டியர் காமிரேட்ஸ்,
இந்த பதிவு எத்துனை முறை எடிட் செய்யப்பட்டது, எத்துனை முறை ஒத்திவைக்கப்பட்டது என்பதற்கு என்னிடம் கணக்கே இல்லை. முதன் முதலில் 2009ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பின்னர் நண்பர் பின்னோக்கியின் வேண்டுகோளுக்கிணங்க 2010ம் ஆண்டு கிட்டத்தட்ட பதிவேறும் நிலைக்கே வந்து பல காரணங்களால் பதிவிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்னர் இந்த ஆண்டு மறுபடியும் ஏப்ரல் மே மாதங்களில் பரணில் இருந்து தூசு தட்டி பதிவை ஒப்பேற்றி அப்லோட் செய்யும்போது வேறு சில காரணங்களால் பதிவிடப்படாமல் விடப்பட்டது. இப்படியாக சரித்திர (தரித்திர) புகழ் பெற்ற இந்த பதிவு வலையேறும் அற்புத நாள் இந்நாளே என்பதில் மிக்க மகிழ்ச்சி.
சமீப காலமாக எடிட்டர் லக்கி லுக், சிக் பில், கேப்டன் பிரின்ஸ் என்று பழைய ஹீரோக்கள் பலரின் அற்புதமான பல கதைகளை முழு வண்ணத்தில் பெரிய சைஸ் புத்தகங்களில் ரீப்ரின்ட் செய்து வருவதை அனைவருமே அறிவீர்கள். இந்த வரிசையில் இன்னமும் சில கதை வரிசைகளை சேர்க்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து, அந்த கருத்திற்கு வலுவூட்டும் வகையில் சில பல பதிவுகளை ரீப்ரின்ட் வரிசையில் இட எண்ணி உள்ளேன். அந்த வரிசையில் முதல் பதிவு அலிபாபா மற்றும் முஸ்தபாவின் சாகசங்கள் அடங்கிய தொடரே.
அலிபாபா முஸ்தபா இருவரும் ஆதரவற்ற நாடோடி சகோதரர்கள். ஏதாவது செய்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வியாபாரிகள். அவர்கள் வியாபாரம் செய்வது எதை என்று மட்டும் கேட்க வேண்டாம். எதையும் எல்லாவற்றையும் விற்பனை செய்யும் திறன் (?!?!?!) கொண்டவர்கள் நமது ஹீரோக்கள். மனதில் நேர்மையும், எண்ணத்தில் அடுத்தவர்களின் நலனையும் கொண்ட இவர்களின் இணையாக நமது சிக்பில் கதைகளில் வரும் உதவி ஷெரிப் கிட் ஆர்டினை சொல்லலாம். கிட்டத்தட்ட அதே மாதிரி கதாபாத்திரம் தான் இவர்கள் இருவரும்.
அரேபிய கதைகளை பகடி செய்யும் ஐரோப்பிய கதாசிரியர்களைப்போலவே தான் இந்த கதையின் போக்கும் அமைந்து இருக்கும். பாக்தாத் நகரை தாக்பாத் என்று உல்டா செய்வதில் ஆரம்பித்து பல விஷயங்களில் சுதந்திரத்தை கையாண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த கதையின் பின்புல அரசியலை பிறிதொரு நாளில் விவாதிப்போம். இப்போதைக்கு கதையும் கதை மாந்தர்களுமே நமக்கு முக்கியம்.
மொத்தம் மூன்று புத்தகங்களில் நான்கு கதைகளில் மட்டுமே வந்துள்ள இந்த சகோதரர்களின் கதைகளில் ஓரளவுக்காவது ரெகுலர் ஆக வரும் கதாபாத்திரங்கள் இவர்கள் இருவர் மாத்திரமே. ஆகையால் இவர்கள் இருவரைத்தாண்டி வேறு எந்த முக்கிய கதாபாத்திரங்கள் இல்லை எனினும் இரண்டு கதை மாந்தர்கள் Stand-Out ஆக தெரிகின்றனர்.
ஒருவர்: அலாவுதீனின் அற்புத விளக்கில் இருந்த பூதம். இப்போது வயதாகிவிட்ட நிலையில், சர்க்கரை வியாதி,நியாபக மறதி, முட்டி வலி இருதய பலவீனம், குடலில் கோளாறு, கண்டிப்பாக மதிய நேர தூக்கம் அவசியம், குடி போதை என்று கலந்து கட்டி அடிக்கும் ஒரு அசாதாரண பூதமே கிப்கிப். முதல் கதையின் நாயகனே இந்த பூதம் தான்.
முதல் கதையின் நாயகன் கிப் கிப் எனில் எதிர் நாயகன் ஆக வருவது நம்ம கருந்தேள் பிரபு. இல்லையில்லை, இவர் நமது காமிரேட் கருந்தேள் ராஜேஷ் இல்லை.இவர் ஒரு கொள்ளையர். இவரது ஃப்ளாஷ்பேக் மற்றும் இவரது முடிவு இரண்டுமே சுவாரஸ்யமானது. இவர் மாத்திரமே இந்த கதை வரிசையில் இரண்டு கதைகளில் வருகிறார்.
உலகம் சுற்றும் அலிபாபா: ஜூனியர் லயன் காமிக்ஸின் முதல் இதழாக வந்த சூப்பர் சர்க்கஸ் இதழின் பின் அட்டையில் வந்த விளம்பரம் தான் அலிபாபா முஸ்தபாவை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அந்த பின் அட்டை விளம்பரமும், அலிபாபா முஸ்தபாவின் முதல் சாகசமாகிய உலகம் சுற்றும் அலிபாபாவின் அட்டைப்படமும் ஸ்கான் வடிவில் உங்களின் பார்வைக்கு.
அப்போதெல்லாம் மினி லயன் ஒன்றாம் தேதியிலும், ஜூனியர் லயன் பதினைந்தாம் தேதியிலும் விற்பனைக்கு வந்தன.இதைப்போலவே தான் லயனும், திகில் காமிக்சும் 1 & 15ம் தேதிகளில் வந்தன. மாதத்திற்கு நான்கு சிறப்பான புத்தகங்கள் என்பது என்ன மாதிரியான சாதனை என்பதை யோசிக்கையிலேயே மலைப்பாக இருக்கிறது. மேலும் இந்த சாதனையை செய்தது ஒரு டீனேஜர் என்பது இன்னமும் வியக்க வைக்கும் ஒரு விஷயம். புத்தகம் கைவசம் இல்லாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்காக இந்த முதல் பக்க ஸ்கான் + மூலக்கதை புத்தகத்தின் முதல் பக்க ஸ்கான்லேஷன்.
உலகம் சுற்றும் அலிபாபா - கதை சுருக்கம்: எதேச்சையாக ஒரு விளக்கு நமது ஹீரோக்கள் கைவசம் கிடைக்க அதனை துடைக்கும் போது அதில் இருந்து அலாவுதீனின் வயதான பூதம் வெளியே வந்து, நீங்கள்தான் இனிமேல் என்னுடைய முதலாளி, நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவதே என்னுடைய தலையாய பணி என்று சொல்கிறது.
வியந்து போன நமது ஹீரோக்கள், வியாபாரம் செய்ய ஒரு கப்பலை கேட்கின்றனர். சாப்பாட்டு பிரியனான முஸ்தபா "நிறைய பதார்த்தங்களுடன் கூடிய" ஒரு கப்பலை கேட்க, பூதமோ ஆழ்கடலில் நிறைய செடி கொடிகளுடன் மூழ்கி இருந்த ஒரு பழைய கப்பலை தருவிக்கிறது. அந்த கப்பலை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு கொள்ளைக்கும்பல் தங்களது உளவாளி ஒருவனை அந்த கப்பலில் நமது ஹீரோக்களுடன் அனுப்ப, அவனது பாடாவதி சமையலை சகித்துக்கொள்ளும் அலிபாபா, சகிக்க முடியாத அளவிற்கு இருக்கும் சில ரகசியங்களை தெரிந்து கொள்ளும்போது அறிமுகம் ஆகிறார் எதிர் நாயகன் கருந்தேள் (எ) அமீன் பிரபு..
- அந்த ஃப்ளாஷ் பேக் என்ன?
- அந்த கப்பலில் இருக்கும் ரகசியம் என்ன?
- சிறைபட்ட நமது ஹீரோக்கள் கதி என்ன?
- பூதம் இந்த நேரத்தில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது?
கடைசி கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்லி விடுகிறேன் - குடி போதையில் உளறி அட்டகாசம் செய்த பூதத்தை வெளியே வராதமாறு இறுக்கமாக விளக்கில் அடைத்து விடுகின்றனர் நமது ஹீரோக்கள்.அதற்க்கு பிறகுதான் அவர்கள் கொள்ளையர் கூட்டதால் சிறை பிடிக்கப்படுகின்றனர்.
அப்போதைய ஜூனியர் லயன் காமிக்ஸ் இதழ்களில் தொடர்ச்சியாக வாசகர் கடிதம் இடம் பெறாததால் இந்த இதழுக்கு என்ன மாதிரியான வரவேற்ப்பு கிடைத்தது என்பதை துல்லியமாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த கதையை புதிய இதழாக கடைகளில் வாங்கிய "அங்கிள்" காமிரேட்டுகள் சிலரிடம் கேட்டபோது, இந்த புத்தகமும் முதல் இதழான (லக்கி லுக் சாகசம்) சூப்பர் சர்க்கஸ் போலவே ஒரு மெகா ஹிட் இதழ் தான் என்று கற்பூரம் ஏற்றாத குறையாக சொன்னார்கள். இந்த இதழின் வெற்றி எப்படிப்பட்டது என்பதை எடிட்டர்தான் கூற வேண்டும்.
ஏற்கனவே போன பத்தியில் சொன்னது போல ஆரம்பகால ஜூனியர் லயன் இதழ்களில் இடப்பற்றாக்குறை என்பது மிகையாகவே இருந்தது. கதைகள் சற்று பெரியதாக இருந்தால் வாசகர் கடிதம் மட்டுமில்லாமல் அடுத்த இதழுக்கான விளம்பரம் கூட மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே வெளிவந்தது. அலிபாபா முஸ்தபா தொடரில் இரண்டாவது கதைக்கான விளம்பரம் வெறும் வார்த்தைகளாலேயே அலங்கரிக்கப்பட்டு வந்தது. அதுவும் மற்றும் புத்தகத்தின் அட்டையும் உங்களின் பார்வைக்கு:
சொர்கத்தின் சாவி: இந்த சொர்கத்தின் சாவி வெளிவந்த இதழ் தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே ஒரு மைல் கல். ஆமாம், முதன் முறையாக இரண்டு இதழ்கள் இனைந்து ஒரே இதழாக வெளிவந்த முதல் தமிழ் காமிக்ஸ் மாத இதழ் இது தான். இதனைப்பற்றிய முழு நீள பதிவு (அற்புதமான ஸ்கான்களுடன், பல வெளிநாட்டு காமிக்ஸ் இதழ்கள் இதுபோல இணைந்த வரலாற்று செய்திகளுடன்) இங்கே க்ளிக் செய்து படிக்கவும்
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஸ்டார் ப்ளஸ் (பின்னர் ஸ்டார் வேர்ல்ட்) சேனலில் வெளிவந்த பிரம்மாதமான சயன்ஸ் பிக்ஷன் தொடர் The X Files. அப்போது நான் இந்த தொடரை மிகவும் விரும்பி பார்ப்பேன் (இதைப்போன்று மிகவும் ரசித்த தொடர்கள் The Dark Skies (AXN), 1st Wave (Star World), இதர இதர). இந்த தொடரின் மூன்றாவது சீசனில் பதினொன்றாவது பாகத்தில் (Revelations) தொடரின் முக்கிய கதாபாத்திரமாகிய Dana Scully ஒரு வசனத்தை சொல்வார் "Iam Afraid that The God is Speaking, But No One is Listening”.
Believe it or Not, இந்த வசனத்தை ஆரம்பமாக கொண்டதே இந்த சொர்கத்தின் சாவி கதை.
சொர்கத்தின் சாவி - கதை சுருக்கம்: தாக்பாத் நகரில் சூறாவளிக்காற்று வீசிய ஒரு நாளில் ஒரு வயோதிக பிச்சைக்காரர் ஒருவர் ஒதுங்க இடம் தேடுவதில் கதை துவங்குகிறது. அவருக்கு யாருமே புகலிடம் தராத சூழ்நிலையில் நம்முடைய அலிபாபாவும் முஸ்தபாவும் அவருக்கு தங்க இடம் அளிக்கின்றனர். அப்போது அந்த முதியவர் அவர்கள் இருவருக்கும் ஒரு கதையை சொல்கிறார்.
அந்த கதை என்னவெனில், கடவுள் ஒரு நாள் பூமிக்கு வருகிறார். நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசை அளிப்பதே அவருடைய பயணத்தின் நோக்கம். அந்த சிறப்பு பரிசு ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பெட்டியில்தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ரகசியம் கடவுளால் எழுதப்பட்டு இருக்கிறது. அந்த பெட்டியை பெறுபவர்கள் அந்த ரகசியத்தை படித்து தெரிந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.
ஆனால் மாறுவேடத்தில் இருக்கும் கடவுளை கல்நெஞ்சு கொண்ட மனிதர்களால் அடையாளம் காணவே இயலவில்லை. பலராலும் மறுக்கப்படுகிறார் கடவுள். இப்படியாக கடவுள் கதை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நம்முடைய கதாநாயகர்கள் இருவரும் கதையை கேட்டுக்கொண்டே தூங்கி விடுகின்றனர்.
மறுநாள் காலையில் சகோதரர்கள் கண்விழிக்கும்போது தேவதூதர்கள் புடைசூழ அந்த முதியவர் பறக்கும் அன்னங்கள் கொண்ட ரதத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறார். அப்படி அவர் செல்லும்போது கதையில் அவர் குறிப்பிட்ட அந்த பெட்டியை அவர்களுக்கு என்று விட்டு செல்கிறார்.
- அப்படி எனில் அவர்களிடம் புகலிடம் கேட்டு வந்தது கடவுள்தானா?
- அவர் சொன்ன கதை உண்மையா?
- சொர்கத்தின் சாவி என்று சொல்லப்படும் அந்த மகிழ்ச்சியின் ரகசியம் அடங்கிய பெட்டியின் சாவி எங்கே இருக்கிறது?
- அந்த சாவியை எப்படி தேடுவது?
- சாவியே இல்லாத அந்த பெட்டியை திறப்பது எப்படி?
- அந்த பெட்டியை அடைய துடிக்கும் மற்றவர்களின் முயற்சியை நம்முடைய சகோதரர்கள் எப்படி தடுக்கிறார்கள்?
- உண்மையிலேயே மகிழ்சியான வாழ்வின் ரகசியம் என்ன?
கதையின் முடிவில் உண்மையிலேயே அந்த மகிழ்ச்சியின் ரகசியத்தை நம்மாலும் அறிய முடிகிறது. கதையில் பலமே பிரம்மாதமான சித்திரங்களும், அற்புதமான வசனங்களும் தான். அதுவும் தமிழில் படிக்கையில் இன்னமும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சிறப்பான கதை சொர்கத்தின் சாவி.
இந்த கதையையுமே நான் புதியதாக கடையில் வாங்கவில்லை என்பதால் வாசகர்களின் வரவேற்ப்பு எப்படி இருந்தது என்பதை நேரிடையாக சொல்லவியலாது. அந்த கால காமிரேட்டுகள் இந்த கதையைத்தான் அலிபாபா முஸ்தபா கதைதொடரில் ஆகச்சிறந்த கதை என்று சொல்கிறார்கள். இந்த கதையை மறுபடியும் படிக்க எடிட்டரின் ரீப்ரின்ட் ரிக்வெஸ்ட் கேட்பதைதவிர வேறு வழியே இல்லை. நமக்கு மட்டுமில்லை, நம்முடைய குட்டீஸ்களுக்கும் இந்த தொடர் ஒரு மிகச்சிறந்த Bed Time Reading அனுபவமாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க இயலாது.
வெள்ளைப் பிசாசு: அடுத்து மூன்றாவதாக வெளிவந்த அலிபாபா முஸ்தபா கதை - நெடுநாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்த வெள்ளைப்பிசாசு கதையே. இந்த முதல் மூன்று கதைகளின் சிறப்பு என்னவெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைசில்,அமைப்பில் வெளிவந்தவை. ஆனால் இந்த கதையோ முழு வண்ணத்தில் இல்லாமல் அப்போதைய ட்ரென்ட் ஆகிய இருவண்ணத்தில் வெளிவந்தது. அதன் விளம்பரமும் அட்டைப்படமும்:
முதலில் விளம்பரப்படுத்தப்பட்ட படி வந்து இருந்தால் இதுதான் மினி லயன் கதைகளில் பத்தாவது புத்தகம். ஆனால் அந்த கால சாபத்தின்படி இது திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதற்க்கு பதிலாக திடீரென்று "ஒரு கள்ளப் பருந்தின் கதை" பத்தாவது இதழாக வெளிவந்தது. அந்த கதையையை பற்றிய எடிட்டரின் பதிவு இங்கே . இதற்க்கு பிறகு பதிமூன்றாவது இதழாக வெளிவந்தது நம்முடைய வெள்ளைப்பிசாசு. அதன் முதல் பக்கம் வழக்கமான அலிபாபா கதைகளின் முழுவண்ணம் போலில்லாமல் இருவண்ணத்தில் வெளிவந்தது.
வெள்ளைப்பிசாசு - கதை சுருக்கம்: தாக்பாத் நகரில் தொடர்ந்து பல திருட்டு நடை பெற்றுக்கொண்டே இருக்கிறது. அந்த திருட்டுகளின் அசாதாரண பின்னணி என்னவெனில் மனிதர்கள் யாருமே நுழையமுடியாத பெட்டகத்தில் இருக்கும் பொக்கிஷங்கள் கூட கொள்ளையடிப்படுவதே.
இந்த கொள்ளைகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அந்த நாட்டு தளபதி தான் (சத்தியமாக நம்ம இளைய தளபதி அணில் இல்லீங்கோவ், இவரு நிஜம்மாவே அந்த ஊரு தளபதி தான்). அந்த நாட்டு சுல்தான் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தளபதியாரை கடிந்து கொள்கிறார். மிகவும் கொடூரமான அந்த தளபதி கண்டிப்பாக இந்த திருட்டுகளின் பின்னணியில் இருக்கும் வெள்ளைப் பிசாசை விரைவில் பிடிப்பதாக சபதம் இடுகிறார்.
நடக்கும் விஷயங்களுக்கு எல்லாம் சிகரமாக வெள்ளைப் பிசாசு அந்த நாட்டு சுல்தானின் செங்கோலை திருடுவதாக சவால் விடுகிறார். வெள்ளைப்பிசாசின் சவாலை ஏற்றுக்கொள்ளும் தளபதி அதற்காக முழு முன்னேற்பாடுகளுடன் படைபலத்துடன் செங்கோலை காத்துக்கொண்டு இருக்கிறார்.
- வெள்ளைப்பிசாசு சொன்னபடி சவாலில் ஜெயிக்கிறாரா?
- தவறாக கைது செய்யப்படும் நமது ஹீரோக்களின் கதி என்ன?
- வெள்ளைப்பிசாசு என்பது யார்?
- அவர் எதற்க்காக கொள்ளையடிக்கிறார்? அவரது ஃப்ளாஷ்பேக் கதை என்ன?
- தளபதியின் கதை என்ன? தளபதிக்கும் வெள்ளைப்பிசாசுக்கும் என்ன தொடர்பு?
என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அற்புதமான சித்திரங்களுடன் அமைந்துள்ள இந்த கதை முடிகிறது. யூரோப்பிய கதைகளின் பாணியில் இதுவரையில் வந்த இரண்டு அலிபாபா கதைகளுமே முழுநீள கதைகளாக தனித்தனி புத்தகத்தில் 48 பக்கங்களில் வெளிவந்தது. ஆனால் இந்த கதையோ, இரண்டு சிறுகதைகளாக ஒரே புத்தகத்தில் வெளிவந்தது. அப்படி வெளிவந்த இரண்டாவது கதைதான் பின்னாளில் மினி லயன் காமிக்ஸில் வெளிவந்த மாயத்தீவில் அலிபாபா அந்த விளம்பரமும் அட்டைப்படமும் ஸ்கான் வடிவில் உங்களின் பார்வைக்கு.
மாயதீவில் அலிபாபா: விடுமுறையை கழிக்க ஒரு டிராவல் ஏஜென்சியை நாடுகின்றனர் அலிபாபாவும் முஸ்தபாவும். மட்டாபிஷ்ச் என்னும் அந்த நபரால் நடத்தப்படும் அந்த பயண ஏற்பாடுகள் நம்பவே இயலாத அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் இருப்பதாக காட்சி அளித்ததால் நண்பர்கள் இருவருமே உடனடியாக ஒப்புக்கொண்டு கட்டணத்தை செலுத்திவிடுகின்றனர். ஆயிரம் தினார்களுக்கு 15 நாட்கள் எழில் கொஞ்சும் மெகல்ஃபட்ரா தீவில் விடுமுறையை கழிக்க கிளம்பும் நமது ஹீரோக்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் சுவையான சம்பவங்களே இந்த கதையின் ஜீவநாடி.
மாயதீவில் அலிபாபா - கதை சுருக்கம்: ஆனால் அந்த தீவில் அவர்களுக்கு காத்திருக்கும் விஷயங்கள் பற்றி தெரிந்து இருந்தால் அவர்கள் பயண குறிப்பீட்டில் (மிகவும்) சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்த அனைத்து கன்டிஷன்ஸ் அப்ளை குறிப்புகளையும் பூதக்கண்ணாடி வைத்தாவது படித்துவிட்டு வந்து இருப்பார்கள். பயண ஏற்பாட்டாளரின் இந்த நூதன மோசடியை தவிர்த்து புதியதொரு அசம்பாவிதமும் அந்த தீவில் தலைதூக்குகிறது.
மன அளவில் நொந்து போய் இருக்கும் அந்த பயணிகளுக்கு புதியதாக மற்றுமொரு பிரச்சினை - பயணிகள் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர். பயணிகளின் கடத்தல் சம்பவம் அந்த சிறிய தீவில் மேலும் பீதியை கிளப்புகிறது.
- பயணிகள் மர்மமான முறையில் காணாமல் போவதின் பின்னணி என்ன?
- பயணிகளை ஏதேனும் மர்ம கும்பல் கடத்துகிறதா?
- கடத்தலின் பின்னணி என்ன?
- சகோதரர்களில் ஒருவரும் கடத்தப்பட்டபின்பு நடக்கும் சங்கதிகள் யாவை?
- மர்ம கும்பலின் தலைவன் யார்?
- இந்த பிரச்சினையில் இருந்து விடுபட்டதர்க்கும் ஞாயிற்று கிழமை ஸ்கூல் லீவு விடுவதற்கும் இருக்கும் பிணைப்பு என்ன?
என்று ஒரு நேர்க்கோட்டில் பயணம் செய்யும் அம்புபோல கதை விறுவிறுப்புடனும், நகைச்சுவையுடனும் நகர்கின்றது. இந்த கதைதான் அலிபாபா முஸ்தபா கதை வரிசையில் கடைசி கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய லயன் / முத்து காமிக்ஸ் சைசில் வெளியிட்டு நம்மைப் போன்றவர்களையும், வயதில் சிறியவர்களையும் ஒருங்கே ஈர்க்கும் ஒரு சில கதை வரிசைகளில் இதுவும் ஒன்று என்பதால் இதனை இப்போது ரீப்ரின்ட் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.
- 100+ பக்கங்கள்.
- (32 பக்கம் X 2 கதைகள்) + (16 பக்கம் X 2 கதைகள்) = 96 பக்கங்கள்.
- நூறு ருபாய் ஸ்பெஷல் வெளியீடு.
- எடிட்டரின் பழைய நினைவுகள் (இந்த கதைகளை எப்படி தேர்வு செய்தார்? Etc)
- இந்த இதழ்களின் பழைய விளம்பரங்கள், அட்டைப்படங்கள், வாசகர் கடிதங்கள்
- கதாசிரியர், ஓவியர் குறித்த சிறுகுறிப்புகள்
என்று ஒரு அட்டகாசமான பேக்கேஜ் கண்முன்னே தெரிகின்றது.இந்த கதையை ஏற்கனவே படித்த புண்ணியாத்மாக்கள் கண்டிப்பாக ரீப்ரின்ட் ரெக்வெஸ்ட் ஒன்றினை இப்போதே எடிட்டரிடம் ஆரம்பிக்கலாமே?
P.S.: காமிரேட்டுகள் ஹாஜா இஸ்மாயில் மற்றும் முத்து விசிறி அவர்களின் நல்லாசியுடன் இதோ அந்த காலத்தில் நமது இதழ்கள் விற்பனை ஆகிக்கொண்டு இருந்த சமயத்து கடைகளின் விளம்பர போஸ்டர்கள்.
இந்த "விற்பனையாகிறது" போஸ்டர்கள் அந்த காலத்தில் மிகவும் ரெகுலர் ஆக அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. அப்படி அனுப்பப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்துள்ள காமிரேட் எனது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையே.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
பின்குறிப்பு: இந்த பதிவின் முதல் படத்தில் Yeah, That's We என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளது நெருங்கிய நண்பர் ஒருவருக்காக. ஆகையால் அதனை சுட்டிக்காட்ட வேண்டாமே?