Circa 1987.
அம்பத்தூர் பழனிவேல் வேஸ்ட் பேப்பர் மார்ட்டில், ஒரு கனமான பாக்கெட் சைஸ் புத்தகத்தைப் பார்த்தேன். அடடே, ஏதாவது காமிக்ஸ் ஆக இருக்கும் என்று உடனே புரட்டிப் பார்த்தேன். அட்டைப்படமும் ஒரு காமிக்ஸ் இதழுக்கான ஃபீலைக் கொடுத்தது (அந்த அட்டைப்படத்தை வரைந்தவர் அமரர் திரு GK Murthy). ஆனால், அது காமிக்ஸ் அல்ல, அது ஒரு நாவல். அப்போதுதான் நான் நாவல் படிக்க ஆரம்பித்திருந்தேன். அந்த இதழைப் பார்த்த உடனே நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால், அந்த இதழின் பெயர் “மனிதர்கள் இல்லாத தீவு”.
அமரர் தமிழ்வாணனின் அட்டகாசமான கதையுடன் பொங்கல் மலராக 4 ரூபாய் விலையுடன் வந்த அந்த இதழில், அண்ணன் லேனா தமிழ்வாணன் அவர்களின் பங்களிப்பும் இருந்ததாக நினைவு (அதற்கு, நம்ம அரஸ் சார்தான் ஓவியம்). அதற்குப் பிறகு, நான் பாக்கெட் நாவலை தொடர்ச்சியாகப் படிக்கும் வரையிலும், ஒவ்வொரு ஜனவரி மாத பாக்கெட் நாவலுமே அமரர் தமிழ்வாணனின் அட்டகாசமான கதையுடன்தான் வந்தது.
இதோ, இன்னொரு தமிழ்வாணன் நாவலை, பாக்கெட் நாவலில் காண்கிறேன். ஆனால், இது நவம்பர் – டிசம்பரிலேயே வந்துவிட்டது (நவம்பர் 10ஆம் தேதி அமரர் தமிழ்வாணனின் நினைவுக்காகவும், நவம்பர் 11ஆம் தேதி அண்ணன் ரவி தமிழ்வாணன் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலும் இது முன்கூட்டியே வெளியிடப் பட்டதாக, இப்போது துபாயில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தலைவர் ஜீயே சொல்கிறார்).
முன்பெல்லாம் கல்கண்டு வார இதழில், ஒவ்வொரு பொங்கலுக்குமோ, அல்லது சுதந்திர தினத்துக்கோ ஒரு புதிய தொடர்கதை ஆரம்பிக்கும். அமரர் தமிழ்வாணன் அவர்கள் இருந்தவரையில், அவர்தான் பெரும்பாலும் அத்தொடர்கதையை எழுதுவார். அப்படி, ஆகஸ்ட் 1975இல் ஆரம்பிக்கப்பட்ட தொடர்கதைதான் நேப்பிள்சில் சங்கர்லால்!
ஹாங்காங்கில் ஒரு வழக்கை துப்பறிந்து விட்டு, பெர்லினில் அதகளம் செய்துவிட்டு, ஐரோப்பாவே வியக்கும் திறமைக்காரரான சங்கர்லால், நேப்பிள்சில் வந்து இறங்குவதுடன் கதை ஆரம்பிக்கிறது. விமானநிலையத்தின் வாசலிலேயே அவரை ஒரு மர்மக் கும்பல் துப்பாக்கிமுனையில் கடத்திவிடுகிறது. கண்கள் கட்டப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் அவரை ஒரு தீவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அங்கே, கடலில் மிதக்கும் கோபுரத்தில் பெர்கஸ் என்ற மனிதரைச் சந்திக்கிறார், சங்கர்லால். பார்ப்பதற்கு, “லக்கி லூசியானோ” போலவே இருக்கும் பெர்கஸ், சங்கர்லாலிடம் ஒரு உதவி கேட்கிறார். அதை சங்கர்லால் மறுக்க, காணாமல் போன தனது மகளைக் கண்டுபிடிக்குமாறு கேட்கிறார் பெர்கஸ். அதற்கும் சங்கர்லால் மறுப்பு தெரிவிக்கிறார். அங்கிருந்து நேப்பில்ஸ்சுக்குத் திரும்ப வந்து, ஒரு ஹோட்டலில் தங்குகிறார்.
சங்கர்லால் யாரைச் சந்திக்க வந்தாரோ (லக்கி லூசியானோ) ஒரு கார் விபத்தில், கடலில் விழுந்து இறந்து விடுகிறார் என்று போலிசார் தகவல் சொல்கின்றனர். ஒரு வாடகைக் காரில் பயணிக்கும் சங்கர்லாலையும், காரோட்டும் அன்னாவையும் ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுக்கொல்ல முயற்சி நடக்கிறது.
ஏன் சங்கர்லாலைக் கொல்ல முயற்சிக்க வேண்டும்?
Rather, யார் முயற்சிக்க வேண்டும்?
சங்கர்லாலுக்கு உதவும் காரோட்டியான அன்னா, யார்?
லக்கிக்கு என்ன நேர்ந்தது?
பெர்கஸின் மகள் எங்கே இருக்கிறார்?
இரகசியத் தீவில் இருக்கும் மர்ம மனிதன் யார்?
என்றெல்லாம் பல கேள்விகள் படிக்கும்போது தொடர்ச்சியாக எழ, இந்த மர்ம முடிச்சுகளை ஒரு கைதேர்ந்த தொழில்முறை மந்திரவித்தை நிபுணரின் லாவகத்துடன் கடைசி அத்தியாயத்தில் அவிழ்க்கிறார் அமரர் தமிழ்வாணன்.
ஒவ்வொரு முறை அமரர் தமிழ்வாணனின் கதையை படிக்கும்போதும், நான் சில புதிய விஷயங்களைக் கவனித்து வருகிறேன். அதில், இந்த முறை கவனித்தது இதுதான்.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், நம்மிடம் அதிகமாக ஏதாவது கேட்கப்படும்போது, சூழ்நிலையின் காரணமாக, நாம் அதை ஒப்புக்கொள்ளும்போது “பரவாயில்லை” என்று சொல்வோம் அல்லவா? கதையில், இதைப்போல ஒரு கட்டத்தில், சங்கர்லால், “குற்றம் இல்லை” என்று சொல்கிறார். மிகவும் வித்தியாசமான சொல்லாடல், அது.
வாரா வாரம் ஒரு கொக்கி வைத்து எழுதப்பட வேண்டும் என்ற தொடர்கதை விதிக்கு உட்பட்டு, 41 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட ஒரு நாவலை, அதுவும் நான் ஏற்கனவே படித்த ஒரு கதையை, இப்போதும் என்னால் ஒரே மூச்சில் ரசித்து, படிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் ஒன்றுதான்: தமிழ்வாணன்!
அண்ணன்கள் ரவி மற்றும் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: கல்கண்டு இதழில் ஓவியர் ராமுவின் கைவண்ணத்தில் வந்த கதைக்கான விளம்பரம், அட்டைப்பட ஓவியம், கதையில் வரும் ஓவியம் என்று இவை அனைத்தையும் அப்படியே அதே வடிவில் ஒரு உண்மையான கலெக்டர்ஸ் எடிஷனாகக் கொண்டு வாருங்களேன், சார்? நானே முன்னின்று விற்பனைக்கு உதவுகிறேன்
பாக்கெட் நாவலின் 345ஆவது இதழான இந்தக் கதை வெறும் 15 ரூபாயில் உங்களுக்குக் கிடைக்கிறது. 96 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில், என்றும் இளமையுடன் இருக்கும் தலைவர் ஜீயேவின் எடிட்டர்.காம் மற்றும் அவரது கங்காரு பதில்களுடன் சிறப்பாக வந்துள்ளது. சந்தா கட்ட, மற்றும் விற்பனை சம்பந்தமான தொடர்புக்கு: 044 2854 4294.
இந்த அட்டகாசமான நாவலை, வெகுவிரைவில், ஆன்லைனில் படிக்க: https://noveljunction.com/index.aspx
SAP MM Training in Chennai.
ReplyDeletehttp://thecreatingexperts.com/sap-mm-training-in-chennai/
SAP MM Real Time Training in Chennai