‘ப்ரிமானிஷன்', ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ', ‘சோர்ஸ் கோட்' உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்கள். இப்படங்களின் நாயகர்கள் எதிர்காலத்தில் வரும் சம்பவங்களைக் கணிக்கக்கூடிய அல்லது எதிர்காலத்துக்கே சென்று சம்பவங்களை மாற்றியமைக்கக்கூடிய திறனைப் பெற்றவர்கள். இவையெல்லாம் சமீபத்திய வருடங்களில் வெளியானவை. ஏறத்தாழ 37 வருடங்களுக்கு முன்பே தமிழில் இதுபோல ஒரு கதை வெளியாகியிருக்கிறது, தெரியுமா?
தமிழில் குழந்தைகளுக்கான தலைசிறந்த கதைசொல்லி வாண்டுமாமாவின் படைப்பான ‘கனவா? நிஜமா?'தான் அது!
தமிழில் காமிக்ஸ் என்று எடுத்துக்கொண்டால், அது முல்லை தங்கராசன், வாண்டுமாமா மற்றும் செல்லம் என்று மூன்று ஜாம்பவான்களை மையமாகக் கொண்டது. இவற்றில் தமிழில் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த சித்திரக்கதை என்று ‘கனவா, நிஜமா?'வைச் சொல்லலாம்.
தமிழ் சித்திரக் கதைகளில் காமிக்ஸ் என்ற கதை சொல்லும் அமைப்பை மிகச் சரியாக உணர்ந்து, அதை முறையாகப் பயன்படுத்தி, வார்த்தைகளால் அல்லாமல், ஓவியங்களின் மூலம் கதையை விவரித்த படைப்பு இது.
வாண்டுமாமா + ஓவியர் செல்லம் கூட்டணி இக்கதையின் உயரத்தை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டுசென்றது. வாண்டுமாமாவின் மாஸ்டர்பீஸ்களிலேயே சிறந்ததாகப் பலராலும் மதிக்கப்படும் இக்கதை, வயது வேறுபாடுகளையும் காலத்தையும் கடந்து நிற்கிறது.
நாளையும் இன்றும்:
நீலன் என்ற ஒரு ஏழை ஆட்டிடையன், ஒரு நாள் மலையுச்சியில் ஒரு விசித்திர புகையை நுகர்ந்து மயக்கமுறும்போது, வித்தியாசமான கனவொன்றை காண்கிறான். தன்னுடைய வீட்டில் வேறொருவன் குடியிருப்பதையும், தற்போதைய மன்னரும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டு, இன்றைய சேனாதிபதி மன்னராகி இருப்பதும், தளபதி ஒருவர் மட்டும் தப்பித்து, இவர்களை எதிர்த்து போராடுவதும் அவனுடைய கனவில் வரும் முக்கிய சம்பவங்கள். இவை அனைத்துமே பத்து ஆண்டுகள் கழித்து நடைபெறப்போகும் சம்பவங்கள். மறுபடியும் மயக்கமுறும் நீலன், தன்னுடைய இன்றைய காலகட்டத்தில் திரும்பி இருப்பதை உணர்கிறான். அதாவது நிகழ் காலத்திற்கு.
என்ன செய்வதென்றே தெரியாத குழப்பமான மனநிலையில் இருக்கும் நீலன், பின்னர் தெளிவுறுகிறான். தன்னுடைய வீட்டருகே தற்போது சிறிய செடியாக இருப்பதே, பத்தாண்டுகள் கழித்து தன்னுடைய கனவில் பெரிய மரமாகி இருப்பதை உணரும் அவன், அந்த செடியை வேரோடு பிடுங்கி விடுகிறான். தன்னுடைய இந்த செயலான,து பின்னர் மரமாகப்போகும் அந்த செடியின் எதிர்காலத்தை மாற்றியது போல, தன கனவில் கண்ட மற்ற நிகழ்வுகளையும் மாற்ற முடிவெடுக்கிறான். துணிந்து மன்னரிடம் செல்கிறான். ஆனால், அவனது வாதத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாத சூழலில், மன்னர் அவனை மனநலம் தவறியவன் என்றெண்ணி சிறையில் அடைக்க சொல்கிறார்.
சிறையில் இருக்கும் நீலனை மன்னரின் இளைய சகோதரன் சேனாதிபதியுடன் வந்து சந்தித்திக்கிறார். பத்து வருடங்கள் கழித்து இதே சேனாதிபதிதான் நீலனை காப்பாற்றுவது என்பதால், நீலனுக்கு அவரை தெரிகிறது. சேனாதிபதி அவர்களின் உடலில் இருக்கும் (வெளி ஆட்கள் யாருக்கும் தெரியாத) அடையாளம் ஒன்றை சொல்லும் நீலன் அவர்கள் இருவரின் நம்பிக்கையை பெறுகிறான். நீலனின் கூற்றில் இம்மியளவும் உண்மை இருந்தால், தங்களின் உயிருக்கு ஆபத்தேற்படுவதோடில்லாமல், நாட்டின் எதிர்காலமே சீர்குலையும் அபாயம் இருப்பதை அவ்விருவரும் உணர்கின்றனர். மன்னரின் சகோதரர் நீலனை கோட்டையின் அகழியில் தள்ளிவிட்டு விட்டு, ’தப்பித்து சென்று, இந்த நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்று’ என்று சொல்வதுடன் முதல் பாகம் முடிவடைகிறது.
- நீலன் என்னவானான்?
- அவனால் அகழியை உயிருடன் கடக்க முடிந்ததா?
- தளபதியின் திட்டங்கள் நடந்தேறியதா?
- மன்னர் கொல்லப்பட்டாரா?
- அல்லது நீலன் தன்னுடைய திட்டப்படி இந்த நிகழ்வுகளை நிறுத்தினானா ?
- எவ்வாறு இது நடக்கும்?
- ஒரு நாட்டின் எதிர்காலத்தை ஒரே ஒரு தனி நபரால் மாற்ற இயலுமா?
என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இரண்டாம் பாகத்தில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. விறுவிறுப்பான கதையுடன் உயிரோட்டம் நிறைந்த சித்திரங்கள் கொண்ட இந்த தொடர் கல்கி வார இதழில் தொடராக வந்தபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
அற்புத அறிவியல் புனைவு
குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979-ம் ஆண்டு 'கல்கி' வார இதழில் 25 வாரத் தொடராக வெளிவந்த இந்தக் கதை, தமிழின் ஆகச்சிறந்த சித்திரக்கதைப் படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட நிறைய காரணங்கள் உள்ளன.
- இதற்கு முன்னர் தமிழில் சில 'சயின்ஸ் ஃபிக்ஷன்' காமிக்ஸ் வந்திருந்தாலும், சரியான லாஜிக்குடன் படைக்கப்பட்ட முதல் படைப்பு இது.
- சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் பெரும்பாலும் சமகாலத்திலேயே நிகழ்வதாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால், அக்காலத்திய மரபுப்படி மன்னர் காலத்துக் கதையின் ஊடே ‘ப்ரிமானிஷன்' பற்றிய விளக்கத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி வடிவமைக்கப் பட்டிருப்பது கதையின் நேர்த்தி.
- நிகழ்காலத்தில் சிறிய செடியாக இருப்பதுதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு மரமாகவிருப்பதை உணர்ந்து, அதை வேரோடு பிடுங்கி, எதிர்காலத்தை மாற்ற முடியும் என்பதை ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் விளக்கிய எளிமையான கதை சொல்லும் பாணி இந்தக் கதையின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
புதுமை ஓவியப் பாணி
- கஸ்தூரி ராஜா, வி. சந்திரன் போன்ற சித்திரக்கதை ஜாம்பவான்கள் வழியில் புள்ளிகளை மட்டுமே கொண்டு, கறுப்பு வெள்ளையில் நிழலூட்டும் ஓவியப்பாணியான ‘ஸ்டிப்ளிங்' என்ற தனி ‘ஷேடிங்' முறையை ‘ஓவிய மேஸ்ட்ரோ' செல்லம் இக்கதையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
- முழு வண்ண ஓவியங்களில் பலவகையான அடர்த்தியில் வண்ணங்களை ஏற்றலாம். கறுப்பு வெள்ளை ஓவியங்களில் தோற்ற ஆழம் கொடுக்கப் பயன்படும் ‘கியாரஸ்க்யூரோ' என்ற ஓவியப் பாணியை தமிழுக்கு, வெகுஜனப் பத்திரிகையில் முறையாக அறிமுகப்படுத்தியது இந்தக் கதைதான்.
- வாரத்துக்கு இரண்டு பக்கங்கள் என வெளியான இக்கதை, தொடர்கதைகளுக்கே உரித்தான ஒரு முடிச்சை இரண்டு பக்கங்களுக்கொரு முறை கொண்டிருந்தாலும்கூட, முழுக் கதையாகப் படிக்கும்போது உறுத்தல் இல்லாமல்தான் இருக்கிறது.
கனவா, நிஜமா?
கதை: வாண்டுமாமா
ஓவியம்: செல்லம்
பக்கங்கள்: கறுப்பு வெள்ளையில் 52 பக்கங்கள்
அமைப்பு: 1979-ல் 25 வாரத் தொடர்கதையாக வெளியானது.
குறிப்பு: இந்தியாவின் ஆகச்சிறந்த கிராஃபிக் நாவல்கள் என்ற பட்டியலை 2016ஆம் ஆண்டு தி இந்து தமிழ் நாளிதழில் வெளியிட்டபோது, கனவா, நிஜமா? அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.
நன்றி: தி இந்து – தமிழ் நாளிதழ்
நன்றி :-)
ReplyDeleteSir I too have enjoyed this comics in my childhood. Am a fan of Vandumama and have read almost lots of his comics.. can you tell me if I where can I get all Vandumama books? Pls mail me 'mahesh.celluloid@gmail.com'
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete