காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, சித்திரைத் திருநாள், அம்பேத்கார் தின மற்றும் விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்! இன்று சித்திரை முதல் நாள். சித்திரை மாதம் ஐந்தாம் நாள்தான் நம் அனைவரின் அன்பிற்கு பிரியமான சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் ஆகும். அவருக்கு என்னால் ஆன சிறு காணிக்கையாக இந்த பதிவினை வழங்குகிறேன். முதன்முறையாக இந்த தளத்திற்கு வருகை தரும் அன்பு உள்ளங்கள் இதற்க்கு முன்பாக நான் எழுதிய வாண்டுமாமா பற்றிய பதிவினை படிக்க இந்த சுட்டிகளை பயன்படுத்தவும்:
லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் வாசகர்களுக்கு துப்பறியும் ஜிப் நோலன் (Zip Nolan) என்ற ஒரு கதாபாத்திரம் நினைவிருக்கலாம். ஒரு காவல்துறை அதிகாரியான ஜிப் நோலன் என்பவர் தனக்கு அருகில் நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனித்து தன்னுடைய சமயோசித திறனால் கதையின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பார். கதையை படிக்கும் வாசகர்களுக்கு கதையின் முடிவில் ஜிப் நோலன் சுட்டிக்காட்டும் சிறு,சிறு குறிப்புகளும் க்ளுக்களும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஆகையால் மறுபடியும் ஒரு முறை கதையை படிப்பார்கள், இந்த முறை சற்றே கூர்ந்து கவனித்தவாறு. இவருடைய கதைகள் காமிக்ஸ் வடிவில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது மற்றுமொரு சிறப்பு. எண்பதுகளில் இது போன்ற கதைகளுக்கு மிகுந்த வரவேற்ப்பு இருந்தது.
இந்த கதாபாத்திரத்தின் பெருவெற்றியை தொடர்ந்து லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு விஜயன் அவர்கள் இதுபோலவே பல கதாபாத்திரங்களை தமிழில் கொணர்ந்தார். துப்பறியும் ப்ரூஸ் கென்ட், இன்ஸ்பெக்டர் டேஞ்சர், டிடெக்டிவ் டிரேக்கின் க்ரைம் நேரம் என்று பல காமிக்ஸ் தொடர்கள் (அனைத்துமே ஓரிரு பக்கங்களில் முடிபவை) தமிழில் வந்தன. ஆனால் இவை அனைத்துமே இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் வெளிவந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. தமிழில் இதுபோல கதைகளே இல்லையா என்று நினைக்கவேண்டாம். அறுபதுகளிலேயே இதுபோன்ற கதைகளை அளித்த திரு வாண்டுமாமா அவர்கள் எண்பதுகளில் இந்த கதைகளில் ஒரு புதுமையை செய்தார். வெறும் துப்பறியும் கதைகள் மட்டுமே இருந்தால் சிறுவர்களை அவ்வளவாக ஈர்க்காது என்று அவர் தன்னுடைய துப்பறியும் தொடர்களில் சிறுவர்களை கதையின் நாயகர்களாக கொண்டு பூந்தளிர் இதழில் எழுத ஆரம்பித்தார். அப்படி தமிழில் புகழ் பெற்ற இரண்டு துப்பறியும் கதை வரிசைகளை இந்த பதிவில் காண்போம்.
முதலில் நாம் காணவிருப்பது 1988ம் ஆண்டு புத்தாண்டு முதல் பூந்தளிர் இதழில் வர ஆரம்பித்த ஒரு துப்பறியும் கதைதொடரை. துப்பறியும் புலிகள் என்ற பெயரில் வந்த இந்த கதைத்தொடரானது மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இந்த கதையின் சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த கதையின் துப்பறிவாளர்கள் போலிஸ் அதிகாரிகளோ, தனியார் துப்பறிவாளர்களோ அல்ல. அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டு புத்திசாலி சிறுவர்கள் என்பதே இந்த தொடரின் USP.
| Poonthalir Issue No 79 Vol 4 Issue 7 Issue Dated 1st Jan 1988 Harish & Anush 01 Page 01 - வாண்டுமாமா – பூந்தளிர் - துப்பறியும் கதைகள் 01 |
அனுஷ் என்ற சிறுமியும், ஹரிஷ் என்ற சிருவனுமே இந்த தொடரின் கதை நாயகர்கள். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் இருவரும் இனைந்து துப்பறிய வில்லை. ஒவ்வொரு இதழிலும் ஒரு கதை இருக்கும். ஒரு கதையில் அனுஷ் துப்பறிவார்; மற்றொரு கதையில் ஹரிஷ் துப்பறிவார். இப்படி இருவரும் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து சாகசங்கள் புரிந்தவாறு வாசகர்களை மகிழ்வித்தனர். சென்னையில் இருக்கும் அம்பத்தூரில் ஹரிஷ் & அனுஷ் ரசிகர் அமைப்பே செயல்பட்டு வந்தது என்பது இந்த தொடரின் வெற்றிக்கு ஒரு உதாரணம்.
கதையானது வெறும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களிலேயே முடிந்து விடும். ஆனால் அந்த கதையில் எப்படி குற்றவாளியை கண்டறிந்தார்கள் என்பது புத்தகத்தின் வேறொரு பக்கத்தில் இருக்கும். ஆகையால் புத்தகத்தை வாங்கியவுடன் முதலில் இந்த இரண்டு பக்கங்களை படித்து விட்டு பின்னர் தாங்களே விடையளிக்க முயன்ற வாசகர்கள் பலர். அடியேனும் அதில் ஒருவன். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி முறை சரியாக விடையளித்த பெருமை எனக்குண்டு. எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்து வந்த கோபி என்ற நண்பன் (அதாவது அப்போது நண்பன்) கிட்டத்தட்ட அனைத்துக்குமே சரியான விடையை கண்டுபிடித்து விடுவான். அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட சிறியதொரு துன்பியல் நிகழ்வின் முடிவாக கோபி இப்போது எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை. (கோபி, நீ இந்த பதிவினை படித்துக்கொண்டு இருந்தால் உடனடியாக இந்த தளத்தில் இருக்கும் என்னுடைய மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். நாம் சந்தித்து சரியாக பதினெட்டு வருடங்கள் ஆகி விட்டது).
திரு வாண்டுமாமா அவர்கள் ஒரு பெண்ணியவாதியாக இருப்பார் என்ற என்னுடைய நினைப்பை ஊர்ஜிதப்படுதுவதாக இந்த கதைதொடர் அமைந்து இருக்கிறது. தன்னுடைய எழுத்துக்களில் பெண்களுக்கு சம உரிமையை அளிக்கும் வாண்டுமாமா அவர்கள் இந்த தொடரில் கதை நாயகனாக ஒரு பெண்ணை அமைத்தது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நாம் கிட்ட தட்ட இருபது-இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு சமூகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதையும் சற்றே நினைவில் கொள்ளுங்கள்.
பூந்தளிர் இதழ்களை இப்போதைய நிலையில் சேகரிப்பது என்பது டைனோசர் கொம்பாக இருக்கும் சூழலில் இந்த கதையை மறுபடியும் படிக்கும் வாய்ப்பை நமக்கு அளிப்பவர்கள் சென்னை தியாகராய நகரை சேர்ந்த வானதி பதிப்பகத்தார். இவர்கள் இந்த தொடரை முழுவதுமாக சேகரித்து ஒரு புத்தக தொகுப்பாக சுமார் இருவது ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த புத்தகங்களும் இப்போதும் விற்பனைக்கு இருப்பது ஒரு சோகமான உண்மை என்றாலும், நமக்கொரு வாய்ப்பாக இதனை கருதி இந்த புத்தகத்தை வாங்கிவிடுங்கள். வெறும் பனிரெண்டே ரூபாயில் இந்த அருமையான துப்பறியும் கதைத்தொடர் கிடைக்கிறது என்பதை என்னுடைய நண்பரொருவர் இப்போதும் நம்ப மறுக்கிறார். நம்முடைய மனம் கவர்ந்த ஓவியச் சக்கரவர்த்தி திரு செல்லம் அவர்களின் கைவண்ணத்தில் இந்த இதழின் அட்டைப்படமும், சித்திரங்களும் இருப்பது மற்றுமொரு சிறப்பு. சுருங்க சொல்வதாயின், Don’t Miss it.
சரியாக பதினோரு மாதங்கள் வந்த இந்த தொடர் முடிந்த நிலையில் அதற்க்கு அடுத்த தொடராக வந்ததும் மற்றுமொரு துப்பறியும் தொடர். (அன்றைய பூந்தளிர் இதழில் எந்த ஒரு தொடரும் ஒரு வருடத்திற்கு மேலாக வந்ததில்லை - அதாவது இருபத்தி நான்கு பாகங்கள் மட்டுமே. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் இதழிலும், தமிழ் புத்தாண்டு இதழிலும் புதிய கதைகளை துவங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் வாண்டுமாமா அவர்கள்). இந்த முறை தொடராக வந்தது சி.ஐ.டி சிங்காரம். தமிழ் வாசகர்களுக்கு சி.ஐ.டி சிங்காரம் புதியவரல்லர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே கல்கி இதழின் மூலம் நன்கு அறிமுகமானவர் தான் சி.ஐ.டி சிங்காரம். அவரின் இந்த மீள் வருகை பூந்தளிர் இதழில் ஒரு பெரும் ஆவலை கிளப்பியது. அதுவும் விளம்பரம் வேறு தனியாக வெளியிட்டு அசத்தி விட்டார் வாண்டுமாமா. அடுத்த இதழ் எப்போது வரும் என்று ஆவலை தூண்டி விட்டார்.
ஷெர்லக் ஹோல்ம்ஸ் கதைகளில் டாக்டர் வாட்சனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவரே கதையின் போக்கை படிக்கும் வாசகர்களுக்கு விவரிப்பார். கதையின் முடிவில் வாசகர்கள் டாக்டர் வாட்சனின் பார்வையில் இருந்தே கதையை புரிந்து கொள்வார்கள். அப்படி நம்முடைய சி.ஐ.டி சிங்காரதிற்கு கிடைத்த டாக்டர் வாட்சனே பாலு. பாலுதான் நம்முடைய கதை விளக்கி. பல கதைகளில் முடிவில் மர்மம்களை விளக்குவதும் பாலுவே. சென்ற பூந்தளிர் தொடரைப்போலவே இந்த கதையிலும் ஒரு சிறுவன்தான் முக்கியமான ஒரு பாத்திரத்தை ஏற்கிறான். கதையை படிக்கும் பல வாசகர்களுக்கு தானே பாலுவின் இடத்தில் இருந்து துப்பறிந்தது போன்றதொரு மனோநிலையை உருவாக்கி விடுகிறார் வாண்டுமாமா அவர்கள்.
பூந்தளிர் இதழே இரு வண்ணங்களில் வரும். அதில் திரு செல்லம் அவர்களின் ஓவியங்களோடு இந்த தொடர் வந்தது காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு விருந்து. ஒவ்வொரு கதையிலும் தெளிவான விவரித்தலோடு மெதுவாக ஆனால் அழுத்தமாக முன்னேறும் இந்த கதைக்கு செல்லம் அவர்களின் ஓவியங்கள் ஒரு மிகப்பெரிய பிளஸ். செல்லம் அவர்கள் பல எழுத்தாளர்களுக்கும், பல இதழ்களுக்கும் வரையும் ஒரு ப்ரீலான்ஸ் ஓவியர் ஆக இருந்தாலும் அவரின் திறமை குன்றிலிட்ட விளக்காக பளிச்சிடுவது வாண்டுமாமா அவர்களோடு கை கோர்க்கும்போதே என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது.
இந்த புத்தகமும் இப்போதைக்கு கிடைக்காத நிலையில் இதனை பதிப்பக வெளியீடாக மட்டுமே வாங்கும் நிலை உள்ளது. வழமை போல இந்த கதைத்தொடரையும் வெளியிட்டவர்கள் சென்னை வானதி பதிப்பகத்தார். வாண்டுமாமா அவர்களின் பல புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் வானதி பதிப்பகத்தாருக்கு நன்றி கூறும் இந்த சூழலில் வெறும் பதினெட்டு ரூபாய்க்கு இருநூறு பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் கிடைக்கிறது என்ற நம்ப முடியாத தகவலையும் கூறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
வரும் திங்கள் கிழமை அன்று திரு வாண்டு மாமா அவர்களின் பிறந்த நாளாகும். அன்று அவர் படைப்பில் உருவான ஒரு காமிக்ஸ் படைப்பின் மூலம் மறுபடியும் உங்களை சந்திக்கிறேன். உங்களின் கருத்துக்களை மறவாமல் தெரிவியுங்கள்.