ஒரு காமிக்ஸ் கதையை உருவாக்குவதால், என்ன பாதிப்பு வந்துவிடும்?
- அதைப் பற்றி காரசாரமான எதிர்மறை விமர்சனங்கள் வரலாம்.
- அந்தப் புத்தகம் தடை செய்யப்படலாம்.
- அந்த படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தல்கள் வரலாம்.
- படைப்பாளிகள் அந்த நாட்டைவிட்டே ஓடிவிடலாம்.
- படைப்பாளியின் குடும்பத்தினர் கடத்தப் படலாம்.
- நெருங்கிய உறவினர்கள் கொல்லப் படலாம்.
- அல்லது, படைப்பாளிகளே கொல்லப் படலாம்.
எதிர்ப்புக்கு ஆளாகும் ஒரு படைப்புக்கு, இதில் ஏதாவது ஒன்றிரண்டு நடக்கும். ஆனால், மேலே சொல்லப்பட்ட எல்லாமும் ஒரே படைப்புக்கு நடக்குமா?
அதுவும் ஒரு ”சாதாரண” காமிக்ஸ் கதைக்கு?
ஹெ ஜி ஓ எனும் மேதை: அர்ஜெண்டீனாவின் (ஒரிஜினலாக, அர்ஹெந்தீனா) தலைநகரமான புவனெஸ் ஐரீஸில் ஜூலை 23, 1919ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஹெக்டோர். ஜியாலஜியில் பட்டப்படிப்பு முடித்திருந்ததால், பிற்காலத்தில் இவரால் சயின்ஸ் பிக்ஷன் கதைகளை அறிவியல் பின்புலம் கொண்ட சம்பவங்களை வைத்து நம்பகத் தன்மையுடன் எழுத முடிந்தது. 1940களில் எழுத்துத் துறைக்குள் நுழைந்த ஹெக்டோர், பின்னர் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களைப் படைக்க ஆரம்பித்தார். 1957ல் இவர் தனது சகோதரருடன் இணைந்து ஹோரா சேரொ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.
ஏற்கனவே, ”த வெனிஸ் க்ரூப்” என்ற ஒரு மாபெரும் காமிக்ஸ் இயக்கத்தை தோற்றுவித்திருந்தார். அந்த க்ரூப்பில்தான் ஹ்யூகோ ப்ராட், டீனோ பட்டாக்ளியா, மரியோ ஃபாஸ்டிநெல்லி போன்ற உலகப்புகழ் பெற்ற காமிக்ஸ் படைப்பாளிகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருக்குமே ஆதர்சமாக, முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ஹெக்டோர். அவருடைய நட்பு சார்ந்த சீரிய வழி நடத்துதலில், இந்தக் குழு உலகின் தலை சிறந்த பல படைப்புகளை உருவாக்கினார்கள்.
த எடர்நாட் – ஒரு முடிவின் ஆரம்பம்: 1957ஆம் ஆண்டு தனது ஹோரா சேரோ வார இதழில் ஒரு புதிய காமிக்ஸ் தொடரை ஆரம்பிக்கலாம் என்று ஹெக்டோர் முடிவெடுக்கிறார். அதற்காக அவர் ஓவியர் ஃப்ரான்சிஸ்கோ செலோனோ லோபஸ்-ஐச் சந்திக்கிறார்.
இருவரும் சேர்ந்து, புதிய தொடரைப் பற்றி விவாதிக்கும்போது, ஹெக்டோர் தனக்கு மிகவும் பிடித்த கிளாசிக் கதையான ராபின்ஸன் க்ரூஸோ-வைப் பற்றிச் சொல்லி, அதை அடிப்படையாக வைத்து ஒரு சயின்ஸ் பிக்ஷன் காமிக்ஸ் தொடரை உருவாக்கலாமா? என்று கேட்கிறார்.
அப்போதெல்லாம் (1950களில்) சயின்ஸ் பிக்ஷன் என்றாலே, ராக்கெட்டில் அயல் கிரகங்களுக்குச் சென்று போரிடுவது, விண்வெளியில் கதைகள் நடப்பது என்றுதான் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலான கதைகள் காதில் பூ சுற்றுவது போலத்தான் இருக்கும். நாம் இதையெல்லாம் கட்டுடைப்பு செய்து, மக்கள் நம்புவதைப் போல ஒரு சயின்ஸ் பிக்ஷன் காமிக்ஸ் தொடரைப் படைக்கலாம் என்று ஹெக்டோர் சொன்னார்.
அவர் சொன்ன பாணியில் கதையமைக்க லோபஸ்-சுக்கு ஒப்புதல் இருந்தாலும், ஒரு கிளாசிக் கதையான ராபின்ஸன் க்ரூஸோ-வை எப்படி காமிக்ஸ் வடிவில் கொடுக்க முடியும்? என்று அவர் சந்தேகத்துடனே இருந்தார்.
உலகின் தலைசிறந்த காமிக்ஸ் தொடர்: ஹோரா சேரோ வார இதழில், ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் நான்கு பக்கங்கள் என்ற அளவில் இந்த காமிக்ஸ் தொடர் வெளியானது. செப்டம்பர் 4, 1957ல் ஆரம்பித்த இந்தக் காமிக்ஸ் தொடர் கருப்பு வெள்ளையில் அச்சில் வந்தாலும், ஆரம்பித்த சில வாரங்களிலேயே மக்களின் மனதைக் கொள்ளையடிக்கத் துவங்கி விட்டது. அதிலும் தொடரின் சில அத்தியாயங்களைப் படித்து விட்டு, வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் பயந்தனர் என்பது வரலாறு. இப்போது ஹாலிவுட் திரைப்படமாக தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ் படத்திற்கே இந்தக் காமிக்ஸ் தொடர்தான் முன்னோடி.
விளைவுகள்: எடர்நாட் ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில், பல எதிர்வினைகள் வர ஆரம்பித்தன. மக்களுக்கு இந்தக் காமிக்ஸ் தொடர் எத்தகையது, எதைப் பற்றியது என்பதில் தெளிவான புரிதல் இருந்ததால், இதைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால், அரசாங்கத்திற்கும் இதைப் பற்றிய புரிதல் இருந்ததால், இதற்கு எதிரான அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
- பத்திரிகை பணியாளர்கள் வேலையை விட்டு நின்றார்கள்.
- ஓவியர்கள் மிரட்டப் பட்டனர்.
- லோபஸ்-சுக்கு கொலை மிரட்டல்கள் எல்லாம் வர ஆரம்பித்தது.
- அவர் அர்ஜெண்டீனாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் குடி புகுந்தார்.
- காமிக்ஸ் வருவது நின்று போனது.
ஆனால், ஹெக்டோர் சிறிதும் மனம் தளரவில்லை. 1961ல் மறுபடியும் இதே எடர்நாட் தொடரை வேறு வடிவில் ஆரம்பித்தார். சில மாற்றங்களைச் செய்து, தொடரை இன்னமும் காத்திரமான ஒரு படைப்பாக மாற்றினார். ஒரு நேரடியான விமர்சனமாக இதை எண்ணிய அரசாங்கமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் கை கோர்த்துக்கொண்டு செயல்படத் துவங்கின. சொல்ல முடியாத பலவகையான இன்னல்களுக்கு ஆளாகினார், ஹெக்டோர். ஐந்து ஆண்டுகளுக்கு இவரது பத்திரிகை வெளிவரவே இல்லை. ஆனால், சிலேவின் பிரபலமான ஸிக்-ஸாக் பதிப்பகத்திற்காக இவர் எழுத ஆரம்பித்தார்.
சே கெவாரா: 1967ல் சே கெவாரா கொல்லப்பட்ட போது, ஹெக்டோரின் அமைதி, எரிமலையாக வெடித்தது. சே கெவாராவைப் பற்றி ஹெக்டோர் ஒரு கிராஃபிக் நாவலை உருவாக்கினார். 1968ல் அந்தப் புத்தகம் வெளியானபோது, அதைப் படித்து விட்டு இன்னொரு புரட்சிக்கு அது வித்திட்டு விடுமோ? என்று பயந்த அரசாங்கம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் கைப்பற்றி எரித்து விட்டது. மேலும், எதிர்காலத்தில் எந்தப் பதிப்பும் வரக்கூடாது என்று அந்த கிராஃபிக் நாவலின் ஒரிஜினல் ஓவியங்களையும், ஸ்க்ரிப்டையும் தேடிப்பிடித்து அழித்து விட்டனர். அழிக்கப்படுவதற்கு முன்பாக அந்த சே கெவாராவின் கிராஃபிக் நாவலை வாங்கிப் படித்தவர்கள், அதுதான் சே வின் வாழ்க்கைக்கான உண்மையான பதிவு என்று கொண்டாடினார்கள்.
எடர்நாட்டின் மீள் வருகை: சேவின் மரணம் ஹெக்டோரின் உள்ளே இருந்த கோபத்தை மீட்டெடுத்தது. மே, 29, 1969ல் எடர்நாட் காமிக்ஸ் தொடர் மறுபடியும் ஆரம்பித்தது. இம்முறை ஓவியம் வரைந்தது, பின்நவீனத்துவ பாணி ஓவியரான ஆல்பர்ட்டோ ப்ரெக்கீயா. இம்முறை அர்ஜெண்டீனா மட்டுமின்றி ஐரோப்பாவில் பத்திற்கும் மேற்பட்ட இதழ்களில் தொடராக வரத் துவங்கியது. அர்ஜெண்டீனாவில் தடை செய்யப்பட்டால், அந்த இதழின் தொடர்ச்சி, சீலேவில் இருந்து வெளியான காமிக்ஸ் இதழிலிருந்து அர்ஜெண்டீனாவிற்குக் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. இப்படியாக, மக்கள் கொண்டாடிய அந்தத் தொடர் மறுபடியும் மக்கள் மனதில் புரட்சிக்கான விதையை ஆழமாக விதைக்கத் தொடங்கியது.
அதன் பிறகு, ஹெக்டோர் தீவிர அரசியலில் இறங்கினார். பல முக்கியமான அரசியல் தலையங்கங்களை எழுதினார். 1973ல் இவர் எழுதிய ”ஏகாதிபத்தியத்தின் 450 ஆண்டுகள்” என்ற தலையங்கக் கட்டுரை உலகின் தலை சிறந்த கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் மாதிரிக் கட்டுரையாக இன்றும் விவாதிக்கப் படுகிறது.
1976 – எடர்நாட் 2: எடர்நாட் தொடரை 1957ல் ஆரம்பித்த போது ஓவியம் வரைந்த லோபஸ், ஒரு ஏஜென்சியின் மூலமாக மறுபடியும் ஹெக்டோரைத் தொடர்பு கொண்டார். ”எடர்நாட் பாகம் இரண்டு - எதிர்காலம்” என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு இந்த புதிய காமிக்ஸ் தொடர் ஆரம்பித்தது. அர்ஜெண்டீனாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற சித்தாந்தங்களின் அடிப்படையில் இத்தொடர் உருவாக்கப்பட்டு இருந்தது. தொடர் ஆரம்பித்த உடன், இதற்கான எதிர்விளைவுமே பெரிய அளவில்தான் இருந்தது.
- 1976ல் ஹெக்டோர் ஹெர்மன் ஓய்ட்டர்ஹெல்ட் “காணாமல்” போனார்.
- அவர் காணாமல் போன உடனே, அவரது நான்கு மகள்களும், மருமகன்களுமே போராட்டத்தில் இறங்கினர்.
- சிறிது நாட்களிலேயே ஹெக்டோரின் நான்கு மகள்களான மரீனா (வயது 18), பீட்ரிஸ் (19), டயானா (21), எஸ்டெல்லா (25) ஆகியோரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, ”காணாமல்” போனார்கள்.
- கைது செய்யப்படும்போது, டயானா நிறைமாத கர்ப்பிணி.
- எஸ்டெல்லாவோ, கைக்குழந்தையுடன் இருந்தார்.
- உடனடியாக, ஹெக்டோரின் நான்கு மருமகன்களும் கைது செய்யப்பட்டனர்.
- வழக்கம்போல, அவர்களும் “காணாமல்” போனார்கள்.
1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸூப்யோ என்ற ரகசிய சித்திரவதைக் கூடத்தில் அவரைப் பார்த்ததாக தப்பிப் பிழைத்த கைதிகள் சிலர் சொன்னார்கள். 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தக் கொடிய சிறையில் அவரை நடை பிணமாகப் பார்த்ததாக “பெயரற்ற சிறையும், அடையாளமில்லாத கைதியும்” என்ற புத்தகத்தில் அர்ஜெண்டீனாவின் பத்திரிகையாளர் ஜேக்கப் எழுதி இருந்தார். இந்த டிசம்பருடன் ஹெக்டோர் “காணாமல்” போய் 35 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஹெக்டோர் வேண்டுமென்றால், அதிகாரத்தால் “காணாமல்” போகுமாறு செய்யப்படலாம். ஆனால், அவரது படைப்புகள் இன்றும் தென்னமெரிக்காவில், ஐரோப்பாவின் பல இடங்களில் தொடர்ச்சியாக மறுபதிப்பு செய்யப்பட்டு வந்தது. இப்போதும் செய்யப்படுகிறது. ஆனால், இவை அனைத்துமே ஸ்பானிஷ் மற்றும் இதர மொழிகளிலேயே இருந்ததால், ஆங்கில இலக்கிய உலகில் இவரைப் பற்றி பேச்சு வழக்கில் மட்டுமே விவாதங்கள் நடந்து வந்தன.
எடர்நாட் – ஆங்கிலப் பதிப்பின் கதை: ஹெக்டோர் ”காணாமல்” போன பிறகு, அந்தக் குடும்பத்தில் அவரது மனைவி மட்டுமே மீதம் இருந்தார். ஒரு கட்டத்தில், அரசாங்கத்தின் கெடுபிடியால் அவர் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, வாழ்வாதாரத்திற்கே போராடும் சூழல் உருவாகியது. அந்த நேரத்தில், ஓவியர் லோபஸ் அவரைத் தொடர்பு கொண்டு, எடர்நாட்டின் ஒரிஜினல் ஓவியங்களை அவரிடம் கொடுத்தார். வறுமையின் உச்சத்தில் இருந்த ஹெக்டோரின் மனைவி எல்ஸா, அதை ஓர் உள்ளூர் பதிப்பக உரிமையாளரிடம் விற்று விட்டார். எடர்நாட்டின் பத்திரிகைப் பதிப்புகளை கைவசம் வைத்திருந்த அந்த பதிப்பக உரிமையாளருக்கு அந்த ஒரிஜினல் ஓவியங்களின் மதிப்பு தெரியவில்லை. ஆகையால், அவர் அந்த ஒரிஜினல்களை ஓர் இத்தாலிய கலாரசிகரிடம் விற்று விட்டார். அதன் மதிப்பை உணர்ந்த அந்த ரசிகர், அவற்றை மிகவும் பத்திரமாக பாதுகாத்தார்.
இதற்கிடையில், ஏற்கனவே அச்சில் வந்த எடர்நாட் கதைகளைக் கொண்டே மறுபதிப்புகள் வந்தன. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக முதலில் வெளியானவை நியூஸ் பிரிண்ட்டில் என்பதால், அவற்றைக் கொண்டு செய்யப்பட்ட மறுபதிப்புகளும் சுமாரான தரத்திலேயே இருந்தன. ஓவியங்கள் மங்கிப் போய், “டல்” அடித்த நிலையிலும் எடர்நாட் தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு பிரெஞ்சுப் பதிப்பகம், எடர்நாட்டின் ஒரிஜினல் ஓவியங்களை வைத்திருந்த இத்தாலியரைத் தொடர்பு கொண்டு, அவற்றைக் கொண்டு ஒரு “மேம்படுத்தப்பட்ட மறுபதிப்பை”க் கொண்டு வர விரும்பியது. ஹெக்டோரின் உன்னதப் படைப்பை இந்த ஆண்ட்ராய்ட் தலைமுறைக்கும் காட்ட விரும்பிய அந்த இத்தாலியரும் ஒத்துக் கொள்ள, ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்ட ஒரிஜினல் ஓவியங்களை மறுபடியும் ஸ்கேன் செய்து, அவற்றை டிஜிடலாக மேம்படுத்தி, புதிய பதிப்பைத் தயார் செய்தனர்.
எரிக்க மெனா: லத்தீன் அமெரிக்கக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்தான் எரிக்க. இவர் ஹெக்டோரின் ஒரிஜினல் ஓவியங்கள் மீட்டெடுக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பினார். ஹொக்டோரின் எந்த ஒரு படைப்பையும் சுலபத்தில் மொழி பெயர்த்து விட இயலாது. குறியீடுகள், உருவகங்கள், தொன்மங்கள் என்று பிரதிக்குள் பிரதியாக அவரது படைப்புகள் இருக்கும். ஆனால், எரிக்காவும் லேசுப்பட்டவர் அல்ல. விடாமுயற்சியுடன் அவர் தொடர்ந்து தன்னை இந்த மொழியாக்கத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். அதன் விளைவாகவே இந்த 350 பக்க காமிக்ஸை மூலப்பிரதிக்கு மிக நெருக்கமான ஒரு மொழிபெயர்ப்பாகக் கொண்டு வந்தார். இந்த மொழிபெயர்ப்புடன் அவர் பல பதிப்பகங்களை அணுகினார். ஆனால், எப்போதுமே ஐரோப்பிய, தென்னமெரிக்கப் படைப்புகளை சந்தேகத்துடன் எதிர்கொள்வதைப் போலத்தான் இதையும் எதிர்கொண்டனர். யாரும் ஆங்கிலத்தில் கொண்டுவர முன்வரவில்லை.
அமெரிக்காவில் ஃபன்டாகிராஃபிக்ஸ் என்று ஒரு காமிக்ஸ் பதிப்பகம் இருக்கிறது. தரமான கிராஃபிக் நாவல்கள், அரிய காமிக்ஸ்களை மறுபதிப்பு செய்தல் என்ற அடையாளத்துடன் இயங்கி வருபவர்கள் இவர்கள். எடர்நாட்டின் ஓவியரான லோபஸ்-சின் சில படைப்புகளை அவர்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் எரிக்காவின் இந்த முயற்சியைக் கேள்விப்பட்டு, ஆங்கிலத்தில் இதைக் கொண்டு வர ஒப்புதல் தெரிவித்தார்கள். முதல் பதிப்பு ஒரே வாரத்தில் விற்றுத் தீர்த்துவிட, (என்னைப் போல) அயல்நாடுகளில் இருப்பவர்கள் வாங்கத் துடித்தனர். சில மாதங்களிலேயே மறுபடியும் இன்னொரு பதிப்பு கொண்டு வர, அதுவும் விற்றுத் தீர்த்தது.
எடர்நாட்: இவ்வளவு பில்ட்-அப் கொடுத்த எடர்நாட்டின் கதைதான் என்ன? ஹெக்டோரைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு காமிக்ஸ் படைப்பாளியின் வீட்டில்தான் கதை ஆரம்பிக்கிறது. அதிகாலை மூன்று மணிக்கு அவரது வீட்டில் யாரோ திடீரென்று காட்சியளிக்கிறார்கள். மாயமாக தோன்றிய அந்த உருவம், தான் எதிர்காலத்தில் இருந்து காலப்பயணம் செய்து வந்து இருப்பதாகச் சொல்கிறார். அவரைப் பற்றி விசாரிக்கும்போது, அவர் தன்னுடைய கதையைச் சொல்கிறார்.
சால்வோ (Salvo) என்பது அவருடைய பெயர். தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து வீட்டில் ’ட்ரூகோ’ என்ற விளையாட்டை ஆடிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று விசித்திரமான ஒரு பனிப்பொழிவு துவங்குகிறது. அர்ஜெண்டீனா முழுவதுமே அந்தப் பனிப்பொழிவு படர, அனைவரும் அதன் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். யாரெல்லாம் பனிப்பொழிவின் பாதிப்புக்கு ஆளாகிறார்களோ, அவர்கள் அனைவரும் இறந்துவிட, சால்வோவின் மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் மட்டும் அன்று வீட்டில் இருந்ததால் தப்பித்து விடுகிறார்கள். பிறகுதான், அந்தப் பனிப்பொழிவு ஓர் அயல் கிரக படையெடுப்பின் துவக்கம் என்பதை உணர்கிறார்கள்.
பனிப்பொழிவிற்கு பாதிக்கப்படாதவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓர் எதிர்ப்புக் குழுவை அமைக்கிறார்கள். ஆனால், அயல் கிரக சக்திகள் ராட்சஸ அளவிலான மிருகங்கள் கொண்ட படையை ஏவி விட, இவர்கள் போராட்டம் கடும் எதிர்ப்புக்கு ஆளாகிறது. இதைத் தவிர, மனிதர்களைப் போலவே காட்சியளிக்கும் சிலர், இயந்திர மனிதர்கள் என்று பலரும் இவர்களை எதிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில், இவர்களை இயக்குவது கண்ணுக்குத் தெரியாத ஓர் அயல் சக்தி என்பதை உணரும்போதுதான் அவர்கள் யாரை எதிர்க்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது.
அவ்வளவு பெரிய எதிரியை எதிர்த்துப் போராட, ஒரு கட்டமைப்பு அவசியம். ஆனால், அவர்கள் நாட்டவர்களே எதிரிக்குத் துணைபோக, இவர்கள்
போராடுவது இன்னமும் சிக்கலாகிறது. இப்படியாகப் போகிறது எடர்நாட்டின் கதை. சரி, இது ஒரு வித்தியாசமான சயின்ஸ் பிக்ஷன் கதை. ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்றுதானே வியக்கிறீர்கள்? கொஞ்சமே கொஞ்சம் அர்ஜெண்டீனாவின் வரலாற்றைப் படித்தால், உண்மை தெரியும்.
ராணுவ ஆட்சியில்தான் ஸ்பெய்ன் நாட்டின் பெரும்பான்மையான ஆண்டுகள் கழிந்து வந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, அமெரிக்கா மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை அர்ஜெண்டீனா மீது செலுத்துகிறது. பனிப்போரின் உச்சத்தில், தென்னமெரிக்க நாடுகள் அனைத்தையுமே அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது. அர்ஜெண்டீனாவின் ராணுவ ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, புரட்சியை ஆயுதம் கொண்டு, இரும்புக் கரத்தால் ஒடுக்க விரும்பியது அமெரிக்கா.
- பனிப்பொழிவை பனிப்போராகவும்
- ராணுவ ஆட்சியை ராட்சத மிருகங்களாகவும்
- கண்ணுக்குத் தெரியாமல் ஆட்சி செய்யும் அயல் கிரக சக்தியை அமெரிக்காவாகவும் பொருத்திப் பாருங்கள்.
ஏன் இந்த காமிக்ஸ் தடை செய்யப்பட்டது என்பது தெளிவாகப் புரியும். இதைத் தவிர, ராணுவ கொடுங்கோலாட்சியைப் பற்றிய பல விஷயங்கள் குறியீடுகளாக, உருவகங்களாக இத்தொடரில் அமைக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, இத்தொடரின் முக்கிய பாத்திரத்தின் பெயர் சால்வோ (Salvo). ஸ்பானிஷ் மொழியில் இதற்கு, “காப்பாற்று”பவன் என்று பொருள்.
ஒரு படைப்பாளி அவனது பிரதிகளில்தான் வாழ்கிறான் என்பது உண்மையானால், “காணாமல்” போன ஹெக்டோர் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் புரட்சி ஒடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஒரு ஹெக்டோர் தோன்றி, புரட்சியின் கரங்களை வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.