1994ஆம் ஆண்டிறுதியில் வெளியான ஹாலிவுட் படமான லெஜண்ட்ஸ் ஆஃப் த ஃபால் (Legends of the Fall) படத்தில் ஒரு காட்சி மிகவும் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். அதைப்பற்றி விவரிக்கும் முன்பாக, அதன் பின்னணியைத் தெரிந்து கொள்வோம்.
அமெரிக்கர்கள் செவ்விந்தியர்களுக்கு இழைத்து வரும் அநீதியைக் கண்டு இராணுவத்தை விட்டு விலகி காட்டுப்பகுதியில் குடியேறும் ஆந்தனி ஹாஃப்கின்ஸ்சுக்கு மூன்று மகன்கள். மூவரும் முதலாம் உலக யுத்தத்தில் பங்கேற்கிறார்கள். இளைய சகோதரன் யுத்தத்தில் கொல்லப்பட, பிராட் பிட் தனது அண்ணனுடன் வீடு திரும்புகிறார். யுத்தத்தின் கோர சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளான நாயகன் வீட்டை விட்டு தனியே பயணம் செய்யக் கிளம்பி விடுகிறான். இன்னொரு மகனும் தந்தையுடன் சண்டை போட்டுவிட்டுக் கிளம்ப, அந்தக் குடும்பமே நிலைகுலைகிறது.
இலையுதிர் காலம் கடந்து, பனிக்காலம் முழுமையடைய, அப்போதும் நாயகனைப்பற்றிய தகவல் எதுவுமே இல்லாமல் இருக்கும் சூழலில் வசந்த காலம் மெல்ல மெல்ல கதவைத் திறந்து வரும்போதுதான் அந்தச் சம்பவம் நடக்கிறது.
வசந்த காலத்தின் முதல் நாளில் பின்புறம் காட்டு மரங்கள் தெரிய, பரந்து விரிந்த அந்த புல்வெளியில் பல குதிரைகள் ஓடி வர, அவற்றின் நடுவே நாயகனான பிராட் பிட் வருகிறார். அவருடைய நீண்ட கேசம் காற்றில் அலைமோத, குதிரைகளின் நடுவே வரும் அந்தக் காட்சி மிகவும் அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தது. சினிமோட்டோகிராஃபிக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற இந்தப் படத்தின் ஆகச் சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்று.
Tristan Returns - Legends of the Fall (1994)
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்த ஆந்தனி ஹாஃப்கின்ஸ்சுக்கு பிராட் பிட்டின் மறுவருகை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க, அந்தக் குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி தழைத்தோங்குகிறது.
இங்கே வசந்தகாலம், புல்வெளியில் குதிரைகளின் பாய்ச்சல், நாயகனின் மீள்வருகை இவையனைத்துமே குறியீடுகளாகவே இருந்தாலும் நேரடியாகவே எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலேயே இவை அமைந்துள்ளது. இதைப்போன்ற ஒருசில நேரடியான குறியீடுகளைக் கொண்டு அமைந்துள்ளது லயன் காமிக்ஸ் வெளியீடான காதலும் கடந்து போகும் என்ற டெக்ஸ் வில்லரின் சாகசம்.
டெக்ஸ் வில்லர்: 70 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ் ஹீரோதான் இத்தாலியின் சூப்பர் ஸ்டார். சட்ட பரிபாலனம் செய்யும் நீதிமானாக, செவ்விந்தியக் குடியினத்தவர்களின் ஒப்பற்ற தலைவனாக, தர்மத்தின் தலைவனாக விளங்கும் டெக்ஸ் வில்லர் காலத்தைக் கடந்த ஒரு காமிக்ஸ் நாயகர். மகன் கிட் வில்லர், நண்பர் கிட் கார்ஸன், செவ்விந்தியச் சகா டைகர் ஜாக் என்று ஒரு கூட்டணியாக செயல்படும் இந்தக் குழு, தீயவர்களின் சிம்ம சொப்பனம். கடந்த 1985ஆம் ஆண்டுமுதல் தமிழ் பேசி வரும் டெக்ஸ் வில்லருக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன.
இக்கதைகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மற்ற ஐரோப்பிய, அமெரிக்கக் காமிக்ஸ் / கிராஃபிக் நாவல்களில் இருக்கும் ஒரு முழுமை இவ்வகையான கதைகளில் இல்லை என்று பல குற்றச்சாட்டுகள் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் தொடரின் மீது முன்வைக்கப்பட்டாலும், ஆரம்பம் முதலே டெக்ஸ் வில்லரின் கதைகளின் பின்னணி மிகவும் சுவாரசியமானதாகவே இருக்கும்.
எப்படி பிரெஞ்சு காமிக்ஸான லக்கிலூக் தொடரில் அமெரிக்காவின் வரலாறு முதல் சரித்திரப் புகழ்பெற்ற பல சம்பவங்களை மையப்படுத்தி கதைகள் உருவாக்கப்பட்டதோ, அதைப்போலவேதான் டெக்ஸ் வில்லரின் கதைகளிலும் பல சுவையான தகவல்கள் நிறைந்திருக்கும். தண்ணீரைக் குடிக்கும் முன்பாக நெல்லிக்காயை சுவைப்பதைப் போல இந்தப் பின்புலத் தகவல்களைத் தெரிந்துகொண்டால், டெக்ஸ் வில்லரின் கதைகள் மிகவும் ஆர்வமூட்டுவதாக அமைந்து விடும்.
ஒருகால கட்டத்திற்குப் பிறகு சரித்திர சம்பவங்களைக் கடந்து மிகவும் பிரபலமாக வன்மேற்குத் திரைப்படங்களை கதையின் பின்னணியாகக் கொண்டு டெக்ஸ் வில்லரின் கதைகள் உருவாக்கப்பட்டன. மிகப்பிரபலமான வன்மேற்குப் படங்களின் போஸ்டர்களை டெக்ஸ் வில்லர் கதைகளுக்கு அட்டைப்பட மாடலாகக் கொண்டு வரைவது என்று பலவிதமாக காமிக்ஸ் ரசிகர்களைத் தொடர்ந்து வாசிப்பில் வைத்திருக்கும் போனெல்லி குழுமத்தினர் வழக்கமான டெக்ஸ் வில்லர் கதைகளைப் போல இல்லாமல் மிக மிக நீண்ட கதையமைப்பைக் கொண்ட கதைகளை டெக்ஸ் மாக்சி என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்கள்.
டெக்ஸ் வில்லரின் உற்ற தோழனான கிட் கார்ஸனின் கதையான “கார்சனின் கடந்த காலம்” போல, டைகர் ஜாக்கின் கதையைச் சொல்லும் ஒரு 340 பக்க காமிக்ஸ் கதைதான் 2018ஆம் ஆண்டில் லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளிவந்துள்ளது. அது எப்படி 340 பக்கங்களுக்கு போரடிக்காமல் ஒரு கதையைச் சொல்ல இயலும்? என்ற சந்தேகத்திற்கு அதிரடியான பதிலாக இக்கதை அமைந்துள்ளது.
வழக்கம்போல இந்தக் கதையுமே பல சரித்திரச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும், பிராட் பிட்டின் லெஜண்ட்ஸ் ஆஃப் த ஃபால் படத்தில் வரும் அந்த வசந்த கால மீள்வருகைக் காட்சி மிகவும் முக்கியமான இரண்டு இடங்களில் வந்து படிப்பவர்களின் மனதைக் கொள்ளையடிக்கிறது. அதுவும் ஒரே விதமான காட்சி, இரண்டு வகையான உணர்வுகளைத் தூண்டுவதுதான் இந்த காமிக்ஸ் கதையின் உச்சகட்டம்.
டெக்ஸ் வில்லரின் நண்பரான டைகர் ஜாக் எப்படி முதல்முறையாக டெக்ஸை சந்தித்தார் என்பதை விளக்கும் இக்கதையில், டைகர் ஜாக் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஒரு போட்டியில் பங்கேற்பார். போட்டியாளர்களில் யார் அதிகமான குதிரைகளைச் சேகரித்து வருகிறார்களோ, அவர்தான் மணப்பெண்ணை அடையும் பாக்கியவானாக முடியும் என்ற சூழலில்தான் இந்தக் கதையின் அந்த குதிரை மீதான முதல் வருகைக் காட்சி அமைகிறது. சூரியனின் கடைசி கிரகணங்கள் மறையும்போது நம்பிக்கையின் கடைசிக்கீற்றும் மறைவதாக வரையப்பட்டிருக்கும் உருவகம் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு பக்கம் என்றால், ஆரவாரமான குதிரைகள் புடைசூழ, டைகர் ஜாக் வரும் அந்த ஒரு காட்சி உருவாக்கும் உணர்ச்சி இன்னொரு பக்கம் என்று வாசிப்பவர்களின் ரசனைக்குத் தீனி போடும்விதமாக இக்காட்சி அமைந்துள்ளது. இதைப்போன்றதொரு காட்சி கதையின் முடிவில் வருகிறது. தனக்கான சோகங்களைக் கடக்க முடிவெடுக்கும் டைகர் ஜாக், மேலே சொல்லப்பட்ட லெஜண்ட்ஸ் ஆஃப் த ஃபால் படத்து நாயகன் பிராட் பிட் போல அனைவரையும் பிரிந்து சென்று விடுகிறார். அவரது வருகைக்காக பருவங்களைக் கடந்து டெக்ஸ் காத்திருக்க, வசந்த காலத்து முன்பகல் பொழுதொன்றில் குதிரை மீதமர்ந்து வரும் அவரது மீள்வருகை ஏற்படுத்துவது இன்னொருவகையான உணர்ச்சி.
ஒவ்வொரு கதையிலும் அதை சிறப்பான, மறக்க முடியாததொரு கிளாசிக் ஆக மாற்றும் ஒரு கட்டம் இருக்கும். அப்படியான ஒரு கட்டத்தை வலிந்து திணிக்காமல், கதையின் போக்கிலேயே வரவழைத்தால், அந்தக் கதாசிரியரின் திறமையை நாம் பாராட்டலாம். இந்தக் கதையில், கதையை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தும் தருணம் இதுதான்.
டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் புத்தகங்களை வாங்க: http://www.lion-muthucomics.com/23-tex-willer