Pages

Tuesday, September 17, 2013

3 Comic Cuts 52 – News 52: வாண்டுமாமா is Back


டியர் காமிரேட்ஸ்,

கடந்த ஒரு மாதமாக, இன்றைய தினம் தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு மறக்க முடியாத தினமாக இருக்கும் என்று என்னுடைய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். அதற்க்கான காரணம் என்ன என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் கேட்டுக்கொண்டதால் காரணத்தை மட்டும் சொல்லாமல் தவிர்த்து வந்தேன்.

உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரக்கூடிய ஒரு சங்கதியை உங்களிடம் சொல்லிவிட்டு அதனை குறிப்பிட்ட காலம் வரையில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பூட்டு போடுவதை விட கொடுமையான விஷயம் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்களேன், ப்ளீஸ்?

எனிவே, இன்று முதல் வெளிவர துவங்கியுள்ள The Hindu குழுமத்தின் தமிழ் தினசரியை பற்றியதே அந்த தகவல். கடந்த நான்கு மாதங்களாக என் நண்பர்கள் ஒவ்வொருவராக அங்கே சேர்ந்தவண்ணம் இருந்தனர். சில விஷயங்களை பற்றி தீவிரமாக விவாத்தித்தோம். அதைப்பற்றியெல்லாம் பின்னால் எழுதுகிறேன். இப்போது முதன்மையான தகவல்.

The Return of வாண்டுமாமா: பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு வெகுஜன பத்திரிகையில் வாண்டுமாமா அவர்களின் சித்திரக்கதை வெளிவந்தது. அதற்க்கு பிறகு அவரது புத்தக தொகுப்புகள் பதிப்பகங்களால் வெளிவந்தாலும் (Special Thanks to வானதி பதிப்பகம்), அனைவரும் படிக்கும் வெகுஜன பத்திரிக்கைகளில் அவரது பங்களிப்பு இல்லாமல் போனது இந்த தலைமுறைக்கு மிகப்பெரிய சாபக்கேடு.

அதனை சரிகட்டும் விதமாக இன்றைய தி ஹிந்து தமிழ் தினசரி பத்திரிகையில் சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி வாண்டுமாமா அவர்களின் புதிய ஸ்ட்ரிப் ஒன்று துவங்கியுள்ளது. நேற்று முகப்புத்தகத்தில் (For the Un initiated, நம்ம Facebook தாங்க!) தினத்தந்தியின் கன்னித்தீவு பற்றி எழுதி  ஒரு Hint கொடுத்திருந்தேன்.இந்த ஸ்ட்ரிப் உருவான பின்னணியை சொன்னால்..... வேண்டாம். நம்ம சுயசரிதம் எழுதும்போது அதனைப்பற்றி பேசுவோம், ஒக்கே? இப்போதைக்கு இந்த ஸ்ட்ரிப்பை பார்த்து, படித்து மகிழுங்கள்.

Vaandu Desam 001 Monday 16th Sept 2013 The Hindu Tamil Alternative Scan நமது ப்ளாக்கை தொடர்ந்து படித்து வரும் காமிரேட்டுகளுக்கு வாண்டுமாமாவின் பலே பாலுவைப்பற்றி நன்றாக தெரியும். புதியதாக படிப்பவர்கள் இந்த பதிவை படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். பலே பாலுவும் பாட்டில் பூதமும் (அறிமுகம் 1 அறிமுகம் 2) என்கிற பிரபலமான அவரது தொடரின் Re Boot வெர்ஷனாக இந்த கதையை பார்க்கிறேன். நண்பர்களுக்கு ஒரு போனசாக இந்த கதையின் இரண்டாவது பகுதியையும் இங்கே அளிக்கிறேன் (இந்த பதிவு இடப்ப்படும்போது இரவு மணி ஒன்று).Vaandu Desam 002 Tuesday 17th Sept 2013 The Hindu Tamil 

தினத்தந்தி - கன்னித்தீவு - முழு வண்ணத்தில்: இன்றுமுதல் ஹிந்து குழுமத்தில் இருந்து புதியதாக தமிழில் தினசரி (தி இந்து ) என்று ஆரம்பாமாகியுள்ளது. இந்தன் வருகையை எதிர்நோக்கி ஏற்கனவே களத்தில் இருக்கும் தினசரிகள் போட்டி போட்டுக்கொண்டு அமர்க்களம் செய்ய துவங்கி விட்டன.

1.தினகரன் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே எடிட்டோரியலில் இருந்து கன்டென்ட் வரை அனைத்தையும் புதுமையாக பேக்கேஜ் செய்ய துவங்கி விட்டார்கள். தினகரனில் செய்யப்பட்ட மாற்றங்கள் நன்றாகவே இருக்கிறது.

2. தின இதழ் (சென்னை மற்றும் திருவள்ளூர்) இந்த வாரம் முதல் 4 ருபாய் என்று இருந்த விலையை 2 ரூபாயாக குறைத்து இருக்கிறார்கள்.

3. தினகரன் போலவே தினத்தந்தியும் முழுமையான வண்ண தினசரியாக மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். அதன் முதல் வடிவம் நேற்று (ஞாயிற்று கிழமை முதல்).

எது நடக்கிறதோ இல்லையோ, வண்ணத்தில் முதன்முறையாக கன்னித்தீவு தொடர் சித்திரக் கதையை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். 18,920 நாட்கள் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் (51 வருடங்கள் மை லார்ட், 51 வருடங்கள்) முழு வண்ணத்தில் மெருகூட்டப்பட்ட ஓவியத்தரத்துடன் சிறப்பாக இருக்கின்றது. இனிமேல் தினத்தந்தியும் வாங்க வேண்டும் போலிருக்கிறதே?

சில பல சாம்பிள் ஸ்கான்களை கண்டு மகிழுங்கள்: மாலைமதி காமிக்ஸ் கடைசி இதழில் (அக்டோபர் 1976) பின் அட்டையில் இனிமேல் மாலைமதி காமிக்ஸ் மாலைமதி நாவலாக, வார இதழாக வெளிவரும் என்று விளம்பரம் செய்தார்கள். அதனாலேயே அந்த விளம்பரம் இன்றளவும் காமிக்ஸ் ரசிகர்களால் மறக்கப்படாமல் இருக்கிறது.

அதைப்போலவே தினத்தந்தியின் கன்னித்தீவு கதைத்தொடர் முழு வண்ணத்திற்கு மாறுவது சிறப்பு என்றால் அதன் கடைசி கருப்பு வெள்ளை ஸ்ட்ரிப் பிற்காலத்தில் மதிக்கப்படும் (என்று நம்புகிறேன்). ஆகையால் அதனை உங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

Kanni Theevu 18920 14th Sept 2013 Saturday 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 15ம் நாளான ஞாயிற்று கிழமை சித்திரக்கதை வரலாற்றில் இடம் பெற்றது எதனால் என்று கேள்வி எழுந்தால், அதற்க்கு நீங்கள் சொல்ல வேண்டிய பதில் - அன்று முதல் தான் கன்னித்தீவு முழு வண்ணத்தில் வெளிவர ஆரம்பித்தது என்பதே. இதோ அந்த முதல் ஸ்ட்ரிப்:

Kanni Theevu 18921 15th Sept 2013 Sunday போனசாக இரண்டாவது ஸ்ட்ரிப்பும்:Kanni Theevu 18922 16th Sept 2013 Monday நண்பர்களே, நேரமின்மையால் பல தகவல்களின் பின்புலத்தை பற்றி எழுதாமல் வெறும் ஸ்கான் மட்டுமே அளிக்கிறேன். படித்து இன்புறுங்கள்:

1. Times Of India – Star Wars

The Times of India Chennai Editon Dated 5th Sept 2013 Page No 15 Star Wars Comics 

2. Deccan Chronicle – Super Man – Action Comics

Deccan Chronicle Chennai Chronicle Dated 3rd Sept 2013 Pg No 27 Superman Comics

3. Deccan Chronicle – TinTin Car Race

Deccan Chronicle Chennai Chronicle Dated 4th Sept 2013 Pg No 31 TinTin Car Race

4. Deccan Chronicle – Daley’s Comics Book

Deccan Chronicle Chennai Chronicle Dated 24th Aug 2013 Pg No 40 Daley  Comics

5.Deccan Chronicle – Disney’s Cartoon Characters

Deccan Chronicle Chennai Chronicle Dated 20th Aug 2013 Pg No 25 Disney Characters 

6. Salman Khan Inspires Gaming Character

Deccan Chronicle Chennai Chronicle Dated 20th Aug 2013 Pg No 22 Salman Khan Video Game

7. Anifest 2013 – News Update

Deccan Chronicle Chennai Chronicle Dated 23rd Aug 2013 Pg No 32  Animated Expressions

8. News about early reading Habits

The Hindu Chennai Edition Metro Plus Dated 22nd Aug 2013 Chennai Week Readin Habit

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Friday, August 23, 2013

4 Comic Cuts 51 – News 51: மகாபாரதம் ஃக்ராபிக் நாவல் + ஸ்டார் காமிக்ஸ் விமர்சனம் தினமலரில்

டியர் காமிரேட்ஸ்,

சமீப காலங்களில் பதிவுலகம் பக்கம் வருவதற்கே நேரமில்லாமல் இருப்பதால், இரண்டு மூன்று பதிவுகள் ஃட்ராப்ட்டிலேயே உறங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் அவற்றை வலையேற்ற முயற்சிக்கிறேன். அதற்குள்ளாக ஒரு இடைச்செருகலாக இந்த காமிக் கட்ஸ் பதிவு. நம்முடைய காமிக் கட்ஸ் பதிவுகளில் இது 51ஆவது பதிவு என்பது Stats ரீதியிலான சிறப்பு அம்சம்.

மகாபாரதம் - ஃக்ராபிக் நாவல் காணொளி வடிவில்: புகழ் பெற்ற காமிக்ஸ்/ஃக்ராபிக் நாவல் கதாசிரியர் Grant Morrisson பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரைப் பற்றி தேடினால் விக்கியும், கூகுளாண்டவரும் தேவைக்கு அதிகமான தகவல்களை தருவார்கள். இவருடன் பல ஃக்ராபிக் நாவல்களில் பணியாற்றிய என்னுடைய ஓவிய நண்பர் இவற்றைப்பற்றி மணிக்கணக்கில் புகழ்ந்து பேசி இவரைப்பற்றிய மதிப்பை எனக்குள் உயர்த்தி இருக்கிறார்.

இவருடன் நம்முடைய இந்திய காமிக்ஸ் விற்பன்னர்களான ஷரத் தேவராஜனும், கோதம் சோப்ராவும் இணைந்து இந்திய கதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த உருவாக்கிய நிறுவனமே Graphic India. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களையோ / திரைப்பட வரிசைகளையோ கூர்ந்து கவனித்தால் அவற்றில் பெரும்பாலானவை மேஜிக்கல் ரியாலிசம் (புராதான காலத்து கதை, ராஜா ராணி, விசித்திர ஜந்துக்கள், கடவுள்கள் மற்றும் அவர்களின் சார்ந்த கதைகள்) என்றே இருக்கும். ஒரு ஹாரி பாட்டரும், லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொடரும் மாத்திரமே இங்கே இல்லை. பல தொடர்கள், பல சினிமாக்கள், பல கதைகள்.

இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த மகாபாரதம் இங்கே ஃக்ராபிக் நாவல் மற்றும் காணொளி வடிவில் தயாரிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Deccan Chronicle Chennai Chronicle Saturay 10th Aug 2013  Mahabharatha in You Tube

சான் டியாகோ காமிக் கானில் க்ராண்ட் மோரிசன்னும் நம்ம கோதம் சோப்ரா மற்றும் சரத் தேவராஜன் உடன் இணைந்து மகாபாரதம் பற்றி கொடுத்த மிகவும் விரிவான பேட்டி இது. நேரம் கிடைக்கும்போது பொறுமையாக பாருங்கள். நம்முடைய இதிகாசத்தை அயல்நாட்டை சேர்ந்த ஒருவரின் மதிப்பீடாகவே இதனை நான் பார்க்கிறேன். நம்முடைய கதாபாத்திரங்களை அவர்கள் உச்சரிக்கும் விதமும், சில பெயர்களை உச்சரிக்க முடியாமல் சுருக்கி அழைப்பதும் நிஜம்மாகவே சிரிப்பை வரவழைக்கிறது. உதாரணமாக யுதிஷ்டிரன் (அதாங்க, நமகெல்லாம் தர்மர் என்று சொலப்படுவாறே, அவர்) பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டு "யுதிஷ்" என்று அழைப்பதும், அதுவும் துரியோதனனே அவ்வாறு அழைப்பதும் முரண் நகையின் உச்சம்.

பகுதி 1 - நான்கு யுகங்களின் கதை: இந்த மகாபாரதம் தொடர் ஃக்ராபிக் நாவல் வடிவில் மட்டுமின்றி காட்சி தொடராகவும் உருப்பெற்று இருக்கிறது. க்ராபிக் இந்தியா நிறுவனத்தின் வலைதளத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் ஐந்து பகுதிகள் வெளியாகி இருக்கின்றது. இதோ இதுதான் அந்த தொடரின் முதல் பகுதி.

பகுதி 2 - கண்ணனின் பேச்சு: ஜீவன் J காங்'கின் கைவண்ணத்தில் ஓவியங்கள் வழக்கமான பாணியிலேயே அமைந்து இருக்கின்றன. நம்முடைய நேர்த்தியான கட்டமைப்பு கொண்ட காமிக்ஸ் கதைகளை படித்தோருக்கு இந்த மாதிரியான ஓவிய ஒழுங்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ரசிக்கும்படியாகவே அமைந்து இருக்கிறது. மறக்காமல் பாருங்கள்.

பகுதி 3 - பாண்டவர்களின் மறு வருகை: வழக்கமாக க்ராண்ட் மோரிசன்னின் கதையமைப்பில் இருக்கும் டெம்பிளேட் வகையிலேயே இந்த கதையிலும் பீமனின் கதா பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நான் பார்த்த / படித்த மகாபாரதத்தில் கேட்டறியாத சில சம்பவங்கள் இந்த தொடரில் வருவதும் புதுமையாகவே இருக்கிறது.

பகுதி 4 -  பீஷ்மரின் கோபம்: இதுதான் நான் குறிப்பிட்ட அந்த பகுதி. யாராவது இப்படி ஒரு சம்பவம் நாம் பார்த்த / படித்த மகாபாரதத்தில் வருகிறதா? இல்லையா என்று பின்னூட்ட பகுதியில் தெரிவித்தால் நலம். கவிஞர்களுக்கு என்று ஒரு சுதந்திரம் வழங்கப்படுவதை போல, லாஜிக் விஷயத்தில் நம்ம சினிமா இயக்குனர்கள் ஒரு சுதந்திரம் எடுத்துக்கொள்வது போல இங்கே க்ராண்ட் மோரிசன் ஏதாவது சுதந்திரம் எடுத்துக்கொண்டு அவரே இந்த காட்சியை அமைத்தாரா என்பதே என் கேள்வி.

பகுதி 5 - உன் ரத்தத்தில் நான் குளிப்பேன் - சபதம்: தொடர்ந்து க்ராபிக் இந்தியாவின் இணையதளம், காணொளி பக்கம், டுவிட்டர் மற்றும் முகப்புத்தக பக்கங்களை கவனித்து ஒவ்வொரு வாரமும் புதிய பகுதியை கண்டு களியுங்கள். இதோ அந்த லின்க்குகள்:

ஃக்ராபிக் இந்தியா யூ டியூப் தளம்: http://www.youtube.com/graphicindia

ஃக்ராபிக் இந்தியா டுவிட்டர் ஹேண்டில்: http://twitter.com/graphicindia

ஃக்ராபிக் இந்தியா Facebook லிங்க்: http://www.facebook.com/graphicindia

ஓவியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் - அயல்கிரகத்தில் ராஜா: புதியதாக இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் காமிக்ஸ் / க்ராபிக் நிறுவனங்கள் கையில் எடுக்கும் ஒரு தளம் - இதிகாச / புராண கால கதைகள். இந்தியா என்றாலே இப்படித்தான் என்று ஒரு காட்சி விரிந்து அது க்ளீஷே ஆகும் அளவிற்கு இப்படிப்பட்ட கதைகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. எவ்வளவோ கதை தளங்கள் இருக்கையில் இப்படி ஒன்றின் பின்னே ஓடி வருவதின் ரகசியம் எனக்கு இது வரையில் புரியவில்லை.

இப்படி இல்லாமல் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருந்த கதைகளில் நான் விரும்பி ரசித்து படித்தது ஒரு கதை வரிசையை. அதைப்பற்றி விரைவில் பதிவிடுகிறேன்

அது வரையில் இந்த கதையை பற்றி சற்று கவனிப்போம். சென்ற ஆண்டு டிஸ்னி மூலம் திரைக்கு வந்த ஜான் கார்ட்டர் திரைப்படம் நினைவிருக்கிறதா? டார்ஜான் கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் அவர்களின் கதையான இது நூறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் திரைக்கு வந்தது. ஒரு பூலோகவாசி திடீரென்று அயல்கிரகத்திற்கு வந்தடைகிறான். அந்த உலகமே அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறது. திடீரென்று அவன் வேட்டையாடப் படுகிறான். தப்பிக்கும்போது நண்பர்கள் உருவாகிறார்கள், பின்னர் அந்த கிரகத்தில் நடக்கும் உள்நாட்டு அரசியலில் நுழைகிறான்.

இப்போது நமது செய்தியில் இருக்கும் காமிக்ஸ் பற்றிய செய்தியை பார்ப்போம். D.I. காமிக்ஸ் (Digitally Inspired Comics) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நிறுவனம் சுராஜ் குமாரால் இயக்கப்படுகிறது. இவர்களின் முதல் வெளியீடாக "அயல் கிரகத்தில் ராஜா - Alien Raja" என்ற காமிக்ஸ் கதையை ஓவியர் விஜயன் அவர்களின் துணையுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நம்முடைய இந்திய ராஜா ஒருவர் (ராஜா என்றாலே அது புராதான காலம்தானே?) அயல் கிரகத்தில் நிகழ்த்தும் சாகசங்களே இந்த கதையின் மையகருவாக  அமைக்கப்பட்டு இருப்பது இதன் ஸ்பெஷல். இந்த ஆண்டின் இறுதியில் மும்பையில் நடைபெறவிருக்கும் காமிக் கானில் இந்த கதையை புத்தக வடிவில் வெளியிட உள்ளார்கள்.

Deccan Chronicle Chennai Chronicle Saturay 10th Aug 2013  DI Comics

பேட் மேன் & ராபின் - என்ன கொடுமை சார் இது? ஏற்கனவே டின்டின் பற்றி இப்படி ஒரு தகவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கிளம்பியது இந்த தளத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அதைப்போலவே கிளப்பப்பட்டுள்ளது ஒரு புதிய கதை - பேட் மேன் & ராபின் இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாம்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ரிட்டையர் ஆன அனைத்து கிரிக்கெட் விளையாட்டாளர்களும் தங்களது புத்தகம் விற்பனை ஆக சச்சின் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் எதையாவது எழுதுவது என்பதை ஒழுக்க நெறியாகவே கடைப்பிடித்து வரும் இந்த வேளையில், சூப்பர் ஹீரோக்களை பற்றிய ஒரு புத்தகம் எழுதும்போது என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்து செய்தது போல நடந்துள்ளது இந்த விஷயம்.

மார்க்கோ மேன்கசொலா (பெயரிலேயே மேன் இருப்பதை கவனியுங்கள்) என்கிற பத்தி எழுத்தாளர் (சொல்லாடல் உபயோகம் - நன்றி பேயோன்) தன்னுடைய புத்தக விற்பனை சூடுபிடிக்க இப்படி ஒரு விஷயத்தை கிளப்பியுள்ளார். மார்க்கோ தன்னுடைய சூப்பர் ஹீரோக்களின் காதல் (காம?) வாழ்க்கை என்கிற புத்தகம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அதைப்பற்றி ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயம் கிளம்பினால் ஒழிய அந்த புத்தகத்தை சீண்டுவாரில்லை என்பதால் இப்படி எழுதி இருக்கிறார் (என்பது என் எண்ணம்).

Deccan Chronicle Chennai Chronicle Wednesday 7th Aug 2013  Batman and Robin

ஸ்டார் காமிக்ஸ் - தின மலர் புத்தக விமர்சனம்: ஸ்டார் காமிக்ஸ் இதழ் வெளியீடு சென்னையில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. அதனைப்பற்றிய செய்திகள் தினமலர், தி இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினசரி  போன்ற காலை நாளிதழ்களிலும், ஜெயா டிவி, ஜெயா செய்திகள் போன்ற ஊடகங்களிலும் இடம்பெற்றது. குமுதம் (அ) குங்குமம் மற்றும் தி சன்டே இண்டியன் ஆகிய வாரந்திர இதழ்களிலும் வெளியானது. நண்பர் சுந்தர புத்தன் அவர்கள் அட்டகாசமான ஒரு கட்டுரையை அப்போதுதான் எழுதி எனக்கு அறிமுகம் ஆனார். இப்போது அந்த கட்டுரைகளை எல்லாம் தேடிக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 முறை மடிக்கணினி மாற்றியதால் பல போட்டோக்கள், ஸ்கான்கள் எங்கே இருக்கின்றன என்பதே தெரியாமல் இருக்கிறது. நண்பர்கள் யாரிடமாவது இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

ஸ்டார் காமிக்ஸின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நண்பரும் எழுத்தாளருமான திரு எஸ் ரா அவர்கள் இதனைப்பற்றி ஒரு சிறு குறிப்பாக தன்னுடைய கட்டுரை ஒன்றில் போட்டோவுடன் குறிப்பிட்டு இருந்தார் (7ஆவது பத்தி). இதோ அதற்க்கான லிங்க்: http://www.sramakrishnan.com/?p=522

Star Comics DinaMalar 25122007

பின் குறிப்பு: இந்த ஸ்டார் காமிக்ஸ் இப்போதும் கூட (சில இதழ்கள் மட்டுமே) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக கடலில் விற்பனைக்கு கிடைக்கின்றது. தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளவும்.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

Monday, July 29, 2013

39 அலிபாபா & முஸ்தஃபா - மினி லயனின் டாப் காமெடி கதாநாயகர்கள்

டியர் காமிரேட்ஸ்,

இந்த பதிவு எத்துனை முறை எடிட் செய்யப்பட்டது, எத்துனை முறை ஒத்திவைக்கப்பட்டது என்பதற்கு என்னிடம் கணக்கே இல்லை. முதன் முதலில் 2009ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பின்னர் நண்பர் பின்னோக்கியின் வேண்டுகோளுக்கிணங்க 2010ம் ஆண்டு கிட்டத்தட்ட பதிவேறும் நிலைக்கே வந்து பல காரணங்களால் பதிவிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

அதன் பின்னர் இந்த ஆண்டு மறுபடியும் ஏப்ரல் மே மாதங்களில் பரணில் இருந்து தூசு தட்டி பதிவை ஒப்பேற்றி அப்லோட் செய்யும்போது வேறு சில காரணங்களால் பதிவிடப்படாமல் விடப்பட்டது. இப்படியாக சரித்திர (தரித்திர) புகழ் பெற்ற இந்த பதிவு வலையேறும் அற்புத நாள் இந்நாளே என்பதில் மிக்க மகிழ்ச்சி. 

சமீப காலமாக எடிட்டர் லக்கி லுக், சிக் பில், கேப்டன் பிரின்ஸ் என்று பழைய ஹீரோக்கள் பலரின் அற்புதமான பல கதைகளை முழு வண்ணத்தில் பெரிய சைஸ் புத்தகங்களில் ரீப்ரின்ட் செய்து வருவதை அனைவருமே அறிவீர்கள். இந்த வரிசையில் இன்னமும் சில கதை வரிசைகளை சேர்க்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, அந்த கருத்திற்கு வலுவூட்டும் வகையில் சில பல பதிவுகளை ரீப்ரின்ட் வரிசையில் இட எண்ணி உள்ளேன். அந்த வரிசையில் முதல் பதிவு அலிபாபா மற்றும் முஸ்தபாவின் சாகசங்கள் அடங்கிய தொடரே.

அலிபாபா முஸ்தபா இருவரும் ஆதரவற்ற நாடோடி சகோதரர்கள். ஏதாவது செய்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வியாபாரிகள். அவர்கள் வியாபாரம் செய்வது எதை என்று மட்டும் கேட்க வேண்டாம். எதையும் எல்லாவற்றையும் விற்பனை செய்யும் திறன் (?!?!?!) கொண்டவர்கள் நமது ஹீரோக்கள். மனதில் நேர்மையும், எண்ணத்தில் அடுத்தவர்களின் நலனையும் கொண்ட இவர்களின் இணையாக நமது சிக்பில் கதைகளில் வரும் உதவி ஷெரிப் கிட் ஆர்டினை சொல்லலாம். கிட்டத்தட்ட அதே மாதிரி கதாபாத்திரம் தான் இவர்கள் இருவரும்.

அரேபிய கதைகளை பகடி செய்யும் ஐரோப்பிய கதாசிரியர்களைப்போலவே தான் இந்த கதையின் போக்கும் அமைந்து இருக்கும். பாக்தாத் நகரை தாக்பாத் என்று உல்டா செய்வதில் ஆரம்பித்து பல விஷயங்களில் சுதந்திரத்தை கையாண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த கதையின் பின்புல அரசியலை பிறிதொரு நாளில் விவாதிப்போம். இப்போதைக்கு கதையும் கதை மாந்தர்களுமே நமக்கு முக்கியம்.Genie Profile Karundhel Profile

மொத்தம் மூன்று புத்தகங்களில் நான்கு கதைகளில் மட்டுமே வந்துள்ள இந்த சகோதரர்களின் கதைகளில் ஓரளவுக்காவது ரெகுலர் ஆக வரும் கதாபாத்திரங்கள் இவர்கள் இருவர் மாத்திரமே. ஆகையால் இவர்கள் இருவரைத்தாண்டி வேறு எந்த முக்கிய கதாபாத்திரங்கள் இல்லை எனினும் இரண்டு கதை மாந்தர்கள் Stand-Out ஆக தெரிகின்றனர்.

ஒருவர்: அலாவுதீனின் அற்புத விளக்கில் இருந்த பூதம். இப்போது வயதாகிவிட்ட நிலையில், சர்க்கரை வியாதி,நியாபக மறதி, முட்டி வலி இருதய பலவீனம், குடலில் கோளாறு, கண்டிப்பாக மதிய நேர தூக்கம் அவசியம், குடி போதை என்று கலந்து கட்டி அடிக்கும் ஒரு அசாதாரண பூதமே கிப்கிப். முதல் கதையின் நாயகனே இந்த பூதம் தான்.

முதல் கதையின் நாயகன் கிப் கிப் எனில் எதிர் நாயகன் ஆக வருவது நம்ம கருந்தேள் பிரபு. இல்லையில்லை, இவர் நமது காமிரேட் கருந்தேள் ராஜேஷ் இல்லை.இவர் ஒரு கொள்ளையர். இவரது ஃப்ளாஷ்பேக் மற்றும் இவரது முடிவு இரண்டுமே சுவாரஸ்யமானது. இவர் மாத்திரமே இந்த கதை வரிசையில் இரண்டு கதைகளில் வருகிறார்.

உலகம் சுற்றும் அலிபாபா: ஜூனியர் லயன் காமிக்ஸின் முதல் இதழாக வந்த சூப்பர் சர்க்கஸ் இதழின் பின் அட்டையில் வந்த விளம்பரம் தான் அலிபாபா முஸ்தபாவை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அந்த பின் அட்டை விளம்பரமும், அலிபாபா முஸ்தபாவின் முதல் சாகசமாகிய உலகம் சுற்றும் அலிபாபாவின் அட்டைப்படமும் ஸ்கான் வடிவில் உங்களின் பார்வைக்கு.

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Advt

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Cover Scan 

அப்போதெல்லாம் மினி லயன் ஒன்றாம் தேதியிலும், ஜூனியர் லயன் பதினைந்தாம் தேதியிலும் விற்பனைக்கு வந்தன.இதைப்போலவே தான் லயனும், திகில் காமிக்சும் 1 & 15ம் தேதிகளில் வந்தன. மாதத்திற்கு நான்கு சிறப்பான புத்தகங்கள் என்பது என்ன மாதிரியான சாதனை என்பதை யோசிக்கையிலேயே மலைப்பாக இருக்கிறது. மேலும் இந்த சாதனையை செய்தது ஒரு டீனேஜர் என்பது இன்னமும் வியக்க வைக்கும் ஒரு விஷயம். புத்தகம் கைவசம் இல்லாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்காக இந்த முதல் பக்க ஸ்கான் + மூலக்கதை புத்தகத்தின் முதல் பக்க ஸ்கான்லேஷன்.

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Cover Story 1st Page

உலகம் சுற்றும் அலிபாபா - கதை சுருக்கம்: எதேச்சையாக ஒரு விளக்கு நமது ஹீரோக்கள் கைவசம் கிடைக்க அதனை துடைக்கும் போது அதில் இருந்து அலாவுதீனின் வயதான பூதம் வெளியே வந்து, நீங்கள்தான் இனிமேல் என்னுடைய முதலாளி, நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவதே என்னுடைய தலையாய பணி என்று சொல்கிறது.

வியந்து போன நமது ஹீரோக்கள், வியாபாரம் செய்ய ஒரு கப்பலை கேட்கின்றனர். சாப்பாட்டு பிரியனான முஸ்தபா "நிறைய பதார்த்தங்களுடன் கூடிய" ஒரு கப்பலை கேட்க, பூதமோ ஆழ்கடலில் நிறைய செடி கொடிகளுடன் மூழ்கி இருந்த ஒரு பழைய கப்பலை தருவிக்கிறது. அந்த கப்பலை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு கொள்ளைக்கும்பல் தங்களது உளவாளி ஒருவனை அந்த கப்பலில் நமது ஹீரோக்களுடன் அனுப்ப, அவனது பாடாவதி சமையலை சகித்துக்கொள்ளும் அலிபாபா, சகிக்க முடியாத அளவிற்கு இருக்கும் சில ரகசியங்களை தெரிந்து கொள்ளும்போது அறிமுகம் ஆகிறார் எதிர் நாயகன் கருந்தேள் (எ) அமீன் பிரபு..

  • அந்த ஃப்ளாஷ் பேக் என்ன?
  • அந்த கப்பலில் இருக்கும் ரகசியம் என்ன?
  • சிறைபட்ட நமது ஹீரோக்கள் கதி என்ன?
  • பூதம் இந்த நேரத்தில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது?

கடைசி கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்லி விடுகிறேன் - குடி போதையில் உளறி அட்டகாசம் செய்த பூதத்தை வெளியே வராதமாறு இறுக்கமாக விளக்கில் அடைத்து விடுகின்றனர் நமது ஹீரோக்கள்.அதற்க்கு பிறகுதான் அவர்கள் கொள்ளையர் கூட்டதால் சிறை பிடிக்கப்படுகின்றனர்.

Junior Lion Comics Issue No 2 Ulagam Sutrum Alibaba Cover Story 1st Page Original

அப்போதைய ஜூனியர் லயன் காமிக்ஸ் இதழ்களில் தொடர்ச்சியாக வாசகர் கடிதம் இடம் பெறாததால் இந்த இதழுக்கு என்ன மாதிரியான வரவேற்ப்பு கிடைத்தது என்பதை துல்லியமாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த கதையை புதிய இதழாக கடைகளில் வாங்கிய "அங்கிள்" காமிரேட்டுகள் சிலரிடம் கேட்டபோது, இந்த புத்தகமும் முதல் இதழான (லக்கி லுக் சாகசம்) சூப்பர் சர்க்கஸ் போலவே ஒரு மெகா ஹிட் இதழ் தான் என்று கற்பூரம் ஏற்றாத குறையாக சொன்னார்கள். இந்த இதழின் வெற்றி எப்படிப்பட்டது என்பதை எடிட்டர்தான் கூற வேண்டும்.

ஏற்கனவே போன பத்தியில் சொன்னது போல ஆரம்பகால ஜூனியர் லயன் இதழ்களில் இடப்பற்றாக்குறை என்பது மிகையாகவே இருந்தது. கதைகள் சற்று பெரியதாக இருந்தால் வாசகர் கடிதம் மட்டுமில்லாமல் அடுத்த இதழுக்கான விளம்பரம் கூட மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே வெளிவந்தது. அலிபாபா முஸ்தபா தொடரில் இரண்டாவது கதைக்கான விளம்பரம் வெறும் வார்த்தைகளாலேயே அலங்கரிக்கப்பட்டு வந்தது. அதுவும் மற்றும் புத்தகத்தின் அட்டையும் உங்களின் பார்வைக்கு:

 சொர்கத்தின் சாவி: இந்த சொர்கத்தின் சாவி வெளிவந்த இதழ் தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே ஒரு மைல் கல். ஆமாம், முதன் முறையாக இரண்டு இதழ்கள் இனைந்து ஒரே இதழாக வெளிவந்த முதல் தமிழ் காமிக்ஸ் மாத இதழ் இது தான். இதனைப்பற்றிய முழு நீள பதிவு (அற்புதமான ஸ்கான்களுடன், பல வெளிநாட்டு காமிக்ஸ் இதழ்கள் இதுபோல இணைந்த வரலாற்று செய்திகளுடன்) இங்கே க்ளிக் செய்து படிக்கவும்

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Advt

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Cover

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஸ்டார் ப்ளஸ் (பின்னர் ஸ்டார் வேர்ல்ட்) சேனலில் வெளிவந்த பிரம்மாதமான சயன்ஸ் பிக்ஷன் தொடர் The X Files. அப்போது நான் இந்த தொடரை மிகவும் விரும்பி பார்ப்பேன் (இதைப்போன்று மிகவும் ரசித்த தொடர்கள் The Dark Skies (AXN), 1st Wave (Star World), இதர இதர). இந்த தொடரின் மூன்றாவது சீசனில் பதினொன்றாவது பாகத்தில் (Revelations) தொடரின் முக்கிய கதாபாத்திரமாகிய Dana Scully ஒரு வசனத்தை சொல்வார் "Iam Afraid that The God is Speaking, But No One is Listening”.

Believe it or Not, இந்த வசனத்தை ஆரம்பமாக கொண்டதே இந்த சொர்கத்தின் சாவி கதை.

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Story 1st Page

சொர்கத்தின் சாவி - கதை சுருக்கம்: தாக்பாத் நகரில் சூறாவளிக்காற்று வீசிய ஒரு நாளில் ஒரு வயோதிக பிச்சைக்காரர் ஒருவர் ஒதுங்க இடம் தேடுவதில் கதை துவங்குகிறது. அவருக்கு யாருமே புகலிடம் தராத சூழ்நிலையில் நம்முடைய அலிபாபாவும் முஸ்தபாவும் அவருக்கு தங்க இடம் அளிக்கின்றனர். அப்போது அந்த முதியவர் அவர்கள் இருவருக்கும் ஒரு கதையை சொல்கிறார்.

அந்த கதை என்னவெனில், கடவுள் ஒரு நாள் பூமிக்கு வருகிறார்.  நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசை அளிப்பதே அவருடைய பயணத்தின் நோக்கம். அந்த சிறப்பு பரிசு ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பெட்டியில்தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ரகசியம் கடவுளால் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த பெட்டியை பெறுபவர்கள் அந்த ரகசியத்தை படித்து தெரிந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால் மாறுவேடத்தில் இருக்கும் கடவுளை கல்நெஞ்சு கொண்ட மனிதர்களால் அடையாளம் காணவே இயலவில்லை. பலராலும் மறுக்கப்படுகிறார் கடவுள். இப்படியாக கடவுள் கதை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நம்முடைய கதாநாயகர்கள் இருவரும் கதையை கேட்டுக்கொண்டே தூங்கி விடுகின்றனர்.

மறுநாள் காலையில் சகோதரர்கள் கண்விழிக்கும்போது தேவதூதர்கள் புடைசூழ அந்த முதியவர் பறக்கும் அன்னங்கள் கொண்ட ரதத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறார். அப்படி அவர் செல்லும்போது கதையில் அவர் குறிப்பிட்ட அந்த பெட்டியை அவர்களுக்கு என்று விட்டு செல்கிறார்.

  • அப்படி எனில் அவர்களிடம் புகலிடம் கேட்டு வந்தது கடவுள்தானா?
  • அவர் சொன்ன கதை உண்மையா?
  • சொர்கத்தின் சாவி என்று சொல்லப்படும் அந்த மகிழ்ச்சியின் ரகசியம் அடங்கிய பெட்டியின் சாவி எங்கே இருக்கிறது?
  • அந்த சாவியை எப்படி தேடுவது?
  • சாவியே இல்லாத அந்த பெட்டியை திறப்பது எப்படி?
  • அந்த பெட்டியை அடைய துடிக்கும் மற்றவர்களின் முயற்சியை நம்முடைய சகோதரர்கள் எப்படி தடுக்கிறார்கள்?
  • உண்மையிலேயே மகிழ்சியான வாழ்வின் ரகசியம் என்ன?

கதையின் முடிவில் உண்மையிலேயே அந்த மகிழ்ச்சியின் ரகசியத்தை நம்மாலும் அறிய முடிகிறது. கதையில் பலமே பிரம்மாதமான சித்திரங்களும், அற்புதமான வசனங்களும் தான். அதுவும் தமிழில் படிக்கையில் இன்னமும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சிறப்பான கதை சொர்கத்தின் சாவி.

Junior Lion Comics Issue No 5 Sorgathin Saavi Story 1st Page Original 

இந்த கதையையுமே நான் புதியதாக கடையில் வாங்கவில்லை என்பதால் வாசகர்களின் வரவேற்ப்பு எப்படி இருந்தது என்பதை நேரிடையாக சொல்லவியலாது. அந்த கால காமிரேட்டுகள் இந்த கதையைத்தான் அலிபாபா முஸ்தபா கதைதொடரில் ஆகச்சிறந்த கதை என்று சொல்கிறார்கள். இந்த கதையை மறுபடியும் படிக்க எடிட்டரின் ரீப்ரின்ட் ரிக்வெஸ்ட் கேட்பதைதவிர வேறு வழியே இல்லை. நமக்கு மட்டுமில்லை, நம்முடைய குட்டீஸ்களுக்கும் இந்த தொடர் ஒரு மிகச்சிறந்த Bed Time Reading அனுபவமாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க இயலாது.

வெள்ளைப் பிசாசு: அடுத்து மூன்றாவதாக வெளிவந்த அலிபாபா முஸ்தபா கதை - நெடுநாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்த வெள்ளைப்பிசாசு கதையே. இந்த முதல் மூன்று கதைகளின் சிறப்பு என்னவெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைசில்,அமைப்பில் வெளிவந்தவை. ஆனால் இந்த கதையோ முழு வண்ணத்தில் இல்லாமல் அப்போதைய ட்ரென்ட் ஆகிய இருவண்ணத்தில் வெளிவந்தது. அதன் விளம்பரமும் அட்டைப்படமும்:

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu Advt

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu

முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட படி வந்து இருந்தால் இதுதான் மினி லயன் கதைகளில் பத்தாவது புத்தகம். ஆனால் அந்த கால சாபத்தின்படி இது திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதற்க்கு பதிலாக திடீரென்று "ஒரு கள்ளப் பருந்தின் கதை" பத்தாவது இதழாக வெளிவந்தது. அந்த கதையையை பற்றிய எடிட்டரின் பதிவு இங்கே . இதற்க்கு பிறகு பதிமூன்றாவது இதழாக வெளிவந்தது நம்முடைய வெள்ளைப்பிசாசு. அதன் முதல் பக்கம் வழக்கமான அலிபாபா கதைகளின் முழுவண்ணம் போலில்லாமல் இருவண்ணத்தில் வெளிவந்தது.

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu Story 1st Page

வெள்ளைப்பிசாசு - கதை சுருக்கம்: தாக்பாத் நகரில் தொடர்ந்து பல திருட்டு நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது. அந்த திருட்டுகளின் அசாதாரண பின்னணி என்னவெனில் மனிதர்கள் யாருமே நுழையமுடியாத பெட்டகத்தில் இருக்கும் பொக்கிஷங்கள் கூட கொள்ளையடிப்படுவதே.

இந்த கொள்ளைகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அந்த நாட்டு தளபதி தான் (சத்தியமாக நம்ம இளைய தளபதி அணில் இல்லீங்கோவ், இவரு நிஜம்மாவே அந்த ஊரு தளபதி தான்). அந்த நாட்டு சுல்தான் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தளபதியாரை கடிந்து கொள்கிறார். மிகவும் கொடூரமான அந்த தளபதி கண்டிப்பாக இந்த திருட்டுகளின் பின்னணியில் இருக்கும் வெள்ளைப் பிசாசை விரைவில் பிடிப்பதாக சபதம் இடுகிறார்.

நடக்கும் விஷயங்களுக்கு எல்லாம் சிகரமாக வெள்ளைப் பிசாசு அந்த நாட்டு சுல்தானின் செங்கோலை திருடுவதாக சவால் விடுகிறார். வெள்ளைப்பிசாசின் சவாலை ஏற்றுக்கொள்ளும் தளபதி அதற்காக முழு முன்னேற்பாடுகளுடன் படைபலத்துடன் செங்கோலை காத்துக்கொண்டு இருக்கிறார்.

Mini Lion Comics Issue No 12 Vellai Pisasu Story 1st Page Original

  • வெள்ளைப்பிசாசு சொன்னபடி சவாலில் ஜெயிக்கிறாரா?
  • தவறாக கைது செய்யப்படும் நமது ஹீரோக்களின் கதி என்ன?
  • வெள்ளைப்பிசாசு என்பது யார்?
  • அவர் எதற்க்காக கொள்ளையடிக்கிறார்? அவரது ஃப்ளாஷ்பேக் கதை என்ன?
  • தளபதியின் கதை என்ன? தளபதிக்கும் வெள்ளைப்பிசாசுக்கும் என்ன தொடர்பு?

என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அற்புதமான சித்திரங்களுடன் அமைந்துள்ள இந்த கதை முடிகிறது. யூரோப்பிய கதைகளின் பாணியில் இதுவரையில் வந்த இரண்டு அலிபாபா கதைகளுமே முழுநீள கதைகளாக தனித்தனி புத்தகத்தில் 48 பக்கங்களில் வெளிவந்தது. ஆனால் இந்த கதையோ, இரண்டு சிறுகதைகளாக ஒரே புத்தகத்தில் வெளிவந்தது. அப்படி வெளிவந்த இரண்டாவது கதைதான் பின்னாளில் மினி லயன் காமிக்ஸில் வெளிவந்த மாயத்தீவில் அலிபாபா அந்த  விளம்பரமும் அட்டைப்படமும் ஸ்கான் வடிவில் உங்களின் பார்வைக்கு.

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba Advt

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba

 

 

மாயதீவில் அலிபாபா: விடுமுறையை கழிக்க ஒரு டிராவல் ஏஜென்சியை நாடுகின்றனர் அலிபாபாவும் முஸ்தபாவும். மட்டாபிஷ்ச் என்னும் அந்த நபரால் நடத்தப்படும் அந்த பயண ஏற்பாடுகள் நம்பவே இயலாத அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் இருப்பதாக காட்சி அளித்ததால் நண்பர்கள் இருவருமே உடனடியாக ஒப்புக்கொண்டு கட்டணத்தை செலுத்திவிடுகின்றனர். ஆயிரம் தினார்களுக்கு 15 நாட்கள் எழில் கொஞ்சும் மெகல்ஃபட்ரா தீவில் விடுமுறையை கழிக்க கிளம்பும் நமது ஹீரோக்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் சுவையான சம்பவங்களே இந்த கதையின் ஜீவநாடி.

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba Story 1st Page 1

மாயதீவில் அலிபாபா - கதை சுருக்கம்: ஆனால் அந்த தீவில் அவர்களுக்கு காத்திருக்கும் விஷயங்கள் பற்றி தெரிந்து இருந்தால் அவர்கள் பயண குறிப்பீட்டில் (மிகவும்) சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்த அனைத்து கன்டிஷன்ஸ் அப்ளை குறிப்புகளையும் பூதக்கண்ணாடி வைத்தாவது படித்துவிட்டு வந்து இருப்பார்கள். பயண ஏற்பாட்டாளரின் இந்த நூதன மோசடியை தவிர்த்து புதியதொரு அசம்பாவிதமும் அந்த தீவில் தலைதூக்குகிறது.

மன அளவில் நொந்து போய் இருக்கும் அந்த பயணிகளுக்கு புதியதாக மற்றுமொரு பிரச்சினை - பயணிகள் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர். பயணிகளின் கடத்தல் சம்பவம் அந்த சிறிய தீவில் மேலும் பீதியை கிளப்புகிறது.

  • பயணிகள் மர்மமான முறையில் காணாமல் போவதின் பின்னணி என்ன?
  • பயணிகளை ஏதேனும் மர்ம கும்பல் கடத்துகிறதா?
  • கடத்தலின் பின்னணி என்ன?
  • சகோதரர்களில் ஒருவரும் கடத்தப்பட்டபின்பு நடக்கும் சங்கதிகள் யாவை?
  • மர்ம கும்பலின் தலைவன் யார்?
  • இந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டதர்க்கும் ஞாயிற்று கிழமை ஸ்கூல் லீவு விடுவதற்கும் இருக்கும் பிணைப்பு என்ன?

என்று ஒரு நேர்க்கோட்டில் பயணம் செய்யும் அம்புபோல கதை விறுவிறுப்புடனும், நகைச்சுவையுடனும் நகர்கின்றது. இந்த கதைதான் அலிபாபா முஸ்தபா கதை வரிசையில் கடைசி கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Mini Lion Comics Issue No 16 Maayatheevil Alibaba Story 1st Page 1 original

இப்போதைய லயன் / முத்து காமிக்ஸ் சைசில் வெளியிட்டு நம்மைப் போன்றவர்களையும், வயதில் சிறியவர்களையும் ஒருங்கே ஈர்க்கும் ஒரு சில கதை வரிசைகளில் இதுவும் ஒன்று என்பதால் இதனை இப்போது ரீப்ரின்ட் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.

  • 100+ பக்கங்கள்.
  • (32 பக்கம் X 2 கதைகள்) + (16 பக்கம் X 2 கதைகள்) = 96 பக்கங்கள்.
  • நூறு ருபாய் ஸ்பெஷல் வெளியீடு.
  • எடிட்டரின் பழைய நினைவுகள் (இந்த கதைகளை எப்படி தேர்வு செய்தார்? Etc)
  • இந்த இதழ்களின் பழைய விளம்பரங்கள், அட்டைப்படங்கள், வாசகர் கடிதங்கள்
  • கதாசிரியர், ஓவியர் குறித்த சிறுகுறிப்புகள்

என்று ஒரு அட்டகாசமான பேக்கேஜ் கண்முன்னே தெரிகின்றது.இந்த கதையை ஏற்கனவே படித்த புண்ணியாத்மாக்கள் கண்டிப்பாக ரீப்ரின்ட் ரெக்வெஸ்ட் ஒன்றினை இப்போதே எடிட்டரிடம் ஆரம்பிக்கலாமே?

P.S.: காமிரேட்டுகள் ஹாஜா இஸ்மாயில் மற்றும் முத்து விசிறி அவர்களின் நல்லாசியுடன் இதோ அந்த காலத்தில் நமது இதழ்கள் விற்பனை ஆகிக்கொண்டு இருந்த சமயத்து கடைகளின் விளம்பர போஸ்டர்கள்.

Maaya Theevil Alibaba sales poster Ulagam Sutrum Alibaba sales poster  இந்த "விற்பனையாகிறது" போஸ்டர்கள் அந்த காலத்தில் மிகவும் ரெகுலர் ஆக அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. அப்படி அனுப்பப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்துள்ள காமிரேட் எனது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையே.

இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

பின்குறிப்பு: இந்த பதிவின் முதல் படத்தில் Yeah, That's We என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது நெருங்கிய நண்பர் ஒருவருக்காக. ஆகையால் அதனை சுட்டிக்காட்ட வேண்டாமே?

Related Posts with Thumbnails