காமிரேட்ஸ்,
சமீபத்தில் ஒரு மழைக்கால மாலை நேரத்தில் அன்னியோன்யமான நண்பர்களுடன் காமிக்ஸ் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தபோது, மினி லயனில் வந்த காமெடி கர்னல் பற்றிய பேச்சு வந்தது. அப்போது ஒரு நண்பர் சினிபுக்கில் வந்த My Dear Wilkonson என்கிற புத்தகத்தை ஆன்லைனில் பார்த்துவிட்டு அதுதான் மினிலையனில் வந்த "காமெடி கர்னல்" என்று நினைத்து வாங்கிய அனுபவத்தை கூறிக்கொண்டு இருந்தார். இந்த சம்பவத்தை பற்றி பேசுகையில் நண்பர்கள் அந்த கதாபாத்திரத்தை பற்றி ஏன் இன்னும் பதிவிடவில்லை? என்று கேட்டார்கள். (ஏதோ தமிழில் வந்த அணைத்து கதாபாத்திரங்களை பற்றியும் நான் பதிவிட்ட மாதிரியும் இது ஒன்றுதான் மிஸ்ஸிங் என்பது போலவும் இருக்கே? என்று உங்களுக்கு தோன்றுகிறதா?). சத்தியமாக எனக்கும் அப்படித்தான் இருந்தது.
அப்போது தான் 2008ல் Draftல் வைத்த இந்த பதிவு நினைவுக்கு வந்தது. சரி, இந்த பதிவை இப்போதைக்கு ஏன் இடுகிறேன் என்று கேட்கிறீர்களா? நம்ம எடிட்டர் சன்ஷைன் லைப்ரரி என்று புதியதொரு இம்பிரிண்டை கொண்டு வந்துள்ளார். சன்ஷைன் லைப்ரரியில் ஏற்கனவே ஏற்கனவே தமிழில் நமது லயன்/முத்து/மினி லயன் வெளியீடுகளில் கருப்பு & வெள்ளையில் வந்த அற்புதமான சில பல கதைகளை முழு வண்ணத்தில் யூரோப்பியன் ஃபார்மேட்டில் மறுபதிப்பு செய்யப்பட இருப்பதால் இந்த தருணத்தில் புதிதாக காமிக்ஸ் படிக்கும் நண்பர்களுக்கு (தற்சமயம் நினைவில் இல்லாத) சில அற்புதமான கதை வரிசைகளை நினைவூட்டலாமே? என்கிற எண்ணம் மேலோங்கியதன் விளைவே இந்த பதிவு (அம்மாடி, எம்மாம் பெரிய Sentence). ஆகையால் இந்த பதிவினை தொடர்ந்து இன்னமும் சில பழைய புத்தகங்களை பற்றிய நாஸ்டால்ஜியா பதிவுகள் வரும் (வரலாம்?!?!).
யாருடா கர்னல்?: காமெடி கர்னல் என்று தமிழில் நாமகரணம் செய்யப்பட்ட இந்த கதாபாத்திரத்தின் முழு பெயர் கர்னல் Harold WilberForce Clifton. நம்ம ஜேம்ஸ்பான்ட் 007 எப்படி MI 6 என்கிற ரகசிய அமைப்பில் உளவாளியாக இருக்கிறாரோ,அதைப்போல நம்ம காமெடி கர்னலும் MI 5 என்கிற உளவுத்துறை அமைப்பில் பணி புரிந்துவிட்டு ரிட்டையர் ஆனவர். அதற்காக இவருக்கு வயது அதிகம் என்று நினைத்துவிடவேண்டாம். எப்படி நம்ம முத்து காமிக்ஸ் ஹீரோ ஜானி நீரோ உளவுத்துறையில் இருந்து தாற்காலிகமாக வெளியேறினாரோ, அதைப்போலவே தான் இவரும். என்ன, ஜானிக்கு கிடைத்தது போல இவருக்கு ஸ்டெல்லா கிடைக்கவில்லை. ஆனால் ஜானியைப் போலவே இவரும் தன்னுடைய முன்னாள் உளவுத்துறைக்கு பணி புரிய தயங்குவதே கிடையாது.
தன்னுடைய குடையை ஒரு ஆயுதமாக டிசைன் செய்துள்ள இவருக்கு ஸ்டெல்லா மாதிரி ஒரு கேரக்டர் வேண்டுமென்று கதாரிசியரால் உருவாக்கப்பட்டவர்தான் மிஸ் பார்ட்ரிட்ஜ் (ஸ்டெல்லா ரசிகர்கள் மன்னிக்க (குறிப்பாக பங்குவேட்டையர் ஜோஷ்). இலண்டனில் காமெடி கர்னலின் வீட்டு சமையல்காரர் இவர். இவருடைய சமையல் மிகவும் புகழ் பெற்றது. சிறந்த ருசிக்கான விருது வாங்கிய சூப் இவருடையது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். டென்ஷன் வந்தால் கையில் இருக்கும் பாத்திரங்களை போட்டு உடைக்கும் இவர், காமெடி கர்னல் கதைகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
பல நேரங்களில் இவருக்கு போலிஸ் உதவி தேவைப்படும்போதெல்லாம் துணைக்கு வருபவர் இவருடைய நண்பராகிய ஸ்காட்லான்ட் யார்டின் சீஃப் ஜான் ஹெய்க் தான். என்ன ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் வருவது போல இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? அதுவேதான். அதே சமயம் ஸ்காட்லண்ட் யார்டின் மிகவும் முக்கியமான (தீர்க்க இயலாத, சிக்கலான) வழக்குகளை இவரிடம் கொண்டு வந்து சேர்ப்பதும் ஜானின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
இதைதவிர இவரது கதைகளில் ரெகுலராக வருவது இரண்டே இரண்டு விஷயங்கள். அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. அவற்றில் ஒன்று ட்ராஃபிக் போலீஸ்காரர் ஸ்டிராபெர்ரி என்பவர். இரண்டாவது எப்போதுமே செலவு வைத்துக்கொண்டு இருக்கும் காமெடி கர்னலின் உலகப் பிரசித்தி பெற்ற கார்.
ஒவ்வொரு கதையிலும் காமெடி கர்னல் அவருடைய காரை எங்காவது சென்று மோதிவிடுவதும்,கதை முடிவில் அதனை செப்பனிடுவதும் வழக்கமான விஷயங்களே.அதைப்போலவே அடிக்கடி இவரது காரை நோ பார்க்கிங் ஏரியாவில் இருக்கிறது என்று ஃபைன் போடுவது நம்ம ஸ்டிராபெர்ரியின் வேலை. இவை இரண்டுமே ரெகுலராக நடக்கின்ற விஷயங்கள்.
முக்கியமான விஷயம்: இந்த கதை தொடர் முழுக்க முழுக்க இங்கிலாந்தில் நடைபெறுவதாகவே எழுதப்பட்டு இருக்கிறது. ஆகவே இதில் வரும் (பெரும்பாலான) நகைச்சுவை சம்பவங்கள் (ஆஸ்டிரிக்ஸ் போல) மிகவும் Subtle ஆகவே இருக்கும். இந்த கதைகளிலும் பின்னணி விஷயங்களை முழுவதும் கவனித்தாலே அதில் மறைந்து கிடக்கின்ற நகைச்சுவையை முழுவதுமாக ரசிக்க இயலும். ஆகவே நிதானமாக, படங்களை ஆழ்ந்து கவனித்து ரசித்து படிப்பது இந்த கதை தொடருக்கு மிகவும் முக்கியம்.
கிளிப்ஃடன் - பின்னணி விவரங்கள்: Raymond Macherot என்கிற பெல்ஜிய நாட்டு காமிக்ஸ் கதாசிரியரால் 1959ம் ஆண்டு டின்டின் வார இதழில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே காமெடி கர்னல் கிளிப்ஃடன். ஒவ்வொரு வாரமும் மூன்று பக்கங்கள் என்கிற விதத்தில் இந்த தொடரை ஆரம்பித்தார் ரேமண்ட். மூன்று முழு நீள கிளிப்ஃடன் கதைகளை முடித்த தருவாயில் 1964ல் ஸ்பிரோ என்கிற (போட்டி) காமிக்ஸ் வார இதழில் வேலைக்கு சேர்ந்து விடுகிறார் ரேமண்ட் (நம்ம ஊரில் குமுதம் இதழில் இருந்து ஆனந்த விகடனுக்கு போவதைப்போல).
இப்படி அவர் வேலையை விட்டுவிட்டு சென்றதால் (அப்போதைய காபிரைட் சட்டப்படி) அவர் உருவாக்கிய கிளிப்ஃடன் மற்றும் க்ளோரோஃபில் ஆகிய காமிக்ஸ் தொடர்களின் உரிமை டின்டின் நிறுவனத்தினருக்கே சொந்தம் ஆகிவிடுகிறது. புதியதாக சேர்ந்த ஸ்பிரோவில் அவர் உருவாக்கிய சமினோ என்கிற ஒரு (மிருகங்களை மட்டுமே கொண்ட உலகின்) டிடெக்டிவ் பூனை, அவரது ஆகச்சிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் குறிப்பிடுவது உண்டு. ஐந்து வருடங்களுக்கு முன்பு காலமான இவர் நமது லக்கிலுக் கதாசிரியர் கோஸ்சினியுடனும் இணைந்து பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த காமெடி கர்னல் கிளிப்ஃடன் கதை வரிசையில் சிறந்த கதைகளாக விமர்சகர்கள் குறிப்பிடுவதும் இவர் உருவாக்கிய முதல் மூன்று கதைகளையே.
டின்டின் வார இதழில் அதற்க்கு பிறகும் கிளிப்ஃடன் கதைகள் தொடர்ந்து வந்தன. எப்படி நமது இந்திய கிரிக்கெட் அணிக்கு கவாஸ்கர்-சௌஹான் ஜோடிக்கு பிறகு நல்ல டெஸ்ட் கேட்ச் துவக்க ஆட்டக்கார்கள் கிடைக்கவில்லையோ, அதைப்போலவே டின்டின் இதழுக்கும் கிளிப்ஃடன் கதைகளை தொடர நல்ல ஜோடி கிடைக்கவில்லை. மொத்தம் ஐந்து ஜோடிகளை ட்ரை செய்தனர். இதில் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்த ஜோடிதான் Turk & De Groot ஜோடி.
ஏனைய ஐந்து ஜோடிகளை பற்றி எழுதாமல் இந்த ஜோடியை பற்றி மட்டும் எழுத இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று - மொத்தம் 21 கதைகளை கொண்ட இந்த வரிசையில் பத்து கதைகள் இந்த ஹிட் ஜோடியுடைதே. இரண்டு - நமக்கு தமிழில் வந்த கதையை உருவாக்கியதும் இந்த ஜோடியே. இதற்க்கு மேல் காரணங்கள் தேவை இல்லை என்பதால் இனி கதைக்கு செல்வோம்.அடுத்த வெளியீடு என்று மினி லயனின் 25வது புத்தகத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த புத்தகம் வெளியானது என்னவோ 30வது இதழாகவே. ஆகையால் இரண்டு முறை அடுத்த வெளியீடு என்று விளம்பரம் செய்யப்பட்ட பெருமை இந்த இதழுக்கு உண்டு.
பயங்கரப் பாலம் என்கிற (இருவண்ண) லக்கிலூக் இதழுக்கு பிறகு வெளிவந்த இந்த காமெடி கர்னல் புத்தகம் இப்போதைக்கு கிடைத்தற்கரிய ஒரு பொக்கிஷமாகும். இந்த புத்தகத்தை இப்போது தங்கள் கைவசம் வைத்து இருப்பவர்கள் ஒருமுறை தங்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம். நல்லவேளை, இப்போதைய கலாச்சார காவலர்கள் இவரை பார்க்கவில்லை. விளம்பரத்திலேயே புகை பிடித்துக்கொண்டு (டெக்னிகலி புகையை விட்டுக்கொண்டு) இருக்கும் இவருக்கு தடைபோட சொல்லி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை.
இந்த புத்தகம் கைவரப்பெறாத நண்பர்களுக்காக அதன் விளம்பரம், அட்டைப்படம் மற்றும் முதல் இரண்டு பக்கங்கள் (ஒரு புகை வரவழைக்கும் விஷயமும் - 2007ஆம் ஆண்டு வரை இந்த புத்தகம் என்னிடம் ட்ரிபுல்ஸ் இருந்தது.அதன் பிறகு இரண்டு நண்பர்களுக்கு கொடுத்து விட்டேன்). இப்போதைக்கு ஒன்லி சிங்கிள்.
இந்த பதிவு ட்ராப்டில் இருந்த காலம் வரை (2008) இந்த கதையின் மூலக்கதைக்கான ஸ்கான்கள் ஆன்லைனில் கிடைக்கவே இல்லை. அதன் பின்னர் மதுரையில் இருக்கும் நண்பர் ஒருவர் இதனை எனக்கு புத்தகமாகவே அளித்துவிட்டு என்னிடம் இருந்த டேஞ்சர் டையபாலிக் புத்தகத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டார். ஆகையால் இந்த கதையின் (ஃப்ரெஞ்ச்) வண்ண பக்கம் உங்களுக்காக: (அதில் தமிழில் டைப் செட் செய்து கொடுத்த ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு நன்றி). அதைப்போலவே இந்த கதையின் அட்டைப்படம் மற்றும் க்ரெடிட் பக்கங்களின் ஸ்கான்களை கொடுத்த ஆன்லைன் நண்பருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.
Mini Lion Comics Comedy Colonel French Cover Alias Lord X | Mini Lion Comics Comedy Colonel French Cover Alias Lord X Credits |
அந்த முதல் பக்கத்தை மறுபடியும் ஒரு முறை பாருங்கள். வசனங்களை மறந்துவிட்டு வெறும் காட்சிகளை மட்டும் பாருங்கள். (காமிக்ஸ் படிப்பதையே தொழிலாக கொண்ட காமிரேட்டுகள் இதனை Watching TV On Mute Mode என்று குறிப்பிடுவார்கள். அமைதியாக ஒவ்வொரு கட்டமாக ரசித்து பாருங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கண்களையும், மூக்கையும் மட்டுமே ஹை லைட் செய்து வரைந்து இருப்பது இந்த ஓவியரின் ஸ்பெஷாலிட்டி. உதடுகளின் பொசிஷன், கால்கள் என்று வெளுத்து கட்டி இருப்பார்.
இந்த கதையை பற்றி நான் ஒன்றே ஒன்றுதான் சொல்வேன் - மினி லயனில் வந்த 40 கதைகளையும் அவற்றின் நகைச்சுவை தரத்திற்கேற்ப வரிசைப்படுத்த சொன்னால், இந்த கதை கண்டிப்பாக டாப் டென்னில் வந்துவிடும். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வை தூண்டும் கதை இது. இதனை படித்து விட்டு எந்த உம்மணாம்மூஞ்சியாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
இந்த பதிவில் கண்டிப்பாக நான் கதையை சொல்லப்போவது இல்லை. உடனடியாக உங்களின் அருகாமையில் இருக்கும் காமிரேட்டுகளிடம் இந்த புத்தகத்தினை இரவலாக (என்னது, கோவை ஸ்டீல் கிளாவா? ஒக்கே!) பெற்று படியுங்கள். படித்து முடித்து விட்டு நான் சொன்ன (டாப் டென் கதைகளில் ஒன்று) என்பதை ஒப்புக் கொண்டு உடனடியாக இதனை ரீபிரிண்ட் செய்ய எடிட்டரிடம் கோரிக்கை வையுங்கள்.
அப்படி ரீப்ரிண்ட் செய்யாவிட்டாளும்கூட இந்த தொடரில் வந்த ஒரு கதையாவது (ஒரு பரிட்சார்த்த முயற்சியாக) படியுங்கள். சினிபுக் நிறுவனத்தினர் மொத்தம் ஆறு கதைகளை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டிஸ்கவுன்ட் விலையில் உங்கள் வீட்டிற்க்கே வந்து விடும்.அதன் டவுன்லோட் லிங்க்குகளை எந்த புண்ணியவானாவது இங்கே கமெண்ட்டுகளில் கொடுப்பார்கள். ஒரு கதையை சாம்பிள் செய்துவிட்டு மற்றவைகளை புத்தகமாக படித்து மகிழுங்கள். அதன் பின்னர் இந்த தொடரின் மற்ற கதைகளை வெளியிட வேண்டுமா? வேண்டாமா? என்று எடிட்டரிடம் காமிக்-கானில் விவாதம் நடத்தலாம்.
சென்ற இதழில் பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னமும் சரியான பதில் வராததால் ஒரு மறு ஒளிபரப்பு:
உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய போட்டி: செக்ஸ்டன் ப்ளேக் கதைகள் (அதாவது வாலியண்ட் இதழில் வந்த கதைகள்) ஒரு குறிப்பிட்ட காமிக்ஸ் ஹீரோவின் கதைகளுடன் "எதேச்சையாக" பொருந்தி இருக்கும். அந்த மற்ற ஹீரோவின் கதையும் தமிழில் வந்துள்ளது. அதனைப்பற்றி நமது முத்து விசிறி அவர்களும் பதிவிட்டுள்ளார்.
-
அந்த மற்றொரு ஹீரோ யார்?
-
அவரது கதைகளுக்கும் செக்ஸ்டன் ப்ளேக் கதைகளுக்கும் என்ன ஒற்றுமை?
-
அந்த மற்றொரு ஹீரோவின் கதை எந்த காமிக்ஸில் வந்தது?
இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நபர்களுக்கு நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தில் இருந்து A4 சைசில் வெளிவந்த ஆங்கில காமிக்ஸ் இதழ் ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.