரிடையாக காணப்போகிறேன் என்பதாகவே இருந்ததால் எனக்கு மட்டும் நேரமும் வெப்பமும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆனால் அந்த பயணத்தின் முடிவில் புலியின் மீதான என்னுடைய கம்பீர எண்ணம் ஏப்ரல் மாதத்தில் கரைந்த பனிக்கட்டி போலானது. அதே சமயம் மனிதர்களின் மீதான ஒரு வெறுப்பு பரிசோதகருக்கு தெரியாமல் பயணிக்கும் நபரை போல என்னுடன் தொடர ஆரம்பித்தது. பல வருடங்கள் கழித்து எங்கள் வீட்டில் இரண்டு நாய்களை வளர்க்க ஆரம்பித்தபோது பைண்டிங் செய்யப்பட்ட ஒரு புலி வளர்த்த பிள்ளை புத்தகம் கிடைத்து, என்னுடைய கனவுகள் புத்துயிர் பெற ஆரம்பித்தது.

Poonthalir Issue No 109 Vol 5 Issue 13 Issue Dated 1st Apr 1989 Puli Valartha Pillai 2nd Part Last Chapter Scans – Oh, Yes – Chellam is Back

Poonthalir Issue No 109 Vol 5 Issue 13 Issue Dated 1st Apr 1989 Puli Valartha Pillai 2nd Part Last Chapter 01
Poonthalir Issue No 109 Vol 5 Issue 13 Issue Dated 1st Apr 1989 Puli Valartha Pillai 2nd Part Last Chapter 03

ஒரு வழியாக இரண்டாம் பாகத்தின் முடிவில் நம்முடைய ஆஸ்தான ஓவியர் செல்லம் அவர்கள் மறுபடியும் வருகை தருகிறார். கதையும் ப்ளாஷ்பேக்கில் இருந்து நிகழ்காலத்திற்கு திரும்புகிறது. ருத்ரானந்தர் நம்முடைய ஹீரோக்கள் பதஞ்சலி மற்றும் சத்யாவிற்கு அவர்களின் கடமையை நினைவூட்டுகிறார். அவர்களும் அந்த கடமையை நிறைவேற்ற ஒரு பயணத்தை மேற்கொள்வதுடன் இரண்டாம் பாகம் முடிவடைகிறது. முதல் பாகம் பதினேழு அத்தியாயங்கள் சென்ற நிலையில் இரண்டாம் பாகம் திடீரென்று எட்டாம் அத்தியாயத்திலேயே முடிவடைவது ஒரு வகையில் ஏமாற்றத்தை அளித்தாலும் கதை மறுபடியும் நிகழ்காலத்திற்கு திரும்பியதும், ஒரு முடிவினை நோக்கி பயணிக்க ஆரம்பித்ததும் புத்துனர்ச்சியை அளித்தது.

மூன்றாவது பாகத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. செல்லம் அவர்களின் ஓவியங்கள் இருந்தன, ஆனால் கதையானது முழுக்க முழுக்க காமிக்ஸ் வடிவில் இருந்ததே அந்த இன்ப அதிர்ச்சிக்கு காரணம். அதுவுமில்லாமல் தமிழில் காமிக்ஸ் கதைகளின் பொற்க்காலம் (அட, சேரன் படம் இல்லீங்க) என்று கருதப்படும் எண்பதுகளின் இறுதிப்பகுதியில் வந்ததால் என்னைப்போன்ற எலிகளுக்கு கொண்டாட்டத்திற்கு அளவில்லாமல் போனது.

Poonthalir Issue No 110 Vol 5 Issue 14 Issue Dated 16th Apr 1989 Puli Valartha Pillai 3rd Part  in Complete Comics Form 1st Chapter 1 Page 1 & Page 2

Poonthalir Issue No 110 Vol 5 Issue 14 Issue Dated 16th Apr 1989 Puli Valartha Pillai 3rd Part 1st Chapter 1 Page 1
Poonthalir Issue No 110 Vol 5 Issue 14 Issue Dated 16th Apr 1989 Puli Valartha Pillai 3rd Part 1st Chapter 02

அதுவும் இரு வண்ணங்களில் வரையப்பட்ட சித்திரங்கள் அந்த நாளில் பெரும் விஷயமாகவே பட்டது (மினி லயன், இந்திரஜால் காமிக்ஸ் போன்றவை முழு வண்ணத்தில் வந்திருந்தாலும், அவை மொழி மாற்றம் செய்யப்பட்ட கதைகளே, தமிழர் கதைகள் அல்ல). அந்த நாளில் தோன்றிய எண்ணம் என்னவென்றால், வாண்டுமாமா முதல் இரண்டு பாகங்களையும்கூட இவ்வாறே முழுவதுமாக காமிக்ஸ் வடிவிலேயே செய்து இருக்கலாமோ? என்பது தான்.

கதையின் போக்கும் வெகு வேகமாக நகர ஆரம்பித்தது. அதன் காரணம் அப்போது தெரியவில்லை. நந்தினி என்ற மர்ம பெண்ணின் வருகை, பயணத்தில் அவர்களுடன் இணைதல், மாயாபுரியை கண்டுபிடித்தல், யானைப்பாகன்கள் பயப்படும் பயங்கர சிலை, மாயாபுரியில் புகுதல், மாயபுரியின் அரண்மனையில் தங்குதல், பதஞ்சலியை தாக்கும் மர்ம மனிதன், ரகசிய பாதைகள் கொண்ட அறை, நண்டுகளும் இதர பூச்சிகளும் நிறைந்த ரகசிய நுழைவாயில், மரண அபாயத்தில் சிக்குதல், நந்தினியின் உதவியுடன் தப்பித்தல், காளி வழிபாடு செய்யும் மர்ம குகையை கண்டறிதல், நாகபரனரின் இரண்டு கண்களாகிய அந்த இரண்டு புனித வைரங்களை கண்டறிதல், சிறைபட்ட கிராமத்து சிறுவர்களை கண்டறிதல், பகைவர்களிடம் பிடிபடுதல், மகாகாளியின் புனித பானம் அருந்திய பதஞ்சலி சத்யாவை தாக்குதல், வூடு சக்திகளை கொண்ட பொம்மை என்று மூன்றாம் பாகம் ஒரு ராக்கெட் வேகத்தில் செல்கிறது.

Poonthalir Issue No 116 Vol 5 Issue 20 Issue Dated 16th July 1989 Puli Valartha Pillai 3rd Part in Comics format 6th & Final Episode Scans

Poonthalir Issue No 116 Vol 5 Issue 20 Issue Dated 16th July 1989 Puli Valartha Pillai 3rd Part 6th Chapter A
Poonthalir Issue No 116 Vol 5 Issue 20 Issue Dated 16th July 1989 Puli Valartha Pillai 3rd Part 6th Chapter C

ஆனால், மற்ற இரண்டு பாகங்களை போலில்லாமல் இந்த மூன்றாம் பாகம் வெறும் ஆறு அத்தியாயங்களிலேயே முடிந்து விட்டது தான் எங்களின் சோகத்திற்கு காரணம். அதைவிட கொடுமையான விஷயம் என்னவெனில் கதை முடியும் அந்த ஆறாம் அத்தியாயத்திற்கு முந்தைய  இதழில் இந்த தொடரே வராமல் இருந்தது தான். ஒரு மாதம் காத்திருந்த எலிகளுக்கு திடீரென்று கதை முடிந்தது ஒரு அதிர்ச்சி என்றால், வாண்டுமாமா அவர்கள் எழுதும் அடுத்த தொடர்கதையை பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லாமல் போனது மற்றுமொரு அதிர்ச்சி.  அதே சமயம் திரு ரேவதி அவர்கள் எழுதும் ஒரே ஒரு உப்புக்கல் என்ற தொடர் ஆரம்பிக்கும் என்ற விளம்பரமும் கடைசி இரண்டு புத்தகங்களில் தொடர்ந்து வந்தது. (என்னடா இவன், திரு ரேவதி என்று எழுதி இருக்கிறானே என்று யோசிப்பவர்கள் சிறுவர் இலக்கியத்திற்கு புதியவர்கள், அவ்வளவுதான்).

இந்த புலி வளர்த்த பிள்ளை தொடர் வந்த தருணங்களில் பூந்தளிர் இதழில் வாண்டுமாமா அவர்கள் எழுதிய பல தொடர்கதைகள் வந்துக்கொண்டு இருந்தன. இந்த தொடருடன் வந்த இன்னபிற தொடர்கள் : தப்பியோடியவர்கள் - எஸ்கேப், புதையலை தேடி - பொக்கிஷங்களின் கதை, உலோகங்களின் கதை, துப்பறியும் புலிகள் - ஹரிஷ் & அனுஷா, சி ஐ டி சிங்காரம், பால பாகவாதம், நகரங்களின் கதை. இந்த புலி வளர்த்த பிள்ளை தொடருக்கு பின்னர் பூந்தளிர் இதழில் வேறெந்த வாண்டுமாமா அவர்கள் எழுதிய தொடர் கதையும் வரவில்லை. அதுவுமில்லாமல் இந்த தொடர் முடிந்த ஆறாவது இதழிலேயே பூந்தளிர் இதழின் வரவும் நின்றுவிட்டது வேறொரு சோகக்கதை. அதனை பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம். பூந்தளிர் இதழில் வெளிவந்த இந்த தொடர் கதையின் இதழ் விவரங்கள் பின்வருமாறு:

 

பூந்தளிர் வரிசை இதழ் தேதி விவரங்கள் முறை ஓவியங்கள்
04:12 84 15th Mar 1988 புலி வளர்த்த பிள்ளை விளம்பரம்
04:13 85 01st Apr 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 1 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:14 86 15th Apr 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 2 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:15 87 01st May 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 3 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:16 88 15th May 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 4 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:17 89 01st Jun 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 5 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:18 90 15th Jun 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 6 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:19 91 01st Jul 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 7 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:20 92 15th Jul 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 8 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:21 93 01st Aug 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 9 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:22 94 15th Aug 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 10 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:23 95 01st Sep 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 11 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
04:24 96 15th Sep 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 12 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
05:01 97 1st Oct 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 13 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
05:02 98 15th Oct 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 14 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
05:03 99 01st Nov 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 15 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
05:04 100 15th Nov 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 16 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
05:05 101 01st Dec 1988 புலி வளர்த்த பிள்ளை முதல் பகுதி பாகம் 16* நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
05:06 102 15th Dec 1988 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 1 நாவல் வடிவம் + ஓவியங்கள்  
05:07 103 01st Jan 1989 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 2 நாவல் வடிவம் + ஓவியங்கள்  
05:08 104 15th Jan 1989 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 3 நாவல் வடிவம் + ஓவியங்கள்  
05:09 105 01st Feb 1989 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 4 நாவல் வடிவம் + ஓவியங்கள்  
05:10 106 15th Feb 1989 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 5 நாவல் வடிவம் + ஓவியங்கள்  
05:11 107 01st Mar 1989 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 6 நாவல் வடிவம் + ஓவியங்கள்  
05:12 108 15th Mar 1989 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 7 நாவல் வடிவம் + ஓவியங்கள்  
05:13 109 01st Apr 1989 புலி வளர்த்த பிள்ளை இரண்டாம் பகுதி பாகம் 8 நாவல் வடிவம் + ஓவியங்கள் செல்லப்பன் @ செல்லம்
05:14 110 15th Apr 1989 புலி வளர்த்த பிள்ளை மூன்றாம் பகுதி பாகம் 1 முழுக்க, முழுக்க காமிக்ஸ் வடிவம் செல்லப்பன் @ செல்லம்
05:15 111 01st May 1989 புலி வளர்த்த பிள்ளை மூன்றாம் பகுதி பாகம் 2 முழுக்க, முழுக்க காமிக்ஸ் வடிவம் செல்லப்பன் @ செல்லம்
05:16 112 15th May 1989 புலி வளர்த்த பிள்ளை மூன்றாம் பகுதி பாகம் 3 முழுக்க, முழுக்க காமிக்ஸ் வடிவம் செல்லப்பன் @ செல்லம்
05:17 113 01st Jun 1989 புலி வளர்த்த பிள்ளை மூன்றாம் பகுதி பாகம் 4 முழுக்க, முழுக்க காமிக்ஸ் வடிவம் செல்லப்பன் @ செல்லம்
05:18 114 15th Jun 1989 புலி வளர்த்த பிள்ளை மூன்றாம் பகுதி பாகம் 5 முழுக்க, முழுக்க காமிக்ஸ் வடிவம் செல்லப்பன் @ செல்லம்
05:19 115 01st Jul 1989 இந்த இதழில் கதை வெளிவரவில்லை.
05:20 116 15th Jul 1989 புலி வளர்த்த பிள்ளை மூன்றாம் பகுதி பாகம் 6 முழுக்க, முழுக்க காமிக்ஸ் வடிவம் செல்லப்பன் @ செல்லம்

இப்படி ஒரு அருமையான கதையை பற்றி சொல்லி விட்டு, அதன் பின்னர் இந்த கதையை படிக்கவேண்டுமெனில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு மாதமிருமுறை இதழின் முப்பத்தி இரண்டு புத்தகங்களை தேடிப்படியுங்கள் என்று சொல்ல நானொன்றும் கல் நெஞ்சன் அல்ல. அதுவில்லாமல் இந்த இதழ்களை தேடிப்பிடிப்பது இனிமேல் சாதியமும் அல்ல. யாராவது ஒன்றிரண்டு புத்தக சேகரிப்பாளர்களிடம் வேண்டுமெனில் இவை இருக்கலாம்.  ஆகையால், தொடர்கதையாக வந்த இந்தகதையின் புத்தக பதிப்பு விவரங்களை உங்களுக்கு அளிக்கிறேன்.

VanduMama Puli Valartha Pillai Cover

VanduMama Puli Valartha Pillai Credits Page

VanduMama Puli Valartha Pillai Title Page

VanduMama Puli Valartha Pillai Cover VanduMama Puli Valartha Pillai Credits Page VanduMama Puli Valartha Pillai Title Page

VanduMama Puli Valartha Pillai Forward

VanduMama Puli Valartha Pillai 1st Part Title

VanduMama Puli Valartha Pillai 1st Part Intro

VanduMama Puli Valartha Pillai Forward VanduMama Puli Valartha Pillai 1st Part Title VanduMama Puli Valartha Pillai 1st Part Intro

இப்படிப்பட்ட அற்புதமான கதையம்சத்தை கொண்ட இந்த புத்தகத்தின் விலை இருபது ருபாய் மட்டுமே. நூற்றி நாற்பது பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இன்னமும் பல பிரதிகள் வானதி பதிப்பகத்தாரின் விற்பனை நிலையத்தில் கிடைக்கின்றது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உடனடியாக தி.நகர் பாண்டி பஜாரில் இருக்கும் வானதி புத்தக நிலையத்திற்கு சென்று இந்த புத்தகத்தை கையகப்படுத்த வேண்டியதே. (பாண்டி பஜாரில் ICICI வங்கி ATM எதிரில் சென்றால் தி.நகர் தலைமை போஸ்ட் ஆபிஸ் வரும். அதற்க்கு நேர் எதிரில் இருக்கும் தீனதயாளு தெருவில் இரண்டாவது பில்டிங் தான் வானதி பதிப்பகம். அவர்களின் தொலைபேசி எண் இதோ:   044 – 2434 2810

VanduMama Puli Valartha Pillai 1st Part 1st Page

VanduMama Puli Valartha Pillai 1st Part Last Page

VanduMama Puli Valartha Pillai 2nd Part Title

VanduMama Puli Valartha Pillai 1st Part 1st PagE1 VanduMama Puli Valartha Pillai 1st Part Last Page VanduMama Puli Valartha Pillai 2nd Part Title

VanduMama Puli Valartha Pillai 2nd Part 1st Page

VanduMama Puli Valartha Pillai 3rd Part Title

VanduMama Puli Valartha Pillai 3rd Part 1st Page

VanduMama Puli Valartha Pillai 2nd Part 1st Page VanduMama Puli Valartha Pillai 3rd Part Title VanduMama Puli Valartha Pillai 3rd Part 1st Page

வாண்டுமாமா அவர்களின் எழுத்துப்பாணி தனித்தன்மையுடன் விலகி நின்றாலும் அவருடைய கதைகளில் சில சம்பவங்கள் தழுவி அமைந்திருக்கும். பாரதி சொன்னது போல "பிற நாட்டு நற்சாத்திரங்களை தமிழில் கொணர" முயற்சித்த மாமனிதர் அவர்.  மேலே நான் விவரித்த கதையை "அடடே, இதன் பாதிப்பு உள்ளதே, இதிலிருந்து இன்ஸ்பயர் ஆகி உள்ளதே" என்று வாண்டுமாமா அவர்களின் பலகீனம் என்ற காட்டினில் சுள்ளி பொறுக்குவது என்னுடைய வேலை இல்லை. யாரும் அதனை செய்ய தேவையும் இல்லை. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறுவர் இலக்கியத்திற்காக அர்பணித்த அந்த மாமனிதருக்கு வாழ்வில் பொன்னும் பொருளும் தான் கிடைக்கவில்லை. இனிமேல் நம் அனைவரின் கூட்டு முயற்சியால் சிறிதளவு பெயராவது கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

முன்பனி காலத்தின் மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் கதகதப்புக்கு வெளிச்சத்தின் துணையை தேட தீக்குச்சியை கொளுதியதுண்டா எப்போதாவது? இருளினை நீக்குவதோடிலாமல் நாசியை துளைக்கும் கந்தக மணம் பூண்டு ஒரு விதமான விவரிக்க இயலாத வாசமும், ஊதாரியிடம் கொடுத்த லாட்டரி பணம் போல ஒரு நிலையிலாமல் வளைந்து நெளிந்து செல்லும் புகைப்படலத்தையும் ரசித்ததுண்டா நீங்கள்? அந்த தீக்குச்சி எரிந்து முடிந்தவுடன் அங்கு வாசமும், புகைப்படலமும் இருக்காது. சிறு வயதில் எங்களுக்கு வெளிச்சத்தத்தினை அளித்திட்ட வாண்டுமாமா அவர்களின் கதைகளை இப்போது படிக்கையில் அந்த எரிந்து முடிந்த தீக்குச்சியை போல ஒன்றுமே இல்லாதது போலிருக்கும். இருந்தாலும்கூட அந்த புகைப்படலமும், கந்தக மணமும் எங்களுக்கு அளிக்கும் அந்த சில வினாடி போதைக்காக அவருக்கு முழு மனதோடு கூடிய ஒரு நன்றி.

தொடர்புடைய சார் பதிவுகள்: Suggested Reading

Related Posts with Thumbnails