காமிரேட்ஸ்,
இன்று மதியம் உணவு உண்ண ஆரம்பிக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பு. ஓரிரு முறை மட்டுமே பேசியுள்ள அந்த நண்பர் அழைக்கும்போதே ஏதோ முக்கியமான விஷயம் என்று தெரிந்து கொண்டேன். ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டார் "விடியல் பதிப்பக தோழர் சிவா இஸ் நோ மோர்" என்பதே அந்த தகவல். வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை என்றாலும் கூட முயற்சிக்கிறேன்: வெய்யில் தகிக்கும் ஒரு மதிய நேரத்தில் நிழலில் இளைப்பாற வந்தவனின் தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து வைத்தால் எவ்வளவு வலிக்குமோ, அவ்வளவு வலி (More of a pain in the Mind, than in the Body). இத்தனைக்கும் சிவா சாருக்கும் எனக்கும் அந்த அளவுக்கு பழக்கம் கூட கிடையாது. ஒரு எட்டு அல்லது பத்து முறை சந்தித்தது இருக்கிறேன், அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு சந்திப்புமே சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் சாப்பிட்ட நாவல்பழத்தின் சுவை எப்படி இன்றும் நாவில் தங்கி இருக்கிறதோ, அப்படி நினைவில் தங்கி இருக்கிறது, Such was his Presence.
விடியல் பதிப்பகம் - ஒரு அறிமுகம்: தீவிர வாசிப்பிற்கும் எனக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஏழாம் பொருத்தம். ஆகையால் அந்த தளத்தில் என்ன நடக்கிறது என்பதை பிறர் சொல்லி தெரிந்து கொள்வேனே ஒழிய நேரிடை பழக்கம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகன் அப்படி "என் நாடு, என் மக்கள், எனக்கென்று ஒரு உலகம்" என்று அமைத்துக் கொண்டாரோ அப்படியே நானும் 2008-ம் ஆண்டு தமிழ் காமிக்ஸ் உலகம் என்றொரு சிறிய இணையதளத்தை துவக்கினேன்.அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓரிரு பதிவுகளை இட்டுக்கொண்டு இருக்கும்போதுதான் பல காமிரேட்டுகள் அறிமுகம் ஆயினர். பலர் மறக்கவே முடியாத நண்பர்களாகவும், பலர் மறக்க வேண்டிய நபர்களாகவும் மாறி இருக்கும் இந்த சூழலில் ஒரு நாள் காமிரேட் கனவுகளின்காதலன் ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் ஒரு புத்தகத்தை குறிப்பிட்டு, அந்த புத்தகம் Any-Indian.com என்கிற தளத்தில் விற்பனைக்கு கிடைப்பதாகவும், அது ஒரு தமிழ் மொழிமாற்று ஃகிராபிக் நாவல் என்றும் அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த புத்தகத்தை உடனடியாக வாங்க இயலவில்லை. சுமார் ஆறு மாதங்கள் கழித்து கோவை நகருக்கு சென்றபோது அங்கேதான் அவர் குறிப்பிட்ட அந்த புத்தகங்களை வாங்க முடிந்தது. இவையே அந்த புத்தகங்கள்:
அதுவரை மர்ஜானே சத்ரபி பற்றி கேள்விப்பட்டு இருந்தும், அந்த படத்தின் டிவிடி இருந்தும், ஆங்கில புத்தகம் கைவசம் இருந்தும் (நன்றி இயக்குனர் மிஷ்கின்) ஏனோ படிக்கவே தோன்றவில்லை. ஆனால் தமிழில் வந்துள்ளது என்பதால் பரிட்சார்த்த முயற்சியாக சில பக்கங்களையாவது படிக்கலாம் என்று நினைத்து பயண களைப்பு ஆளை அசத்தும் ஒரு கோவை இரவில் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த கதையின் நேர்த்தி என்னை இரண்டு பாகங்களையும் அதே இரவில் படிக்க தூண்டியது (இந்த கதையின் தமிழாக்கம் குறித்து இப்போதும் எனக்கு மாற்றுக்கருத்தே உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்).
மறுநாள் காலையில் வேறு அலுவலக வேலைகள் இருந்தும், கோவையில் இருக்கும் என்னுடைய நண்பரும், வழிகாட்டியுமான யாழ் நூலக தோழர் துரை அவர்களை சந்தித்து இந்த விடியல் பதிப்பகம் பற்றியும், அதன் பதிப்பாளரைப்பற்றியும் விசாரித்தேன். அவரை சந்திக்க நான் ஆவலாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்ட துறை அவர்கள் அன்று மாலையே அவரின் வெற்றிக்கு அழைத்து சென்றார். காமிரேட் கோவை பிரகாஷ் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருந்த அவரின் வீட்டிற்கு சென்றது ஒரு அற்புதமான விஷயம்.
பெ. சிவஞானம் என்று மற்றவர்களாலும், தோழர் என்று உரிமையோடு சக காம்ரேட்டுகளாலும், சிவா என்று வெகு சிலாராலும் அழைக்கப்பட அந்த எளிமையான மனிதரைப்பற்றி அன்றுதான் முழுமையாக தெரிந்து கொண்டேன். காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதைகள் மேலுள்ள என் காதலால் கவரப்பட்டு அவரது கனவு ப்ராஜெக்ட் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
விடியல் பதிப்பகம் சிவா சாரின் கனவு: ஜப்பானிய மாங்கா பற்றி நிறைய பேர் அறிந்து இருப்பீர்கள். நம்ம ஊரில் காமிக்ஸ் / சித்திரக் கதை என்று எப்படி நாம் பெயரிட்டு அழைப்பதைப்போல ஜப்பானில் சித்திரக் கதைகளை மாங்கா என்று அழைப்பார்கள். எழுத்தாளர் எஸ். ரா ஒருமுறை அவரது தளத்தில் ஒசாமு தெசுகா பற்றி குறிப்பிட்டு இருப்பார். அந்த அற்புதமான படைப்பாளியின் மாஸ்டர் பீஸ் என்று பலராலும் கருதப்படும் புத்தரின் கதையாகிய புத்தாவை தமிழில் வெளியிடுவதுதான் சிவா சாரின் கனவு. தன்னுடைய ஆசையை தெசுகாவின் எஸ்டேட்டிற்கு தெரிவித்து, முறையாக அதன் உரிமையையும் பெற்றார்.
ஒரு மழைக்கால மாலை நேரப் பொழுதில் சிவா சாரின் வீட்டில் இந்த மாங்காவை தமிழில் எப்படி கொண்டு வருவது என்று சிவா சார், துறை சார், பயங்கரவாதி டாக்டர் செவன் மற்றும் அடியேனும் விவாதித்தோம். ஏற்கனவே மர்ஜானே சத்ரபியின் புத்தகங்களை தமிழில் வெளியிட்டு பண அளவிலும், மன அளவிலும் நொந்து இருந்த சிவா சாரிடம் இந்த தொகுப்புகளை தமிழில் வெளியிட்டால் ஆகும் செலவையும்,அதற்க்கான சந்தையாக்கத்தையும் பற்றி பல மணி நேரங்கள் பேசினோம். பின்னர் புத்தரை தமிழில் பதிப்பிக்க இது உகந்த நேரமல்ல என்று முடிவெடுத்து,அதன் படி இந்த கனவு ப்ராஜெக்டை தற்காலமாக தள்ளி வைத்தோம் (INR 3500 is the Cost per set). அதன் பின்னர் வேறு சில தமிழ் காமிக்ஸ் குறித்த விஷயங்களையும் மற்ற பதிப்பக விஷயங்களையும் கலந்து பேச சிவா சார் எப்போதுமே தயங்கியதில்லை.
சென்ற ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் பத்ரியிடம் கூட இந்த ப்ராஜெக்டை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். இந்த ஆண்டு உடல்நிலை சரியில்லை என்று சிவா சார் புத்தக கண்காட்சிக்கு ஓய்வு கொடுத்தார். சமீபத்தில் தெசுகாவின் அதி தீவிர வாசகர் இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் இந்த ப்ராஜெக்டை கூறியவுடன், அவரும் முகமூடி படம் முடிந்தவுடன் இதைப்பற்றி பேசுவோம், குறைந்த பட்சம் ஒரு லிமிடெட் எடிஷன் அளவிற்காவது கொண்டு வருவது என்றெல்லாம் ஆலோசித்தோம். பின்னர் மார்ச் மாதம் கூட அவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த விஷயத்தை கூறியவுடன் நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, மரணத்துடன் போராடி வரும் நிலையிலும் உற்சாகத்துடனே பேசினார்.
ஒவ்வொரு முறை கோவை செல்லும்போதெல்லாம் அவரை சந்திப்பதையோ / அவருடன் பேசுவதையோ வழக்கமாக கொண்ட நான், கடந்த இரண்டு தடவையும் நேரமின்மை மற்றும் பணிச்சுமை காரணமாக சந்திக்க முடியாமல் திரும்பி விட்டேன். துரை சாரின் மகன் திருமண நேரத்தில்கூட சிவா சாரைப்பற்றி விசாரிக்கையில் நுரையீரல் புற்று நோய்க்கு கீமோதெரபி சிகிச்சை பெற்றுவருவதை தெரிந்துக்கொண்டேன். உடல்நலம் கவலைக்கிடமாக இருந்தவேளையில் ஒருமுறை அவரிடம் தொலைபேசியில் பேசும்போதுகூட தெளிவாகவும், அன்புடனுமே பேசினார். என்ன இருமல் தான் அவரை அதிகம் பேசவிடாமல் தடுத்தது. ஆனால் அந்த உரையாடல்தான் எங்களின் கடைசி உரையாடல் என்றோ அல்லது அவரை நான் அதற்க்கு பிறகு சந்திக்கவே முடியாது என்பதோ அப்போது எனக்கு தெரியாது.
நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சை பெற்றுவந்த சிவா சார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சற்றே கவலைக்கிடமான நிலையிலேயே இருந்தார். திரவ உணவையே உட்கொண்டு வந்த அவருக்கு, கடந்த ஒரு வாரமாக அந்த திரவ உணவே அவரது வயிற்றில் திடமாக மாறி பிரச்சினைக்கு ஆளானார். அப்போதுகூட இப்படி ஒரு முடிவு வருமென்று தோணவில்லை.
தனிப்பட்ட முறையிலோ, அவரது தீவிர இலக்கிய, வாசக முறையிலோ பழக்கப்படாத அவர் பல வகையில் என்னை கவர்ந்தவர். இதுவரையில் யாரின் மறைவுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த செல்லாத எனக்கு இவரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல ஆசைப்பட்டாலும், அலுவலக பணி நிமித்தம் காரணமாக மும்பை செல்லவிருப்பதால் அந்த எண்ணம் ஈடேறவில்லை.
ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் நூலகம் திரு துரை அவர்களால் ஒரு இரங்கல் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுவதாக தகவல். கண்டிப்பாக அதற்காகவேனும் கோவை செல்ல முடிவெடுத்துள்ளேன். மேற்கொண்டு விவரங்களை இரங்கல் கூட்டம் ஊர்ஜிதம் ஆனவுடன் இங்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.
சிவா சார், கண்டிப்பாக ஒரு நாள் உங்களின் புத்தர் கனவு நிறைவேறும் நான் நிறைவேற்றுவேன். இது உறுதி. Till then, Rest in Peace.
விடியல் சிவா அவர்களின் மறைவு தமிழுக்கு இழப்பு, ஆழ்ந்த வருத்தங்கள்.
ReplyDeleteவிடியலில் சேவின் வாழும் மரணமும் மற்றும் சில புத்தகங்களும் படித்துள்ளேன் ,அற்புதமான வெளியீடுகள் அவை .இவரைப் பற்றி எனக்கு தெரியாது ,ஆனால் இவரது பதிப்பக வெளியீடுகள் இவருடன் என்னை உறவாட வைத்துள்ளன .நேர்த்தியான அட்டை படத்துடன் வெளிவிடும் பதிப்பகங்களில் விடியலும் ஒன்றே.பல அற்புதமான புத்தகங்களை இவர்கள் வெளியிட்டுள்ளார்கள்,இவரது இழப்பு தோழர்களுக்கும்,புத்தக உலகிற்கும் கண்டிப்பாக ஈடு செய்ய முடியாதது.எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும் ,தோழர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteவார்த்தைகளே வரவில்லை.
ReplyDeleteநாளைக்கு ஈரோட்டில் இருக்கிறேன். வரமுடிகிறதா என்று பார்க்கிறேன்.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது இழப்பு நம் அனைவருக்குமே பெரிய இழப்புதான் நண்பர்களே.
ReplyDeleteR.I.P. Siva.
ReplyDeleteஎனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDelete.
விஸ்வா,
ReplyDeleteவிடியல் பதிப்பக உரிமையாளரின் மறைவு தமிழிற்கு ஒரு பெரிய இழப்பே. சிறப்பான சர்வதேச வெளியீடுகளை அவர் நிறுவனம் தமிழில் வெளியிட்டு இருக்கிறது. அண்மையில் அவர் நோயுற்று இருந்ததை பிரபல எழுத்தாளர் ஒருவரிற்கு அவர் மனம் நொந்து எழுதிய கடிதத்திலிருந்து அறிந்தேன். கவலையான விடயம். உங்கள் பதிவு வழியாகவே அறிகிறேன்.
புத்தா எனும் சிறப்பான முயற்சி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.
பழையவை என்றும் என் மனதில் உள்ளது. மறப்பதற்கு நான் மரணமாகி அல்லவா இருக்க வேண்டும். இருப்பினும் கருத்து வேறுபாடுகள் சகஜம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
என் விருப்பம் எல்லாம் ஈரான் போன்ற கதைகளின் மொழிபெயர்ப்பின் தரத்தை மட்டுமல்ல தமிழில் வெளிவரும் காமிக்ஸ்கள் அனைத்தின் தரத்தையும் நீங்கள் அதேபோல் விமர்சித்திட வேண்டும் என்பதுதான். இந்த வரிகளில் நான் எல்லை தாண்டி சென்றிருப்பின், நண்பரே இக்கருத்தை ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteவிடியல் சிவா அவர்களின் மறைவு தமிழுக்கு இழப்பு, சர்வதேச வெளியீடுகளை தமிழில் வெளியிட்டு இருக்கிறது.
ReplyDeletevidial pathippagam ulla UPPILIPALAYAM ...PAGUTHIEL
ReplyDeleteIRUPPATHAI PERUMAIAAGA NINAICKIREN.YES THIS IS MY NATIVE PLACE.