கதைச் சுருக்கம்: ஹாலிவுட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது நேரிடும் ஒரு விபத்தினால், ஒரு சிறிய நகரில் தங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு வினையூக்கியாக மாறி தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார்? வேட்டை ஆடப்படுவது யார்? என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு ஆரம்பிக்கிறது.
Child Abuseக்கு ஆளாகி அதனால் மனப்பிறழ்வு நிலையிலிருக்கும் கதைநாயகி, கையாலாகாத ஒரு காவல் தலைவர், 25 வருடங்களாகத் தலைதூக்க காத்திருக்கும் ஒரு துரோகம், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பணக்காரன், பேய் படங்களை மட்டுமே திரையிடும் ஒரு சினிமா தியேட்டர், அந்த தியேட்டர்காரனின் மர்மமான கடந்த காலம், அந்நகரத்தின் மர்மங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கும் ஒரு தெருக்கிழவன், மன்னிப்பு வழங்கமுடியாத பாவங்களுக்கு துணைபோன ஒரு பாதிரியார், 25 வருடங்களாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பழிவாங்கும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத எதிர்நாயகன் என்று விசித்திரமான கதாபாத்திரங்கள் நிறைந்த இக்கதையின் முடிவு ”வெளிப்படையாக தெரிவதை நம்பாதே” என்ற சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
விமர்சன பார்வை: புகழ்பெற்ற பேய்க்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் இரண்டு அதி தீவிர ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு க்ராபிஃக் நாவலை உருவாக்கினால், அதன் கரு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தேவையே இல்லை.
ஜோயல் கல்லெட் எழுதி, டெனிஸ் ஓவியம் வரைந்திருக்கும் இரவே.. இருளே.. கொல்லாதே! ஒரு அமானுஷ்ய த்ரில்லர் வகை க்ராபிஃக் நாவல். இதில் குறியீடாக பல விஷயங்கள் உணர்த்தப்படுவதாலும், கதை நான்-லீனியராக சொல்லப்பட்டு இருப்பதாலும் இந்த க்ராபிஃக் நாவலை மேலோட்டமாகப் படிப்பதைத் தவிர்த்து ஆழ்ந்து, கூர்ந்து கவனித்து படிப்பது அவசியமாகிறது. மேலும் பிரபலமான ஹாலிவுட் டீவி தொடர்களுக்கும், சினிமாக்களுக்கும் இடையிடையே Tribute செய்யும் வகையில் காட்சிகள் பின்னப்பட்டுள்ளதால், அதைப்பற்றியும் ஓரளவுக்கு விவரம் சேகரித்தால், வாசிப்பின் சுவை கூடும்.
உதாரணமாக, சில காட்சிகளைப் பார்க்கலாம்.
- கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி பெட்ஸி மஹோர்ன் காரை ஓட்டிக்கொண்டு இருக்கையில், சற்றே அயர்ந்து ஓய்வு எடுத்துகொண்டு இருக்கும்போது அன்னியன் ஒருவனால் எழுப்பப்படுவது (The Invaders, 1967-68 TV Sries) தெ இன்வேடர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரின் (மறக்கமுடியாத) ஆரம்பக் காட்சி.
- கதை நிகழும் சிறு நகரமான க்ரீப்பர் க்ரீக்கில் அப்போது ஓடிக்கொண்டு இருக்கும் லீ கர்ட்டீஸ் படம் (Jamie Lee Curtis, Hollywood’s Scream Queen in the Late 70’s), ஒரு வகையில் இந்தக் கதைக்கு தொடர்பு உள்ளதே.
- கதை முடியும்போது தியேட்டரில் இருக்கும் போஸ்டர் (The Thing from Outer Spcae – Howard Hawk’s / John Carpenter Film’s) படத்தின் மையக் கருவிற்கு சம்பந்தமில்லை என்றாலுமே, கதையின் போக்கிற்கு (வெளி ஆள் ஒருவரின் வருகை) தொடர்புடையது.
என்று பல சுவையான விஷயங்கள் வாசிப்பின் பிறகும் கதைக்களன் சார்ந்த நினைவுகளுக்கு அசை போட பயிற்சி அளிக்கிறது.
ஆசிரியர் பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு, கதை எழுதுவதையே முழுநேர பணியாக்கிக்கொண்ட ஜோயலின் சிறப்பு அம்சமே அவரது கதாபாத்திரங்களின் குறைபாடுகளும், அவர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான, அசாதாரண சூழ்நிலைகளும்தான். கதாசிரியர் ஜோயலின் வழக்கமான டெம்ப்ளேட்டான யாரும் நல்லவர்களும் இல்லை, யாரும் தீயவர்களும் இல்லை என்ற பாணி துவங்கியது இந்தக் கதையில்தான்.
பின்தொடரும் நிழலாக வரும் கடந்தகாலத்தின் இருண்ட பக்கங்களை மறக்க நினைக்கும் கதாபாத்திரங்களும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை நினைவூட்டும் சம்பவங்களும் நிறைந்த இக்கதையில் வன்மமும் குரோதமும் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளையனைப்போல சரியான நேரத்திற்காக காத்து கிடக்கின்றன.
உயிருடன் இருப்பதால் மட்டுமே வாழ்வதாகக் கருதும் கதாபாத்திரங்கள், சொல்லப்படாத சோகங்களைத் தாங்கி, நம்பிக்கையை இழந்து, தொலைந்துபோன மனிதர்களுக்கு இடையே மெல்ல தலைதூக்கும் மனிதத்தன்மை, வலி ஒன்றே மொழியாகவும், இருள் மட்டுமே ஒளியாக இருக்கின்ற கதையில் ஆங்காங்கே சில குறியீடுகள் உண்மையாகவே மெய்சிலிர்க்க வைக்கின்றன.
இணையம், ஸ்மார்ட் போன்கள் மூலம் தேடுதல் மலிந்துவிட்ட சமகாலத்தில், ஒரு த்ரில்லர் கதையை கடைசிவரை சுவாரசியத்துடன் எழுதுவதைப்போல பெரிய சிரமம் வேறெதுவும் இல்லை. அதைப்போலவே அதனை சரியாக புரிந்து, மொழியாக்கம் செய்வதுவும் ஒரு சிரமமான வேலையே. அதனை செம்மையாக செய்துள்ளார் எடிட்டரும், மொழிபெயர்ப்பாளருமாகிய விஜயன். கதையில் உணர்ச்சிகரமான பல காட்சிகளை எளிய தமிழில் செம்மைப் படுத்தியிருக்கும் அவருக்கு ஒரு ஷொட்டு!
ஃப்ரான்சில் ஆண்டுக்கு ஒன்று வீதமாக மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவந்த இக்கதை வரிசையை ஒரே புத்தகமாக வெளியிட்டு இருப்பதால், அடுத்த பாகம் எப்போது? என்று காத்துக்கிடக்கும் கவலை நமக்கில்லை. முதல் இரண்டு பாகங்களும் தேர்ந்த மந்திரவாதியின் ஜாலங்களை போல வேகமாக நகர்கிறது. கடந்த இருபது வருடங்களாக வெளிவரும் ஹாலிவுட் பேய் / த்ரில்லர் படங்களை பார்த்தவர்களுக்கு, மூன்றாம் பாகத்தையும், கதையின் எதிர்நாயகனையும் கணிப்பது சிரமமான வேலையே அல்ல.
ஒரு நேர்க்கோட்டில் விவரிக்கையில் மிகவும் சாதாரணமான ஒரு B Grade ஹாலிவுட் படத்தை நிகர் செய்யும் இக்கதையை திறமையான நான்-லீனியர் எடிட்டிங் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார், கதாசிரியர் ஜோயல். இந்த வித்தையில் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவரது நெருங்கிய நண்பரான ஓவியர் டெனிஸ். ஒருவேளை லீனியராக சொல்லப்பட்டிருந்தால், கதையில் இத்தனை சுவாரசியமும், மர்மமும் இருந்திருக்காதோ என்னவோ?
தமிழில் காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கை இப்போதுதான் ஆயிரத்தை கடந்து இருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தை பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் புத்தகத்தின் சில பக்கங்களில், அடுத்து எந்த கட்டத்தைப் படிக்கவேண்டும் என்பதை உணர்த்த போடப்பட்டு இருக்கும் அம்புகள் புதியதாக காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்போருக்கு உதவியாக இருக்குமோ என்னவோ, ஆனால், தொடர்ந்து காமிக்ஸை படித்து வருபவர்களின் அறிவுத்திறனை குறைத்து மதிப்பிடுவதாகவே தெரிகிறது.
Comptine D’ Holloween (Delcourt, France, Part 1 - 2000, Part 2 - 2001 & Part 3 - 2002.
கதை: ஜோயல் கல்லெட் ஓவியம்: டெனிஸ் க்விஸ்ட்ரெபர்ட்
வண்ணங்கள்: ஹுயுபெர்ட் பொலார்ட் தமிழாக்கம்: எஸ். விஜயன்
வெளியீடு: லயன் காமிக்ஸ் இதழ் எண் 238, நவம்பர் 2014.
விலை: 150 ருபாய். 146 முழு வண்ணப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)
வகை: க்ராபிஃக் நாவல் அமைப்பு: அமானுஷ்ய த்ரில்லர் (18 +)
களம்: அமெரிக்காவின் ஒரு சிறுநகரம் வருடம்: கி.பி 2000
One Liner: தொடர் கொலைகளை செய்வது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
தீர்ப்பு: பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு தோட்டாக்கள் (4/6).
குறிப்பு: தி இந்து தமிழ் நாளிதழில் கிராஃபிக் நாவல்களைப் பற்றி அறிமுகங்களும் விமர்சனங்களும் செய்யலாம் என்று நவம்பர் 2014ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியபோது வெளியான இரண்டாவது கட்டுரை இது.
இணையத்தில் படிக்க: தி இந்து தமிழ் நாளிதழ் – இணைய லிங்க்
அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteExcellent!
ReplyDeleteFriends, where can I get or download ambulimama and balamitra and ratnabala books.
Kindly help
vckarthik73@gmail.com
Excellent!
ReplyDeleteFriends, where can I get or download ambulimama and balamitra and ratnabala books.
Kindly help
vckarthik73@gmail.com