Pages

Tuesday, August 22, 2017

5 இரவே.. இருளே.. கொல்லாதே! (கிராஃபிக் நாவல் அறிமுகம்)

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Front Coverகதைச் சுருக்கம்: ஹாலிவுட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது நேரிடும் ஒரு விபத்தினால், ஒரு சிறிய நகரில் தங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு வினையூக்கியாக மாறி தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார்? வேட்டை ஆடப்படுவது யார்? என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு ஆரம்பிக்கிறது.

Child Abuseக்கு ஆளாகி அதனால் மனப்பிறழ்வு நிலையிலிருக்கும் கதைநாயகி, கையாலாகாத ஒரு காவல் தலைவர், 25 வருடங்களாகத் தலைதூக்க காத்திருக்கும் ஒரு துரோகம், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பணக்காரன், பேய் படங்களை மட்டுமே திரையிடும் ஒரு சினிமா தியேட்டர், அந்த தியேட்டர்காரனின் மர்மமான கடந்த காலம், அந்நகரத்தின் மர்மங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கும் ஒரு தெருக்கிழவன், மன்னிப்பு வழங்கமுடியாத பாவங்களுக்கு துணைபோன ஒரு பாதிரியார், 25 வருடங்களாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பழிவாங்கும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத எதிர்நாயகன் என்று விசித்திரமான கதாபாத்திரங்கள் நிறைந்த இக்கதையின் முடிவு ”வெளிப்படையாக தெரிவதை நம்பாதே” என்ற சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Author Joel Colledeவிமர்சன பார்வை: புகழ்பெற்ற பேய்க்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் இரண்டு அதி தீவிர ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு க்ராபிஃக் நாவலை உருவாக்கினால், அதன் கரு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தேவையே இல்லை.

ஜோயல் கல்லெட் எழுதி, டெனிஸ் ஓவியம் வரைந்திருக்கும் இரவே.. இருளே.. கொல்லாதே! ஒரு அமானுஷ்ய த்ரில்லர் வகை க்ராபிஃக் நாவல். இதில் குறியீடாக பல விஷயங்கள் உணர்த்தப்படுவதாலும், கதை நான்-லீனியராக சொல்லப்பட்டு இருப்பதாலும் இந்த க்ராபிஃக் நாவலை மேலோட்டமாகப் படிப்பதைத் தவிர்த்து ஆழ்ந்து, கூர்ந்து கவனித்து படிப்பது அவசியமாகிறது. மேலும் பிரபலமான ஹாலிவுட் டீவி தொடர்களுக்கும், சினிமாக்களுக்கும் இடையிடையே Tribute செய்யும் வகையில் காட்சிகள் பின்னப்பட்டுள்ளதால், அதைப்பற்றியும் ஓரளவுக்கு விவரம் சேகரித்தால், வாசிப்பின் சுவை கூடும்.

உதாரணமாக, சில காட்சிகளைப் பார்க்கலாம்.

 • கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி பெட்ஸி மஹோர்ன் காரை ஓட்டிக்கொண்டு இருக்கையில், சற்றே அயர்ந்து ஓய்வு எடுத்துகொண்டு இருக்கும்போது அன்னியன் ஒருவனால் எழுப்பப்படுவது (The Invaders, 1967-68 TV Sries) தெ இன்வேடர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரின் (மறக்கமுடியாத) ஆரம்பக் காட்சி.
 • கதை நிகழும் சிறு நகரமான க்ரீப்பர் க்ரீக்கில் அப்போது ஓடிக்கொண்டு இருக்கும் லீ கர்ட்டீஸ் படம் (Jamie Lee Curtis, Hollywood’s Scream Queen in the Late 70’s), ஒரு வகையில் இந்தக் கதைக்கு தொடர்பு உள்ளதே.
 • கதை முடியும்போது தியேட்டரில் இருக்கும் போஸ்டர் (The Thing from Outer Spcae – Howard Hawk’s / John Carpenter Film’s) படத்தின் மையக் கருவிற்கு சம்பந்தமில்லை என்றாலுமே, கதையின் போக்கிற்கு (வெளி ஆள் ஒருவரின் வருகை) தொடர்புடையது.

என்று பல சுவையான விஷயங்கள் வாசிப்பின் பிறகும் கதைக்களன் சார்ந்த நினைவுகளுக்கு அசை போட பயிற்சி அளிக்கிறது.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Artist Denysஆசிரியர் பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு, கதை எழுதுவதையே முழுநேர பணியாக்கிக்கொண்ட ஜோயலின் சிறப்பு அம்சமே அவரது கதாபாத்திரங்களின் குறைபாடுகளும், அவர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான, அசாதாரண சூழ்நிலைகளும்தான். கதாசிரியர் ஜோயலின் வழக்கமான டெம்ப்ளேட்டான யாரும் நல்லவர்களும் இல்லை, யாரும் தீயவர்களும் இல்லை என்ற பாணி துவங்கியது இந்தக் கதையில்தான்.

பின்தொடரும் நிழலாக வரும் கடந்தகாலத்தின் இருண்ட பக்கங்களை மறக்க நினைக்கும் கதாபாத்திரங்களும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை நினைவூட்டும் சம்பவங்களும் நிறைந்த இக்கதையில் வன்மமும் குரோதமும் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளையனைப்போல சரியான நேரத்திற்காக காத்து கிடக்கின்றன.

உயிருடன் இருப்பதால் மட்டுமே வாழ்வதாகக் கருதும் கதாபாத்திரங்கள், சொல்லப்படாத சோகங்களைத் தாங்கி, நம்பிக்கையை இழந்து, தொலைந்துபோன மனிதர்களுக்கு இடையே மெல்ல தலைதூக்கும் மனிதத்தன்மை, வலி ஒன்றே மொழியாகவும், இருள் மட்டுமே ஒளியாக இருக்கின்ற கதையில் ஆங்காங்கே சில குறியீடுகள் உண்மையாகவே மெய்சிலிர்க்க வைக்கின்றன.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Colourist Hubert Boulardஇணையம், ஸ்மார்ட் போன்கள் மூலம் தேடுதல் மலிந்துவிட்ட சமகாலத்தில், ஒரு த்ரில்லர் கதையை கடைசிவரை சுவாரசியத்துடன் எழுதுவதைப்போல பெரிய சிரமம் வேறெதுவும் இல்லை. அதைப்போலவே அதனை சரியாக புரிந்து, மொழியாக்கம் செய்வதுவும் ஒரு சிரமமான வேலையே. அதனை செம்மையாக செய்துள்ளார் எடிட்டரும், மொழிபெயர்ப்பாளருமாகிய விஜயன். கதையில் உணர்ச்சிகரமான பல காட்சிகளை எளிய தமிழில் செம்மைப் படுத்தியிருக்கும் அவருக்கு ஒரு ஷொட்டு!

ஃப்ரான்சில் ஆண்டுக்கு ஒன்று வீதமாக மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவந்த இக்கதை வரிசையை ஒரே புத்தகமாக வெளியிட்டு இருப்பதால், அடுத்த பாகம் எப்போது? என்று காத்துக்கிடக்கும் கவலை நமக்கில்லை. முதல் இரண்டு பாகங்களும் தேர்ந்த மந்திரவாதியின் ஜாலங்களை போல வேகமாக நகர்கிறது. கடந்த இருபது வருடங்களாக வெளிவரும் ஹாலிவுட் பேய் / த்ரில்லர் படங்களை பார்த்தவர்களுக்கு, மூன்றாம் பாகத்தையும், கதையின் எதிர்நாயகனையும் கணிப்பது சிரமமான வேலையே அல்ல.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Front Covers

ஒரு நேர்க்கோட்டில் விவரிக்கையில் மிகவும் சாதாரணமான ஒரு B Grade ஹாலிவுட் படத்தை நிகர் செய்யும் இக்கதையை திறமையான நான்-லீனியர் எடிட்டிங் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார், கதாசிரியர் ஜோயல். இந்த வித்தையில் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவரது நெருங்கிய நண்பரான ஓவியர் டெனிஸ். ஒருவேளை லீனியராக சொல்லப்பட்டிருந்தால், கதையில் இத்தனை சுவாரசியமும், மர்மமும் இருந்திருக்காதோ என்னவோ?

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe French Cover Part 1தமிழில் காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கை இப்போதுதான் ஆயிரத்தை கடந்து இருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தை பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் புத்தகத்தின் சில பக்கங்களில், அடுத்து எந்த கட்டத்தைப் படிக்கவேண்டும் என்பதை உணர்த்த போடப்பட்டு இருக்கும் அம்புகள் புதியதாக காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்போருக்கு உதவியாக இருக்குமோ என்னவோ, ஆனால், தொடர்ந்து காமிக்ஸை படித்து வருபவர்களின் அறிவுத்திறனை குறைத்து மதிப்பிடுவதாகவே தெரிகிறது.

Comptine D’ Holloween (Delcourt, France, Part 1 - 2000, Part 2 - 2001 & Part 3 - 2002.

கதை: ஜோயல் கல்லெட் ஓவியம்: டெனிஸ் க்விஸ்ட்ரெபர்ட்

வண்ணங்கள்: ஹுயுபெர்ட் பொலார்ட் தமிழாக்கம்: எஸ். விஜயன்

வெளியீடு: லயன் காமிக்ஸ் இதழ் எண் 238, நவம்பர் 2014.

விலை: 150 ருபாய். 146 முழு வண்ணப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)

வகை: க்ராபிஃக் நாவல் அமைப்பு: அமானுஷ்ய த்ரில்லர் (18 +)

களம்: அமெரிக்காவின் ஒரு சிறுநகரம் வருடம்: கி.பி 2000

One Liner: தொடர் கொலைகளை செய்வது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

தீர்ப்பு: பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு தோட்டாக்கள் (4/6).

குறிப்பு: தி இந்து தமிழ் நாளிதழில் கிராஃபிக் நாவல்களைப் பற்றி அறிமுகங்களும் விமர்சனங்களும் செய்யலாம் என்று நவம்பர் 2014ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியபோது வெளியான இரண்டாவது கட்டுரை இது.

இணையத்தில் படிக்க: தி இந்து தமிழ் நாளிதழ் – இணைய லிங்க்

07th Nov 2014 The Hindu Tamil Ilamai Inimai Supplement Page No 4 Graphic Novel Review

Monday, August 21, 2017

1 வரையறைகளை அத்துமீறுவதை வழக்கமாகக் கொண்ட கலகக்காரன்: பௌன்சர் கிராஃபிக் நாவல் அறிமுகம்

Alejandro Jodorowsky Profile 1அலேஹாந்ரோ ஓளோரோப்ஸ்க்கி – Unlikely Godfather of Defying Definition

1965 மே மாதம்: ஃப்ரான்சில் நடைபெற்ற பாரிஸ் சுதந்திர கருத்தியல் வெளிப்பாட்டு திருவிழாவின் ஒரு பகுதியாக ஆன்மீக அருளின் அற்புத நாடகம் (Sacramental Melodrama) என்ற நிகழ்ச்சி அரங்கேறியது. மூன்று பேர் கொண்ட குழு ஒன்று இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்கிறது என்பதைத்தவிர, இது எதைப்பற்றிய நிகழ்வு, இதன் உள்ளடக்கம் என்ன? என்பது பற்றி கூடி இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒன்றுமே தெரியாது.

நிகழ்ச்சியின் முதல் கட்டமாக, உடலை இறுக்கிப்பிடிக்கும் கருப்பு தோலாடையாலான உடையணிந்த இளைஞர் ஒருவர், இரண்டு வாத்துக்களின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அறுபட்ட வாத்துகள் மேடையிலேயே இரத்தம் சிந்தி, துடிதுடித்து இறந்தன. இதன்பின்னர் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அதைப் பார்த்தவர்கள் வாழ்விலேயே மறக்கவியலா அனுபவங்களாக அமைத்து விட்டது என்றால், அது மிகையல்ல.

 • தன்னுடைய நெஞ்சில் ’டேப்’ மூலம் இரண்டு உயிரோடிருக்கும் பாம்புகளை ஒட்டச்செய்துக்கொண்டு, அவை மெல்ல மெல்ல அசைய, அந்த அசைவுகளோடு மேடையில் நடந்து வந்தார் அதே இளைஞர்.
 • ஒரு இளைஞன் தன் உடைகளை ஒவ்வொன்றாகக் கலைந்து, நிர்வாணமாக்கிக் கொண்டு, சாட்டையால் அடித்துக்கொண்டு, உடலை வருத்திக்கொண்டார்.
 • உரித்த கோழி ஒன்று சிலுவையில் அறையப்பட்டது.
 • நிகழ்ச்சியை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்த பார்வையாளர்கள் மீது திடீரென்று ஆமைகளை வீசினார்கள்.
 • ஒரு யூத மதகுருவை கொலை செய்வதை போன்ற காட்சி மேடையில் அரங்கேறியது.
 • உடல் முழுவதும் தேன் தடவப்பட்ட ஒரு இளம் பெண்ணை நிர்வாணமாக வரச்செய்தார்கள்.
 • மேடையில் ஆறடி உயரத்தில், அட்டையால் செய்யப்பட்ட ஒரு பெண்குறியைக் கொண்டுவந்தார்கள்.
 • பதப்படுத்தப்பட்ட வாதுமைப் பழங்களை பார்வையாளர்கள் மீது வீசினார்கள்.

Panic Movementமேலே கூறப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தன. இப்படி ஒரு நிகழ்வை நடத்தி முடித்த பின்னர், அந்த மூன்று இளைஞர்களும் தங்களது இயக்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினர். கிரேக்க இதிகாசத்தில் ’பேயோன்’ என்று ஒரு கடவுளைப்பற்றிக் குறிப்பிட்டு இருப்பார்கள். பேயோன்தான் கலைகளின் விமர்சன கடவுள். இவரது பெயரைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் பெயர்தான் Panic Movement. இதனை பதட்டம், பீதி நிறைந்த ஒரு இயக்கம் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இயக்கத்துக்கான காரணம்: இருபதாம் நூற்றாண்டில் கலை மற்றும் கலை சார்ந்த துறைகள் அனைத்துமே ’சர்ரியலிசம்’ எனப்படும் மிகையதார்த்த பாணியில் மாறிக்கொண்டு இருப்பதைக் கண்டு, இதற்கு ஒரு மாற்று இயக்கம் வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதே ’பேனிக் மூவ்மெண்ட்’. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே, ’சர்ரியலிசம்’ அப்போதைய சமூகத்தில், கலை மற்றும் இலக்கியத் தளங்களில் முக்கியமான ஒன்றாக உருவாவதை தடுத்து / தவிர்த்து, அதற்கு மாற்றாக ஒரு இயக்கத்தை நிறுத்தப் போராடுவதாகும். இதனை செயல்படுத்த இவர்கள் மேற்கொண்ட வழிமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும். மக்கள் தங்களுக்குள்ளே மட்டுப்படுத்தி வைத்து இருக்கும் அழிவு ஆற்றலைத் தூண்டும் எண்ணங்களை வெளியேற்றிவிட்டால், அவர்கள் அமைதியை தேட ஆரம்பிப்பார்கள். அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் செயல்களின் மூலம் அவர்களுக்குள்ளே இருக்கும் அந்த அழிவுசக்தியை வெளியேற்ற முயல்வதே இந்த இயக்கத்தின் எண்ணம்.

உதாரணமாக உங்களுக்குள்ளே ஒருவிதமான அழிவு சக்தியை தூண்டும் எண்ணம் உருவாகும்போது, அதனை நீங்கள் இது போன்ற செயல்பாடுகளால் கடந்து விட்டால், உங்களின் சிந்தனையை நீங்கள் வேறு ஏதேனும் ஆக்க சக்திக்கு பயன்படுத்தலாம் அல்லவா? உங்களை அழிவு சக்திக்கு தூண்டும் அந்த உத்வேகம் இதனால் மட்டுப்படுத்தப்பட்டு, வேகமிழந்து, செயலற்று போய்விடும். இதனால், சமூகத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

நான்கு மணி நேரம் மக்களை தொடர்ந்து வியப்பிலாழ்த்திய இந்த இயக்கத்தின் செயல்களை, கொள்கைகளை வழிவகுத்தவர்கள் மூவர்:

 • ஒஹனந் தொபோர் (Roland Topor)
 • ஃபெர்னாந்தோ அஹபால் (Fernando Arrabal) மற்றும்
 • இந்த கட்டுரையின் நாயகனான அலேஹாந்ரோ ஓளோரோப்ஸ்க்கி (Alejandro Jodorowsky).

ajதுன்பியல் நிகழ்வான பிறப்பு: அலேஹாந்ரோவின் பெற்றோர் (ஜெய்மீ மற்றும் சாரா) ரஷ்யாவில் இருந்து சீலேவுக்கு அகதியாக வந்து குடியேறியவர்கள். இவர்களுக்கு ராக்வெல் என்று ஒரு மகள் இருந்தாள். தன்னுடைய கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரிடம் சாரா சிரித்து பேசுவதைக்கண்ட ஜெய்மீ கோபம் கொண்டு, தனது மனைவியை அடித்து, துன்புறுத்தி வன்கலவியில் ஈடுபட்டதன் விளைவாக பிறந்தவர்தான் அலேஹாந்ரோ. இப்படி ஒரு மகன் பிறப்பதையே விரும்பாத சாரா, அலேஹாந்ரோவின் நான்கு வயதில் வெளிப்படையாகவே “உன் மீது என்னால் அன்பு செலுத்த இயலாது” என்று தெரிவித்திருந்தார். இருளிலும் பின் தொடரும் நிழலாக இருந்த தனிமையைக் கடக்க, வாசிப்பு என்ற வலி நிவாரணியை நாடினார், அலேஹாந்ரோ.

இவரது சகோதரியான ராக்வெலுமே இவரை நிராகரிக்க, சமூகத்தால் மரியாதை இல்லாமல் நடத்தப்பட்ட ஒரு அகதியின் குடும்பத்தில், தனித்த தீவாக இவரது இளமை கழிந்தது. தனிமையின் வலியே மீளாத்துயரை தரவல்லது. அப்படியிருக்க, நிராகரித்தலின் விழுப்புண்ணும் ஒன்றுசேர்ந்து தற்கொலை எண்ணங்கள் துரத்தியபோது, இவரை காப்பாற்றியது, கவிதைகள்.

aj 2ஒன்பது வயதில் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்த இவர், தன்னுடைய பதினாறாவது வயதில் இலக்கியப் பத்திரிக்கைகளில் கவிதை எழுத ஆரம்பித்தார். இவருடைய முதல் கவிதையும் லத்தீன் அமெரிக்க கவிஞர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படும் நிக்கநோர் செகுந்தோ பாராவின் கவிதையும் ஒரே பத்திரிக்கையில் அடுத்தடுத்த பக்கங்களில் பிரசுரம் ஆனது (தான் எழுதிய கவிதைகளை வாசித்துவிட்டு அவற்றுடனான தன் உறவை முறித்துக்கொள்ளும் பாராவைப்பற்றி நிறைய சொல்லவேண்டி இருக்கிறது, ஆனால், இது அவரைப்பற்றிய கட்டுரையல்ல என்பதால், கூகுளாண்டவரின் துணையுடன் அவரைத் தேடி படியுங்கள்). கல்லூரியில் உளவியல் மற்றும் தத்துவம் சார்ந்த படிப்பை இரண்டாவது ஆண்டிலேயே கைவிட்டுவிட்டு, ஒரு சர்க்கசில் கோமாளியாக வேலைக்கு சேர்ந்தார், அலேஹாந்ரோ. பிறகு, நாடகங்களில் நாட்டம்கொண்டு, ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார்.

பாரிஸ் பயணமும், மூன்று லட்சியங்களும்: 1953ல், தன்னுடைய 23ஆவது வயதில், ஃப்ரான்சுக்கு மூன்று லட்சியங்களுடன் பயணித்தார், அலேஹாந்ரோ.

 1. மார்செல் மார்சௌவிடமிருந்து ”மைம்” கலையை கற்பது (வார்த்தைகளின்றி செய்கைகளால் நடிப்பதே ”மைம்”).
 2. ஆந்ரே பஹ்தூனிடம் ”சர்ரியலிசம்” பற்றி தெரிந்து கொள்வது, மற்றும்
 3. சர்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தைப் பற்றி படிப்பது.

இவை மூன்றையும் செயல்படுத்தியபிறகு மார்செலின் குழுவுடன் பலநாடுகளுக்கு சென்று, திரும்பிய இவர் 1957ல் தனது கலைப்பயணத்தை ஒரு குறும்படத்துடன் ஆரம்பித்தார். தாமஸ் மானின் கதையைத் தழுவி, முழுக்க முழுக்க ”மைம்” பாணியில் எடுக்கப்பட்ட ”துண்டிக்கப்பட்ட தலைகள்” என்ற இந்த இருபது நிமிட படம், வசதியின்மையால் இவரது அறையிலேயே படமாக்கப்பட்டது. செலவழிக்கப் பணமில்லாமல், குறைந்தபட்ச வசதிகளுடன் எடுக்கப்பட்ட இது, இயக்குநர் ழான் காக்டோவால் புகழப்பட்டு, புகழின் உச்சியைத் தொட்டது. தொலைந்து போனதாக கருதப்பட்ட இந்தப்படத்தின் பிரதி சமீபத்தில்தான் மீட்டெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் மெக்சிகோவுக்கு சென்று, அங்கு பிரபலமான நாடகக்குழுவில் சேர்ந்தார், அலேஹாந்ரோ. அறுபதுகளின் ஆரம்பத்தில் ஃப்ரான்சுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே அடிக்கடி பயணித்தபோது, உதித்ததுதான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த ’பேனிக் மூவ்மெண்ட்’. 1962ஆம் ஆண்டு ஆந்ரேவிடம் ’சர்ரியலிசம்’ பற்றிய விவாதத்தில், கலைத்துறை சர்ரியலிசத்தையும் கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தைப் புரிந்துகொண்டு, இவர் தன்னுடைய நண்பர்களுடன் உருவாக்கிய இந்த இயக்கம், நவீன சமுதாயத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியது.

இயக்கத்தை பொதுமக்களிடையே செயல்முறையில் விவரித்துவிட்டு, இவர் செய்த முதல் காரியம் ஒரு காமிக்ஸ் கதையை எழுதியதே. ஃபெர்னாந்தோ அஹபால் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்த ’அனிபால் 5’ என்ற காமிக்ஸ் கதையிலுமே பேனிக் மூவ்மெண்டின் பல கோட்பாடுகளைக் காணலாம். இந்த காமிக்ஸ் கதைக்கு பிறகு, இவர் தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கினார்.

ஃபேண்டோ & லிஸ் (1968): உலக அழிவுக்குப் பின்னர் மீதமிருக்கும் தரிசு நிலங்களிலும், இடிபாடுகளிலும் ’தார்’ என்ற மந்திர நகரை நோக்கிய ஒரு கணவன் - மனைவியின் தொடர் பயணத்தை விவரிக்கும் படமான இதில் கவனிக்கப்படவேண்டிய சங்கதிகள் இரண்டு: ஒன்று அந்த மனைவிக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் கிடையாது. இரண்டாவது, அந்த தார் என்ற மந்திர நகரம் நாம் விரும்பும் அனைத்தையும் கொடுக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படும் ஒரு இடம். அந்த தம்பதியினர் ஏன் அந்த மந்திர நகரத்தை நோக்கி பயணித்தனர் என்பதை யூகிப்பதில் இனி சிரமம் இருக்காது அல்லவா?

இந்த படம் மெக்சிகோவின் அகபுல்கோ திரைப்படவிழாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டபோது, மக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்படம் உடனடியாக தடை செய்யப்பட்டது. அப்போது “ரோஸ்மேரிஸ் பேபி” என்ற தன்னுடைய படத்தை திரையிட வந்திருந்த பிரபல இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி இதனைக் கண்டித்தார். ஆனால், அவருக்கு அப்போது தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அலேஹாந்ரோவின் அடுத்தடுத்த படங்களுக்கும் இந்த ஆர்ப்பாட்டமும், தடைவிதிப்பும் தொடரும் என்பதுதான்.

el topoஎல் டோபோ (1970): நிர்வாணமான இளம் மகனுடன் குதிரையில் வரும் கருப்பு உடையணிந்த ஒரு மனிதன், ஒரு சிறுநகரில் கொலைத்தாண்டவம் ஆடிய ஒரு குழுவை தேடிப்பிடித்து கொல்கிறான். இவனது துப்பாக்கி சுடும் திறனை கண்டுவியந்த மாரா என்ற பெண், ”நீ மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாக வேண்டுமென்றால், நான்கு வீரர்களை துப்பாக்கிச் சண்டையில் கொல்லவேண்டும்” என்று சொல்கிறாள். தன்னுடைய மகனை அங்கிருக்கும் துறவிகளிடம் ஒப்படைத்துவிட்டு, மாராவுடன் புதிய இலக்கை நோக்கி செல்கிறான் அந்த மனிதன்.

வெவ்வேறான மத மற்றும் தத்துவங்களின் குறியீடாக இருக்கும் அந்த நால்வரையும் அதிர்ஷ்டம் மற்றும் தந்திரத்தால் கொல்கிறான், அந்த மனிதன். முதல் வீரனைக் கொல்லும்போது, ஆண் குரலில் பேசும் கருப்பு உடையுடுத்திய புதிரான பெண் ஒருத்தி தோன்றி இவனை மற்ற வீரர்களிடம் வழிநடத்தி செல்கிறாள். ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் தன்னுடைய இந்த கொலைப்பயணத்தை பற்றி சந்தேகிக்கும் இவனை, மாரா சமாதானப்படுத்துகிறாள். நால்வரையும் கொன்ற பிறகு குற்ற உணர்வு மேலோங்கிய நிலையில், அவர்களது சமாதிக்கு சென்று பார்க்கையில் அந்த புதிர்ப்பெண் இவனை சுட்டு, ஏசு சிலுவையில் அறையப்பட்டதைப்போல காயங்களை ஏற்படுத்துகிறாள். மாரா இந்த புதிர்பெண்ணுடன் சேர்ந்துக்கொண்டு இவனைக் கைவிட, இவன் தரையில் வீழ்வதுடன் முதல் பாகம் முடிவடைகிறது.

இரண்டாம் பாகத்தில் இவன் கண்விழிக்கும்போது அங்கஹீனர்கள் மற்றும் குள்ளர்களால் காப்பாற்றப்பட்டு, அவர்கள் குகையில் ஒரு கடவுளைப்போல தான் நடத்துவதைக் காண்கிறான். இவர்களை இங்கிருந்து காப்பாற்றி, வெளியேற்ற முடிவெடுக்கிறான். ஒரு பெண்ணுடன் வெளியேறி அருகிலுள்ள நகரை வந்தடைகிறான். வக்கிரமான ஒரு வழிபாட்டு மரபைப் பின்பற்றும் அந்நகர மக்களிடம் சேவகனாக பணிபுரிந்து, குகையை வெடிவைத்து தகர்க்க டைனமைட் வாங்க, பணம் சேர்க்கிறான். அப்போது அங்கே புதிய பாதிரியாராக வரும் இவரது மகன் ஹைஜோ, இவரை அடையாளம் கண்டுகொள்கிறார். உடனே இவரை கொல்லத்துடிக்க, இவர் தனது புதிய லட்சியத்தை சொல்கிறார். அதை முடிக்கும்வரை கொல்வதை ஒத்திவைத்து, இவருடன் இணைந்து பணியாற்றி, இவரது மனமாற்றத்தை புரிந்துகொள்கிறான் அவரது மகனான ஹைஜோ.

Alejandro Jodorowsky Film El Topo Posterஒருவழியாக அந்த குள்ளர்களை குகையில் இருந்து வெளியேற்றும்போது, இந்த வக்கிரகுணம் கொண்ட நகர மக்கள் அவர்களை சுட்டுக்கொல்வதைக் கண்டு துடித்துப்போகிறார், அந்த மனிதர். காயமுற்ற நிலையிலும் அந்த நகர மக்களை அழித்துவிட்டு, தன்னை தீக்கிரையாக்கிக்கொள்கிறார். அவர் மரணித்த அதே வேளையில் அவனது மனைவியான அந்த பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். படம் முடியும்போது ஹைஜோ இவனது கருப்பு உடையை அணிந்து, இவனது மனைவி, குழந்தையுடன் குதிரையில் பயணிக்கிறார்கள். இரண்டு மணிநேரம் ஓடும் இத்திரைப்படம் அலேஹாந்ரோவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது எனலாம். ஒரு மனிதனின் வாழ்க்கையை இரண்டு பாகங்களாக பிரித்த இந்த படம், கிருத்தவ மத அடையாளங்களையும், ஏனைய மத உருவகங்களையும் கொண்ட ஒரு காவியமாக கருதப்படுகிறது. இந்த ஒரு படத்தில் இருக்கும் குறியீடுகளை மட்டுமே கொண்டு, மிஷ்கின் பத்து படம் எடுக்கலாம்.

இந்த படம் வரலாற்று அளவில் இரண்டு விஷயங்களை உள்ளடக்கியது. வழக்கமான வன்மேற்கு படங்களின் கருத்தியபில்புக்கு நேர்மாறான ”ஆசிட் வெஸ்டர்ன்” பாணி படங்களில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதைப்போலவே, அமெரிக்காவின் கலாச்சார அடையாளமாக கருதப்பட்ட ”நள்ளிரவு திரைப்படங்கள்” (Mid Night Movies) வரிசையைப் பிரபலப்படுத்தியதும் இதுவே. 1970களில் அமெரிக்காவில் ”சில” திரைப்படங்களை நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு காட்சியாக வெளியிடுவார்கள்.

மெக்சிகோவில் திரையிடப்பட்டால், பிரச்சினை உருவாகும் என்பதால், முறையாக சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல், சிறப்புத் திரையிடல்கள் மூலமாக மட்டுமே இந்தப் படம் பரவலாகப் பேசப்பட்டது. ’எல்ஜின்’ தியேட்டர் அதிபரான பென், அப்படி ஒரு சிறப்புத் திரையிடலில் இதைப்பார்த்து விட்டு. இத்திரைப்படத்தை நள்ளிரவு 12 மணிக்காட்சியில் அமெரிக்காவில் அவரது தியேட்டரில் வெளியிட்டார். அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, 200 நாட்களைத் தொட்ட இத்திரைப்படத்தை, மூன்று முறை பார்த்தார், பிரபல இசைக்கலைஞர் ஜான் லென்னான். இத்திரைப்படத்தை தனது பீட்டில்ஸ் இசைத்தட்டு நிறுவனத் தலைவர் ஆலன் க்ளெய்ன் மூலமாக அமெரிக்கா முழுவதும் முறைப்படி வினியோகம் செய்து வெளியிட வைத்தார்.

த ஹோலி மவுண்ட்டன் (1973): ஆலன் க்ளெய்னே இவருடைய அடுத்த படத்துக்கும் தயாரிப்பாளரானார். Alejandro Jodorowsky FilmThe Holy Mountain Posterஇயேசு கிறிஸ்துவைப் போல தோற்றமளிக்கும் ஒரு திருடன், ஏழு கிரகங்களைக் குறியீடாக உணர்த்தும் எழுவர், தங்கத்தை உருவாக்கும் ஒரு இரசவாதி, மனிதர்களின் ஆன்மீக மறுபிறப்பு, மரணமில்லாத பெருவாழ்வை அளிக்கவல்ல ஆன்மீக மலையை தேடிய ஒரு பயணம் என்று அலேஹாந்ரோ கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் காட்சிப்படுத்தி, இதுவே அவரது மிகச்சிறந்த படம் என்பதில் இருவேறு கருத்தில்லாமல் செய்துவிட்டார்.

அடுத்த பத்திக்கு செல்லும் முன், ப்ளாஷ்பேக்கில் ஒரு விஷயம். மெக்சிகோவுக்கு இவர் வந்த புதிதில் ஈஜோ டகாடா என்ற ஜென் புத்த துறவியிடம் நட்பு கொண்டார் அலேஹாந்ரோ. டகாடாவின் உத்தரவின்படி ஒவ்வொரு ஆணுக்குள்ளும் இருக்கும் பெண்மையைப் புரிந்துகொள்ள, பிரபல பெண் எழுத்தாளரான லியோனோரோ காரிங்டனுடன் நட்பு கொண்டார். இதன்பிறகு, பெண்களுக்கு உரிய மரியாதையை முழுமையாக புரிந்துகொண்டார் அலேஹாந்ரோ.

oஹோலி மவுண்ட்டனின் வெற்றிக்குப் பிறகு, க்ளெய்ன் அந்த காலகட்டத்தில் பிரபலமாக விவாதிக்கப்பட்ட ஓ” வின் கதையை திரைப்படமாக்க விரும்பினார். இதையும் அலேஹாந்ரோவே இயக்கவேண்டும் என்றும் விரும்பினார். ஆனால், மேற்கூறிய சம்பவத்திற்குப் பிறகு, பெண்ணியவாதியாக மாறியிருந்த அலேஹாந்ரோ, பெண் உடல் சித்திரவதைகளை மையப்பொருளாக கொண்ட கதையைப் படமாக இயக்க மறுத்துவிட்டு, அமெரிக்காவை விட்டே வெளியேறிவிட்டார். கோபமுற்ற க்ளெய்ன், இவரது ஆகச்சிறந்த படங்களான எல் டோபோ மற்றும் ஹோலி மவுண்ட்டனை திரையிடாமல், மற்ற திரைப்பட உரிமைகளை யாருக்கும் கொடுக்காமல், முப்பதாண்டுகள் இவரை இருட்டடிப்பு செய்துவிட்டார்.

இந்த காலகட்டத்தில் ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது. அலேஹோந்ரோ ஒரு ஓவியர் என்பதையும், மெக்சிகோவில் அவர் தங்கியிருந்த இடைப்பட்ட காலத்தில், அவர் ஓவியம் வரைந்து ஒரு காமிக்ஸ் தொடர் வந்தது என்பதையும் இதுவரை நீங்கள் படிக்கவில்லை. ஆனால், இப்போது அமெரிக்காவைவிட்டு வெளியேறி ஃப்ரான்ஸ் சென்றடைந்தபோது இந்த ப்ளாஷ்பேக் தேவைப்படுகிறது. ஆகவே 1975ஆம் ஆண்டு ஒரு ஐந்து பாக காமிக்ஸ் தொடருக்கு அலேஹாந்ரோ ஓவியராக இருந்ததை இங்கே சொல்லிவிட்டு தொடருவோம்.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu poster designஓ’வின் கதையை படமாக்க விருப்பமில்லாமல், ஃப்ரான்சுக்கு திரும்பி வந்த அலேஹாந்ரோ, மறுபடியும் ஓவியம் வரைய ஆரம்பித்தார். ஆனால், ஒரு ஓவியமேதை வரைவதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, அவர் ஓவியங்கள் வரைவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டார். அந்த ஓவியமேதைக்காக கதைகளை எழுதி, அவரையே ஓவியராகக் கொண்டு ஒரு காமிக்ஸ் தொடரையும் ஆரம்பித்தார். அந்த மேதையின் பெயர் மோபியஸ். இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பித்த அந்த தொடரை ஆலன்மூர் போன்ற ஜாம்பவான்கள் “உலகின் தலைசிறந்த காமிக்ஸ் கதை” என்று போற்றுகிறார்கள். அந்த தொடரின் பெயர் இன்கால். (இந்த கதையின் சாரம்சத்தை கொண்டு பிரபல இயக்குனர் லூக் பெஸ்ஸான் எடுத்த படம்தான் ஃபிப்த் எலமெண்ட்).

இப்படியாக ஒரு சினிமா இயக்குநராக பெயரெடுத்த அலேஹாந்ரோ, ஐரோப்பாவில் விற்பனையில் சாதனை புரியும் காமிக்ஸ் தொடருக்கு கதாசிரியராக மறுஜென்மம் எடுத்தார். இதன்பிறகு, இவர் தொடர்ந்து மோபியசுடன் இணைந்து பணியாற்றினார். மோபியசின் ஓவியங்கள் தமிழிலும் (முத்து காமிக்சில்) கேப்டன் டைகர் தொடரில் வந்துள்ளது. இன்காலுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் இணைந்த காமிக்ஸ் தொடரான மெட்டபாரன்ஸ், அலேஹாந்ரோவின் அடையாளங்களைக் கொண்ட மற்றுமொரு கதை.

ஒரு படைப்பாளியையும், அவரது படைப்புகளையும் வெவ்வேறாகப் பிரித்து பார்க்கச் சொல்வதே சிறப்பான வாசிப்புக்கு உகந்தது. ஆனால், வரையறைகளை அத்துமீறுவதையே பழக்கமாகக் கொண்ட இந்த கலகக்காரனுக்கு இந்த வாசிப்பு முறை சரிப்பட்டு வராது. இவரது படைப்புகளை சரியாக ரசிக்க வேண்டுமெனில், இவரைப்பற்றியும், இவரது இயக்கத்தைப் பற்றியும் ஓரளவுக்காவது தெரிந்திருத்தல் அவசியம்.

படங்கள், நாவல்கள், கவிதைகள், மற்றும் காமிக்ஸ் என்று அனைத்திலுமே இவரது தொடர் - குறியீடுகளை காணமுடியும். உடல்ரீதியாக குறைபாடு உள்ளவர்கள் நிறைந்த இவரது கதைகளில், அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனதளவில் பாதிக்கப்பட்டு குறைபாடு கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார்கள். இவரது கதைமாந்தர்கள், முறைதவறிய உறவுமுறைகளில் ஈடுபடுவதாக உருவாக்கப்பட்டு இருப்பார்கள். வன்முறையைக் கையாள்வதை ஒரு கலையாக கொண்ட கதாபாத்திரங்களும், நடைமுறை வாழ்க்கையில் சந்திக்க இயலாத வித்தியாசமான குணாதிசயங்களை கொண்ட வில்லனின் அடியாட்களும் இவரது கதைகளில் அடிக்கடி தென்படுவார்கள். அதைப்போலவே மத மற்றும் இனங்களைப் பற்றிய விமர்சனங்கள் கொண்ட கதைமாந்தர்களும் நிறைந்த கதைகள் இவருடையது. இவ்வளவு போதும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அலேஹாந்ரோவின் முதல் கதையான பௌன்சர் கதைக்குள் நாம் நுழைவதற்கு.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Covers

பௌன்சர் (அலேஹாந்ரோ, போக் – 2001)

மதுபான அரங்குகளில் பிரச்சினை உருவாவதைத் தடுக்க பணிக்கு அமர்த்தப்படும் நபரே பௌன்சர் என்று அழைக்கப்படுவார்கள். பொதுவாக பௌன்சராக இருப்பவர்கள், உடல் பலமும், உள்ள உறுதியும் மிக்கவர்களாகவே இருப்பார்கள். ஆனால், நம்முடைய அலேஹாந்ரோவின் கதையில் பௌன்சராக வருபவர், ஒரு கையை இழந்தவர். இந்த ஒரு அறிமுகமே இவரது குறியீடுதானே? வன்மேற்கு கதைகளில் காணப்படும் வழக்கமான ஜனரஞ்சகமான கதை அமைப்பை மாற்றி ஆசிட் வெஸ்டர்ன் எனப்படும் பாணியை எழுபதுகளில் மறுபடியும் பிரபலப்படுத்தியவர் இவர் என்பதை ஏற்கனவே இந்த கட்டுரையின் 19ஆவது பத்தியில் சொல்லி இருக்கிறோம் அல்லவா? அதனை மனதில் வைத்துக்கொண்டு இந்த பௌன்சர் கதையைப் படிக்கவேண்டும். ஏனென்றால், திரைப்படத்தில் இவர் செய்த அதே யுத்தியைத்தான் இப்போது காமிக்ஸ் கதையிலும் உட்புகுத்தியுள்ளார்.

கதையைப் பொறுத்த அளவில், இது நேரியல் அல்லாத பாணியில் (Non Linear), முன்கதைகளை சரியான இடத்தில் புகுத்தி, ஒரு சாதாரண கதையை சுவாரசியமான கதையாக மாற்றும் திரைக்கதை யுக்தியே. ஆனாலும்கூட இந்த பாணிக்கதைகளில் தனது முத்திரையாக, கதையை, எந்தவிதமான அறிமுகமும் இல்லாமல், நடுவில் இருந்து ஆரம்பித்து, பின்னர் தேவைப்படும் ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்கதைகளை அழகாகச் சொல்லி, கதையை வேகமாக நகர்த்தி, விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார், அலேஹாந்ரோ.

Lion Comics Issue No 244 Issue Dated Jan 2015 Alexander Jodorowsky Bouncer Tamil Page No 13தனது பெற்றோரைக் கொன்றவர்களைப் பழிவாங்க பௌன்சரிடம் உதவிகேட்டு வருகிறான், ஒரு பதின்ம வயது இளைஞன். தான் உதவிகேட்டு போனது தனது சித்தப்பாவிடம் என்று அதன்பிறகுதான் தெரிகிறது. அதுமட்டுமல்ல, தான் கொல்லத்துடிப்பது தனது பெரியப்பாவையே என்றும். சகோதரர்கள் மூவரும் பிரிய காரணமாக இருந்த அந்த துன்பியல் நிகழ்வு, ஒரு வைரத்தையும், மர்மத்தையும் ஒருங்கே கொண்டது என்றும் தெரியவருகிறது. அதன் பின்னர், பௌன்சர் அவருடைய ஒரு கையை இழந்த முன்கதையை கேட்டுத் தெரிந்துகொண்டு, அவரிடமே துப்பாக்கியால் சுட பயிற்சி எடுத்துக்கொண்டு, பெரியப்பாவை கொல்ல காத்திருக்கையில், அவனுக்கு ஒரு பள்ளி ஆசிரியை மேல் காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவளது தந்தைதான் தான் கொல்ல நினைத்தவர் என்பதும் தெரியவர, என்ன செய்வது என்பது தெரியாமல் துடிக்கிறான். பௌன்சரின் அறிவுரைப்படி ஒரு திட்டம் இயற்றி, அதன்படி அவன் செயல்படுகிறான். கதையின் முடிவில் மர்மமான அந்த வைரத்தின் மறைவிடம் பற்றிய அலேஹாந்ரோவின் பாணி ட்விஸ்ட் ஒன்றும் உள்ளது.

தமிழ் சினிமாவில் லட்சம் முறை பார்த்து, பார்த்து சலித்துப்போன பழிக்குப்பழி வாங்கும் மிகச்சுமாரான, அரதப்பழசான இந்தக் கதையில் இருக்கும் மூன்று அம்சங்கள் இந்தக் கதையை நமது சமூகத்தின் கற்பனையில் தொடமுடியாத உயரத்துக்குக் கொண்டுசெல்கிறது. மூன்றுமே அந்த பதின்ம வயது இளைஞனுக்கு பயிற்சி அளிக்கும்போது நடைபெறும் சம்பவங்கள்.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Training 1A

 1. சேத் என்ற அந்த இளைஞனுக்கு பயிற்சி அளிப்பதற்காக, முதல் கட்டளையாக, இறந்த ஒருவரின் உடலை, துண்டு துண்டாக வெட்டி, இறந்தவரின் நாய்களுக்கே இரையாக்கும் காட்சி. இது மனதை, ஆன்மாவை உரப்படுத்த, ஈவிரக்கமற்ற வேட்டையனாக மாற்ற கொடுக்கப்படும் முதல்நிலை பயிற்சி.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Training 2A

 1. நள்ளிரவின் குளிர் எப்படி நம் உடலை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்காதோ, அதைப்போலவேத்தான் நம்மையறியாமல் நமக்குள்ளே ஊடுருவியிருக்கும் பயமும். இரண்டாவது காட்சியில் ஒரு லின்க்சை (சிறுத்தை வகையை சேர்ந்த ஒரு மிருகம்) கூண்டில் அடைத்து, அதனருகிலேயே சேத் என்ற அந்த இளைஞனை அமரவைத்து பயத்தை எதிர்கொள்ள வைக்கிறார், பௌன்சர். கிட்டத்தட்ட பேட்மேன் படத்தில் பயத்தை அரவணைக்கும் காட்சிக்கு ஒப்பான இதில், தன்னுடைய அச்சங்களை வெற்றிகொள்வதின் அவசியம் உணர்த்தப்பட்டு இருக்கும்.

Lion Comics Jan 2015 Bouncer Routhiram Pazagu Training 3A

 1. மூன்றாவதாக, ஒரு மலைமுகட்டின்மேலே நிற்கவைத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியைக் கொடுப்பார். கவனத்தை ஒருமுகப்படுத்தி, தேவையற்ற சின்னஞ்சிறு அசைவுகளை தவிர்த்து, யுத்தத்தில் ஜெயிக்க நிதானமும், பொறுமையும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார் கதாசிரியர். Carpe Diem என்ற ’ஒற்றைநொடியே உன் வாழ்க்கை, அதை முழுவதுமாக வாழ உள்ளுக்குள் ஒரு இலகுவான வெறுமையை உணர’ பயிற்சி அளிக்கிறார், பௌன்சர். ஒரு கட்டத்தில் இலக்கும், சுடுபவனும் ஒன்றே என்ற மகாபாரதக் கோட்பாட்டை உணர்ந்த சேத், தன்னுடைய பயிற்சியை முடித்துக்கொள்கிறான்.

இதைத்தவிர, ஏற்கனவே கட்டுரையில் சொன்னமாதிரி, ஏகப்பட்ட குறியீடுகளால் நிரம்பி வழிகிறது, இந்தக் கதை. முதல்முறை வாசிக்கும்போது சாதாரண கண்களுக்கு தட்டுப்படாத இவை, மீள்வாசிப்பின் சுவையை கூட்டும். உதாரணமாக, பெற்றோரை இழப்பது, பயிற்சி எடுப்பது, பழிவாங்குவது என்ற கதையின் மூன்று முக்கிய நிகழ்வுகளும் மழைக்காலம், பனிக்காலம் மற்றும் வசந்த காலத்தில் நடப்பது சாதாரணமாகக் கதையில் வைக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம்தானே?

Lion Comics Issue No 244 Issue Dated Jan 2015 Alexander Jodorowsky Bouncer Tamil Page No 115ஓவியர் போக் ஒரு அசாதாரண படைப்பை நம்மிடையே தந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு துப்பாக்கி வீரனுக்கு சுடும்போது அவனுக்கான உடல் சமநிலை மிகவும் முக்கியம். ஒரு கையை இழந்த ஒருவனுக்கு சமநிலையை உருவாக்க, அவன் எப்போதுமே ஒரு பக்கம் சாய்ந்து, எடையை உடலின் இருபுறமும் இணையாக வைத்திருக்க வேண்டும். மீள்வாசிப்பின்போது பௌன்சரின் உடல்மொழியை ஒருமுறை கூர்ந்து கவனியுங்கள். அதைப்போலவே, வன்மேற்கின் மூன்று காலங்களையும் மிக அழகாக தன்னுடைய நேர்த்தியான ஓவியங்களால் வெளிப்படுத்தி இருக்கிறார், ஓவியர் போக். இதைத்தவிர இந்தக்கதையில் சிலாகித்துப் பேச, சிறப்பாக ஒன்றும் இல்லை. ஆனால், அலேஹாந்ரோவின் மற்ற காத்திரமான படைப்புகளை எதிர்நோக்க, இது ஒரு முன்மாதிரி என்ற வகையில், பௌன்சர் ஒரு சரியான ஆரம்பமே.

Untitledஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தின் ரசனையை நிர்ணயிப்பது நுகர்வோர் அல்ல, ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட படைப்பாளியே என்ற சித்தாந்தத்துக்கு மிகச்சிறந்த உதாரணம், அலேஹாந்ரோ ஓளோரோப்ஸ்க்கி.

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய சுயம்வரம் என்ற மலையாளத்திரைப்படம் வெளியானபோது பிரபல பத்திரிகையின் திரைவிமர்சகர் ஒருவர் “மலையாளத்தின் முதல் திரைப்படம்” என்று எழுதினார். அலங்காரச் சொல்லாடலை தன்னகத்தே கொண்டிருந்தாலும், அது ஒரு வரலாற்று உண்மையே. அந்தத் திரைப்படம் எழுபதுகளில் மலையாள திரையுலகில் ஒரு புதிய அலையை உருவாக்கியது. உலக அளவுக்கான ஒரு முதல் அடியாக அது கருதப்பட்டது.

கிராபிஃக் நாவலை மொழிபெயர்த்து வெளியிடுவதைப்பொருத்த வரையில், (நிறைய தவறுகள் இருந்தாலுமே) பௌன்சர் தமிழின் முதல் கிராபிஃக் நாவல். என்னுடைய பார்வையில், முதல் முயற்சி.

பௌன்சர் – ரௌத்திரம் பழகு: லயன் காமிக்ஸ் வெளியீடு.

114 பக்கங்கள், ரூ. 125/-

குறிப்பு: தமிழின் நம்பர் 1 இலக்கிய மாத இதழான தீராநதியில், அறியப்படாத ஆளுமைகள் என்ற தலைப்பில் மிகச்சிறந்த கிராஃபிக் நாவல்களைப் பற்றியும், அவற்றைப் படைத்த ஆளுமைகளைப் பற்றியும் அடியேன் எழுதி வரும் தொடரின் முதல் கட்டுரை இது. ஏப்ரல் 2015ல் ஏழு பக்கங்கள் என்ற அளவில் வெளியான, தமிழின் முதல் காமிக்ஸ் கட்டுரையும் கூட.

Related Posts with Thumbnails