டியர் காமிரேட்ஸ்,
சமீப காலங்களில் பதிவுலகம் பக்கம் வருவதற்கே நேரமில்லாமல் இருப்பதால், இரண்டு மூன்று பதிவுகள் ஃட்ராப்ட்டிலேயே உறங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் அவற்றை வலையேற்ற முயற்சிக்கிறேன். அதற்குள்ளாக ஒரு இடைச்செருகலாக இந்த காமிக் கட்ஸ் பதிவு. நம்முடைய காமிக் கட்ஸ் பதிவுகளில் இது 51ஆவது பதிவு என்பது Stats ரீதியிலான சிறப்பு அம்சம்.
மகாபாரதம் - ஃக்ராபிக் நாவல் காணொளி வடிவில்: புகழ் பெற்ற காமிக்ஸ்/ஃக்ராபிக் நாவல் கதாசிரியர் Grant Morrisson பற்றி உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரைப் பற்றி தேடினால் விக்கியும், கூகுளாண்டவரும் தேவைக்கு அதிகமான தகவல்களை தருவார்கள். இவருடன் பல ஃக்ராபிக் நாவல்களில் பணியாற்றிய என்னுடைய ஓவிய நண்பர் இவற்றைப்பற்றி மணிக்கணக்கில் புகழ்ந்து பேசி இவரைப்பற்றிய மதிப்பை எனக்குள் உயர்த்தி இருக்கிறார்.
இவருடன் நம்முடைய இந்திய காமிக்ஸ் விற்பன்னர்களான ஷரத் தேவராஜனும், கோதம் சோப்ராவும் இணைந்து இந்திய கதைகளை உலகுக்கு அறிமுகப்படுத்த உருவாக்கிய நிறுவனமே Graphic India. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களையோ / திரைப்பட வரிசைகளையோ கூர்ந்து கவனித்தால் அவற்றில் பெரும்பாலானவை மேஜிக்கல் ரியாலிசம் (புராதான காலத்து கதை, ராஜா ராணி, விசித்திர ஜந்துக்கள், கடவுள்கள் மற்றும் அவர்களின் சார்ந்த கதைகள்) என்றே இருக்கும். ஒரு ஹாரி பாட்டரும், லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொடரும் மாத்திரமே இங்கே இல்லை. பல தொடர்கள், பல சினிமாக்கள், பல கதைகள்.
இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த மகாபாரதம் இங்கே ஃக்ராபிக் நாவல் மற்றும் காணொளி வடிவில் தயாரிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சான் டியாகோ காமிக் கானில் க்ராண்ட் மோரிசன்னும் நம்ம கோதம் சோப்ரா மற்றும் சரத் தேவராஜன் உடன் இணைந்து மகாபாரதம் பற்றி கொடுத்த மிகவும் விரிவான பேட்டி இது. நேரம் கிடைக்கும்போது பொறுமையாக பாருங்கள். நம்முடைய இதிகாசத்தை அயல்நாட்டை சேர்ந்த ஒருவரின் மதிப்பீடாகவே இதனை நான் பார்க்கிறேன். நம்முடைய கதாபாத்திரங்களை அவர்கள் உச்சரிக்கும் விதமும், சில பெயர்களை உச்சரிக்க முடியாமல் சுருக்கி அழைப்பதும் நிஜம்மாகவே சிரிப்பை வரவழைக்கிறது. உதாரணமாக யுதிஷ்டிரன் (அதாங்க, நமகெல்லாம் தர்மர் என்று சொலப்படுவாறே, அவர்) பெயரை உச்சரிக்க கஷ்டப்பட்டு "யுதிஷ்" என்று அழைப்பதும், அதுவும் துரியோதனனே அவ்வாறு அழைப்பதும் முரண் நகையின் உச்சம்.
பகுதி 1 - நான்கு யுகங்களின் கதை: இந்த மகாபாரதம் தொடர் ஃக்ராபிக் நாவல் வடிவில் மட்டுமின்றி காட்சி தொடராகவும் உருப்பெற்று இருக்கிறது. க்ராபிக் இந்தியா நிறுவனத்தின் வலைதளத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் ஐந்து பகுதிகள் வெளியாகி இருக்கின்றது. இதோ இதுதான் அந்த தொடரின் முதல் பகுதி.
பகுதி 2 - கண்ணனின் பேச்சு: ஜீவன் J காங்'கின் கைவண்ணத்தில் ஓவியங்கள் வழக்கமான பாணியிலேயே அமைந்து இருக்கின்றன. நம்முடைய நேர்த்தியான கட்டமைப்பு கொண்ட காமிக்ஸ் கதைகளை படித்தோருக்கு இந்த மாதிரியான ஓவிய ஒழுங்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ரசிக்கும்படியாகவே அமைந்து இருக்கிறது. மறக்காமல் பாருங்கள்.
பகுதி 3 - பாண்டவர்களின் மறு வருகை: வழக்கமாக க்ராண்ட் மோரிசன்னின் கதையமைப்பில் இருக்கும் டெம்பிளேட் வகையிலேயே இந்த கதையிலும் பீமனின் கதா பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நான் பார்த்த / படித்த மகாபாரதத்தில் கேட்டறியாத சில சம்பவங்கள் இந்த தொடரில் வருவதும் புதுமையாகவே இருக்கிறது.
பகுதி 4 - பீஷ்மரின் கோபம்: இதுதான் நான் குறிப்பிட்ட அந்த பகுதி. யாராவது இப்படி ஒரு சம்பவம் நாம் பார்த்த / படித்த மகாபாரதத்தில் வருகிறதா? இல்லையா என்று பின்னூட்ட பகுதியில் தெரிவித்தால் நலம். கவிஞர்களுக்கு என்று ஒரு சுதந்திரம் வழங்கப்படுவதை போல, லாஜிக் விஷயத்தில் நம்ம சினிமா இயக்குனர்கள் ஒரு சுதந்திரம் எடுத்துக்கொள்வது போல இங்கே க்ராண்ட் மோரிசன் ஏதாவது சுதந்திரம் எடுத்துக்கொண்டு அவரே இந்த காட்சியை அமைத்தாரா என்பதே என் கேள்வி.
பகுதி 5 - உன் ரத்தத்தில் நான் குளிப்பேன் - சபதம்: தொடர்ந்து க்ராபிக் இந்தியாவின் இணையதளம், காணொளி பக்கம், டுவிட்டர் மற்றும் முகப்புத்தக பக்கங்களை கவனித்து ஒவ்வொரு வாரமும் புதிய பகுதியை கண்டு களியுங்கள். இதோ அந்த லின்க்குகள்:
ஃக்ராபிக் இந்தியா யூ டியூப் தளம்: http://www.youtube.com/graphicindia
ஃக்ராபிக் இந்தியா டுவிட்டர் ஹேண்டில்: http://twitter.com/graphicindia
ஃக்ராபிக் இந்தியா Facebook லிங்க்: http://www.facebook.com/graphicindia
ஓவியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் - அயல்கிரகத்தில் ராஜா: புதியதாக இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் காமிக்ஸ் / க்ராபிக் நிறுவனங்கள் கையில் எடுக்கும் ஒரு தளம் - இதிகாச / புராண கால கதைகள். இந்தியா என்றாலே இப்படித்தான் என்று ஒரு காட்சி விரிந்து அது க்ளீஷே ஆகும் அளவிற்கு இப்படிப்பட்ட கதைகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றது. எவ்வளவோ கதை தளங்கள் இருக்கையில் இப்படி ஒன்றின் பின்னே ஓடி வருவதின் ரகசியம் எனக்கு இது வரையில் புரியவில்லை.
இப்படி இல்லாமல் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருந்த கதைகளில் நான் விரும்பி ரசித்து படித்தது ஒரு கதை வரிசையை. அதைப்பற்றி விரைவில் பதிவிடுகிறேன்
அது வரையில் இந்த கதையை பற்றி சற்று கவனிப்போம். சென்ற ஆண்டு டிஸ்னி மூலம் திரைக்கு வந்த ஜான் கார்ட்டர் திரைப்படம் நினைவிருக்கிறதா? டார்ஜான் கதாசிரியர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் அவர்களின் கதையான இது நூறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் திரைக்கு வந்தது. ஒரு பூலோகவாசி திடீரென்று அயல்கிரகத்திற்கு வந்தடைகிறான். அந்த உலகமே அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறது. திடீரென்று அவன் வேட்டையாடப் படுகிறான். தப்பிக்கும்போது நண்பர்கள் உருவாகிறார்கள், பின்னர் அந்த கிரகத்தில் நடக்கும் உள்நாட்டு அரசியலில் நுழைகிறான்.
இப்போது நமது செய்தியில் இருக்கும் காமிக்ஸ் பற்றிய செய்தியை பார்ப்போம். D.I. காமிக்ஸ் (Digitally Inspired Comics) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த நிறுவனம் சுராஜ் குமாரால் இயக்கப்படுகிறது. இவர்களின் முதல் வெளியீடாக "அயல் கிரகத்தில் ராஜா - Alien Raja" என்ற காமிக்ஸ் கதையை ஓவியர் விஜயன் அவர்களின் துணையுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நம்முடைய இந்திய ராஜா ஒருவர் (ராஜா என்றாலே அது புராதான காலம்தானே?) அயல் கிரகத்தில் நிகழ்த்தும் சாகசங்களே இந்த கதையின் மையகருவாக அமைக்கப்பட்டு இருப்பது இதன் ஸ்பெஷல். இந்த ஆண்டின் இறுதியில் மும்பையில் நடைபெறவிருக்கும் காமிக் கானில் இந்த கதையை புத்தக வடிவில் வெளியிட உள்ளார்கள்.
பேட் மேன் & ராபின் - என்ன கொடுமை சார் இது? ஏற்கனவே டின்டின் பற்றி இப்படி ஒரு தகவல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கிளம்பியது இந்த தளத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அதைப்போலவே கிளப்பப்பட்டுள்ளது ஒரு புதிய கதை - பேட் மேன் & ராபின் இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாம்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ரிட்டையர் ஆன அனைத்து கிரிக்கெட் விளையாட்டாளர்களும் தங்களது புத்தகம் விற்பனை ஆக சச்சின் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் எதையாவது எழுதுவது என்பதை ஒழுக்க நெறியாகவே கடைப்பிடித்து வரும் இந்த வேளையில், சூப்பர் ஹீரோக்களை பற்றிய ஒரு புத்தகம் எழுதும்போது என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்து செய்தது போல நடந்துள்ளது இந்த விஷயம்.
மார்க்கோ மேன்கசொலா (பெயரிலேயே மேன் இருப்பதை கவனியுங்கள்) என்கிற பத்தி எழுத்தாளர் (சொல்லாடல் உபயோகம் - நன்றி பேயோன்) தன்னுடைய புத்தக விற்பனை சூடுபிடிக்க இப்படி ஒரு விஷயத்தை கிளப்பியுள்ளார். மார்க்கோ தன்னுடைய சூப்பர் ஹீரோக்களின் காதல் (காம?) வாழ்க்கை என்கிற புத்தகம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அதைப்பற்றி ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயம் கிளம்பினால் ஒழிய அந்த புத்தகத்தை சீண்டுவாரில்லை என்பதால் இப்படி எழுதி இருக்கிறார் (என்பது என் எண்ணம்).
ஸ்டார் காமிக்ஸ் - தின மலர் புத்தக விமர்சனம்: ஸ்டார் காமிக்ஸ் இதழ் வெளியீடு சென்னையில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. அதனைப்பற்றிய செய்திகள் தினமலர், தி இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினசரி போன்ற காலை நாளிதழ்களிலும், ஜெயா டிவி, ஜெயா செய்திகள் போன்ற ஊடகங்களிலும் இடம்பெற்றது. குமுதம் (அ) குங்குமம் மற்றும் தி சன்டே இண்டியன் ஆகிய வாரந்திர இதழ்களிலும் வெளியானது. நண்பர் சுந்தர புத்தன் அவர்கள் அட்டகாசமான ஒரு கட்டுரையை அப்போதுதான் எழுதி எனக்கு அறிமுகம் ஆனார். இப்போது அந்த கட்டுரைகளை எல்லாம் தேடிக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 முறை மடிக்கணினி மாற்றியதால் பல போட்டோக்கள், ஸ்கான்கள் எங்கே இருக்கின்றன என்பதே தெரியாமல் இருக்கிறது. நண்பர்கள் யாரிடமாவது இருந்தாலும் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.
ஸ்டார் காமிக்ஸின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நண்பரும் எழுத்தாளருமான திரு எஸ் ரா அவர்கள் இதனைப்பற்றி ஒரு சிறு குறிப்பாக தன்னுடைய கட்டுரை ஒன்றில் போட்டோவுடன் குறிப்பிட்டு இருந்தார் (7ஆவது பத்தி). இதோ அதற்க்கான லிங்க்: http://www.sramakrishnan.com/?p=522
பின் குறிப்பு: இந்த ஸ்டார் காமிக்ஸ் இப்போதும் கூட (சில இதழ்கள் மட்டுமே) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக கடலில் விற்பனைக்கு கிடைக்கின்றது. தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளவும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.