டியர் காமிரேட்ஸ்,
இந்த பதிவு நம்முடைய வழமையான பதிவுகளில் இருந்து சற்றே மாறுபடுகின்ற ஒன்று. ஆமாம், இது ஒரு என்குயரி பதிவு. முன்பே சொன்ன மாதிரி தமிழ் காமிக்ஸ் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். அதற்காக தமிழில் வெளிவந்த அனைத்து (கிட்டத்தட்ட) வகையான காமிக்ஸ் புத்தகங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். உதாரணமாக மலர் காமிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ், அதில் (அட்லீஸ்ட்) ஒரே ஒரு மாதிரி இதழாவது சேகரித்து அந்த காமிக்ஸ் பற்றியும், அந்த பதிப்பாளரைப் பற்றிய கூடுதல் விவரங்களை சேகரித்து அதனை தொகுத்து ஆவணப்படுத்துதலே என் நோக்கம்.
ஆகையால் உங்களுக்கு தெரிந்த தமிழில் வெளிவந்த வித்தியாசமான காமிக்ஸ் புத்தகங்கள் உங்களிடம் இருந்தால் (A) அதனை எனக்கு விற்பனை செய்யலாம் அல்லது (B) அந்த புத்தகத்தின் முன் அட்டை, பின் அட்டை, முதல் பக்கம், கடைசி பக்கம் என்று சில பக்கங்களை எனக்கு ஸ்கான் / போட்டோ அனுப்பலாம். சரி, சொந்தக் கதை சோகக் கதையை ஓரம் கட்டி விட்டு வந்த விஷயத்தை கவனிப்போம். அதாவது மாய மூன் காமிக்ஸ். எஸ், தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்த வெஸ்டர்ன் காமிக்ஸ்.
இந்த புத்தகத்தினைப் பற்றி தெரிந்து கொள்ள நாமெல்லாம் இப்போது ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக்கில் செல்வது மிக அவசியம். இந்த விஷயம் நடந்து சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிறது. சென்னையின் ஒரு வெயில்கால மாலை நேரத்தில் ஒரு புத்தக கடையில் இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. வழக்கமான ஒரு மொக்கை காமிக்ஸ் தானே என்று புரட்டினால், உள்ளே இருந்ததோ நம்மூர் தயாரிப்பு. ஆனால் அதை எல்லாம் விட என்னை மிகவும் கவர்ந்தது இந்த காமிக்ஸ் புத்தக வரிசையின் லோகோ. அச்சு அசலில் அப்படியே நம்ம முத்து மினி காமிக்ஸ் லோகோ போலவே இருந்தது குறிப்பிட தக்க விஷயம்.
| Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Cover | Maya Moon MM Comics English Western Comics Created in Chennai Operation Bingo Brothers Page 01 Intro |
புத்தகம் பைண்டிங் செய்யப்பட்ட நிலையில் இருப்பதால் அட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. ஏதோ, எனக்கு தெரிந்த போட்டோஷாப்பில் இந்த அட்டைப் படத்தையும், சில பக்கங்களையும் ஒப்பேற்றி இருக்கிறேன். நண்பர்களே, இந்த காமிக்ஸ் புத்தகங்கள் இப்போதைக்கு பார்க்க காமெடியாகவும், கிண்டலாகவும் தெரிந்தாலும்கூட இவை எனக்கு மிகவும் அவசியம். ஆகையால் உங்களிடம் இது போன்ற வித்யாசமான புத்தகங்கள் இருந்தால் அவற்றை டிஸ்போஸ் செய்யவும்.
இந்த புத்தகம் நமக்கெல்லாம் பரிச்சயமான ஃப்ளீட்வே நிறுவன வெஸ்டர்ன் காமிக்ஸ் இதழ்களைப்போலவே அறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்டதாக இருந்தது. ஒரு பக்கத்திற்கு இரண்டு கட்டங்கள் என்று ஸ்டாண்டர்ட் ஆக இருந்தது. இந்த ஆங்கில வெஸ்டர்ன் காமிக்ஸ் புத்தகத்தின் வசனங்கள் (இன்றைய சூழலில்) சிரிப்பூட்டுவதாகவே அமைந்துள்ளது. ஆனால் இந்த புத்தகம் வெளிவந்த போது அதன் வரவேற்ப்பு எப்படி இருந்தது என்பதை கண்டறிய ஆசை.
அநேகமாக இந்த புத்தகம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டும்.அப்போதுதான் ஒரு ரூபாய்க்கு அறுபத்தி நான்கு பக்கங்கள் கட்டுபடியாகி இருக்கும். எண்பதுகளின் மத்தியத்தில் எல்லாம் புத்தக விலை ஒன்றரை ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்க்கும் மாறி விட்டது.
அட்டை மற்றும் படங்களை வரைந்த ஓவியரின் கிரெடிட் எங்கேயும் இல்லை. பதிப்பகத்தாரின் முகவரியை வைத்து கணிக்கும்போது அநேகமாக விமல் காமிக்ஸ் கதைகளுக்கு வரைந்த ஓவியரே இவராகவும் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அவர்களிடம் ஒருமுறை பேசி இருக்கிறேன். அந்த பேட்டியின் விவரங்களை மறுபடியும் சரி பார்த்தால் இதனை ஊர்ஜிதப்படுத்த இயலும் என்றே நினைக்கிறேன். தற்சமயம் வெளியூரில் இருப்பதால் உடனடியாக தகவலை சரி பார்க்க முடியவில்லை.
ஓவியர் ராணு அவர்கள் எண்பதுகளின் முடிவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் குட்டி & குண்டு காமிக்ஸ் என்று ஒரு சிறுவர் இதழை துவக்கினார். நான்கு ருபாய் விலையில், கருப்பு வெள்ளையிலும், இரு வண்ணங்களிலும் சுமார் முப்பது இதழ்கள் வரை வெளிவந்த அந்த புத்தகம் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறு சிறு சித்திரக் கதைகளையும், பல எழுத்துக் கதைகளையும், துணுக்குகளையும் உள்ளடக்கிய அந்த இதழ், சரிவர விற்பனையில் சோபிக்கவில்லை என்பதே உண்மை. சிற்சில விளம்பரங்களையும், தன்னுடைய சொந்தக் காசையும் நம்பியே ஓவியர் ராணு அவர்கள் அந்த இதழை துவக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் நாட்டில் இருந்து இதுபோல ஆங்கில மொழியில் காமிக்ஸ் அல்லது சிறுவர் இலக்கிய புத்தகங்கள் வந்து இருந்தால் அதனை பற்றி மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல்.
வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தமிழில் சுமார் நூற்றி அறுபதிற்கும் மேற்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக கடின முயற்சியில் சேகரிக்க முடிந்த தகவல்கள் இவை. இவற்றில் என்னிடம் பாதிக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இல்லை. ஆகையால் இந்த மாதிரியான புத்தகங்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்தாலோ தயவு செய்து தகவல் அளிக்கவும். அவற்றை வாங்கவோ அல்லது ஸ்கான் / போட்டோ எடுக்கவோ அனுமதி தேவை.
இன்னும் இரண்டு நாட்களில் நியூ லுக் ஸ்பெஷல் இதழின் சிறப்பு விமர்சனப் பதிவு ஒன்று வரும்.
இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.
Thanks & Regards,
King Viswa.
