Pages

Monday, May 22, 2017

0 The Good Dog ஆங்கில கிராபிஃக் நாவல் அறிமுகம்

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics Cover1995ஆம் ஆண்டு. ஒரு புதிய ஓவியர் தன்னுடைய முதல் காமிக்ஸ் / கிராபிஃக் நாவலை வெளியிடுகிறார். புதிய படைப்பாளி, அதிகம் பரிச்சயமில்லாத பதிப்பகம், எந்தவிதமான விளம்பரமும் இல்லாத சூழல் என்று பல தடைகள் இருந்தாலும் அந்த புத்தகம் காமிக்ஸ் ரசிகர்களிடையே பெரிதளவில் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே கதாசிரியரின் அடுத்த படைப்பான The Big Wheels வெளியானபோது, அமெரிக்காவே இவரை திரும்பப் பார்த்தது. ஆனால், தன் மீது படிந்த அந்த புகழ் வெளிச்சத்தை நாடாமல், திடீரென காமிக்ஸ் துறையில் இருந்து விலகி, தனக்கு பிடித்தமான உடல் ஓவியங்களை வரையச் (Tattoos)  சென்று விட்டார்.

அடுத்து பல ஆண்டுகளில், காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவரும், அவரது இரண்டு படைப்புகளுமே பல மழைக்கால மாலைநேரங்களின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. புகழின் உச்சத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பத்திலேயே முடித்துக்கொண்ட அந்த கதாசிரியர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து மறுபடியும் திரும்ப வந்து ஒரு கிராபிஃக் நாவலை படைக்கிறார் என்றால், அதன் மீதான ஆர்வம் எப்படி இருக்கும்? அல்லது அவரைத் திரும்ப வரவழைத்த அளவுக்கு அந்த கதை எப்படிப்பட்டதாக இருக்கும்?

Graham Chaffeeஅப்படிப்பட்ட ஒரு கதையுடன் திரும்ப வந்து அசத்தி இருக்கிறார்,. கிரகம் சாஃபி. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசிக்கும் இவரது லேட்டஸ்ட் கிராபிஃக் நாவலின் பெயர் The Good Dog. கதைக்கேற்றபடியே முழுக்க முழுக்க நாய்களையே பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்ட கதைதான் இது.

அடிக்கடி கொடுங்கனாக்களால் பாதிப்புக்கு உள்ளாகும் இவான் என்ற தெரு நாய்தான் நமது கதையின் நாயகன். ஒரு குழந்தையை காரில் அடிபடுவதில் இருந்து காப்பாற்றி, தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, அதனால் திட்டு வாங்குவதில் இருந்து ஆரம்பித்து, தாகம் காரணமாக கோழிகளுக்காக வைக்கப்பட்டிருந்த நீரை குடிக்க, அதனால் கோழிகள் பயத்தில் கத்த, அங்கிருந்து பிக்னிக்கில் இளம் ஜோடியிடம் கொஞ்சப்படுவது, மரத்தில் கயிற்றில் பின்னிக்கொண்டு சிக்கலில் இருக்கும் கிர்பி என்ற நண்பனை விடுவிப்பது, பின்னர் ஒரு வேட்டை நாய் கும்பலுடன் இணைவது, அவர்களை பற்றித் தெரிந்துகொள்வது, அன்றிரவு அவர்களுடன் வேட்டைக்கு செல்வது, வேட்டையில் தலைவன் கொல்லப்படுவது, பிறகு அந்த கும்பலில் இருந்து பிரிவது என்று கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics There is a Place for every dog

பின்னர் வேட்டைக்கு சென்ற அதே வீட்டின் கோழி வெளியே சுற்றும்போது அதனை வீட்டுக்கு திரும்ப அழைத்து செல்கிறது, இவான். ஆனால், அந்த வீட்டு பெண் இவானிடம் பேச முற்படும்போது பயந்து ஓடிவிடுகிறது. அவள் மற்றவர்களிடம் இதை சொல்கிறாள். அப்போது ரே என்பவர் “நீ ஏன் அந்த நாய்க்கு ஒரு கடிதம் எழுதக்கூடாது?” என்று கேட்கிறார். முதலில் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அவர் கடிதத்தை மிகவும் எளிமையாக எழுதும்படியும் சொல்கிறார். அதன்படி அவள் ஒரு குறியீட்டுடன் தண்ணீர் குவளையை வைக்க, இவான் அதில் தண்ணீர் பருகிவிட்டு அந்த குறியீட்டின்படி அங்கேயே அமர்ந்திருக்கிறது. அப்போது வேட்டைக் கும்பலைச் சேர்ந்த நாய் மறுபடியும் வர, இவான் அந்த நாயை பின் தொடர்ந்து செல்கிறதா? அல்லது அங்கேயே தங்கிவிடுகிறதா? என்பதை சொல்லாமல் முடிவை வாசகர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறார் கதாசிரியர்.

கதையில் பல இடங்களில் வசனங்கள் மிகவும் முக்கியமானதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக

 • ஒவ்வொரு நாய்க்கு என்றும் ஒரு வசிப்பிடம் அவசியமாகிறது (A Dog needs some place to belong)
 • முதலாளி எப்போதுமே சரி.
 • ஒவ்வொரு நாய்க்கும் அதற்கான இடம் விதிக்கப்பட்டுள்ளது.
 • அது எந்த இடம் என்று கண்டறிவதுதான் அந்த நாயின் வேலை

என்று பல வசனங்களும், மிகவும் எளிய பாணியிலான ஓவியங்களும் கதைக்கு வலுவூட்டுகிறது.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics writing a Letter for the dog

கதையை மேலோட்டமாக படிக்கும்போது இதனை ஒரு சாதாரண நாயின் கதையாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருந்தாலும் இது ஒரு சாதாரண கதை அல்ல. கதையில் இவான் இருக்கும் இடத்தில் நம்மை பொருத்திப்பார்த்தால், இது ஒரு உளவியல்ரீதியிலான சுய பரிசோதனையாகவே படுகிறது. சமூகத்தில் நமக்கான இடம் என்ன? என்பதை நாம் உணரும்வரையில், நாமும் இவானைப்போலவே நிலையில்லாமல், புரிந்துக்கொள்ளப்படாமல் சுற்றிக்கொண்டுதான் இருப்போமோ என்னவோ?

அதைப்போலவே முதலாளி செய்வது சரி என்ற சிந்தனை கொண்டவர்களுக்கும், சுதந்திரமாக செயல்பட விரும்புபவர்களுக்கும் இருக்கும் வேற்றுமையும், தன்னைப்பற்றிய சுய தேடலை கொள்பவர்களுக்கும், இலட்சியத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களுக்கும், நம்பிக்கையை மட்டுமே கொண்டு வாழ்பவர்களுக்கும் இடையே இருக்கும் மாறுபட்ட சிந்தனையை இந்த கதை விளக்குகிறது.

ஒரு சாதாரண கதைக்கும், விலங்குகளை வைத்து எழுதப்படும் கதைக்கும் இடையே இருக்கும் வித்தியாசமே குணங்களை வைத்து மதிப்பீடு செய்யவும், தன்னுடன் பொருத்தி ஒப்பீடு செய்யவும் விலங்குகள் / நாய்கள் ஏற்கும் கதாபாத்திரங்கள் எளிமையாக அமைவதுதான்.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics Title Artகுறியீடு என்று எடுத்துக்கொண்டால், இந்த கதையில் இருக்கும் குறியீடுகளை மட்டும் வைத்து மிஷ்கின் பத்து வருஷம் படம் எடுக்கும் அளவுக்கு கதாசிரியர் நுணுக்கமாக வரைந்திருக்கிறார். உதாரணமாக புத்தகத்தின் முதல் பக்கத்தில் வரையப்பட்டு இருக்கும் கிர்பியின் கழுத்துப்பட்டையின் கயிறு அனைவரையும் சுற்றி ஒரு வட்டம் போட்டு இருப்பதில் ஆரம்பித்து, கதையின் முடிவை வாசகர்களுக்கு விடுவது வரை கதை முழுவதுமே குறியீடுகள்தான். அதுவும் கதையின் முடிவில் அந்த வீட்டில் தங்கிவிடுவதா? அல்லது வேட்டைக் கும்பலைச் சேர்ந்த நாயுடன் பயணத்தை தொடர்வதா? என்ற கேள்விக்கான விடையை படிக்கும் வாசகரிடமே விட்டுவிடுகிறார் கிரகம். அந்த முடிவை பொருத்து, வாசகர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட அளவுடன் சந்தோஷப்பட்டுக்கொள்ளும் மனிதனாகவோ, அல்லது எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிக்க நினைக்கும் ஒரு இலட்சியவாதியாகவோ அடையாளம் கண்டுகொள்ளலாம்.

ஒரு சாதாரண கதை, ஒரு உளவியல் பரிட்சை என்ற நிலைப்பாடுகளை தாண்டி மூன்றாவதாக ஒரு விஷயத்தை கதாசிரியர் சொல்லி இருக்கிறார். நீண்டகால காமிக்ஸ் வாசகர்களுக்கு மார்வெல் காமிக்ஸ் பற்றியும், அதன் நெடுநாள் எடிட்டரான ஜாக் கிர்பியைப்பற்றியும் தெரிந்திருக்கும். தன்னுடைய முதலாளியின்மேல் கண்மூடித்தனமாக நம்பிக்கைகொண்ட முட்டாள் நாயின் பெயரை கிர்பி என்று வைத்து, அமெரிக்க காமிக்ஸ் வரலாற்றின் ஒரு மாபெரும் படைப்பாளியின் உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார், கிரகம்.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics ivan reading the sign

இதைப்பற்றி கதாசிரியரிடம் நான் கேட்டபோது, சர்ச்சைகளை தவிர்க்க பிரபல நடிகர் ப்ரூனோ கிர்பியை மனதில் கொண்டுதான் அந்த நாய்க்கு கிர்பி என்று பெயரிட்டதாக விஷமத்துடன் சொல்கிறார்.

அதேசமயம் ஒரு கதாசிரியனின் உரிமை அந்த கதையை எழுதுவது வரை மட்டுமே என்றும் அதற்குப்பிறகு அதனை புரிந்துகொள்வது வாசகர்களின் உரிமை என்று சொல்கிறார்.

ஒரு நாயுடன் தொடர்பு கொள்ள நாம் கையாளும் வழிமுறைகள் செயல்படாமல் போக, கடிதம் எழுது என்று சொல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாத, ஆனால் தீர்வுகாண உதவிய ஒரு விஷயம். இதுபோன்ற செயல் சார்ந்த குறியீடுகள் மட்டுமின்றி ஓவியங்களின்மூலமும் பல குறியீடுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார், கதாசிரியர் கிரகம்.

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics last page

Good Dog By Graham Chaffee 2013 June FantaGraphics ivan listening Musicடின்டின் கதாசிரியரான ஓவியர் ஹெர்ஜிடம் அவர் வரைந்ததிலேயே அவருக்கு பிடித்தமான ஓவியங்கள் பற்றிக் கேட்டபோது இரண்டு ஓவிய கட்டங்களை மட்டுமே சொல்வார். அதில் ஒன்றில் ஒருவன் கடற்கரையில் இருப்பது போலவும், அதே கட்டத்தில் இன்னொருவன் எழுந்து வருவது போலவும், மூன்றாவதாக ஒருவன் ஓடுவது போலவும் வரைந்திருப்பார். மூன்று பேராக தெரிந்தாலும் செயலில் ஈடுபடுவது ஒரே ஒருவன் மட்டுமே. அவனது செயலை (Action) நமக்கு உணர்த்தவே ஹெர்ஜ் ஒரே கட்டத்தில், மூன்று தனித்தனி ஆட்களை வரைந்தார்.

ஒரு தொடர்ந்த செயலை ஒரு ஓவிய கட்டத்தின்மூலம் எளிமையாக உணர்த்திய அந்த கோட்பாட்டின்படி இந்த கதையிலும் கிரகம் பல இடங்களில் (மெனக்கெட்டு) அதுபோன்ற ஒரு தொடர்ச்சியான செயலை ஒரே ஒரு ஓவியத்தின்மூலம் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார். அதற்காகவே அவருக்கு ஒரு பெரிய பாராட்டு.

விலங்குகளை வைத்து எழுதப்பட்ட கதைகளில் Animal Farm & Watership Down ஆகிய இரண்டு மட்டுமே காலங்களை, நாடுகளை கடந்து கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் மூன்றாவதாக இந்த கதை அமைந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் மற்றுமொரு விஷயம் என்னவென்றால், கதாசிரியர் மறுபடியும் 10 ஆண்டுகள் வனவாசம் செல்லாமல், அடுத்த கதையை எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான்.

Kumudam Theera Nathi Tamil Literary Magazine Issue Dated Feb 2015 Page No 16 The Good Dog Reviewதீர்ப்பு: பரிந்துரைக்கப்படுகிறது. ஆறு தோட்டாக்கள் (6/6).

கதை & ஓவியம்: கிரஹம் சாஃபி

வெளியீடு: FantaGraphics Books அமெரிக்கா- (ஜூன் 2013)

பக்கங்கள்: 96

அமைப்பு: கருப்பு வெள்ளை.

விலை: $16.99

குறிப்பு: தமிழின் நம்பர் 1 இலக்கிய மாத இதழான தீராநதியில் இந்தக் கட்டுரை வெளியானது. நன்றி, தீராநதி ஆசிரியர் குழு.

Saturday, May 13, 2017

4 ‘கனவா, நிஜமா?' - தமிழில் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த சித்திரக்கதை

Chendhur Comics Issue No 1 Dated 1st Feb 1985 Front Cover

‘ப்ரிமானிஷன்', ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ', ‘சோர்ஸ் கோட்' உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்கள். இப்படங்களின் நாயகர்கள் எதிர்காலத்தில் வரும் சம்பவங்களைக் கணிக்கக்கூடிய அல்லது எதிர்காலத்துக்கே சென்று சம்பவங்களை மாற்றியமைக்கக்கூடிய திறனைப் பெற்றவர்கள். இவையெல்லாம் சமீபத்திய வருடங்களில் வெளியானவை. ஏறத்தாழ 37 வருடங்களுக்கு முன்பே தமிழில் இதுபோல ஒரு கதை வெளியாகியிருக்கிறது, தெரியுமா?

தமிழில் குழந்தைகளுக்கான தலைசிறந்த கதைசொல்லி வாண்டுமாமாவின் படைப்பான ‘கனவா? நிஜமா?'தான் அது!

Parvathi Chithirak Kadhaigal PCK No 15 Dated Aug 1993 VanduMama Kanava Nijama Coverதமிழில் காமிக்ஸ் என்று எடுத்துக்கொண்டால், அது முல்லை தங்கராசன், வாண்டுமாமா மற்றும் செல்லம் என்று மூன்று ஜாம்பவான்களை மையமாகக் கொண்டது. இவற்றில் தமிழில் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த சித்திரக்கதை என்று ‘கனவா, நிஜமா?'வைச் சொல்லலாம்.

தமிழ் சித்திரக் கதைகளில் காமிக்ஸ் என்ற கதை சொல்லும் அமைப்பை மிகச் சரியாக உணர்ந்து, அதை முறையாகப் பயன்படுத்தி, வார்த்தைகளால் அல்லாமல், ஓவியங்களின் மூலம் கதையை விவரித்த படைப்பு இது.

வாண்டுமாமா + ஓவியர் செல்லம் கூட்டணி இக்கதையின் உயரத்தை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டுசென்றது. வாண்டுமாமாவின் மாஸ்டர்பீஸ்களிலேயே சிறந்ததாகப் பலராலும் மதிக்கப்படும் இக்கதை, வயது வேறுபாடுகளையும் காலத்தையும் கடந்து நிற்கிறது.

நாளையும் இன்றும்:

Vandumama 1நீலன் என்ற ஒரு ஏழை ஆட்டிடையன், ஒரு நாள் மலையுச்சியில் ஒரு விசித்திர புகையை நுகர்ந்து மயக்கமுறும்போது, வித்தியாசமான கனவொன்றை காண்கிறான். தன்னுடைய வீட்டில் வேறொருவன் குடியிருப்பதையும், தற்போதைய மன்னரும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டு, இன்றைய சேனாதிபதி மன்னராகி இருப்பதும், தளபதி ஒருவர் மட்டும் தப்பித்து, இவர்களை எதிர்த்து போராடுவதும் அவனுடைய கனவில் வரும் முக்கிய சம்பவங்கள். இவை அனைத்துமே பத்து ஆண்டுகள் கழித்து நடைபெறப்போகும் சம்பவங்கள். மறுபடியும் மயக்கமுறும் நீலன், தன்னுடைய இன்றைய காலகட்டத்தில் திரும்பி இருப்பதை உணர்கிறான். அதாவது நிகழ் காலத்திற்கு.

என்ன செய்வதென்றே தெரியாத குழப்பமான மனநிலையில் இருக்கும் நீலன், பின்னர் தெளிவுறுகிறான். தன்னுடைய வீட்டருகே தற்போது சிறிய  செடியாக இருப்பதே, பத்தாண்டுகள் கழித்து தன்னுடைய கனவில் பெரிய மரமாகி இருப்பதை உணரும் அவன், அந்த செடியை வேரோடு பிடுங்கி விடுகிறான். தன்னுடைய இந்த செயலான,து பின்னர் மரமாகப்போகும் அந்த செடியின் எதிர்காலத்தை மாற்றியது போல, தன கனவில் கண்ட மற்ற நிகழ்வுகளையும் மாற்ற முடிவெடுக்கிறான். துணிந்து மன்னரிடம் செல்கிறான். ஆனால், அவனது வாதத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாத சூழலில், மன்னர் அவனை மனநலம் தவறியவன் என்றெண்ணி சிறையில் அடைக்க சொல்கிறார்.

Kanava Nijama Sample Page in Colour 2

Kanava Nijama Hero Neelan coming back as a heroசிறையில் இருக்கும் நீலனை மன்னரின் இளைய சகோதரன் சேனாதிபதியுடன் வந்து சந்தித்திக்கிறார். பத்து வருடங்கள் கழித்து இதே சேனாதிபதிதான் நீலனை காப்பாற்றுவது என்பதால், நீலனுக்கு அவரை தெரிகிறது. சேனாதிபதி அவர்களின் உடலில் இருக்கும் (வெளி ஆட்கள்  யாருக்கும் தெரியாத) அடையாளம் ஒன்றை சொல்லும் நீலன் அவர்கள் இருவரின் நம்பிக்கையை பெறுகிறான். நீலனின் கூற்றில் இம்மியளவும் உண்மை இருந்தால், தங்களின் உயிருக்கு ஆபத்தேற்படுவதோடில்லாமல், நாட்டின் எதிர்காலமே சீர்குலையும் அபாயம் இருப்பதை அவ்விருவரும் உணர்கின்றனர். மன்னரின் சகோதரர் நீலனை கோட்டையின் அகழியில் தள்ளிவிட்டு விட்டு, ’தப்பித்து சென்று, இந்த நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்று’ என்று சொல்வதுடன் முதல் பாகம் முடிவடைகிறது.

Kanava Nijama Sample Page in Colour

 • நீலன் என்னவானான்?
 • அவனால் அகழியை உயிருடன் கடக்க முடிந்ததா?
 • தளபதியின் திட்டங்கள் நடந்தேறியதா?
 • மன்னர் கொல்லப்பட்டாரா? 
 • அல்லது நீலன் தன்னுடைய திட்டப்படி இந்த நிகழ்வுகளை நிறுத்தினானா ?
 • எவ்வாறு இது நடக்கும்?
 • ஒரு நாட்டின் எதிர்காலத்தை ஒரே ஒரு தனி நபரால் மாற்ற இயலுமா?

என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இரண்டாம் பாகத்தில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. விறுவிறுப்பான கதையுடன் உயிரோட்டம் நிறைந்த சித்திரங்கள் கொண்ட இந்த தொடர் கல்கி வார இதழில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

அற்புத அறிவியல் புனைவு

குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979-ம் ஆண்டு 'கல்கி' வார இதழில் 25 வாரத் தொடராக வெளிவந்த இந்தக் கதை, தமிழின் ஆகச்சிறந்த சித்திரக்கதைப் படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட நிறைய காரணங்கள் உள்ளன.

 • இதற்கு முன்னர் தமிழில் சில 'சயின்ஸ் ஃபிக்‌ஷன்' காமிக்ஸ் வந்திருந்தாலும், சரியான லாஜிக்குடன் படைக்கப்பட்ட முதல் படைப்பு இது.
 • சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் பெரும்பாலும் சமகாலத்திலேயே நிகழ்வதாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால், அக்காலத்திய மரபுப்படி மன்னர் காலத்துக் கதையின் ஊடே ‘ப்ரிமானிஷன்' பற்றிய விளக்கத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி வடிவமைக்கப் பட்டிருப்பது கதையின் நேர்த்தி.
 • நிகழ்காலத்தில் சிறிய செடியாக இருப்பதுதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு மரமாகவிருப்பதை உணர்ந்து, அதை வேரோடு பிடுங்கி, எதிர்காலத்தை மாற்ற முடியும் என்பதை ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் விளக்கிய எளிமையான கதை சொல்லும் பாணி இந்தக் கதையின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

புதுமை ஓவியப் பாணி

 • Artist Chellam Photoகஸ்தூரி ராஜா, வி. சந்திரன் போன்ற சித்திரக்கதை ஜாம்பவான்கள் வழியில் புள்ளிகளை மட்டுமே கொண்டு, கறுப்பு வெள்ளையில் நிழலூட்டும் ஓவியப்பாணியான ‘ஸ்டிப்ளிங்' என்ற தனி ‘ஷேடிங்' முறையை ‘ஓவிய மேஸ்ட்ரோ' செல்லம் இக்கதையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
 • முழு வண்ண ஓவியங்களில் பலவகையான அடர்த்தியில் வண்ணங்களை ஏற்றலாம். கறுப்பு வெள்ளை ஓவியங்களில் தோற்ற ஆழம் கொடுக்கப் பயன்படும் ‘கியாரஸ்க்யூரோ' என்ற ஓவியப் பாணியை தமிழுக்கு, வெகுஜனப் பத்திரிகையில் முறையாக அறிமுகப்படுத்தியது இந்தக் கதைதான்.
 • வாரத்துக்கு இரண்டு பக்கங்கள் என வெளியான இக்கதை, தொடர்கதைகளுக்கே உரித்தான ஒரு முடிச்சை இரண்டு பக்கங்களுக்கொரு முறை கொண்டிருந்தாலும்கூட, முழுக் கதையாகப் படிக்கும்போது உறுத்தல் இல்லாமல்தான் இருக்கிறது.

The Hindu Tamil Daily Dated 22nd April 2016 Ilamai Puthumai Segement Page No 02 Kanava Nijama

கனவா, நிஜமா?

கதை: வாண்டுமாமா

ஓவியம்: செல்லம்

பக்கங்கள்: கறுப்பு வெள்ளையில் 52 பக்கங்கள்

அமைப்பு: 1979-ல் 25 வாரத் தொடர்கதையாக வெளியானது.

குறிப்பு: இந்தியாவின் ஆகச்சிறந்த கிராஃபிக் நாவல்கள் என்ற பட்டியலை 2016ஆம் ஆண்டு தி இந்து தமிழ் நாளிதழில் வெளியிட்டபோது, கனவா, நிஜமா? அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.

நன்றி: தி இந்து – தமிழ் நாளிதழ்

Monday, May 08, 2017

0 Sudershan (Chimpanzee): ‘பாலிவுட் பாட்ஷா'வாக ஒரு குரங்கு மாறினால்?

SC Coverஇராம. நாராயணன் படங்களை இன்றைக்குப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றும். ஆனால், ஒரு காலத்தில் மக்களை ஈர்ப்பதிலும் வசூலிலும் அப்படங்களுக்குப் பெரும் பங்கு இருந்திருப்பது உண்மைதான்.

அது போன்று விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்பட அலை நாடெங்கும் பரவலாக இருந்த 60-களில் குரங்கு, ஆடு, நாய், யானை, குதிரை, கிளி, பாம்பு என்று பல உயிரினங்கள் வெள்ளித்திரையில் வெற்றித்தடம் பதித்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உயிரினம்/ நட்சத்திரத்துக்கு ஒரு பின்புலக் கதை இருந்து, அந்தக் கதையை கிண்டலாகவும் பகடியாகவும் சொன்னால், சிரிக்காமல் இருக்க முடியுமா?

ஆனால், பிளாக் ஹியூமர் வகையில் சொல்லப்பட்ட சுதர்சன் என்ற சிம்பான்சி குரங்கின் கதை, எவ்வளவுக்கெவ்வளவு நம்மைச் சிரிக்க வைக்கிறதோ, அவ்வளவுக்கு நம்மைச் சோகத்திலும் ஆழ்த்திவிடுகிறது. இந்தியாவில் வெளியான கிராஃபிக் நாவல்களில் ஒரிஜினாலிட்டியுன் கூடிய கதைகளில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குவது இந்த சுதர்சன் (சிம்பான்சி).

சினிமா டு காமிக்ஸ்

Rajesh DevRaj Author of Sudershan Chimpanzee

கௌபாய் படங்களைப் பகடி செய்யும்விதமாக வெளியான ‘குயிக் கன் முருகன்' திரைப்படத்தின் கதாசிரியர் ராஜேஷ் தேவராஜ்தான், சுதர்சன் சிம்பான்சியை உருவாக்கியவர். ஏற்கெனவே சில பிரபல குறும்படங்களுக்கும் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான அர்ஜுனுக்கும் கதை, திரைக்கதை எழுதியவர் இவர். அவரும் ஓவியர் மெரேன் இம்சேனும் இணைந்து 2005-ம் ஆண்டு ஒரு ஆறு பக்க காமிக்ஸ் சிறுகதையை உருவாக்கினார்கள்.

Meren Imchen Artist of Sudershan Chimpanzee

2007-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதைப் பெற்ற அனிமேஷன் படத்தை இயக்கிய ஓவியர் மெரேன் லேசுப்பட்ட ஆளல்ல. அந்தச் சிறுகதையை முழுவடிவ கிராஃபிக் நாவலாக மாற்ற 2009-ம் ஆண்டு பதிப்பகத்திடமிருந்து உத்தரவு வர, தங்களது தனிப்பட்ட வேலைகளுக்கு இடையில் மெதுவாக இந்த கிராஃபிக் நாவலுக்கும் இருவரும் வடிவம் கொடுத்தனர். இப்படியாக இந்த கிராஃபிக் நாவல் மூன்று ஆண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டு மும்பை ‘காமிக் கானி'ல் (காமிக்ஸ் திருவிழா) வெளியிடப்பட்டது.

SC Comic con 2012

கதை உருவான கதை

ராஜேஷ் அதற்கு முன்பாக ‘The Art of Bollywood' என்ற புத்தகத்தை எழுதியபோது, பழைய பாலிவுட் படங்களின் போஸ்டர்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார். அதற்கு முன்பாக அவர் ‘சேனல் வி'யில் பாலிவுட்டின் இரண்டாம் நிலை திரைப்படங்களை (B Grade Films  பற்றிய ஒரு நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தார். இப்படியாக பாலிவுட் படங்களின் பின்புலத்தைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் திரட்டியதால், அவற்றைப் பின்னணியாகக்கொண்டு இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.

காமிக்ஸே ஒரு சினிமா

sample 1படைப்பாளிகள் இருவருமே திரைப்படங்களில் பணிபுரிந்ததாலோ என்னவோ, இந்த கிராஃபிக் நாவல் முழுவதுமே ஒரு திரைப்படத்துக்கான வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் தன்னுடைய ஃபிளாஷ்பேக்கில் கதை சொல்வதுபோல ஆரம்பிக்கப்பட்டு, திரைக்கதை பாணியிலேயே கதை நகர்கிறது. ஓவியங்களுமேகூட க்ளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்று காட்சிக்கேற்ப மாறுகின்றன. குறிப்பிட்ட ஒரு உணர்ச்சியை வாசகருக்குக் கடத்த வேண்டி, கதை முழுவதும் கறுப்பு வெள்ளையிலேயே வரையப்பட்டுள்ளது. வசனங்கள் வேகமாக நகரும் கதைக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமில்லாமல், கதையை ஒருபடி மேலே உயர்த்தி, திரையரங்கில் இருப்பது போன்ற சூழலை உருவாக்கிவிடுகின்றன.

இந்தக் கதையின் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கதையில் வரும் உயிரினங்கள், உயிரினங்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதுதான். ஒரு வாலில்லாக் குரங்கு, வாலில்லாக் குரங்காகவே வருகிறதே தவிர, அது மனிதர்களைப் போல நடந்துகொள்வதில்லை. ஆனால், ஒரே வித்தியாசம் இந்த உயிரினங்கள் மனிதனைப்போல பேசும், நடக்கும் என்பதை இந்தக் கதை தனக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

பாலிவுட் ஹீரோ

sample 2சார்மினார் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே, ஒரு டீக்கடையில் அமர்ந்தவாறு தனது பழைய நினைவுகளை அசைபோடுகிறது ஒரு சிம்பன்சி குரங்கு. படிப்பு சரியாக ஏறாததால், சர்க்கஸில் வேலைக்குச் சேர்கிறார் நமது சுதர்சன். அங்கே அடிமையாக நடத்தப்படுவது பிடிக்காமல் மும்பைக்கு வந்து, பல சிக்கல்களைச் சந்தித்து, பின்னர் சினிமா ஸ்டுடியோவில் எடுபிடியாகச் சேர்கிறார். பிரபல இயக்குநர் ஷாவின் பார்வையில் பட, திடீரென்று ஒருநாள் சுதர்ஷனை ஹீரோவின் நண்பனாக்குகிறார் ஷா.

பின்னர் தனி ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக சுதர்சன் உருவெடுக்கிறார். அதன் பின்னர் ஒவ்வொரு படமும் வெற்றிப்படி கட்ட, சுதர்சன் பாலிவுட்டின் அசைக்க முடியாத சக்தியாகிறார். அனைத்தும் இருந்தும் தனது வாழ்க்கையில் ஒரு வெறுமை இருப்பதை உணரும் சுதர்சனுக்கு, ஒரு தென்னிந்திய நடிகையின் மீது காதல் உருவாக, அவரது சரிவு ஆரம்பமாகிறது. இப்படியாக காதல், நட்பு, துரோகம், பரிவு, ஏமாற்றம், பழி வாங்கும் எண்ணம், விமோசனம் என்று ஒரு அக்மார்க் சினிமாவுக்கான கதையைக் கொண்டுள்ளது இந்த கிராஃபிக் நாவல்.

முடிவு

திரைக்கதையின் வழியாக இந்த கிராஃபிக் நாவலை உச்சத்துக்குக்கொண்டு சென்ற படைப்பாளிகள், அவர்கள் பின்னிய வலையிலேயே சிக்கியதைப் போல, கதையின் முடிவை சினிமாத்தனமாக அமைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணர முடிகிறது. இந்த கிராஃபிக் நாவலின் ஓவிய பாணி கதைக்கு உதவுகிறது என்றாலும், வாசகரைச் சற்றே தடுமாற்றவும் செய்கிறது.

என்ன சொல்கிறது சுதர்சன் சிம்பான்சி?

 • சினிமா உலகை எந்த அளவுக்குப் பகடி செய்ய முடியுமோ அந்த அளவுக்குப் பகடி செய்திருந்தாலும்கூட, கதையில் ஒரு நம்பகத்தன்மை தொடர்வதே இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு.
 • தென்னிந்தியாவின் உயிரினங்களை வைத்துப் படமெடுத்துப் புகழ்பெற்ற சாண்டோ சின்னப்பா தேவர் முதல் பிரபல இந்தி இயக்குநர் ராஜ் கபூர் வரை கதையில் வருகிறார்கள்.
 • இந்தியாவின் பிரபல கார்பரேட் சாமியாரை மிகவும் திறமையாகக் கதைக்குள் கொண்டுவந்து, அவருடைய சுயரூபத்தை வெளிப்படுத்தினாலும், அவரால் நாயகன் உண்மையை உணர்வதாக ஒரு திரைக்கதை ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார்கள்.
 • நடிகைகள் நடத்தப்படும் விதம், மார்கெட் இழந்த பிறகு நடிகர்களின் நிலைமை, திரைப்பட உலகின் சம்பிரதாயங்கள் என்று பல விஷயங்களையும் கதையினூடே கொண்டு வந்தது, கதையோட்டத்தைச் சிறப்பாக்கி இருக்கிறது.
 • ஒரே நாளில் உச்சத்துக்குச் செல்வது, திரையுலகின் முக்கியப் புள்ளியைப் பகைத்துக்கொண்டதால், ஒரே நாளில் கட்டம் கட்டப்படுவது என்று திரையுலகின் நிழலான சக்தி மையங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
 • எப்படி ஒருவரது மரணம், ஃபிளாப் ஆன ஒரு திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றுகிறது என்பன உள்ளிட்ட‌ பல திரையுலக அவலங்களையும் சொல்கிறது.

The Hindu Tamil Daily Dated 01st April 2016 Ilamai Puthumai Segement Page No 04 Sudershan Chimpanzee Review

டைட்டில்: சுதர்சன் சிம்பான்சி
கதை: ராஜேஷ் தேவராஜ்
ஓவியம்: மெரேன் இம்சேன்
பதிப்பகம்: ஹஷெட் இந்தியா
பக்கங்கள்: பெரிய அளவில் 124 பக்கங்கள்
வெளியீடு: டிசம்பர் 2012.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: அமேசான் டாட் இன் (220 ரூபாய்)

குறிப்பு: இந்தியாவின் ஆகச்சிறந்த கிராஃபிக் நாவல்கள் என்ற பட்டியலை 2016ஆம் ஆண்டு தி இந்து தமிழ் நாளிதழில் வெளியிட்டபோது, சுதர்ஷன் (சிம்பன்சி) அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.

நன்றி: தி இந்து – தமிழ் நாளிதழ்

Friday, May 05, 2017

0 முன்னு – இந்தியாவின் மிகச்சிறந்த கிராஃபிக் நாவல்

 

Munnu a Boy From Kashmir Cover Malik Sajad

குறிப்பு: இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (ICUN) அருகி வரும் உயிரினம் என்று பட்டியலிடப்பட்ட ஹங்கூல் என்ற மான் காஷ்மீரின் மாநில விலங்காகும். பல ஆயிரங்களில் இருந்த இந்த மானினம், 2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வெறும் 160 ஆக அருகியுள்ளது.

நசீர் அஹ்மத்தின் காஷ்மீர் பென்டிங் (1997) முதல் இன்றுவரை காஷ்மீரைப்பற்றி, காஷ்மீர் மக்களைப்பற்றி குறிப்பிடும்படியாக ஒரு சில கிராபிஃக் நாவல்கள் வந்துள்ளன. சோக இழையால் பின்னப்பட்ட இவையனைத்துமே காஷ்மீர் மக்களை பாதிக்கப்பட்டவர்களாக, அநீதி இழைக்கப்பட்டவர்களாக மட்டுமே சித்தரித்தவை. ஆனால், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மட்டுமே கோர்த்து, ஒரு மாநில மக்களைப்பற்றி எழுதப்படும் கதை, நேரிடை விமர்சனமாக இல்லாமல், சம்பவங்களைப்பற்றிய ஒரு பார்வையாக மட்டுமே இருக்கமுடியுமா? ஒரு 350 பக்க புத்தகத்தினை / ஒரு இனத்தின் சோகத்தினை ஒரே ஒரு அட்டைப்படத்தின் மூலம் விவரிக்க இயலுமா?

முடியும் என்று காட்டுகிறார் மாலிக் சஜத். “முன்னு – காஷ்மீரத்து சிறுவன் (Munnu a Boy From Kashmir)” என்ற தன்னுடைய முதல் கிராபிஃக் நாவலில் அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள், அக்கம் பக்கத்திலுள்ளோர் என்று காஷ்மீர் மக்கள் அனைவரையுமே ஹங்கூல் மான்களாக சித்தரித்துள்ளார். அதே சமயம் காஷ்மீர் மக்களைத்தவிர மற்ற அனைவரையும் வழக்கமான மனிதர்களாகவே வரைந்து, காஷ்மீர் மக்களை அழிந்து வரும் உயிரினங்களாக, ஆழமான ஒரு உருவகத்தின் மூலம் அட்டையிலேயே கதையை சொல்லி விடுகிறார். இப்படியாக அட்டைப்படத்திலிருந்தே ஜெயிக்கத் துவங்கி விடுகிறார் மாலிக் சஜத்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முகத்தில் அறையும் நிஜமும் நிழலும்: நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த ஒரு பள்ளித் தோழன் நம்மைச் சந்தித்து, தோள் மீது கையைப் போட்டுக்கொண்டு அவனது வாழ்க்கைக் கதையைச் சொல்வதைப் போலிருக்கிறது இந்தக் கறுப்பு வெள்ளை கிராஃபிக் நாவல். சகித்துக்கொள்ளக் கஷ்டமான விஷயங்களைக்கூட எளிமையாகச் சொல்ல முடியும் என்பதற்கு இது அத்தாட்சி.

ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் ஒரு மாநில மக்களைப் பற்றி ஒரு பார்வையாக வெளிப்படுகிறது இந்தக் கதை. இந்த 350 பக்க கிராஃபிக் நாவலில் ஒரு இனத்தின் சோகத்தை நாவலின் அட்டைப்படமே சொல்லிவிடுகிறது.

Malik Sajjadஅதைச் செய்து காட்டியவர் மாலிக் சஜத். ‘முன்னு காஷ்மீரத்துச் சிறுவன்’ (Munnu a Boy From Kashmir) என்ற தன்னுடைய முதல் கிராபிஃக் நாவலில் அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்று காஷ்மீர் மக்கள் அனைவரையுமே ஹங்குல் மான்களாகச் சித்தரித்துள்ளார். அதேநேரம் காஷ்மீர் மக்களைத் தவிர மற்ற அனைவரையும் வழக்கமான மனிதர்களாக வரைந்து, காஷ்மீர் மக்களை அழிந்துவரும் உயிரினங்களாக, ஆழமான ஒரு உருவகத்தை அட்டையிலேயே பளிச்சென வெளிப்படுத்திவிடுகிறார். அட்டைப் படம் தொடங்கி நாவல் முழுவதும் தான் நினைத்ததை ஆழமாக உணர்த்துகிறார் மாலிக் சஜத்.

குடும்பத்திலேயே இளையவரான முன்னுவுக்குச் சிறு வயதிலேயே ஓவியத்தின் மீது ஆர்வம் ஏற்பட அவரது தந்தையின் தொழிலும் ஒரு காரணம். தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்த முன்னு, தன்னுடைய ஓவியங்களின் மூலமாக மக்களுடன் உரையாட விரும்புகிறார். 14 வயதில் சம்பளம் எதுவும் பேசாமல், பத்திரிகையில் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைய ஆரம்பிக்கிறார் முன்னு. அவரது வாழ்க்கையில் இரண்டு முக்கியச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

sample Image 1

சம்பவம் 1

காஷ்மீரத்து நாளிதழ் ஒன்றில் வந்த கேலிச்சித்திரத்தைப் பார்த்துக் கோபமடையும் ராணுவ கமாண்டர், கேலிச்சித்திரத்தை வரைந்தவரைக் கைது செய்ய ராணுவ வீரர்களை அனுப்புகிறார். ஆனால், அந்த ஓவியர் பள்ளியில் இருப்பதாகச் சொல்லப்பட, உடனடியாக வீரர்கள் அங்கு விரைகின்றனர்.

வரைந்தது ஓவிய ஆசிரியராக இருக்கலாம், அதனால் பள்ளி முடிந்த பிறகே கைது செய்ய முடியும் என்று காத்திருப்பவர்களுக்கு, அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அரசியல் கார்ட்டூனை வரைந்தது 16 வயது பள்ளிச்சிறுவன் என்று தெரியவர, ராணுவத்தினர் திகைக்கின்றனர். கைது செய்வதற்கான வயது வரம்புக்குள் இல்லாததால், வெறும் கையுடன் திரும்பிவிடுகின்றனர்.

சம்பவம் 2

காஷ்மீரின் புகழ்பெற்ற ஓவியராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட முன்னுவுக்கு டெல்லி இந்தியா ஹேபிட்ட‌ட் மையத்தில் ஓவியங்களைக் கண்காட்சிக்கு வைக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. 21 வயதில் முதன்முறையாக டெல்லிக்கு வரும் முன்னு, ஒரு இன்டர்நெட் கஃபேவிலிருந்து நாளிதழில் அடுத்து வர வேண்டிய கார்ட்டூனை ஸ்கேன் செய்து அனுப்பிக்கொண்டிருக்கும் போதுதான், இரண்டாவது சம்பவம் நடந்தது.

செப்டம்பர் 13, 2008. டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த நாள். ஆனால், முன்னுவுக்கு வாழ்க்கையின் மிகவும் மோசமான நாளாக அது அமைந்துவிடுகிறது. உள்ளே நுழையும்போதே காஷ்மீரத்து இஸ்லாமிய இளைஞன் என்பதால் சந்தேகப்பட்ட இன்டர்நெட் கஃபே உரிமையாளர், குண்டு வெடிப்புச் சத்தம் கேட்ட உடனே போலீசுக்குத் தகவல் அளித்துவிடுகிறார். அவர்களும் சீக்கிரமே முன்னுவைக் கைது செய்தனர். தான் ஒரு ஓவியன் என்று விளக்கியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. முன்னு ஸ்கேன் செய்துகொண்டிருந்த ஓவியத்தைப் பார்த்துச் சந்தேகம் வலுக்க, உடனே சிறையிலடைக்கின்றனர்.

பென்சிலைவிட ஒல்லியாக இருந்த அந்த 21 வயது ‘தீவிரவாதி’யை தாங்கள் விரும்பிய உண்மையை வரவழைக்க போலீஸார் அவர்களுடைய பாணியில் விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் ஒருவழியாக உண்மை தெரியவந்து, முன்னு விடுதலை செய்யப்பட்டார்.

  Sample 2

அன்று ஒரு முடிவெடுக்கிறார் முன்னு. தன்னுடைய அடையாளம் ஒரு காஷ்மீரத்து இஸ்லாமியன் மட்டும் அல்ல என்பதை உலகுக்குச் சொல்ல விரும்புகிறார். தீவிரமான ஓவியப் பயிற்சியுடன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையே ஒரு கிராபிஃக் நாவலாகப் படைக்க ஆரம்பித்தார். ஆம் அந்த முன்னு வேறு யாரும் அல்ல. இந்த கிராஃபிக் நாவலின் ஆசிரியர் மாலிக் சஜத் தான்!

sample 3

ஒவ்வொரு நாளும் தன்னைத் தனிமைச் சிறையிலடைத்துக் கொண்டு, குடும்பத்தினரைக்கூடப் பார்க்காமல், வரைய ஆரம்பித்தார். உணவுகூட ஜன்னல் வழியாகவே கொடுக்கப்பட்டது. இப்படியாகத்தான் இந்தப் புத்தகம் பக்கம், பக்கமாகச் செதுக்கப்பட்டது.

 

ஹார்ப்பர் காலின்ஸின் 'ஃபோர்த் எஸ்டேட்' பதிப்பகம் மூலமாகக் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இப்புத்தகம், ஆண்டு இறுதியில் இந்தியாவிலும் வெளியிடப்பட்ட தகவல் தெரிந்தபோது, சஜத் அதை நம்பவே இல்லை. தன்னுடைய முதல் புத்தகத்தின் மூலமாக அழியாப் புகழைப் பெற்ற தலைசிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் சஜத்தும் இணைந்துகொண்டார்.

ஒரே கதையில் உலகம் தொட்டவர்

இந்தியாவில், கடந்த 60 ஆண்டுகளில் பல கிராபிஃக் நாவல்கள் படைக்கப்பட்டுள்ளன. நர்மதை நதியின் சோகத்தை கிராபிஃக் நாவலாகச் சொன்ன ஒரிஜித் சிங் முதல் சமீபத்திய ஆண்டுகளில் நம்மை அசர வைத்துவரும் சுமித் குமார் வரை பல அசாத்திய திறமைசாலிகளின் படைப்புகளை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இவர்களில் எத்தனை பேர் ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் பிதாமகரான ஒசாமு தெசூகாவைப்போல, உலக அளவில் முதல் கிராபிஃக் நாவல் படைப்பாளியான வில் ஐஸ்னரைப்போல வரலாற்றில் இடம்பிடிப்பார்கள் என்று தெரியவில்லை. மாலிக் சஜத் ஏற்கெனவே இந்தியாவின் ஆகச் சிறந்த கிராஃபிக் நாவலைப் படைத்துவிட்டார். இதற்குப் பிறகு அவர் எந்த படைப்பையும் நமக்கு அளிக்கவில்லை என்றாலுமே கூட, இந்த ஒன்று மட்டும் அவரது அசாத்திய திறமையை நமக்கு பறைசாற்ற உதவும்.

Munnu A Boy From Kashmir Sample Image by Malik Sajjad

ஹார்ப்பர் காலின்ஸ்சின் 4th Estate பதிப்பகம் மூலமாக 2015ஆம் ஆண்டு முதலில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இப்புத்தகம், ஆண்டிறுதியில் இந்தியாவில் வெளியிடப்பட்ட தகவலைச் சொன்னபோது, சஜத் அதை நம்பவே இல்லை. தன்னுடைய முதல் புத்தகத்தின் மூலமாக அழியாப்புகழைப் பெற்ற தலைசிறந்த படைப்பளிகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டார் சஜத்.  

The Hindu Tamil Dated 29th Apr 2016 Ilamai Puthumai Page No 02 Munnu a Boy from Kashmir intro

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: அமேசான் டாட் இன் (449 ரூபாய்)

குறிப்பு: இந்தியாவின் ஆகச்சிறந்த கிராஃபிக் நாவல்கள் என்ற பட்டியலை 2016ஆம் ஆண்டு தி இந்து தமிழ் நாளிதழில் வெளியிட்டபோது, முன்னு அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.

நன்றி: தி இந்து – தமிழ் நாளிதழ்

Related Posts with Thumbnails