Pages

Sunday, January 01, 2017

7 My Father is My Hero

Crime Time Cover Intro Page

(65% சொந்தக் கதை. கடைசியில்தான் காமிக்ஸ் பற்றிய தகவல். படிக்க வேண்டுமென்று அவசியமில்லை. நேரமில்லாதவர்கள், கடந்து சென்றுவிடலாம்).

டியர் காமிரேட்ஸ்,

வாழ்க்கையில், மிகவும் முக்கியமான முடிவு எது? என்பதைப் பற்றி பல கருத்துகள் உண்டு. என்ன படிக்க வேண்டும்? என்ன வேலையில் சேர வேண்டும்? யாரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ள வேண்டும்? என்பதெல்லாம் முக்கியமான முடிவெடுக்கும் தருணங்களே. ஆனால், இவையெல்லாம் ஓரளவுக்கு சுயசிந்தனை வந்த பிறகு எடுக்கும் முடிவுகள். ஆனால், இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியமான ஒரு முடிவு இருக்கிறது. அது, தனக்கான ஒரு ஆதர்ஷ நாயகரைத் தேர்வு செய்வது! அந்த முடிவை நாம் எடுப்பது, பெரும்பாலும் நமக்கான சுயசிந்தனைத் திறன் வளர்வதற்கு முன்பாகவே என்பது அந்த முடிவை இன்னமும் முக்கியமானதாக்குகிறது.

ஒவ்வொருவருக்கும் ஆதர்ஷ நாயகர்(கள்) உண்டு. தனக்கான வழிகாட்டியை, ஆதர்ஷ நாயகரைத் தேர்வு செய்வது என்பது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான ஒரு முடிவு. அந்த ஆதர்ஷ நாயகர் யாரென்பதைப் பொறுத்துத்தான் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையே அமையும். அப்படி எனக்கு அமைந்த ஒரு வழிகாட்டிதான் என்னுடைய அப்பா.

What is the Son, but, an extension of the Father; through thoughts and actions?

அப்பா.

இந்த ஒரு வார்த்தைக்குள்தான் எத்தனை, எத்தனை அர்த்தங்கள் மறைந்திருக்கிறது? அன்பு, பாசம், கோபம், கண்டிப்பு, கருணை, போதித்தல், ஒரு Role Modelஆக, ஒரு அதிநாயகராக என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ரோல் மாடல், என்னுடைய Mentor, என்னுடைய ஹீரோ, என்னுடைய வழிகாட்டி எல்லாமே என்னுடைய அப்பாதான். அவரைப்பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும் (எழுதுவேன்). ஆனால், இந்தப் பதிவில் அதற்கு இடமில்லை.

சுருங்கக் கூறின், ஒரு சிறு மலையடிவார கிராமத்திலிருந்து வந்த அந்த எம் ஜி ஆர் ரசிகர், இரண்டு யுத்தங்களில் பங்கேற்ற அந்த இராணுவ வீரர், மனைவிக்கு கொடுத்த வாக்கினால், காஷ்மீரில் – கடும்குளிரில் இருந்தபோதும், கதகதப்பிற்காக சிகரெட்டை, மதுவைத் தொடக்கூட மறுத்த அந்த லட்சியக் கணவர் (And Hence, தனது சுருள் கேசத்தை இழந்தவர்), உடன்பிறந்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிந்துமே அவர்களை ஒன்றும் செய்யாமல், 20 ஆண்டுகளுக்கு முன்பாக 30 லட்சத்தை விட்டு விட்டு வந்தவர், ஒவ்வொருமுறையும் அன்பு மட்டுமே சிறந்தது என்பதை விளக்குவதற்காக இன்றும் “ஏமாளி” என்று விளிக்கப்படுபவர், இவர்தான் என் அப்பா.

tcu logoகடந்த ஆண்டில், அவர் வாழ்வின் எல்லையை 3 முறை தொட்டுவிட்டு வந்திருக்கிறார். மொத்தம் 18 முறை மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ICUவில்தான். 2 முறை, வீட்டருகில் இருந்து ஆக்சிஜன் வைத்து, ஆம்புலன்சில் எடுத்துச் சென்றதால்தான் பிழைத்ததாகச் சொன்னார்கள். மற்றொரு முறை, அவரது காலையே வெட்டி எடுத்தால்தான் அவர் பிழைப்பார் என்று சொன்னார்கள். ஒருமுறை, அவருக்கு ஒரு நுணுக்கமான சிகிச்சை அளிக்க வேண்டும், ஆனால், அப்படிச் செய்தால், அதன்பிறகு அவருக்கு டையாலிசிஸ்தான் செய்ய வேண்டி வருமென்று சொன்னார்கள். ஏற்கனவே, குடும்பத்தில் இருக்கும் மருத்துவப் பிரச்சனைகளால் மனமொடிந்துப் போயிருந்த எனக்கு, இது உண்மையிலேயே தாங்கொணாத் துயரம் தந்த ஆண்டுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

இதுவரையில், நான் நிச்சயம் என்னுடைய அப்பாவைப் போலத்தான் வாழ்ந்து வருகிறேன் (என்ன, அவர் இந்திய வாத்தியார் எம் ஜி ஆர் ரசிகர், நான் ஹாலிவுட் வாத்தியார் ஜான் வெய்ன் ரசிகன்). நல்ல சகோதரனாக, நல்ல மாணவனாக, நல்ல நண்பனாக, நல்ல வேலைக்காரனாக, இப்போது, நல்ல முதலாளியாக. ஆனால், 100 விழுக்காடு அவரைப்போல நான் ஒரு நல்ல மகனாக இருந்ததில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

cvஎதற்காக இவ்வளவு சுயபுராணம்? என்றுதானே கேட்கிறீர்கள். விஷயத்திற்கு வருகிறேன். இதுவரையில், சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றிய பெர்சனல் தகவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது (இனிமேலும் அப்படித்தான் இருக்கும்!). என்னுடைய புகைப்படத்தை வெளியிடுவதையே விரும்பாதவன் நான். நான் யார்? என்ன செய்கிறேன்? என்பதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட தகவல்கள். அவற்றை பொதுவில் பகிர நான் விரும்புவதில்லை. அப்படி இருக்க, ஏன் இந்த சுயவிவரப் பதிவு? என்ற கேள்விக்குப் பதில்: என்னுடைய TCU Syndicate என்ற நிறுவனத்தின் முதல் காமிக்ஸ் இன்று விகடன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால்தான்.

ct 1

ஆமாம், 10, 000 ரூபாய் பரிசுப் போட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ள க்ரைம் டைம் என்ற தொடர், இன்றுமுதல் சுட்டி விகடனில் அதிரடியாகத் தொடங்குகிறது. அதனுடைய கதாநாயகர்: இன்ஸ்பெக்டர் தேவ். இது வேறு யாருமில்லை, என்னுடைய அப்பாவின் சிறுவயது தோற்றத்தை மாடலாக வைத்து, அவருடைய குணாதிசயங்களுடன் உருவாக்கப்பட்டதுதான். இதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு என்னுடைய மெய்நிகர் உலகில் இருப்பவர்களின் பெயர்களே சூட்டப்பட்டிருக்கும்.

சிறுவயதில், The Illustrated Weekly இதழில் நான் படித்த இன்ஸ்பெக்டர் ஆஸாத் (ஆபித் சுர்த்தி & பிரதாப் முல்லிக்) மற்றும் இன்ஸ்பெக்டர் கருடா / ஈகிள் (ஜக்ஜீத் உப்பல் & பிரதீப் சாதே) ஆகிய காமிக்ஸ் கதைகளை மனதில் வைத்து, ஷெர்லக் ஹோம்ஸ் ஸ்டைலில் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் தொடர்தான் க்ரைம் டைம். இதில், ஒவ்வொரு இதழிலும் குற்றவாளிகளை எப்படி இன்ஸ்பெக்டர் தேவ் பிடிக்கிறார்? என்பதற்காக உதவிக் குறிப்புகள், க்ளூ வடிவில் கதையிலேயே வழங்கப்பட்டிருக்கும். அதை, சரியாகக் கவனித்து, எழுதி அனுப்புபவர்களுக்கு 10, 000 ரூபாய் பரிசும் உண்டு.

ct 2

காமிக்ஸ் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாத மாநிலமாகத்தான் தமிழ்நாடு இன்றும் இருந்து வருகிறது. ஆகவே, காமிக்ஸ் வாசித்தலுக்கான ஒரு முதல் முயற்சியாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், இந்தத் தொடரின் ஒவ்வொரு ஓவியத்திலும் (Panelலிலும்) ஒரு முக்கியமான விஷயமோ, அல்லது சுவாரசியமான தகவலோ குறிப்பாக உணர்த்தப்பட்டு உள்ளது. நிறைய Tributeகள் ஒளிந்து கிடக்கின்றன. ஆகவே, இதைப் படிப்பவர்கள், வெறும் எழுத்துகளை மட்டும் படித்துவிட்டுச் செல்ல முடியாது. ஒவ்வொரு கட்டமாக, ஒவ்வொரு ஓவியமாகக் கூர்ந்து கவனித்தால்தான், இக்கதையில் என்ன நடக்கிறது? என்றே புரியும்.

இத்தொடரின் ஓவியங்களை வரைந்தவர் என்னுடைய வேண்டப்பட்ட விரோதியான திரு சதீஷ் ஆவார். ஒரு பிசியான Professional Doctor ஆன இவரிடம் ஒளிந்திருக்கும் ஓவியத்திறமையை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தவன் நான். அதை வெளிக்கொணர, இவ்வளவு நாட்கள் ஆகி விட்டது. ஆனால், ஆரம்பித்து விட்டாயிற்று அல்லவா? இனிமேல் பாருங்கள், அதிரடியாக பல காமிக்ஸ் தொடர்கள் எங்களிருவர் கூட்டணியிலிருந்து வரும். பொங்கல் முதலே சித்திர வடிவிலான அடுத்தத் தொடர் ஆரம்பிக்க உள்ளது. இவ்வாண்டின் இறுதிக்குள்ளாக, தமிழின் முதன்மையான வெகுஜன பத்திரிகைகளில் TCU Syndicateன் 6 சித்திரக் கதைத் தொடர்களை நீங்கள் வாசிக்கலாம். அதற்காகவே, இன்னொரு அசகாய திறமைசாலியான ஓவியரையும் காமிக்ஸ் உலகிற்கு கையைப் பிடித்து இழுத்து வருகிறேன்.

Crime Time Cover Intro Page

முதல் சினிமாவை இயக்க வாய்ப்புத் தேடும் இயக்குநர்கள் எப்படி முதல் படத்தை கமர்ஷியல் சினிமாவாக இயக்குகிறார்களோ, அதைப்போலவே, TCU Syndicateன் முதல் காமிக்ஸ் தொடர் ஒரு பக்கா கமர்ஷியல் கதை. ஆனால், அடுத்த 5 காமிக்ஸ் தொடர்களுமே வித்தியாசமானவையாக இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்கிறேன். விரைவில், வெகுவிரைவில் தமிழின் மிக முக்கியமான வெகுஜனப் பத்திரிகைகளிலும், ஒரு மாறுபட்ட இதழிலும் நமது சித்திரக் கதைத் தொடர்கள் வரவுளன.

காமிக்ஸ் சார்ந்த என்னுடைய ஒவ்வொரு அடியிலும் எனக்கு முன் நின்று வழிநடத்திச் செல்லும் திரு முத்து விசிறி, தமிழ் சிறுவர் இலக்கிய உலகின் தலைமகனான திரு முல்லை தங்கராசன், முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு சௌந்தர பாண்டியன் மற்றும் தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லியான திரு வாண்டுமாமா ஆகிய நால்வருக்கு இந்தக் கதையையும், இனிவரும் ஒவ்வொரு படைப்பையும் சமர்ப்பணம் செய்கிறேன். இவர்களால், நான். இவர்களால்தான், நான்.

இதுவரையில், பேச்சாக, (Well, முழுவதுமாக அப்படிச் சொல்லிவிட முடியாது, கடந்த 18 மாதங்களில், 150 காமிக்ஸ் சார்ந்த கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்) மட்டுமே இருந்த நான், செயலில் இறங்கும் நேரம் இது. உங்களது வாழ்த்துகளையும், Constructive Criticism கொண்டு கருத்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

Related Posts with Thumbnails