வேதாளர் (The Phantom) காமிக்ஸ் கதைகள் தினசரி வரும் ’டெய்லி ஸ்ட்ரிப்’ ஆகவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ’சன்டே ஸ்ட்ரிப்’ ஆகவும் உலகமெங்கும் தினசரிகளில் வந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஃப்ரூ என்ற காமிக்ஸ் நிறுவனம் 1948ஆம் ஆண்டுமுதல் இவரது கதைகளை கருப்பு வெள்ளையில் வெளியிட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டிறுதியில் பல சிக்கல்களால் நிற்கும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டுதான் டட்லி ஹொகார்த், ரெனே வொய்ட் மற்றும் க்ளென் ஃபார்ட் ஆகியோர் 2016ல் ஃப்ரூ காமிக்ஸை எடுத்து நடத்த ஆரம்பித்தார்கள்.
இந்த வேதாளரது கதைகளை 2005ஆம் ஆண்டிலிருந்து வரைந்து வந்தவர் ஓவியர் பால் ரயான். இவர் 2016, மார்ச் 77ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது நினைவாக, இந்த ஸ்பெஷல் காமிக்ஸை ஃப்ரூ வெளியிட்டது. வழக்கமாக, வண்ண அட்டைப்படத்துடன் கருப்பு வெள்ளையில் காமிக்ஸ் கதைகளை வெளியிடும் ஃப்ரூ, கருப்பு வெள்ளை அட்டையுடன் முழு வண்ணக் காமிக்ஸை முதன்முறையாக ரயானின் நினைவாக வெளியிட்டது.
31st December 2017 – Frew Comics Phantom – Terror’s Mutiny
அறிமுகம்: முதல் வேதாளர் கிரிஸ்டோபர் வாக்கர், அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸுடன் பணிபுரிந்தவரின் மகன். 20-வது வயதில் அப்பாவுடன் கப்பலில் சென்றபோது கடற்கொள்ளை குழுவால் தாக்கப்பட்டு, கப்பல் மூழ்கிவிடுகிறது. அந்தக் கப்பலில் இருந்து தப்பிய ஒரே ஆள் வாக்கர் என்ற வேதாளர். அவரை பாந்தர் எனும் ஆப்பிரிக்கப் பிக்மி (குள்ள) இனத்தவர் காப்பாற்றுகின்றனர். அப்போது அநீதியையும், கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவதாக உறுதி எடுத்துக்கொள்கிறார் வேதாளர். அதற்குப் பிறகு வாக்கர் என்ற வேதாளரும் அவருடைய வாரிசுகளும் குற்றங்களை எதிர்த்துப் போராடும் நாயகர்களாக வலம் வருகிறார்கள். வெளியுலகைப் பொறுத்தவரையில் வாக்கரும் அவருடைய வாரிசுகளும் ஒரே ஆள் என்றே நம்புகிறார்கள். அதனால் வேதாளர் சாகாவரம் பெற்றவர் போலவும், அவரை கொல்லவே முடியாது என்ற கருத்தும் பரவியுள்ளது. இப்போதைய கதைகளில் ஹீரோவாக வருபவர் 21-வது வேதாளர். ஹீரோ என்ற குதிரையில்தான் வேதாளர் வருவார், எப்போதும் அவருடன் டெவில் என்ற நாயும் உடன் இருக்கும்.
வேதாளரின் மோதிரங்கள்: வேதாளரின் வலது கையில் இருப்பது மண்டையோட்டு சின்னம் கொண்ட கபால மோதிரம். இதன் மூலம் வேதாளர் ஒருவரைக் குத்தினால், அவரது முகத்தில் என்றுமே அழியாத சின்னமாக அது பதிந்துவிடும். இடது கையில் இருப்பது அனைவரும் மதிக்கும் நல்ல சின்னம். வேதாளரின் நண்பர்கள் என்று அர்த்தம் கொண்ட இச்சின்னம், காலம்காலமாக மக்களைக் காப்பாற்றும். இது எங்கே இருக்கிறதோ அங்கே வேதாளர் இருக்கிறார், அந்த இடம் அவரது பாதுகாப்பில் உள்ளது என்று அர்த்தம்.
உருவாக்கியவர்: லீ ஃபாக்
கதாசிரியர்: டோனி டி பால்
ஓவியர்: பால் ரயான்
பதிப்பாளர்: ஃப்ரூ காமிக்ஸ்
எடிட்டர்: டட்லி ஹொகார்த்
பக்கங்கள்: 36 முழு வண்ணப் பக்கங்கள்
விலை: 278 ரூபாய்
வெளியீடு (அச்சில்): ஏப்ரல் 2016
வயது வரம்பு: 9+
One Liner: அதிபரைக் கடத்த நினைக்கும் தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்கும் வேதாளர்!
கதைச் சுருக்கம்: பெங்கல்லாவின் அதிபர் லமான்டா லுவாகா ஃபெலிகன் கடற்கரைக்கு விஜயம் செய்யும்போது, கப்பற்படை கமாண்டரிடம் அவரைக் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக நம்ப வைக்கின்றனர். அதைப்போலவே, ராணுவத்திடமும் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் நம்பாமல் இருக்கும்போது, அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகளே அவரைக் கடத்துகின்றனர்.
ஆனால், அதிபர் தீவிரவாதிகளின் கையில் சிக்குண்டு இருக்கிறார் என்பதே இரு படையினருக்கும் தெரியாமல் இருக்க, வழக்கம்போல வேதாளர் அங்கே வருகிறார். எதற்காக அதிபரைக் கடத்த திட்டமிட்டார்கள் என்பதை அறிந்து அந்த சதியை முறியடிக்கிறார் வேதாளர்.
Verdict: வேதாளரின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.
குறிப்பு: வேதாளரை உருவாக்கிய லீ ஃபாக்கின் மரணத்திற்குப் பிறகு அவரது கதைகளை எழுதி வருபவர் டோனி டி பால். வேதாளரின் எதிரிகளிலேயே மிகக் கொடூரமானவனாகக் கருதப்படும் சாட்டு (பைதன்) என்ற பாத்திரத்தை உருவாக்கியவர் இவர்தான். இந்தக் கதையிலும் பைதன் வருகிறார். இந்தக் கதை 21 ஏப்ரல் 2014 முதல் 23 ஆகஸ்ட் 2014 வரை தினசரி நாளிதழில் வெளி வந்தக் கதை.
ஆன்லைனில் வாங்க : https://www.phantomcomic.com.au/collections/all/products/issue-1748-kiwi-cover-2016