Pages

Wednesday, February 16, 2022

18 தலைசிறந்த கிராஃபிக் நாவல்கள் 01: த எடர்நாட் - ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட் (The Eternaut By Hector German Oesterheld)

ஒரு காமிக்ஸ் கதையை உருவாக்குவதால், என்ன பாதிப்பு வந்துவிடும்? The Eternaut Graphic Novel Cover 1

  • அதைப் பற்றி காரசாரமான எதிர்மறை விமர்சனங்கள் வரலாம்.
  • அந்தப் புத்தகம் தடை செய்யப்படலாம்.
  • அந்த படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தல்கள் வரலாம்.
  • படைப்பாளிகள் அந்த நாட்டைவிட்டே ஓடிவிடலாம்.
  • படைப்பாளியின் குடும்பத்தினர் கடத்தப் படலாம்.
  • நெருங்கிய உறவினர்கள் கொல்லப் படலாம்.
  • அல்லது, படைப்பாளிகளே கொல்லப் படலாம்.

எதிர்ப்புக்கு ஆளாகும் ஒரு படைப்புக்கு, இதில் ஏதாவது ஒன்றிரண்டு நடக்கும். ஆனால், மேலே சொல்லப்பட்ட எல்லாமும் ஒரே படைப்புக்கு நடக்குமா?

அதுவும் ஒரு ”சாதாரண” காமிக்ஸ் கதைக்கு?

Writer HGO Photo 1

ஹெ ஜி ஓ எனும் மேதை: அர்ஜெண்டீனாவின் (ஒரிஜினலாக, அர்ஹெந்தீனா) தலைநகரமான புவனெஸ் ஐரீஸில் ஜூலை 23, 1919ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஹெக்டோர். ஜியாலஜியில் பட்டப்படிப்பு முடித்திருந்ததால், பிற்காலத்தில் இவரால் சயின்ஸ் பிக்ஷன் கதைகளை அறிவியல் பின்புலம் கொண்ட சம்பவங்களை வைத்து நம்பகத் தன்மையுடன் எழுத முடிந்தது. 1940களில் எழுத்துத் துறைக்குள் நுழைந்த ஹெக்டோர், பின்னர் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைப் படைக்க ஆரம்பித்தார். 1957ல் இவர் தனது சகோதரருடன் இணைந்து ஹோரா சேரொ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.

ஏற்கனவே, ”த வெனிஸ் க்ரூப்” என்ற ஒரு மாபெரும் காமிக்ஸ் இயக்கத்தை தோற்றுவித்திருந்தார். அந்த க்ரூப்பில்தான் ஹ்யூகோ ப்ராட், டீனோ பட்டாக்ளியா, மரியோ ஃபாஸ்டிநெல்லி போன்ற உலகப்புகழ் பெற்ற காமிக்ஸ் படைப்பாளிகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்குமே ஆதர்சமாக, முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ஹெக்டோர். அவருடைய நட்பு சார்ந்த சீரிய வழி நடத்துதலில், இந்தக் குழு உலகின் தலை சிறந்த பல படைப்புகளை உருவாக்கினார்கள்.

1

த எடர்நாட் – ஒரு முடிவின் ஆரம்பம்: 1957ஆம் ஆண்டு தனது ஹோரா சேரோ வார இதழில் ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பிக்கலாம் என்று ஹெக்டோர் முடிவெடுக்கிறார். அதற்காக அவர் ஓவியர் ஃப்ரான்சிஸ்கோ செலோனோ லோபஸ்-ஐச் சந்திக்கிறார்.

இருவரும் சேர்ந்து, புதிய தொடரைப் பற்றி விவாதிக்கும்போது, ஹெக்டோர் தனக்கு மிகவும் பிடித்த கிளாசிக் கதையான ராபின்ஸன் க்ரூஸோ-வைப் பற்றிச் சொல்லி, அதை அடிப்படையாக வைத்து ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் காமிக்ஸ் தொடரை உருவாக்கலாமா? என்று கேட்கிறார்.

அப்போதெல்லாம் (1950களில்) சயின்ஸ் பிக்‌ஷன் என்றாலே, ராக்கெட்டில் அயல் கிரகங்களுக்குச் சென்று போரிடுவது, விண்வெளியில் கதைகள் நடப்பது என்றுதான் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலான கதைகள் காதில் பூ சுற்றுவது போலத்தான் இருக்கும். நாம் இதையெல்லாம் கட்டுடைப்பு செய்து, மக்கள் நம்புவதைப் போல ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் காமிக்ஸ் தொடரைப் படைக்கலாம் என்று ஹெக்டோர் சொன்னார்.

அவர் சொன்ன பாணியில் கதையமைக்க லோபஸ்-சுக்கு ஒப்புதல் இருந்தாலும், ஒரு கிளாசிக் கதையான ராபின்ஸன் க்ரூஸோ-வை எப்படி காமிக்ஸ் வடிவில் கொடுக்க முடியும்? என்று அவர் சந்தேகத்துடனே இருந்தார்.

உலகின் தலைசிறந்த காமிக்ஸ் தொடர்: ஹோரா சேரோ வார இதழில், ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் நான்கு பக்கங்கள் என்ற அளவில் இந்த காமிக்ஸ் தொடர் வெளியானது. செப்டம்பர் 4, 1957ல் ஆரம்பித்த இந்தக் காமிக்ஸ் தொடர் கருப்பு வெள்ளையில் அச்சில் வந்தாலும், ஆரம்பித்த சில வாரங்களிலேயே மக்களின் மனதைக் கொள்ளையடிக்கத் துவங்கி விட்டது. அதிலும் தொடரின் சில அத்தியாயங்களைப் படித்து விட்டு, வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் பயந்தனர் என்பது வரலாறு. இப்போது ஹாலிவுட் திரைப்படமாக தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ் படத்திற்கே இந்தக் காமிக்ஸ் தொடர்தான் முன்னோடி.

Artist F S Lopez Photo 1

விளைவுகள்: எடர்நாட் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில், பல எதிர்வினைகள் வர ஆரம்பித்தன. மக்களுக்கு இந்தக் காமிக்ஸ் தொடர் எத்தகையது, எதைப் பற்றியது என்பதில் தெளிவான புரிதல் இருந்ததால், இதைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால், அரசாங்கத்திற்கும் இதைப் பற்றிய புரிதல் இருந்ததால், இதற்கு எதிரான அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

  • பத்திரிகை பணியாளர்கள் வேலையை விட்டு நின்றார்கள்.
  • ஓவியர்கள் மிரட்டப் பட்டனர்.
  • லோபஸ்-சுக்கு கொலை மிரட்டல்கள் எல்லாம் வர ஆரம்பித்தது.
  • அவர் அர்ஜெண்டீனாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் குடி புகுந்தார்.
  • காமிக்ஸ் வருவது நின்று போனது.

ஆனால், ஹெக்டோர் சிறிதும் மனம் தளரவில்லை. 1961ல் மறுபடியும் இதே எடர்நாட் தொடரை வேறு வடிவில் ஆரம்பித்தார். சில மாற்றங்களைச் செய்து, தொடரை இன்னமும் காத்திரமான ஒரு படைப்பாக மாற்றினார். ஒரு நேரடியான விமர்சனமாக இதை எண்ணிய அரசாங்கமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் கை கோர்த்துக்கொண்டு செயல்படத் துவங்கின. சொல்ல முடியாத பலவகையான இன்னல்களுக்கு ஆளாகினார், ஹெக்டோர். ஐந்து ஆண்டுகளுக்கு இவரது பத்திரிகை வெளிவரவே இல்லை. ஆனால், சிலேவின் பிரபலமான ஸிக்-ஸாக் பதிப்பகத்திற்காக இவர் எழுத ஆரம்பித்தார்.

சே கெவாரா: 1967ல் சே கெவாரா கொல்லப்பட்ட போது, ஹெக்டோரின் அமைதி, எரிமலையாக வெடித்தது. சே கெவாராவைப் பற்றி ஹெக்டோர் ஒரு கிராஃபிக் நாவலை உருவாக்கினார். 1968ல் அந்தப் புத்தகம் வெளியானபோது, அதைப் படித்து விட்டு இன்னொரு புரட்சிக்கு அது வித்திட்டு விடுமோ? என்று பயந்த அரசாங்கம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் கைப்பற்றி எரித்து விட்டது. மேலும், எதிர்காலத்தில் எந்தப் பதிப்பும் வரக்கூடாது என்று அந்த கிராஃபிக் நாவலின் ஒரிஜினல் ஓவியங்களையும், ஸ்க்ரிப்டையும் தேடிப்பிடித்து அழித்து விட்டனர். அழிக்கப்படுவதற்கு முன்பாக அந்த சே கெவாராவின் கிராஃபிக் நாவலை வாங்கிப் படித்தவர்கள், அதுதான் சே வின் வாழ்க்கைக்கான உண்மையான பதிவு என்று கொண்டாடினார்கள். The Eternaut Graphic Novel Page No 07

எடர்நாட்டின் மீள் வருகை: சேவின் மரணம் ஹெக்டோரின் உள்ளே இருந்த கோபத்தை மீட்டெடுத்தது. மே, 29, 1969ல் எடர்நாட் காமிக்ஸ் தொடர் மறுபடியும் ஆரம்பித்தது. இம்முறை ஓவியம் வரைந்தது, பின்நவீனத்துவ பாணி ஓவியரான ஆல்பர்ட்டோ ப்ரெக்கீயா. இம்முறை அர்ஜெண்டீனா மட்டுமின்றி ஐரோப்பாவில் பத்திற்கும் மேற்பட்ட இதழ்களில் தொடராக வரத் துவங்கியது. அர்ஜெண்டீனாவில் தடை செய்யப்பட்டால், அந்த இதழின் தொடர்ச்சி, சீலேவில் இருந்து வெளியான காமிக்ஸ் இதழிலிருந்து அர்ஜெண்டீனாவிற்குக் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இப்படியாக, மக்கள் கொண்டாடிய அந்தத் தொடர் மறுபடியும் மக்கள் மனதில் புரட்சிக்கான விதையை ஆழமாக விதைக்கத் தொடங்கியது.

அதன் பிறகு, ஹெக்டோர் தீவிர அரசியலில் இறங்கினார். பல முக்கியமான அரசியல் தலையங்கங்களை எழுதினார். 1973ல் இவர் எழுதிய ”ஏகாதிபத்தியத்தின் 450 ஆண்டுகள்” என்ற தலையங்கக் கட்டுரை உலகின் தலை சிறந்த கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் மாதிரிக் கட்டுரையாக இன்றும் விவாதிக்கப் படுகிறது.

The Eternaut Graphic Novel Page No 41

1976 – எடர்நாட் 2: எடர்நாட் தொடரை 1957ல் ஆரம்பித்த போது ஓவியம் வரைந்த லோபஸ், ஒரு ஏஜென்சியின் மூலமாக மறுபடியும் ஹெக்டோரைத் தொடர்பு கொண்டார். ”எடர்நாட் பாகம் இரண்டு - எதிர்காலம்” என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு இந்த புதிய காமிக்ஸ் தொடர் ஆரம்பித்தது. அர்ஜெண்டீனாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற சித்தாந்தங்களின் அடிப்படையில் இத்தொடர் உருவாக்கப்பட்டு இருந்தது. தொடர் ஆரம்பித்த உடன், இதற்கான எதிர்விளைவுமே பெரிய அளவில்தான் இருந்தது.

  • 1976ல் ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட் “காணாமல்” போனார்.
  • அவர் காணாமல் போன உடனே, அவரது நான்கு மகள்களும், மருமகன்களுமே போராட்டத்தில் இறங்கினர்.
  • சிறிது நாட்களிலேயே ஹெக்டோரின் நான்கு மகள்களான மரீனா (வயது 18), பீட்ரிஸ் (19), டயானா (21), எஸ்டெல்லா (25) ஆகியோரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, ”காணாமல்” போனார்கள்.
  • கைது செய்யப்படும்போது, டயானா நிறைமாத கர்ப்பிணி.
  • எஸ்டெல்லாவோ, கைக்குழந்தையுடன் இருந்தார்.
  • உடனடியாக, ஹெக்டோரின் நான்கு மருமகன்களும் கைது செய்யப்பட்டனர்.
  • வழக்கம்போல, அவர்களும் “காணாமல்” போனார்கள்.

1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸூப்யோ என்ற ரகசிய சித்திரவதைக் கூடத்தில் அவரைப் பார்த்ததாக தப்பிப் பிழைத்த கைதிகள் சிலர் சொன்னார்கள். 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தக் கொடிய சிறையில் அவரை நடை பிணமாகப் பார்த்ததாக “பெயரற்ற சிறையும், அடையாளமில்லாத கைதியும்” என்ற புத்தகத்தில் அர்ஜெண்டீனாவின் பத்திரிகையாளர் ஜேக்கப் எழுதி இருந்தார். இந்த டிசம்பருடன் ஹெக்டோர் “காணாமல்” போய் 35 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஹெக்டோர் வேண்டுமென்றால், அதிகாரத்தால் “காணாமல்” போகுமாறு செய்யப்படலாம். ஆனால், அவரது படைப்புகள் இன்றும் தென்னமெரிக்காவில், ஐரோப்பாவின் பல இடங்களில் தொடர்ச்சியாக மறுபதிப்பு செய்யப்பட்டு வந்தது. இப்போதும் செய்யப்படுகிறது. ஆனால், இவை அனைத்துமே ஸ்பானிஷ் மற்றும் இதர மொழிகளிலேயே இருந்ததால், ஆங்கில இலக்கிய உலகில் இவரைப் பற்றி பேச்சு வழக்கில் மட்டுமே விவாதங்கள் நடந்து வந்தன.

The Eternaut Graphic Novel Page No 142

எடர்நாட் – ஆங்கிலப் பதிப்பின் கதை: ஹெக்டோர் ”காணாமல்” போன பிறகு, அந்தக் குடும்பத்தில் அவரது மனைவி மட்டுமே மீதம் இருந்தார். ஒரு கட்டத்தில், அரசாங்கத்தின் கெடுபிடியால் அவர் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, வாழ்வாதாரத்திற்கே போராடும் சூழல் உருவாகியது. அந்த நேரத்தில், ஓவியர் லோபஸ் அவரைத் தொடர்பு கொண்டு, எடர்நாட்டின் ஒரிஜினல் ஓவியங்களை அவரிடம் கொடுத்தார். வறுமையின் உச்சத்தில் இருந்த ஹெக்டோரின் மனைவி எல்ஸா, அதை ஓர் உள்ளூர் பதிப்பக உரிமையாளரிடம் விற்று விட்டார். எடர்நாட்டின் பத்திரிகைப் பதிப்புகளை கைவசம் வைத்திருந்த அந்த பதிப்பக உரிமையாளருக்கு அந்த ஒரிஜினல் ஓவியங்களின் மதிப்பு தெரியவில்லை. ஆகையால், அவர் அந்த ஒரிஜினல்களை ஓர் இத்தாலிய கலாரசிகரிடம் விற்று விட்டார். அதன் மதிப்பை உணர்ந்த அந்த ரசிகர், அவற்றை மிகவும் பத்திரமாக பாதுகாத்தார்.

இதற்கிடையில், ஏற்கனவே அச்சில் வந்த எடர்நாட் கதைகளைக் கொண்டே மறுபதிப்புகள் வந்தன. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக முதலில் வெளியானவை நியூஸ் பிரிண்ட்டில் என்பதால், அவற்றைக் கொண்டு செய்யப்பட்ட மறுபதிப்புகளும் சுமாரான தரத்திலேயே இருந்தன. ஓவியங்கள் மங்கிப் போய், “டல்” அடித்த நிலையிலும் எடர்நாட் தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு பிரெஞ்சுப் பதிப்பகம், எடர்நாட்டின் ஒரிஜினல் ஓவியங்களை வைத்திருந்த இத்தாலியரைத் தொடர்பு கொண்டு, அவற்றைக் கொண்டு ஒரு “மேம்படுத்தப்பட்ட மறுபதிப்பை”க் கொண்டு வர விரும்பியது. ஹெக்டோரின் உன்னதப் படைப்பை இந்த ஆண்ட்ராய்ட் தலைமுறைக்கும் காட்ட விரும்பிய அந்த இத்தாலியரும் ஒத்துக் கொள்ள, ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்ட ஒரிஜினல் ஓவியங்களை மறுபடியும் ஸ்கேன் செய்து, அவற்றை டிஜிடலாக மேம்படுத்தி, புதிய பதிப்பைத் தயார் செய்தனர். The Eternaut Graphic Novel Page No 201

எரிக்க மெனா: லத்தீன் அமெரிக்கக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்தான் எரிக்க. இவர் ஹெக்டோரின் ஒரிஜினல் ஓவியங்கள் மீட்டெடுக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பினார். ஹொக்டோரின் எந்த ஒரு படைப்பையும் சுலபத்தில் மொழி பெயர்த்து விட இயலாது. குறியீடுகள், உருவகங்கள், தொன்மங்கள் என்று பிரதிக்குள் பிரதியாக அவரது படைப்புகள் இருக்கும். ஆனால், எரிக்காவும் லேசுப்பட்டவர் அல்ல. விடாமுயற்சியுடன் அவர் தொடர்ந்து தன்னை இந்த மொழியாக்கத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். அதன் விளைவாகவே இந்த 350 பக்க காமிக்ஸை மூலப்பிரதிக்கு மிக நெருக்கமான ஒரு மொழிபெயர்ப்பாகக் கொண்டு வந்தார். இந்த மொழிபெயர்ப்புடன் அவர் பல பதிப்பகங்களை அணுகினார். ஆனால், எப்போதுமே ஐரோப்பிய, தென்னமெரிக்கப் படைப்புகளை சந்தேகத்துடன் எதிர்கொள்வதைப் போலத்தான் இதையும் எதிர்கொண்டனர். யாரும் ஆங்கிலத்தில் கொண்டுவர முன்வரவில்லை.

அமெரிக்காவில் ஃபன்டாகிராஃபிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ் பதிப்பகம் இருக்கிறது. தரமான கிராஃபிக் நாவல்கள், அரிய காமிக்ஸ்களை மறுபதிப்பு செய்தல் என்ற அடையாளத்துடன் இயங்கி வருபவர்கள் இவர்கள். எடர்நாட்டின் ஓவியரான லோபஸ்-சின் சில படைப்புகளை அவர்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் எரிக்காவின் இந்த முயற்சியைக் கேள்விப்பட்டு, ஆங்கிலத்தில் இதைக் கொண்டு வர ஒப்புதல் தெரிவித்தார்கள். முதல் பதிப்பு ஒரே வாரத்தில் விற்றுத் தீர்த்துவிட, (என்னைப் போல) அயல்நாடுகளில் இருப்பவர்கள் வாங்கத் துடித்தனர். சில மாதங்களிலேயே மறுபடியும் இன்னொரு பதிப்பு கொண்டு வர, அதுவும் விற்றுத் தீர்த்தது.The Eternaut Graphic Novel Page No 269

எடர்நாட்: இவ்வளவு பில்ட்-அப் கொடுத்த எடர்நாட்டின் கதைதான் என்ன? ஹெக்டோரைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு காமிக்ஸ் படைப்பாளியின் வீட்டில்தான் கதை ஆரம்பிக்கிறது. அதிகாலை மூன்று மணிக்கு அவரது வீட்டில் யாரோ திடீரென்று காட்சியளிக்கிறார்கள். மாயமாக தோன்றிய அந்த உருவம், தான் எதிர்காலத்தில் இருந்து காலப்பயணம் செய்து வந்து இருப்பதாகச் சொல்கிறார். அவரைப் பற்றி விசாரிக்கும்போது, அவர் தன்னுடைய கதையைச் சொல்கிறார்.

சால்வோ (Salvo) என்பது அவருடைய பெயர். தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து வீட்டில் ’ட்ரூகோ’ என்ற விளையாட்டை ஆடிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று விசித்திரமான ஒரு பனிப்பொழிவு துவங்குகிறது. அர்ஜெண்டீனா முழுவதுமே அந்தப் பனிப்பொழிவு படர, அனைவரும் அதன் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். யாரெல்லாம் பனிப்பொழிவின் பாதிப்புக்கு ஆளாகிறார்களோ, அவர்கள் அனைவரும் இறந்துவிட, சால்வோவின் மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் மட்டும் அன்று வீட்டில் இருந்ததால் தப்பித்து விடுகிறார்கள். பிறகுதான், அந்தப் பனிப்பொழிவு ஓர் அயல் கிரக படையெடுப்பின் துவக்கம் என்பதை உணர்கிறார்கள்.

பனிப்பொழிவிற்கு பாதிக்கப்படாதவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓர் எதிர்ப்புக் குழுவை அமைக்கிறார்கள். ஆனால், அயல் கிரக சக்திகள் ராட்சஸ அளவிலான மிருகங்கள் கொண்ட படையை ஏவி விட, இவர்கள் போராட்டம் கடும் எதிர்ப்புக்கு ஆளாகிறது. இதைத் தவிர, மனிதர்களைப் போலவே காட்சியளிக்கும் சிலர், இயந்திர மனிதர்கள் என்று பலரும் இவர்களை எதிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில், இவர்களை இயக்குவது கண்ணுக்குத் தெரியாத ஓர் அயல் சக்தி என்பதை உணரும்போதுதான் அவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது.

The Eternaut Graphic Novel Page No 350 The Eternaut Graphic Novel Cover 2

 

அவ்வளவு பெரிய எதிரியை எதிர்த்துப் போராட, ஒரு கட்டமைப்பு அவசியம். ஆனால், அவர்கள் நாட்டவர்களே எதிரிக்குத் துணைபோக, இவர்கள்

போராடுவது இன்னமும் சிக்கலாகிறது. இப்படியாகப் போகிறது எடர்நாட்டின் கதை. சரி, இது ஒரு வித்தியாசமான சயின்ஸ் பிக்‌ஷன் கதை. ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்றுதானே வியக்கிறீர்கள்? கொஞ்சமே கொஞ்சம் அர்ஜெண்டீனாவின் வரலாற்றைப் படித்தால், உண்மை தெரியும்.

ராணுவ ஆட்சியில்தான் ஸ்பெய்ன் நாட்டின் பெரும்பான்மையான ஆண்டுகள் கழிந்து வந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, அமெரிக்கா மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை அர்ஜெண்டீனா மீது செலுத்துகிறது. பனிப்போரின் உச்சத்தில், தென்னமெரிக்க நாடுகள் அனைத்தையுமே அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது. அர்ஜெண்டீனாவின் ராணுவ ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, புரட்சியை ஆயுதம் கொண்டு, இரும்புக் கரத்தால் ஒடுக்க விரும்பியது அமெரிக்கா.

  • பனிப்பொழிவை பனிப்போராகவும்
  • ராணுவ ஆட்சியை ராட்சத மிருகங்களாகவும்
  • கண்ணுக்குத் தெரியாமல் ஆட்சி செய்யும் அயல் கிரக சக்தியை அமெரிக்காவாகவும் பொருத்திப் பாருங்கள்.

ஏன் இந்த காமிக்ஸ் தடை செய்யப்பட்டது என்பது தெளிவாகப் புரியும். இதைத் தவிர, ராணுவ கொடுங்கோலாட்சியைப் பற்றிய பல விஷயங்கள் குறியீடுகளாக, உருவகங்களாக இத்தொடரில் அமைக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, இத்தொடரின் முக்கிய பாத்திரத்தின் பெயர் சால்வோ (Salvo). ஸ்பானிஷ் மொழியில் இதற்கு, “காப்பாற்று”பவன் என்று பொருள்.

ஒரு படைப்பாளி அவனது பிரதிகளில்தான் வாழ்கிறான் என்பது உண்மையானால், “காணாமல்” போன ஹெக்டோர் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் புரட்சி ஒடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஒரு ஹெக்டோர் தோன்றி, புரட்சியின் கரங்களை வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

Sunday, May 17, 2020

5 லயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்

1994ஆம் ஆண்டிறுதியில் வெளியான ஹாலிவுட் படமான லெஜண்ட்ஸ் ஆஃப் த ஃபால் (Legends of the Fall) படத்தில் ஒரு காட்சி மிகவும் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். அதைப்பற்றி விவரிக்கும் முன்பாக, அதன் பின்னணியைத் தெரிந்து கொள்வோம்.

அமெரிக்கர்கள் செவ்விந்தியர்களுக்கு இழைத்து வரும் அநீதியைக் கண்டு இராணுவத்தை விட்டு விலகி காட்டுப்பகுதியில் குடியேறும் ஆந்தனி ஹாஃப்கின்ஸ்சுக்கு மூன்று மகன்கள். மூவரும் முதலாம் உலக யுத்தத்தில் பங்கேற்கிறார்கள். இளைய சகோதரன் யுத்தத்தில் கொல்லப்பட, பிராட் பிட் தனது அண்ணனுடன் வீடு திரும்புகிறார். யுத்தத்தின் கோர சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளான நாயகன் வீட்டை விட்டு தனியே பயணம் செய்யக் கிளம்பி விடுகிறான். இன்னொரு மகனும் தந்தையுடன் சண்டை போட்டுவிட்டுக் கிளம்ப, அந்தக் குடும்பமே நிலைகுலைகிறது.

இலையுதிர் காலம் கடந்து, பனிக்காலம் முழுமையடைய, அப்போதும் நாயகனைப்பற்றிய தகவல் எதுவுமே இல்லாமல் இருக்கும் சூழலில் வசந்த காலம் மெல்ல மெல்ல கதவைத் திறந்து வரும்போதுதான் அந்தச் சம்பவம் நடக்கிறது.

வசந்த காலத்தின் முதல் நாளில் பின்புறம் காட்டு மரங்கள் தெரிய, பரந்து விரிந்த அந்த புல்வெளியில் பல குதிரைகள் ஓடி வர, அவற்றின் நடுவே நாயகனான பிராட் பிட் வருகிறார். அவருடைய நீண்ட கேசம் காற்றில் அலைமோத, குதிரைகளின் நடுவே வரும் அந்தக் காட்சி மிகவும் அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தது. சினிமோட்டோகிராஃபிக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற இந்தப் படத்தின் ஆகச் சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்று.

Tristan Returns - Legends of the Fall (1994)

 

Tristan Returns - Legends of the Fall (1994)

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்த ஆந்தனி ஹாஃப்கின்ஸ்சுக்கு பிராட் பிட்டின் மறுவருகை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க, அந்தக் குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி தழைத்தோங்குகிறது.

இங்கே வசந்தகாலம், புல்வெளியில் குதிரைகளின் பாய்ச்சல், நாயகனின் மீள்வருகை இவையனைத்துமே குறியீடுகளாகவே இருந்தாலும் நேரடியாகவே எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலேயே இவை அமைந்துள்ளது. இதைப்போன்ற ஒருசில நேரடியான குறியீடுகளைக் கொண்டு அமைந்துள்ளது லயன் காமிக்ஸ் வெளியீடான காதலும் கடந்து போகும் என்ற டெக்ஸ் வில்லரின் சாகசம்.

cover

டெக்ஸ் வில்லர்: 70 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ் ஹீரோதான் இத்தாலியின் சூப்பர் ஸ்டார். சட்ட பரிபாலனம் செய்யும் நீதிமானாக, செவ்விந்தியக் குடியினத்தவர்களின் ஒப்பற்ற தலைவனாக, தர்மத்தின் தலைவனாக விளங்கும் டெக்ஸ் வில்லர் காலத்தைக் கடந்த ஒரு காமிக்ஸ் நாயகர். மகன் கிட் வில்லர், நண்பர் கிட் கார்ஸன், செவ்விந்தியச் சகா டைகர் ஜாக் என்று ஒரு கூட்டணியாக செயல்படும் இந்தக் குழு, தீயவர்களின் சிம்ம சொப்பனம். கடந்த 1985ஆம் ஆண்டுமுதல் தமிழ் பேசி வரும் டெக்ஸ் வில்லருக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன.

இக்கதைகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மற்ற ஐரோப்பிய, அமெரிக்கக் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல்களில் இருக்கும் ஒரு முழுமை இவ்வகையான கதைகளில் இல்லை என்று பல குற்றச்சாட்டுகள் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் தொடரின் மீது முன்வைக்கப்பட்டாலும், ஆரம்பம் முதலே டெக்ஸ் வில்லரின் கதைகளின் பின்னணி மிகவும் சுவாரசியமானதாகவே இருக்கும்.

எப்படி பிரெஞ்சு காமிக்ஸான லக்கிலூக் தொடரில் அமெரிக்காவின் வரலாறு முதல் சரித்திரப் புகழ்பெற்ற பல சம்பவங்களை மையப்படுத்தி கதைகள் உருவாக்கப்பட்டதோ, அதைப்போலவேதான் டெக்ஸ் வில்லரின் கதைகளிலும் பல சுவையான தகவல்கள் நிறைந்திருக்கும். தண்ணீரைக் குடிக்கும் முன்பாக நெல்லிக்காயை சுவைப்பதைப் போல இந்தப் பின்புலத் தகவல்களைத் தெரிந்துகொண்டால், டெக்ஸ் வில்லரின் கதைகள் மிகவும் ஆர்வமூட்டுவதாக அமைந்து விடும்.

ஒருகால கட்டத்திற்குப் பிறகு சரித்திர சம்பவங்களைக் கடந்து மிகவும் பிரபலமாக வன்மேற்குத் திரைப்படங்களை கதையின் பின்னணியாகக் கொண்டு டெக்ஸ் வில்லரின் கதைகள் உருவாக்கப்பட்டன. மிகப்பிரபலமான வன்மேற்குப் படங்களின் போஸ்டர்களை டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு அட்டைப்பட மாடலாகக் கொண்டு வரைவது என்று பலவிதமாக காமிக்ஸ் ரசிகர்களைத் தொடர்ந்து வாசிப்பில் வைத்திருக்கும் போனெல்லி குழுமத்தினர் வழக்கமான டெக்ஸ் வில்லர் கதைகளைப் போல இல்லாமல் மிக மிக நீண்ட கதையமைப்பைக் கொண்ட கதைகளை டெக்ஸ் மாக்சி என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்கள்.

டெக்ஸ் வில்லரின் உற்ற தோழனான கிட் கார்ஸனின் கதையான “கார்சனின் கடந்த காலம்” போல, டைகர் ஜாக்கின் கதையைச் சொல்லும் ஒரு 340 பக்க காமிக்ஸ் கதைதான் 2018ஆம் ஆண்டில் லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளிவந்துள்ளது. அது எப்படி 340 பக்கங்களுக்கு போரடிக்காமல் ஒரு கதையைச் சொல்ல இயலும்? என்ற சந்தேகத்திற்கு அதிரடியான பதிலாக இக்கதை அமைந்துள்ளது.

வழக்கம்போல இந்தக் கதையுமே பல சரித்திரச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும், பிராட் பிட்டின் லெஜண்ட்ஸ் ஆஃப் த ஃபால் படத்தில் வரும் அந்த வசந்த கால மீள்வருகைக் காட்சி மிகவும் முக்கியமான இரண்டு இடங்களில் வந்து படிப்பவர்களின் மனதைக் கொள்ளையடிக்கிறது. அதுவும் ஒரே விதமான காட்சி, இரண்டு வகையான உணர்வுகளைத் தூண்டுவதுதான் இந்த காமிக்ஸ் கதையின் உச்சகட்டம்.

டெக்ஸ் வில்லரின் நண்பரான டைகர் ஜாக் எப்படி முதல்முறையாக டெக்ஸை சந்தித்தார் என்பதை விளக்கும் இக்கதையில், டைகர் ஜாக் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஒரு போட்டியில் பங்கேற்பார். போட்டியாளர்களில் யார் அதிகமான குதிரைகளைச் சேகரித்து வருகிறார்களோ, அவர்தான் மணப்பெண்ணை அடையும் பாக்கியவானாக முடியும் என்ற சூழலில்தான் இந்தக் கதையின் அந்த குதிரை மீதான முதல் வருகைக் காட்சி அமைகிறது. சூரியனின் கடைசி கிரகணங்கள் மறையும்போது நம்பிக்கையின் கடைசிக்கீற்றும் மறைவதாக வரையப்பட்டிருக்கும் உருவகம் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு பக்கம் என்றால், ஆரவாரமான குதிரைகள் புடைசூழ, டைகர் ஜாக் வரும் அந்த ஒரு காட்சி உருவாக்கும் உணர்ச்சி இன்னொரு பக்கம் என்று வாசிப்பவர்களின் ரசனைக்குத் தீனி போடும்விதமாக இக்காட்சி அமைந்துள்ளது. Page No 31 இதைப்போன்றதொரு காட்சி கதையின் முடிவில் வருகிறது. தனக்கான சோகங்களைக் கடக்க முடிவெடுக்கும் டைகர் ஜாக், மேலே சொல்லப்பட்ட லெஜண்ட்ஸ் ஆஃப் த ஃபால் படத்து நாயகன் பிராட் பிட் போல அனைவரையும் பிரிந்து சென்று விடுகிறார். அவரது வருகைக்காக பருவங்களைக் கடந்து டெக்ஸ் காத்திருக்க, வசந்த காலத்து முன்பகல் பொழுதொன்றில் குதிரை மீதமர்ந்து வரும் அவரது மீள்வருகை ஏற்படுத்துவது இன்னொருவகையான உணர்ச்சி. Page No 334 

ஒவ்வொரு கதையிலும் அதை சிறப்பான, மறக்க முடியாததொரு கிளாசிக் ஆக மாற்றும் ஒரு கட்டம் இருக்கும். அப்படியான ஒரு கட்டத்தை வலிந்து திணிக்காமல், கதையின் போக்கிலேயே வரவழைத்தால், அந்தக் கதாசிரியரின் திறமையை நாம் பாராட்டலாம். இந்தக் கதையில், கதையை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தும் தருணம் இதுதான்.

டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் புத்தகங்களை வாங்க: http://www.lion-muthucomics.com/23-tex-willer

Thursday, January 04, 2018

1 ஆரம்பம்! Marvel Comics - The Rise of Black Panther Part 1

Ta Nahishi Coates2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால ஆங்கிலப் புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளின் இனவாத அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் பல விருதுகளைப் பெற்றது. அதை எழுதியவர்தான் ட நஹஷி கோட்ஸ். மார்வல் காமிக்ஸ்சின் பிளாக் பான்த்தர்தான் (Black Panther) உலகின் முதல் வெள்ளையரல்லாத காமிக்ஸ் சூப்பர் ஹீரோ. 2015ல் ட நஹஷி கோட்ஸை வைத்து ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தார்கள். மிக அதிகமாக விற்ற காமிக்ஸ் புத்தகம் என்று விற்பனையில் சாதனையைப் படைத்தது. சமீபத்தில் வந்த மார்வல் திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த பிளாக் பான்த்தரின் தனி சாகச திரைப்படம் 2018 ஃபெப்ரவரியில் வர இருக்கும் வேலையில், ட நஹஷி கோட்ஸ் ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பித்திருக்கிறார்.

#KingViswaDailyBookIntro

#KingViswa365Days365Books

04th Jan 2018 – Marvel Comics – Black Panther

Marvel Comics Rise of the Black Panther 01 Cover 1அறிமுகம்: வகான்டா என்ற நாட்டில் மட்டும்தான் வைப்ரேனியம் என்ற ஒரு அரிய உலோகம் கிடைக்கிறது. அந்த உலோகத்தால், உலகின் மிக முன்னேறிய சமூகமாக, விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்ற நாடாக வகான்டா உருவெடுத்தது. வைப்ரேனியத்தைக் கைப்பற்ற பலரும் முயல, வகான்டாவின் காவலனாக கருஞ்சிறுத்தை (ப்ளாக் பான்த்தர்) என்ற நாயகன் உருவெடுக்கிறான். வேதாளர் (The Phantom) கதைகளில் வருவதைப்போல, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் ப்ளாக் பான்த்தர் ஆக இருக்கிறார்கள். ப்ளாக் பான்த்தர்தான் நாட்டின் அதிபரும் கூட. இப்போதைய ப்ளாக் பான்த்தர் ட்டி சாலா என்ற இளைஞர் இருக்கிறார்.

தலைப்பு: The Rise of Black Panther Part 1

கதாசிரியர்: ட நஹஷி கோட்ஸ் & இவான் நர்சிஸ்

ஓவியர்: பால் ரெனார்ட்

கலரிஸ்ட்: ஸ்டெஃபான்

லெட்டரிஸ்ட்: ஜோ சபீனோ

பதிப்பாளர்: மார்வல் காமிக்ஸ்

எடிட்டர்: வில் மாஸ்

பக்கங்கள்: 24

விலை: 3.99 $

வெளியீடு (ஆன்லைன் & அச்சில்): ஜனவரி 3, 2018 (நேற்று)

வயது வரம்பு: 9+

One Liner: ப்ளாக் பான்த்தரின் ஆரம்பம் – புதிய வாசகர்களுக்காக!!

Marvel Comics Rise of the Black Panther 01 Page No 03

கதைச் சுருக்கம்: பேட்மேனின் ஆரம்பத்தை, அதாவது சிறுவன் ப்ரூஸ் வேய்ன் எப்படி பேட்மேனாக மாறினான் என்பதை ஒவ்வொரு எழுத்தாளரும் அவருக்கான பாணியில் பலமுறை சொல்லிவிட்டார்கள். ஒவ்வொரு தசம ஆண்டிலும் இது நடக்கும். புதிய தலைமுறை வாசகர்களுக்காக இப்படி புதிய அறிமுகங்கள் தேவைப்படுகின்றன. இதே ஸ்டைலில், இந்தத் தலைமுறை வாசகர்களுக்காக மார்வல் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ட நஹஷி கோட்ஸ். ஏற்கனவே தனது புதிய பாணியிலான கதை சொல்லும் உத்தியால் பல லட்சம் வாசகர்களைக் கவர்ந்த இவர், நமது காலத்து ப்ளாக் பான்த்தரின் கதையைச் சொல்ல, அவரது தந்தையான டி சாகாவின் ஆட்சிக் காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்.

Marvel Comics Rise of the Black Panther 01 Page No 04

இரண்டாம் உலகப் போரின்போது, கேப்டன் அமெரிக்கா வகான்டாவில் நுழைய, அவருடன் அப்போதைய ப்ளாக் பான்த்தரான டி சாகா மோதுகிறார். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நண்பர்களாகிறார்கள். வகான்டாவை விட்டு கேப்டன் அமெரிக்கா பிரியும்போது, அவருக்கு தனது நினைவுப் பரிசாக, ஒரு வைப்ரேனியத்தைக் கொடுக்கிறார், டி சாகா. அதன் விளைவுகள்தான் இந்தக் கதையின் பேசுபொருள்.

Marvel Comics Rise of the Black Panther 01 Page No 14

Verdict: (வழக்கமான) ட நஹஷி கோட்சின் வசனங்கள் அதிகம் கொண்ட, ஆனால், கிளாசிக் படைப்பு.

குறிப்பு: ஆறு பாகங்களைக் கொண்ட தொடராக ஆரம்பித்துள்ளது இந்தக் கதை. ஜேஸன் ஆரோனின் மார்வல் லெகசி முதல் பாகத்தையும், சீக்ரெட் வார்ஸ் தொடரையும் தொடர்ந்து படித்து வருபவர்கள் இந்த முதல் பாகத்தின் முழுமையான வீச்சைப் புரிந்துகொள்ள முடியும். அதற்காக, மற்றவர்கள் படித்தால், புரியாதா? என்று கேட்க வேண்டாம். இதுவரையில் ப்ளாக் பான்த்தர் காமிக்சைப் படிக்காதவர்கள் இந்தைப் படிக்க ஆரம்பித்தாலும் எளிமையாக புரிந்து கொள்ள இயலும்.

Marvel Comics Rise of the Black Panther 01 Page No 20

ஆன்லைனில் வாங்க : https://www.comixology.com/Rise-of-the-Black-Panther-2018-1-of-6/digital-comic/598145?ref=c2VhcmNoL2luZGV4L2Rlc2t0b3Avc2xpZGVyTGlzdC90b3BSZXN1bHRzU2xpZGVy

Wednesday, January 03, 2018

2 பிரம்மா DC Comics – Batman 38 - The Origin of Bruce Wayne

DC Comics Batman Issue No 038 cover 2உலகின் தலைசிறந்த காமிக்ஸ் / கிராஃபிக் நாவல் பட்டியலில் வாட்ச்மென் கதைக்கு எப்போதுமே இடமுண்டு. அதை உருவாக்கிய ஆலன்மூர், பின்னர் பேட்மேனின் தலைசிறந்த கதைகளில் ஒன்றான The Killing Jokeஐ எழுதும்போது ஒரு விஷயம் சொன்னார். அதாவது, வாட்ச்மென்னில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் மறு உருவாக்கம்தான் இந்த கில்லிங் ஜோக்கின் அடிப்படை. இது இப்படி இருக்க, மேலே சொன்ன இரண்டு காமிக்ஸ்களுக்கும் மரியாதை செய்யும்விதமாக ஒரு காமிக்ஸைப் படைத்தால், எப்படி இருக்கும்?

#KingViswaDailyBookIntro

#KingViswa365Days365Books

03rd Jan 2018 – DC Comics – Batman Issue No 38

அறிமுகம்: எழுத்தாளர் டாம் கிங் சமீப காலமாக ரெகுலராக பேட்மேன் கதைகளை எழுதி வருகிறார். ஆனால், அவர் எழுதுவது எல்லாமே நீண்ட வரிசையான தொடர்கள்தான். இந்த சூழலில் அவரிடம் ஒரே ஒரு புத்தகத்தில் முடியும் ஒரு பேட்மேன் கதையைப் படைக்கச் சொன்னால், எப்படி இருக்கும்? அதைத்தான் டிசி காமிக்ஸ் நிர்வாகம் செய்துள்ளது. ஆனால், டாம் கிங் படைத்த இந்த ஒன் ஷாட் காமிக்ஸ் காலையில் இருந்து உலக அளவில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளில் என்னை அசர அடித்த ஒரு காமிக்ஸ் என்றுகூடச் சொல்வேன்.

DC Comics Batman Issue No 038 Page No 005

மேலும், அதிரடியாக ஆக்‌ஷன் கதைகள் மட்டும்தான் என்று இருந்த பேட்மேனின் கதைக்களத்தை மாற்றி, அவரை ஏன் உலகின் தலைசிறந்த துப்பறிவாளர் என்று அழைக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக கதையை எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் அதிரடி ஆக்‌ஷன் இருந்தாலும், பேட்மேன் காற்றிலிருந்து பொருட்களை வரவழைக்கும் மாயவித்தைக்காரன் போல க்ளூக்களைக் கண்டுபிடித்து, அட்டகாசமாக துப்பறிகிறார்.

DC Comics Batman Issue No 038 cover 1தலைப்பு: The Origin of Bruce Wayne

கதாசிரியர்: டாம் கிங்

ஓவியர்: ட்ராவிஸ் மூர்

கலரிஸ்ட்: க்ளேட்டன் கௌள்ஸ்

லெட்டரிஸ்ட்: டிம் சேல்

பதிப்பாளர்: டிசி காமிக்ஸ்

எடிட்டர்: ஜேம்ஸ் ரிச்

பக்கங்கள்: 36

விலை: 2.99 $

வெளியீடு (ஆன்லைன் & அச்சில்): ஜனவரி 3, 2018 (இன்று)

வயது வரம்பு: 12+

One Liner: பேட்மேனின் ஆரம்பம் – புதிரானதொரு மறு ஆரம்பம்!

கதைச் சுருக்கம்: கோத்தம் நகரில் ஒரு சிறுவனின் பெற்றோர் கொல்லப்படுகின்றனர். ஆதரவின்றி இருக்கும் அந்தச் சிறுவனுக்கு ப்ரூஸ் வேய்ன் (இவர்தான் பேட்மேனும் கூட) அடைக்கலம் அளிக்கிறார். அதே சமயம் நகரில் தொடர்ச்சியாக பல கொலைகள் நடக்கிறது. அந்தக் கொலைகள் செய்யப்பட்ட விதம் சிறையில் இருக்கும் விக்டர் ஸாஸ் பாணியிலேயே இருக்கிறது. ஆனால், கடுங்காவல் சிறையில் இருக்கும் விக்டரால் எப்படி வெளியே வந்து இந்தக் கொலைகளைச் செய்ய இயலும்?

DC Comics Batman Issue No 038 Page No 010

3 க்ரிட் பேனல் பாணியிலான ஓவியங்கள் மூலம் ஆலன் மூர் மற்றும் டேவ் கிப்பன்சுக்கு மரியாதை செய்வது முதல் விக்டர் ஸாசை மொட்டைத் தலையாக இல்லாமல், பழைய ஸ்டைலில் வரைந்திருப்பது, கமிஷனர் கோர்டன், ஆல்ஃப்ரெட், செலீனா கைல் என்று பேட்மேனின் ஒட்டுமொத்தக் குழுவையும் இந்த ஒரு கதையிலேயே கொண்டு வந்தது என்று ரசிக்க வைக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

Verdict: ஒவ்வொரு பேட்மேன் ரசிகனும் படிக்க வேண்டிய ஒன்று!!!

DC Comics Batman Issue No 038 Page No 012

குறிப்பு: மதியத்தில் இருந்து இதுவரைக்கும் மூன்று தடவை இக்கதையைப் படித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் புதிய அடையாளங்களை, குறியீடுகளைக் கொண்ட புதிய படைப்பாகவே எனக்குப் படுகிறது. குறிப்பாக, கதையின் முடிவில் “ப்ரூஸ் வேய்னை யாருக்குத்தான் பிடிக்காது?” என்ற ஒரு கேள்வி இனிமேல் பேட்மேனின் சரித்திரத்தில் மிக முக்கியமானதொரு கேள்வியாக அமையப் போகிறது.

DC Comics Batman Issue No 038 Page No 016

ஆன்லைனில் வாங்க :

https://www.comixology.com/Batman-2016-38/digital-comic/606314?ref=c2VhcmNoL2luZGV4L2Rlc2t0b3Avc2xpZGVyTGlzdC9pdGVtU2xpZGVy

Tuesday, January 02, 2018

0 எந்திரன் 0.0–AfterShock Comics–Monstro Mechanica 1

Monstro Mechanica 001-002லியானார்டோ டா வின்சியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? முதலில், அது டா வின்சி இல்லை. ட வின்ச்சி. ஆக, நமக்கு அவரது பெயரே சரியாகத் தெரியாதபோது, மற்ற விவரங்கள் எல்லாம் எப்படியென்று தெரியவில்லை. ஒருவேளை, அஸாசின்ஸ் க்ரீட் வீடியோ கேமில் அவரது மறுபக்கத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கும். அவர்தான் மோனாலிஸாவை வரைந்தவர் என்பதைத் தாண்டி, அவர்தான் ஹெலிகாப்டர், பாராச்சூட், பீரங்கி ஆகியவற்றை உருவாக்கியவர் என்பது தெரியுமா?

#KingViswaDailyBookIntro

#KingViswa365Days365Books

02nd December 2018 – Aftershock Comics – Monstro Mechanica – Part 1

Aftershock Comics Monstro Mechanica Issue 001 Coverஅறிமுகம்: லியானர்டொ ட வின்ச்சி ஒரு ஓவியர், சிற்பக் கலைஞர், பொறியாளர், அனாட்டமிஸ்ட், கார்த்தோகிராஃபர் & திட்டவடிவ ஏவியேட்டர். இது மட்டுமல்ல, அவரது கண்டுபிடிப்புகளில் பலருக்கும் தெரியாத ரகசியம் ஒன்று இருக்கிறது. முதன்முதலாக ஒரு இயந்திர மனிதனை உருவாக்கியது அவர்தான். அந்த இயந்திர மனிதனை மையமாக வைத்து ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.

தலைப்பு: My Robot Will Save me

கதாசிரியர்: பால் அல்லோர்

ஓவியர்: க்ரிஸ் ஈவன்ஹ்யூஸ்

கலரிஸ்ட்: ஷான் வெய்ர்ஸ்

லெட்டரிஸ்ட்: பால் அல்லோர்

பதிப்பாளர்: ஆஃப்டர்ஷாக் காமிக்ஸ்

எடிட்டர்: மைக் மார்ட்ஸ்

பக்கங்கள்: 36

விலை: 3.99 $

வெளியீடு (ஆன்லைன் & அச்சில்): டிசம்பர் 13, 2017.

வயது வரம்பு: 9+

One Liner: லியானர்டோ ட வின்சியின் மறுபக்கம்!!!

Aftershock Comics Monstro Mechanica Issue 001 Page No 007

கதைச் சுருக்கம்: கதையின் ஆரம்பத்தில், போப்-பின் ஆட்கள் சிலர் ட வின்ச்சியைக் கடத்த வருகிறார்கள். வீரத்துடன் போராடும் ட வின்ச்சி, எதிரிகள் நிறைய பேர் இருப்பதால், பிடிபடுகிறார். அவரை ஒரு வண்டியில் கடத்தும்போது, தெலுங்கு சினிமாவில் ஹீரோ எண்ட்ரிக்கான காட்சி போல, அவரது உதவியாளரான இஸபெல் அங்கே வருகிறார். அந்தக் காலத்திலேயே ஆண்கள் போல உடையணிந்து பெண்ணியம் பேசும் இஸபெல் இங்கே ஹீரோ இல்லை. அவரது உத்தரவின் பேரில் ஒரு இயந்திர மனிதன் ஓடி வந்து, அதிரடியாக ட வின்ச்சியைக் காப்பாற்றுகிறது. அடித்து வீழ்த்தப்பட்ட அந்தக் குழுவில் இருந்த அனைவருமே தற்கொலை செய்துகொண்டு இறந்து விடுகின்றனர்.

Aftershock Comics Monstro Mechanica Issue 001 Page No 008

அதன் பிறகு, கதை அந்தக் கால அரசியலுக்கு மாறுகிறது. அலுமினிய சுரங்கங்களுக்கு உரிமை கொண்டாடுவது, போப்பின் ஆட்கள் செய்யும் அரசியல், மாக்கியவல்லியைப் பற்றிய குறிப்புகள், வால்ட்டேராவை முற்றுகையிடுதல் என்று பல விஷயங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் வருகின்றன. கவனத்தைக் கோரும் வாசிப்பு இங்கே தேவைப்படும்.

Aftershock Comics Monstro Mechanica Issue 001 Page No 015

அதன் பிறகு, அந்தக் காலத்திய ஆணாதிக்கம் பற்றிய ஒரு சம்பவமும் ட வின்ச்சி எப்படிப்பட்ட ஒரு பெண்ணியவாதி என்பதை உணர்த்தும் ஒரு விவாதமும் நடக்கிறது. முதல் மோதலில் காயமுற்ற இயந்திர மனிதனை இஸபெல்லா சரி செய்யும்போது அவர் ஒரு மிக முக்கியமான ஸ்டேட்மெண்ட்டை முன்வைக்கிறார்.

Aftershock Comics Monstro Mechanica Issue 001 Page No 023

“எரிபொருளால் நிரப்பப்பட்ட ஒரு கலனாக இவ்வுலகம் இருக்கையில், கையில் தீக்குச்சியுடன் ட வின்ச்சி நின்று கொண்டிருக்கிறார்”. இவ்வுலகம் அவரது கைகளால் தீப்பற்றி எரியும்போது, நீ (இயந்திர மனிதன்)தான் அங்கே வர வேண்டும். ஆனால், அது அவரைக் காப்பாற்றவா? அல்லது, அவரை தடுத்து நிறுத்துவதற்கா என்பதுதான் எனக்குத் தெரியவில்லை”.

Aftershock Comics Monstro Mechanica Issue 001 Page No 028

Verdict: வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், சிறப்பு!!!!

குறிப்பு: கடந்த 20 ஆண்டுகளாக மார்வல் மற்றும் டிசி காமிக்ஸில் பல முக்கியமான காமிக்ஸ் தொடர்களுக்கு வடிவம் கொடுத்தவர் மைக் மார்ட்ஸ். பேட்மேன், எக்ஸ்மென், கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி போன்ற தொடர்களில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் தனியாக இந்த ஆஃப்டர்ஷாக் காமிக்சை ஆரம்பித்தார். விலையில் ஆரம்பித்து, வடிவமைப்பில், உள்ளடக்கத்தில் என்று பல மாற்றங்களுடன் இதை நடத்தி வருகிறார். இவருடன் நட்பில் இருந்த பல ஜாம்பவான்கள் இவருக்கு துணையாக இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நல்ல பிராண்டை உருவாக்கி வருகிறார் மைக்.

ஆன்லைனில் வாங்க :

https://www.comixology.com/Monstro-Mechanica-1/digital-comic/579790?ref=c2VhcmNoL2luZGV4L2Rlc2t0b3Avc2xpZGVyTGlzdC90b3BSZXN1bHRzU2xpZGVy

Monday, January 01, 2018

0 ஜூனியர் துப்பறிவாளன்: Action Lab Comics – Kid Sherlock

Kid Sherlock Profile 1இப்போது திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் அசத்தி வரும் காமிக்ஸ் ஹீரோக்கள் எல்லோரும் சிறுவயதில் சுட்டிப் பையன்களாக இருக்கும்போது என்ன எல்லாம் செய்திருப்பார்கள்? நிச்சயமாக நம் அனைவருக்குமே இதுபோன்ற கற்பனைகள் வருவதுண்டு. அதனால்தான் நமது கார்ட்டூன் சேனல்களில் கிருஷ்ணர், பீமன் போன்ற இதிகாசக் கதாபாத்திரங்களை சுட்டிகளாக வைத்து தொடர்கள் உருவாக்கப்பட்டன. இதைப்போலவே, அமெரிக்காவிலும் பல காமிக்ஸ் ஹீரோக்களை சுட்டிக் குழந்தைகளாக வைத்து பல புதிய தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டு, விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

பேட்மேன், சூப்பர் மேன், மார்வல் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ் குழு என்று பல ஹீரோக்களை சுட்டிகளாக, அதாவது அவர்கள் சுட்டிக்குழந்தைகளாக இருந்தபோது செய்த சேட்டைகளைப் பற்றிய காமிக்ஸ்கள் தொடர்ந்து ஹிட் ஆக, இப்போது இதைப்போல பல கதாபாத்திரங்களை சுட்டிகளாக வைத்து புதிய தொடர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு புதிய படைப்புதான் ஷெர்லாக் ஹோம்ஸ். இவரை சுட்டிப் பையனாக வைத்து ஆக்‌ஷன் லேப் காமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள காமிக்ஸ் தொடரான குட்டி ஷெர்லாக் எப்படி இருக்கிறது?

#KingViswaDailyBookIntro

#KingViswa365Days365Books

01st Jan 2018 – Action Lab Comics – Kid Sherlock

Kid Sherlock Posterஅறிமுகம்: லண்டனில் 221 B, பேக்கர் ஸ்ட்ரீட் என்ற முகவரியில் வசித்து வந்ததாக கதைகளில் இருக்கும். மிகக் கூர்மையான சிந்திக்கும் திறன் பெற்ற இந்த துப்பறிவாளரின் நண்பர், டாக்டர் வாட்ஸன். இன்ஸ்பெக்டர் லெஸ்ட்ரேட் மற்றும் மிஸஸ் ஆகியோரும் கதையில் வரும் இதர முக்கிய கதாபாத்திரங்கள். கதையில் மர்மமான சம்பவங்கள் நடக்க, அதை கூர்ந்து கவனித்து துப்பறிவதுதான் ஷெர்லாக்கின் வேலை. ஷெர்லாக்கிற்கு ஒரு தம்பியும் இருக்கிறார். இவருடன் அடிக்கடி மோதும் வில்லனின் பெயர் புரபெஸர் மோரியார்ட்டி. உலகம் முழுவதும் பிரபலமான ஒரு துப்பறிவாளர் என்று ஷெர்லாக் ஹோம்ஸைக் கூறலாம்.

தலைப்பு: Case File 1: The Smell

கதாசிரியர்: Justin Philips (ஜஸ்டின் பிலிப்ஸ்)

ஓவியர்: Sean Miller (ஷான் மில்லர்)

லெட்டரிஸ்ட்: லெஸ்லி அட்லான்ஸ்கி

பதிப்பாளர்: ஆக்‌ஷன் லேப் காமிக்ஸ், அமெரிக்கா.

எடிட்டர்: ஷான் காப்பரின்

பக்கங்கள்: 32 முழு வண்ணப் பக்கங்கள்

விலை: 2.99 $

வெளியீடு : ஜூன் 14, 2017 (முதல் இதழ்)

வயது வரம்பு: 5+

One Liner: துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸின் ஆரம்பம்!

CS 14 01st July 2017 Kid Sherlock Title Pageகுட்டி ஷெர்லாக்: சூப்பர்மேனின் நண்பரான போட்டோகிராஃபர் ஜிம்மி ஓல்செனை வைத்து இதுபோல ஒரு சுட்டித் தொடரை தயாரிக்கத்தான் முதலில் ஜஸ்டினிடம் வந்தார்கள். ஆனால், அந்தத் தொடர் விவாதத்துடனே நின்றுவிட, அதன்பிறகு ஓவியர் ஷான் மில்லரைச் சந்தித்து, ஆன்லைனில் ஒரு காமிக்ஸ் தொடரை வெளியிட திட்டமிட்டார், எழுத்தாளர் ஜஸ்டின். ஓவியரான மில்லர் சம்மதிக்க, உடனடியாக குட்டி ஷெர்லாக்கைப் பற்றி தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார், ஜஸ்டின்.

நாய்க்குட்டியாக, வாட்ஸன்: மற்ற சுட்டி ஹீரோக்களின் தொடருக்கும் நமது தொடருக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜஸ்டின், கதையின் மிக முக்கிய பாத்திரமான டாக்டர் வாட்ஸனை ஒரு நாயாக மாற்றினார். அதுவும் சாதாரண நாயல்ல. பேசும் சக்தி பெற்ற, மற்ற மாணவர்களைப் போல ஸ்கூலுக்குப் போய் படிக்கும் ஒரு நாயாக மாற்றினார். இப்படி மாற்றுவதற்கு அவர் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்.

  • சுட்டிகளுக்கு செல்லப் பிராணிகள், குறிப்பாக நாய் என்றால், மிகவும் பிடிக்கும்.
  • ஜஸ்டின் கால்வின் & ஹாப்ஸ் தொடருக்கு மரியாதை செய்யும்விதமாக இப்படி அமைத்திருக்கிறார்.

துணை கதாபாத்திரங்கள்: ஷெர்லாக்கின் வீட்டுரிமையாளரான மிஸஸ் ஹட்ஸனை ஆசிரியராகவும், இன்ஸ்பெக்டர் லெஸ்ட்ரேட் பாத்திரத்தை ஸ்கூல் பிரின்சிபலாகவும் மாற்றி அவர்களையும் கதையோட்டத்தில் இணைத்திருக்கும் விதம் பாராட்டுதற்குரியது. ஷெர்லாக்கின் சகோதரனை மூன்றாவது கதையில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

CS 14 01st July 2017 Kid Sherlock Cover

கதைச்சுருக்கம்: ஷெர்லாக்கின் வகுப்பறையில் தினமும் ஒரு கெட்ட வாசனை அடிக்கிறது. மாணவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அறை முழுவதும் சோதனை செய்தாலும், அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதே வாசனை வருகிறது.

  • இந்த வாசனை எங்கிருந்து வருகிறது?
  • இதற்குக் காரணம் யார்?
  • அது எப்படி என்ன சோதனை செய்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை?
  • ஷெர்லாக்கால் இதை எப்படி கண்டுபிடிக்க முடிந்தது?

Verdict: அட்டகாசம்.

CS 14 01st July 2017 Kid Sherlock  Story 1st Page

குறிப்பு: போட்டிகள் நிறைந்த இப்போதைய பள்ளி மாணவர்களுக்கு தனித்திருப்பதும், மற்றவர்களால் கிண்டல் செய்யப்படுவதுமே மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதை மனதில் கொண்டே வாட்ஸனை ஒரு நாயாகப் படித்தார், ஜஸ்டின். அனைவரும் மனிதர்களாக இருக்கும் ஒரு பள்ளியில் தான் மட்டும் ஒரு நாயாக இருப்பதால், வாட்ஸனிடம் யாருமே பழகத் தயங்குகிறார்கள். அதைப்போலவே, வாட்ஸனுக்கு நண்பர்கள் இல்லாததால், வகுப்பில் இருக்கும் முரட்டு மாணவனான கைல், வாட்ஸனைக் கிண்டல் செய்கிறான். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இப்போது வகுப்பறையில் சர்வசாதாரணமாக நடக்கிறது என்பதால், அதை கதையில் புகுத்தி, வாட்ஸன் எப்படி இதையெல்லாம் கடந்து நணபர்களைப் பெறுகிறான் என்று அழகாகச் சொல்லி இருக்கிறார், ஜஸ்டின்.

CS 14 01st July 2017 Kid Sherlock pAGE 06

ஆன்லைனில் வாங்க: https://www.amazon.in/Kid-Sherlock-Vol-Justin-Phillips-ebook/dp/B076JXWBXY/ref=sr_1_1?ie=UTF8&qid=1514816799&sr=8-1&keywords=action+lab+comics+%E2%80%93+kids+sherlock

Sunday, December 31, 2017

3 Frew Comics 1748–The Phantom – Terror’s Mutiny

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Cover 1வேதாளர் (The Phantom) காமிக்ஸ் கதைகள் தினசரி வரும் ’டெய்லி ஸ்ட்ரிப்’ ஆகவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ’சன்டே ஸ்ட்ரிப்’ ஆகவும் உலகமெங்கும் தினசரிகளில் வந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஃப்ரூ என்ற காமிக்ஸ் நிறுவனம் 1948ஆம் ஆண்டுமுதல் இவரது கதைகளை கருப்பு வெள்ளையில் வெளியிட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டிறுதியில் பல சிக்கல்களால் நிற்கும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டுதான் டட்லி ஹொகார்த், ரெனே வொய்ட் மற்றும் க்ளென் ஃபார்ட் ஆகியோர் 2016ல் ஃப்ரூ காமிக்ஸை எடுத்து நடத்த ஆரம்பித்தார்கள்.

இந்த வேதாளரது கதைகளை 2005ஆம் ஆண்டிலிருந்து வரைந்து வந்தவர் ஓவியர் பால் ரயான். இவர் 2016, மார்ச் 77ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது நினைவாக, இந்த ஸ்பெஷல் காமிக்ஸை ஃப்ரூ வெளியிட்டது. வழக்கமாக, வண்ண அட்டைப்படத்துடன் கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் கதைகளை வெளியிடும் ஃப்ரூ, கருப்பு வெள்ளை அட்டையுடன் முழு வண்ணக் காமிக்ஸை முதன்முறையாக ரயானின் நினைவாக வெளியிட்டது.

#KingViswaDailyBookIntro

#KingViswa365Days365Books

31st December 2017 – Frew Comics Phantom – Terror’s Mutiny

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 03அறிமுகம்: முதல் வேதாளர் கிரிஸ்டோபர் வாக்கர், அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸுடன் பணிபுரிந்தவரின் மகன். 20-வது வயதில் அப்பாவுடன் கப்பலில் சென்றபோது கடற்கொள்ளை குழுவால் தாக்கப்பட்டு, கப்பல் மூழ்கிவிடுகிறது. அந்தக் கப்பலில் இருந்து தப்பிய ஒரே ஆள் வாக்கர் என்ற வேதாளர். அவரை பாந்தர் எனும் ஆப்பிரிக்கப் பிக்மி (குள்ள) இனத்தவர் காப்பாற்றுகின்றனர். அப்போது அநீதியையும், கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவதாக உறுதி எடுத்துக்கொள்கிறார் வேதாளர். அதற்குப் பிறகு வாக்கர் என்ற வேதாளரும் அவருடைய வாரிசுகளும் குற்றங்களை எதிர்த்துப் போராடும் நாயகர்களாக வலம் வருகிறார்கள். வெளியுலகைப் பொறுத்தவரையில் வாக்கரும் அவருடைய வாரிசுகளும் ஒரே ஆள் என்றே நம்புகிறார்கள். அதனால் வேதாளர் சாகாவரம் பெற்றவர் போலவும், அவரை கொல்லவே முடியாது என்ற கருத்தும் பரவியுள்ளது. இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் 21-வது வேதாளர். ஹீரோ என்ற குதிரையில்தான் வேதாளர் வருவார், எப்போதும் அவருடன் டெவில் என்ற நாயும் உடன் இருக்கும்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 20வேதாளரின் மோதிரங்கள்: வேதாளரின் வலது கையில் இருப்பது மண்டையோட்டு சின்னம் கொண்ட கபால மோதிரம். இதன் மூலம் வேதாளர் ஒருவரைக் குத்தினால், அவரது முகத்தில் என்றுமே அழியாத சின்னமாக அது பதிந்துவிடும். இடது கையில் இருப்பது அனைவரும் மதிக்கும் நல்ல சின்னம். வேதாளரின் நண்பர்கள் என்று அர்த்தம் கொண்ட இச்சின்னம், காலம்காலமாக மக்களைக் காப்பாற்றும். இது எங்கே இருக்கிறதோ அங்கே வேதாளர் இருக்கிறார், அந்த இடம் அவரது பாதுகாப்பில் உள்ளது என்று அர்த்தம்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Cover 2தலைப்பு: Terror’s Mutiny

உருவாக்கியவர்: லீ ஃபாக்

கதாசிரியர்: டோனி டி பால்

ஓவியர்: பால் ரயான்

பதிப்பாளர்: ஃப்ரூ காமிக்ஸ்

எடிட்டர்: டட்லி ஹொகார்த்

பக்கங்கள்: 36 முழு வண்ணப் பக்கங்கள்

விலை: 278 ரூபாய்

வெளியீடு (அச்சில்): ஏப்ரல் 2016

வயது வரம்பு: 9+

One Liner: அதிபரைக் கடத்த நினைக்கும் தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்கும் வேதாளர்!

கதைச் சுருக்கம்: பெங்கல்லாவின் அதிபர் லமான்டா லுவாகா ஃபெலிகன் கடற்கரைக்கு விஜயம் செய்யும்போது, கப்பற்படை கமாண்டரிடம் அவரைக் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக நம்ப வைக்கின்றனர். அதைப்போலவே, ராணுவத்திடமும் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் இருக்கும்போது, அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளே அவரைக் கடத்துகின்றனர்.

Frew 1748 Paul Ryan Tribute Terror's Mutiny Page No 29

ஆனால், அதிபர் தீவிரவாதிகளின் கையில் சிக்குண்டு இருக்கிறார் என்பதே இரு படையினருக்கும் தெரியாமல் இருக்க, வழக்கம்போல வேதாளர் அங்கே வருகிறார். எதற்காக அதிபரைக் கடத்த திட்டமிட்டார்கள் என்பதை அறிந்து அந்த சதியை முறியடிக்கிறார் வேதாளர்.

Verdict: வேதாளரின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.

குறிப்பு: வேதாளரை உருவாக்கிய லீ ஃபாக்கின் மரணத்திற்குப் பிறகு அவரது கதைகளை எழுதி வருபவர் டோனி டி பால். வேதாளரின் எதிரிகளிலேயே மிகக் கொடூரமானவனாகக் கருதப்படும் சாட்டு (பைதன்) என்ற பாத்திரத்தை உருவாக்கியவர் இவர்தான். இந்தக் கதையிலும் பைதன் வருகிறார். இந்தக் கதை 21 ஏப்ரல் 2014 முதல் 23 ஆகஸ்ட் 2014 வரை தினசரி நாளிதழில் வெளி வந்தக் கதை.

ஆன்லைனில் வாங்க : https://www.phantomcomic.com.au/collections/all/products/issue-1748-kiwi-cover-2016

Tuesday, August 22, 2017

5 இரவே.. இருளே.. கொல்லாதே! (கிராஃபிக் நாவல் அறிமுகம்)

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Front Coverகதைச் சுருக்கம்: ஹாலிவுட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது நேரிடும் ஒரு விபத்தினால், ஒரு சிறிய நகரில் தங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு வினையூக்கியாக மாறி தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார்? வேட்டை ஆடப்படுவது யார்? என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு ஆரம்பிக்கிறது.

Child Abuseக்கு ஆளாகி அதனால் மனப்பிறழ்வு நிலையிலிருக்கும் கதைநாயகி, கையாலாகாத ஒரு காவல் தலைவர், 25 வருடங்களாகத் தலைதூக்க காத்திருக்கும் ஒரு துரோகம், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பணக்காரன், பேய் படங்களை மட்டுமே திரையிடும் ஒரு சினிமா தியேட்டர், அந்த தியேட்டர்காரனின் மர்மமான கடந்த காலம், அந்நகரத்தின் மர்மங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கும் ஒரு தெருக்கிழவன், மன்னிப்பு வழங்கமுடியாத பாவங்களுக்கு துணைபோன ஒரு பாதிரியார், 25 வருடங்களாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பழிவாங்கும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத எதிர்நாயகன் என்று விசித்திரமான கதாபாத்திரங்கள் நிறைந்த இக்கதையின் முடிவு ”வெளிப்படையாக தெரிவதை நம்பாதே” என்ற சித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Author Joel Colledeவிமர்சன பார்வை: புகழ்பெற்ற பேய்க்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் இரண்டு அதி தீவிர ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு க்ராபிஃக் நாவலை உருவாக்கினால், அதன் கரு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தேவையே இல்லை.

ஜோயல் கல்லெட் எழுதி, டெனிஸ் ஓவியம் வரைந்திருக்கும் இரவே.. இருளே.. கொல்லாதே! ஒரு அமானுஷ்ய த்ரில்லர் வகை க்ராபிஃக் நாவல். இதில் குறியீடாக பல விஷயங்கள் உணர்த்தப்படுவதாலும், கதை நான்-லீனியராக சொல்லப்பட்டு இருப்பதாலும் இந்த க்ராபிஃக் நாவலை மேலோட்டமாகப் படிப்பதைத் தவிர்த்து ஆழ்ந்து, கூர்ந்து கவனித்து படிப்பது அவசியமாகிறது. மேலும் பிரபலமான ஹாலிவுட் டீவி தொடர்களுக்கும், சினிமாக்களுக்கும் இடையிடையே Tribute செய்யும் வகையில் காட்சிகள் பின்னப்பட்டுள்ளதால், அதைப்பற்றியும் ஓரளவுக்கு விவரம் சேகரித்தால், வாசிப்பின் சுவை கூடும்.

உதாரணமாக, சில காட்சிகளைப் பார்க்கலாம்.

  • கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி பெட்ஸி மஹோர்ன் காரை ஓட்டிக்கொண்டு இருக்கையில், சற்றே அயர்ந்து ஓய்வு எடுத்துகொண்டு இருக்கும்போது அன்னியன் ஒருவனால் எழுப்பப்படுவது (The Invaders, 1967-68 TV Sries) தெ இன்வேடர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரின் (மறக்கமுடியாத) ஆரம்பக் காட்சி.
  • கதை நிகழும் சிறு நகரமான க்ரீப்பர் க்ரீக்கில் அப்போது ஓடிக்கொண்டு இருக்கும் லீ கர்ட்டீஸ் படம் (Jamie Lee Curtis, Hollywood’s Scream Queen in the Late 70’s), ஒரு வகையில் இந்தக் கதைக்கு தொடர்பு உள்ளதே.
  • கதை முடியும்போது தியேட்டரில் இருக்கும் போஸ்டர் (The Thing from Outer Spcae – Howard Hawk’s / John Carpenter Film’s) படத்தின் மையக் கருவிற்கு சம்பந்தமில்லை என்றாலுமே, கதையின் போக்கிற்கு (வெளி ஆள் ஒருவரின் வருகை) தொடர்புடையது.

என்று பல சுவையான விஷயங்கள் வாசிப்பின் பிறகும் கதைக்களன் சார்ந்த நினைவுகளுக்கு அசை போட பயிற்சி அளிக்கிறது.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Artist Denysஆசிரியர் பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு, கதை எழுதுவதையே முழுநேர பணியாக்கிக்கொண்ட ஜோயலின் சிறப்பு அம்சமே அவரது கதாபாத்திரங்களின் குறைபாடுகளும், அவர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான, அசாதாரண சூழ்நிலைகளும்தான். கதாசிரியர் ஜோயலின் வழக்கமான டெம்ப்ளேட்டான யாரும் நல்லவர்களும் இல்லை, யாரும் தீயவர்களும் இல்லை என்ற பாணி துவங்கியது இந்தக் கதையில்தான்.

பின்தொடரும் நிழலாக வரும் கடந்தகாலத்தின் இருண்ட பக்கங்களை மறக்க நினைக்கும் கதாபாத்திரங்களும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை நினைவூட்டும் சம்பவங்களும் நிறைந்த இக்கதையில் வன்மமும் குரோதமும் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளையனைப்போல சரியான நேரத்திற்காக காத்து கிடக்கின்றன.

உயிருடன் இருப்பதால் மட்டுமே வாழ்வதாகக் கருதும் கதாபாத்திரங்கள், சொல்லப்படாத சோகங்களைத் தாங்கி, நம்பிக்கையை இழந்து, தொலைந்துபோன மனிதர்களுக்கு இடையே மெல்ல தலைதூக்கும் மனிதத்தன்மை, வலி ஒன்றே மொழியாகவும், இருள் மட்டுமே ஒளியாக இருக்கின்ற கதையில் ஆங்காங்கே சில குறியீடுகள் உண்மையாகவே மெய்சிலிர்க்க வைக்கின்றன.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Colourist Hubert Boulardஇணையம், ஸ்மார்ட் போன்கள் மூலம் தேடுதல் மலிந்துவிட்ட சமகாலத்தில், ஒரு த்ரில்லர் கதையை கடைசிவரை சுவாரசியத்துடன் எழுதுவதைப்போல பெரிய சிரமம் வேறெதுவும் இல்லை. அதைப்போலவே அதனை சரியாக புரிந்து, மொழியாக்கம் செய்வதுவும் ஒரு சிரமமான வேலையே. அதனை செம்மையாக செய்துள்ளார் எடிட்டரும், மொழிபெயர்ப்பாளருமாகிய விஜயன். கதையில் உணர்ச்சிகரமான பல காட்சிகளை எளிய தமிழில் செம்மைப் படுத்தியிருக்கும் அவருக்கு ஒரு ஷொட்டு!

ஃப்ரான்சில் ஆண்டுக்கு ஒன்று வீதமாக மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவந்த இக்கதை வரிசையை ஒரே புத்தகமாக வெளியிட்டு இருப்பதால், அடுத்த பாகம் எப்போது? என்று காத்துக்கிடக்கும் கவலை நமக்கில்லை. முதல் இரண்டு பாகங்களும் தேர்ந்த மந்திரவாதியின் ஜாலங்களை போல வேகமாக நகர்கிறது. கடந்த இருபது வருடங்களாக வெளிவரும் ஹாலிவுட் பேய் / த்ரில்லர் படங்களை பார்த்தவர்களுக்கு, மூன்றாம் பாகத்தையும், கதையின் எதிர்நாயகனையும் கணிப்பது சிரமமான வேலையே அல்ல.

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe Front Covers

ஒரு நேர்க்கோட்டில் விவரிக்கையில் மிகவும் சாதாரணமான ஒரு B Grade ஹாலிவுட் படத்தை நிகர் செய்யும் இக்கதையை திறமையான நான்-லீனியர் எடிட்டிங் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார், கதாசிரியர் ஜோயல். இந்த வித்தையில் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவரது நெருங்கிய நண்பரான ஓவியர் டெனிஸ். ஒருவேளை லீனியராக சொல்லப்பட்டிருந்தால், கதையில் இத்தனை சுவாரசியமும், மர்மமும் இருந்திருக்காதோ என்னவோ?

Lion Comics Issue No 238 Nove 2014 Irave Irule Kollathe French Cover Part 1தமிழில் காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கை இப்போதுதான் ஆயிரத்தை கடந்து இருக்கும் இவ்வேளையில் இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தை பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் புத்தகத்தின் சில பக்கங்களில், அடுத்து எந்த கட்டத்தைப் படிக்கவேண்டும் என்பதை உணர்த்த போடப்பட்டு இருக்கும் அம்புகள் புதியதாக காமிக்ஸ் / க்ராபிஃக் நாவல் படிப்போருக்கு உதவியாக இருக்குமோ என்னவோ, ஆனால், தொடர்ந்து காமிக்ஸை படித்து வருபவர்களின் அறிவுத்திறனை குறைத்து மதிப்பிடுவதாகவே தெரிகிறது.

Comptine D’ Holloween (Delcourt, France, Part 1 - 2000, Part 2 - 2001 & Part 3 - 2002.

கதை: ஜோயல் கல்லெட் ஓவியம்: டெனிஸ் க்விஸ்ட்ரெபர்ட்

வண்ணங்கள்: ஹுயுபெர்ட் பொலார்ட் தமிழாக்கம்: எஸ். விஜயன்

வெளியீடு: லயன் காமிக்ஸ் இதழ் எண் 238, நவம்பர் 2014.

விலை: 150 ருபாய். 146 முழு வண்ணப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)

வகை: க்ராபிஃக் நாவல் அமைப்பு: அமானுஷ்ய த்ரில்லர் (18 +)

களம்: அமெரிக்காவின் ஒரு சிறுநகரம் வருடம்: கி.பி 2000

One Liner: தொடர் கொலைகளை செய்வது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

தீர்ப்பு: பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு தோட்டாக்கள் (4/6).

குறிப்பு: தி இந்து தமிழ் நாளிதழில் கிராஃபிக் நாவல்களைப் பற்றி அறிமுகங்களும் விமர்சனங்களும் செய்யலாம் என்று நவம்பர் 2014ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியபோது வெளியான இரண்டாவது கட்டுரை இது.

இணையத்தில் படிக்க: தி இந்து தமிழ் நாளிதழ் – இணைய லிங்க்

07th Nov 2014 The Hindu Tamil Ilamai Inimai Supplement Page No 4 Graphic Novel Review

Related Posts with Thumbnails