1995ஆம் ஆண்டு. ஒரு புதிய ஓவியர் தன்னுடைய முதல் காமிக்ஸ் / கிராபிஃக் நாவலை வெளியிடுகிறார். புதிய படைப்பாளி, அதிகம் பரிச்சயமில்லாத பதிப்பகம், எந்தவிதமான விளம்பரமும் இல்லாத சூழல் என்று பல தடைகள் இருந்தாலும் அந்த புத்தகம் காமிக்ஸ் ரசிகர்களிடையே பெரிதளவில் பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே கதாசிரியரின் அடுத்த படைப்பான The Big Wheels வெளியானபோது, அமெரிக்காவே இவரை திரும்பப் பார்த்தது. ஆனால், தன் மீது படிந்த அந்த புகழ் வெளிச்சத்தை நாடாமல், திடீரென காமிக்ஸ் துறையில் இருந்து விலகி, தனக்கு பிடித்தமான உடல் ஓவியங்களை வரையச் (Tattoos) சென்று விட்டார்.
அடுத்து பல ஆண்டுகளில், காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவரும், அவரது இரண்டு படைப்புகளுமே பல மழைக்கால மாலைநேரங்களின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. புகழின் உச்சத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பத்திலேயே முடித்துக்கொண்ட அந்த கதாசிரியர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து மறுபடியும் திரும்ப வந்து ஒரு கிராபிஃக் நாவலை படைக்கிறார் என்றால், அதன் மீதான ஆர்வம் எப்படி இருக்கும்? அல்லது அவரைத் திரும்ப வரவழைத்த அளவுக்கு அந்த கதை எப்படிப்பட்டதாக இருக்கும்?
அப்படிப்பட்ட ஒரு கதையுடன் திரும்ப வந்து அசத்தி இருக்கிறார்,. கிரகம் சாஃபி. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசிக்கும் இவரது லேட்டஸ்ட் கிராபிஃக் நாவலின் பெயர் The Good Dog. கதைக்கேற்றபடியே முழுக்க முழுக்க நாய்களையே பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்ட கதைதான் இது.
அடிக்கடி கொடுங்கனாக்களால் பாதிப்புக்கு உள்ளாகும் இவான் என்ற தெரு நாய்தான் நமது கதையின் நாயகன். ஒரு குழந்தையை காரில் அடிபடுவதில் இருந்து காப்பாற்றி, தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, அதனால் திட்டு வாங்குவதில் இருந்து ஆரம்பித்து, தாகம் காரணமாக கோழிகளுக்காக வைக்கப்பட்டிருந்த நீரை குடிக்க, அதனால் கோழிகள் பயத்தில் கத்த, அங்கிருந்து பிக்னிக்கில் இளம் ஜோடியிடம் கொஞ்சப்படுவது, மரத்தில் கயிற்றில் பின்னிக்கொண்டு சிக்கலில் இருக்கும் கிர்பி என்ற நண்பனை விடுவிப்பது, பின்னர் ஒரு வேட்டை நாய் கும்பலுடன் இணைவது, அவர்களை பற்றித் தெரிந்துகொள்வது, அன்றிரவு அவர்களுடன் வேட்டைக்கு செல்வது, வேட்டையில் தலைவன் கொல்லப்படுவது, பிறகு அந்த கும்பலில் இருந்து பிரிவது என்று கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது.
பின்னர் வேட்டைக்கு சென்ற அதே வீட்டின் கோழி வெளியே சுற்றும்போது அதனை வீட்டுக்கு திரும்ப அழைத்து செல்கிறது, இவான். ஆனால், அந்த வீட்டு பெண் இவானிடம் பேச முற்படும்போது பயந்து ஓடிவிடுகிறது. அவள் மற்றவர்களிடம் இதை சொல்கிறாள். அப்போது ரே என்பவர் “நீ ஏன் அந்த நாய்க்கு ஒரு கடிதம் எழுதக்கூடாது?” என்று கேட்கிறார். முதலில் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், அவர் கடிதத்தை மிகவும் எளிமையாக எழுதும்படியும் சொல்கிறார். அதன்படி அவள் ஒரு குறியீட்டுடன் தண்ணீர் குவளையை வைக்க, இவான் அதில் தண்ணீர் பருகிவிட்டு அந்த குறியீட்டின்படி அங்கேயே அமர்ந்திருக்கிறது. அப்போது வேட்டைக் கும்பலைச் சேர்ந்த நாய் மறுபடியும் வர, இவான் அந்த நாயை பின் தொடர்ந்து செல்கிறதா? அல்லது அங்கேயே தங்கிவிடுகிறதா? என்பதை சொல்லாமல் முடிவை வாசகர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறார் கதாசிரியர்.
கதையில் பல இடங்களில் வசனங்கள் மிகவும் முக்கியமானதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக
- ஒவ்வொரு நாய்க்கு என்றும் ஒரு வசிப்பிடம் அவசியமாகிறது (A Dog needs some place to belong)
- முதலாளி எப்போதுமே சரி.
- ஒவ்வொரு நாய்க்கும் அதற்கான இடம் விதிக்கப்பட்டுள்ளது.
- அது எந்த இடம் என்று கண்டறிவதுதான் அந்த நாயின் வேலை
என்று பல வசனங்களும், மிகவும் எளிய பாணியிலான ஓவியங்களும் கதைக்கு வலுவூட்டுகிறது.
கதையை மேலோட்டமாக படிக்கும்போது இதனை ஒரு சாதாரண நாயின் கதையாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருந்தாலும் இது ஒரு சாதாரண கதை அல்ல. கதையில் இவான் இருக்கும் இடத்தில் நம்மை பொருத்திப்பார்த்தால், இது ஒரு உளவியல்ரீதியிலான சுய பரிசோதனையாகவே படுகிறது. சமூகத்தில் நமக்கான இடம் என்ன? என்பதை நாம் உணரும்வரையில், நாமும் இவானைப்போலவே நிலையில்லாமல், புரிந்துக்கொள்ளப்படாமல் சுற்றிக்கொண்டுதான் இருப்போமோ என்னவோ?
அதைப்போலவே முதலாளி செய்வது சரி என்ற சிந்தனை கொண்டவர்களுக்கும், சுதந்திரமாக செயல்பட விரும்புபவர்களுக்கும் இருக்கும் வேற்றுமையும், தன்னைப்பற்றிய சுய தேடலை கொள்பவர்களுக்கும், இலட்சியத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களுக்கும், நம்பிக்கையை மட்டுமே கொண்டு வாழ்பவர்களுக்கும் இடையே இருக்கும் மாறுபட்ட சிந்தனையை இந்த கதை விளக்குகிறது.
ஒரு சாதாரண கதைக்கும், விலங்குகளை வைத்து எழுதப்படும் கதைக்கும் இடையே இருக்கும் வித்தியாசமே குணங்களை வைத்து மதிப்பீடு செய்யவும், தன்னுடன் பொருத்தி ஒப்பீடு செய்யவும் விலங்குகள் / நாய்கள் ஏற்கும் கதாபாத்திரங்கள் எளிமையாக அமைவதுதான்.
குறியீடு என்று எடுத்துக்கொண்டால், இந்த கதையில் இருக்கும் குறியீடுகளை மட்டும் வைத்து மிஷ்கின் பத்து வருஷம் படம் எடுக்கும் அளவுக்கு கதாசிரியர் நுணுக்கமாக வரைந்திருக்கிறார். உதாரணமாக புத்தகத்தின் முதல் பக்கத்தில் வரையப்பட்டு இருக்கும் கிர்பியின் கழுத்துப்பட்டையின் கயிறு அனைவரையும் சுற்றி ஒரு வட்டம் போட்டு இருப்பதில் ஆரம்பித்து, கதையின் முடிவை வாசகர்களுக்கு விடுவது வரை கதை முழுவதுமே குறியீடுகள்தான். அதுவும் கதையின் முடிவில் அந்த வீட்டில் தங்கிவிடுவதா? அல்லது வேட்டைக் கும்பலைச் சேர்ந்த நாயுடன் பயணத்தை தொடர்வதா? என்ற கேள்விக்கான விடையை படிக்கும் வாசகரிடமே விட்டுவிடுகிறார் கிரகம். அந்த முடிவை பொருத்து, வாசகர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட அளவுடன் சந்தோஷப்பட்டுக்கொள்ளும் மனிதனாகவோ, அல்லது எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிக்க நினைக்கும் ஒரு இலட்சியவாதியாகவோ அடையாளம் கண்டுகொள்ளலாம்.
ஒரு சாதாரண கதை, ஒரு உளவியல் பரிட்சை என்ற நிலைப்பாடுகளை தாண்டி மூன்றாவதாக ஒரு விஷயத்தை கதாசிரியர் சொல்லி இருக்கிறார். நீண்டகால காமிக்ஸ் வாசகர்களுக்கு மார்வெல் காமிக்ஸ் பற்றியும், அதன் நெடுநாள் எடிட்டரான ஜாக் கிர்பியைப்பற்றியும் தெரிந்திருக்கும். தன்னுடைய முதலாளியின்மேல் கண்மூடித்தனமாக நம்பிக்கைகொண்ட முட்டாள் நாயின் பெயரை கிர்பி என்று வைத்து, அமெரிக்க காமிக்ஸ் வரலாற்றின் ஒரு மாபெரும் படைப்பாளியின் உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார், கிரகம்.
இதைப்பற்றி கதாசிரியரிடம் நான் கேட்டபோது, சர்ச்சைகளை தவிர்க்க பிரபல நடிகர் ப்ரூனோ கிர்பியை மனதில் கொண்டுதான் அந்த நாய்க்கு கிர்பி என்று பெயரிட்டதாக விஷமத்துடன் சொல்கிறார்.
அதேசமயம் ஒரு கதாசிரியனின் உரிமை அந்த கதையை எழுதுவது வரை மட்டுமே என்றும் அதற்குப்பிறகு அதனை புரிந்துகொள்வது வாசகர்களின் உரிமை என்று சொல்கிறார்.
ஒரு நாயுடன் தொடர்பு கொள்ள நாம் கையாளும் வழிமுறைகள் செயல்படாமல் போக, கடிதம் எழுது என்று சொல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாத, ஆனால் தீர்வுகாண உதவிய ஒரு விஷயம். இதுபோன்ற செயல் சார்ந்த குறியீடுகள் மட்டுமின்றி ஓவியங்களின்மூலமும் பல குறியீடுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார், கதாசிரியர் கிரகம்.
டின்டின் கதாசிரியரான ஓவியர் ஹெர்ஜிடம் அவர் வரைந்ததிலேயே அவருக்கு பிடித்தமான ஓவியங்கள் பற்றிக் கேட்டபோது இரண்டு ஓவிய கட்டங்களை மட்டுமே சொல்வார். அதில் ஒன்றில் ஒருவன் கடற்கரையில் இருப்பது போலவும், அதே கட்டத்தில் இன்னொருவன் எழுந்து வருவது போலவும், மூன்றாவதாக ஒருவன் ஓடுவது போலவும் வரைந்திருப்பார். மூன்று பேராக தெரிந்தாலும் செயலில் ஈடுபடுவது ஒரே ஒருவன் மட்டுமே. அவனது செயலை (Action) நமக்கு உணர்த்தவே ஹெர்ஜ் ஒரே கட்டத்தில், மூன்று தனித்தனி ஆட்களை வரைந்தார்.
ஒரு தொடர்ந்த செயலை ஒரு ஓவிய கட்டத்தின்மூலம் எளிமையாக உணர்த்திய அந்த கோட்பாட்டின்படி இந்த கதையிலும் கிரகம் பல இடங்களில் (மெனக்கெட்டு) அதுபோன்ற ஒரு தொடர்ச்சியான செயலை ஒரே ஒரு ஓவியத்தின்மூலம் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார். அதற்காகவே அவருக்கு ஒரு பெரிய பாராட்டு.
விலங்குகளை வைத்து எழுதப்பட்ட கதைகளில் Animal Farm & Watership Down ஆகிய இரண்டு மட்டுமே காலங்களை, நாடுகளை கடந்து கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் மூன்றாவதாக இந்த கதை அமைந்துள்ளது. ஆறுதல் அளிக்கும் மற்றுமொரு விஷயம் என்னவென்றால், கதாசிரியர் மறுபடியும் 10 ஆண்டுகள் வனவாசம் செல்லாமல், அடுத்த கதையை எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான்.
தீர்ப்பு: பரிந்துரைக்கப்படுகிறது. ஆறு தோட்டாக்கள் (6/6).
கதை & ஓவியம்: கிரஹம் சாஃபி
வெளியீடு: FantaGraphics Books அமெரிக்கா- (ஜூன் 2013)
பக்கங்கள்: 96
அமைப்பு: கருப்பு வெள்ளை.
விலை: $16.99
குறிப்பு: தமிழின் நம்பர் 1 இலக்கிய மாத இதழான தீராநதியில் இந்தக் கட்டுரை வெளியானது. நன்றி, தீராநதி ஆசிரியர் குழு.