காமிரேட்ஸ்,
லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு எஸ்.விஜயன் அவர்கள் தங்களுடைய சமீப பதிவுகளில் ரீபிரின்ட்டுகள் குறித்து எழுதி வருகிறார். அதில் முதலாவதாக அவர் வெளியிடப்போகும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ் "தலை வாங்கி குரங்கு". (எடிட்டரின் பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்). அந்த பதிவினை பார்த்தவுடன் அந்த இதழைப்பற்றிய நினைவுகள் என்னுடைய நெஞ்சில் அப்படியே ஃபிளாஷ்பேக்கில் ஓட துவங்கியது. "ஆட்டோகிராப்" சேரன் போல சைக்கிளில் எல்லாம் செல்ல முடியாதாகையால், இந்த பதிவின் மூலம் அந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ரொம்ப மொக்கையாக இருந்தால் இப்போதே ஃபுல்-ஸ்டாப் போட்டுவிட்டு வேறு பதிவு பக்கம் சென்று விடுங்கள்.
Circa 1990.முதன்முறையாக நாங்கள் சென்னைக்கு குடிபெயர்ந்து சில மாதங்களே ஆனதொரு தருணம். அம்பத்தூரில் நாங்கள் ஒரு வாடகை வீட்டில் குடிபுகுந்தோம். அங்கேயே நானும் அண்ணனும் அண்ணரும் (மரியாதை, மரியாதை) பள்ளியில் படிக்க ஆரம்பித்தோம். அப்போது அம்பத்தூர் பஜார் வீதியில் (சந்தை வீதியில்) டெமரிஸ் என்றொரு பல்பொருள் கடை இருந்தது. அந்த கடையில் இருந்து பத்து கடை தள்ளி ஒரு பழைய புத்தக கடை இருந்தது(கவனியுங்கள்-இறந்த காலம்). அதற்க்கு முந்தைய வருடங்களில் விடுமுறைக்காலங்களில் நாங்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் அந்த கடைக்கு செல்வதுண்டு.அங்கேதான் எனக்கு முதன் முதலில் முத்து காமிக்ஸ் (நடுநிசிக்கள்வன்), லயன் காமிக்ஸ் (கொலைப்படை), ராணி காமிக்ஸ் (மர்ம முகமூடி) போன்றவை அறிமுகம் ஆனது. சில நாட்களில் நாங்கள் ஆவடி விமானப்பயிற்சி நிலைய குடியிருப்புக்கு இடம்பெயர்ந்தோம். அதனால் அம்பத்தூரில் இருந்த பள்ளிக்கு வர தினமும் இரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது. பள்ளி முடிந்தவுடன் எங்கள் இரெயில் வர நாற்பது நமிடங்கள் வரை நேரமிருந்ததால், மாலையில் இரயில் நிலையம் செல்லும்போதெல்லாம் இந்த கடைக்கு ரெகுலர் ஆக வர ஆரம்பித்தேன். பல காமிக்ஸ் புத்தகங்கள் இங்கேதான் முதல் அறிமுகம் ஆனது (பாதாள போராட்டம், யார் அந்த ஜூனியர் ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி ரீபிரின்ட்,ஜானி இன் லண்டன் ரீபிரின்ட், ராணி காமிக்ஸ் இரும்பு மனிதன் என்று பல புத்தகங்கள் அட்டை இல்லாமல் முதல் பக்கங்கள் இல்லாமல் வாங்கி இருக்கிறேன்).
அந்த பழைய புத்தக கடைக்கு அடுத்த கதவு (மற்றும் ஜன்னல்) எப்போதும் பூட்டியே இருக்கும். ஒரு முறை அந்த வீட்டின் ஜன்னல் திறந்து இருப்பதை பார்த்தேன். ஆர்வம் மேலிட உள்ளே எட்டிப்பார்த்தால், அங்கே, வரிசையாக அடுக்கடுக்காய் ஏகப்பட்ட புத்தகங்கள் சீராக செல்ப்ஃகளில் இருந்தன. விசாரிக்கையில், அது மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரை மட்டுமே இயங்கும் ஒரு நூலகம் என்று சொன்னார்கள். ஆவடி விமானபயிற்சி குடியிருப்புக்கென்றே தனி இரெயில் ஒரு மணிக்கு ஒரு முறைதான் என்ற frequencyயில் இயங்கிக்கொண்டு இருந்தது. எனவே நாலே முக்கால் இரயிலை விட்டால் அதற்க்கு பிறகு ஒன்றரை மணி நேரம் இரயில் நிலையத்தில் தேவுடு காக்க வேண்டியதுதான். சிறுவயது முதலே கண்டிப்புக்கு பெயர்போன எங்க வீட்டில் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் லேட்டாக போனால் அதற்க்கு கிடைக்கும் வரவேர்ப்பே தனி. இருந்தாலும் புத்தகங்கள் மேலிருந்த காதல் என்னை காத்திருக்க செய்தது..
அவரிடம் சென்று இந்த வாடகை நூலகத்தில் மெம்பர் ஆக வேண்டுமென்று சொன்னேன். நாற்பது ருபாய் முன்பணம் கட்டவேண்டும் என்று சொன்னார். இருபது வருடங்களுக்கு முன்பாக பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் ஒரு மாணவனுக்கு நாற்பது ருபாய் என்பது ஒரு கணிசமான தொகை. சரி, விட்டு விடலாம் என்று திரும்பும்போது டேபிள் மீது பைண்டிங் செய்யப்பட்ட நிலையில் இருந்தது ஒரு காமிக்ஸ் புத்தகம்: தலைவாங்கிக் குரங்கு.
அந்த அட்டைப்படமும், அதன் தலைப்பும் என்னை மெஸ்மரிசம் செய்து விட்டது என்றே சொல்லலாம். அங்கிருந்து நகர மனசே வரவில்லை. என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்று பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்த காமிக்ஸ் புத்தகங்களை பார்க்கையில் அது வரையில் நான் கேள்விப்பட்டே இராத பலதரப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. நாளைக்கு பணத்துடன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். வீட்டிற்கு சென்று சேர்ந்தபோது மணி ஏழேகால்.வாசலிலேயே அம்மா காத்திருந்தார். லேட்டாக வந்ததிற்கு ஒரு ஊனமுற்ற சாக்கு சொல்லிவிட்டு தப்பித்தேன். பின்னர் அப்பாவிடம் அந்த நூலகம் பற்றி சொல்ல, அவர் மறுத்துவிட்டார். அதற்க்கு பிறகு இரண்டு நாட்கள் சரிவர சாப்பிடாமல் இருந்து, பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்து ஒருவழியாக பகீரத பிரத்யணம் செய்து நாற்பது ரூபாயை வாங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கதை நேர்கோட்டில் பயணிக்கும் தோட்டா போல மிகவும் வேகமாக நகர்ந்ததால் இரயிலில் செல்லும்போது படித்து முடித்துவிட்டேன். இந்த கதையை படித்து விட்டு இப்போது யோசிக்கும்போது மற்றைய டெக்ஸ் வில்லர் கதைகளில் இருந்து இது எவ்வளவு மாறுபட்டது என்பது தெரிகிறது. அவருடைய நண்பர் குழாமோ,துப்பறியும் தேவையோ இல்லாமல் ஒரு வித்யாசமான கதையாக தெரிகிறது. வழிதவறி வேறு பாதையில் செல்லும் டெக்ஸ், ஒரு பயங்கர மிருகத்தின் குரலை கேட்கிறார். ஊர் மக்கள் அஞ்சி நடுங்கும் ஒரு மனித குரங்கு ரத்தவெறி பிடித்து மனிதவேட்டை ஆடுவதை தெரிந்து கொள்ளும் அவர், அந்த ஆட்கொல்லி மனிதக்குரங்கை வேட்டையாட ஆயத்தமாகிறார்.அதற்கிடையில் டெக்ஸ் வில்லரை தங்க வேட்டையாளர் என்று தவறாக கருதும் ஒரு கும்பல், அவருக்கு இடமளிக்கும் ஒரு பரிவான ஆனால் வித்யாசமான ஒரு குடும்பம் என்று பல தளங்களில் பயணிக்கும் இந்த கதை முடியும்போது உங்கள் கண்களில் ஓரிரு முறையாவது கண்ணீர் வந்து எட்டிப்பார்த்திருக்கும். இயக்குனர் ஷங்கருக்கு முன்பே ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி என்பதனை என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்து காட்டியவர் டெக்ஸ் வில்லர்.
மேலுள்ள இத்தாலி மொழி அட்டைப்படத்தில் இருக்கும் காட்சி கதையின் ஒரு ஹை லைட் ஆகும். மந்தக்குரங்கை வேட்டையாட செல்லும் டெக்ஸ், தண்ணீரில் விழுந்து விடுகிறார். திடீரென்று அவர் எதிரே அந்த தலை வாங்கி குரங்கு நிற்க, அதனை எதிர்கொள்ள ஆயத்தமாகும் டெக்ஸின் துப்பாக்கி தண்ணீரில் விழுந்ததால் இயங்க மறுக்கிறது. அடுத்தது என்ன? என்று விறுவிறுப்பில் வேகமாக படித்த பக்கங்கள் இவை. இன்னும் ஒரு வாரத்தில் மறு பதிப்பில் வர இருப்பதால் இவற்றிற்கும் மேலே வேறெந்த விஷயங்களையும் சொல்லி கதையின் மேல் புதிய வாசகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை குறைக்க விரும்ப வில்லை.
அடுத்த இரண்டு மூன்று நாட்களில் சில சிறப்பு பதிவுகள் வரும் (என்று நினைக்கிறேன்). அதில் முதலாவதாக வரும் பதிவு ஜேம்ஸ் பான்ட் சம்பந்தப்பட்டது, அடுத்து வரும் இரண்டு பதிவுகள் சமீபத்தில் தமிழில் வந்துள்ள இரண்டு ஃகிராபிக் நாவல்களை பற்றியதாக இருக்கும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.